Monthly Archives: December 2015

Sri Paramahamsarin Apta Mozi – 69

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 69

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(இன்றைய ‘மொழி’ சென்ற வாரத்தின் தொடர்ச்சி. ‘பிரம்மமும் சக்தியும் ஒன்றே’ என்ற தலைப்பின் கீழ் வரும் செய்திகளை ஒருமுறை வாசித்துவிட்டு பின்பு இதனை வாசிக்கத் தொடங்குவது நலம். முந்தைய பகுதி: https://swamichidbhavananda.wordpress.com/2015/12/24/sri-paramahamsarin-apta-mozi-68/)

பிரம்மமும் சக்தியும் ஒன்றே

பக்தியின் பெருக்கால் ஆனந்த பரவசம் அடைந்துவிடுபவர்களுக்கு அன்னையின் தரிசனம் அகப்படுகிறது. பிரம்மம் என்னும் மெய்ப்பொருளையே அன்னை என்று பக்தர்கள் அழைக்கின்றார்கள். நிர்க்குண வஸ்து அதே வேளையில் சகுண வஸ்துவாகவும் இருக்கிறது. பிரம்மமும் சக்தியும் ஒன்றே. கர்மத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் அது பிரம்மம் என அழைக்கப்படுகிறது. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகிய கர்மங்களைச் செய்து கொண்டிருக்கின்றபொழுது அதே பொருள் மூலப் பிரகிருதி எனவும் ஆதி சக்தி எனவும் அழைக்கப்படுகிறது. தீயும் தீயில் இருக்கும் வெப்பமும் இணைபிரியாதவைகள். தீ வேறு, அதன் வெப்பம் வேறு அல்ல. அங்ஙனம் பிரம்மமும் சக்தியும் ஒன்றே. அக்னியைப் பற்றிப் பேசும்பொழுது உஷ்ணத்தைப் பற்றி இயம்புங்கால் அக்னியைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம். அக்னி உஷ்ணம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொண்டால் அது மற்றதையும் ஏற்றுக்கொண்டதற்குச் சமானமாகிறது. பிரம்மத்தையே அம்பிகை என்று அழைக்கின்றோம். ஏனென்றால் அவள் நம் தூய அன்புக்கு இலக்கு ஆகின்றாள். பக்தியின் மூலமே பரம்பொருள் அறியப்படுகிறது. மெய்ம்மறந்த பேருணர்வு, பேரன்பு, பக்தி, விசுவாசம் ஆகிய இவைகளைக் கொண்டே கடவுளை அடையலாம்.

ஈசுவரசந்திர வித்யாசாகர் வீட்டில் நடந்த சம்பாஷணைக்கிடையில் பரமஹம்ஸர், “பாடல் ஒன்று பாடுகிறேன். அதைக் கவனித்துக் கேளுங்கள்’ என்று பாட ஆரம்பித்தார்.

“ஒரு மனிதனுடைய எண்ணத்துக்கு ஒப்ப அவன் உள்ளத்தில் அன்பு உருவெடுக்கிறது. அன்பு எத்தகையதோ அதற்கேற்ற அருட்பேறு பக்தனுக்கு உண்டாகிறது. எண்ணம், அன்பு ஆகிய அனைத்துக்கும் அடிப்படையாய் இருப்பது விசுவாசம். அன்னையின் திருவடியாகிய அமிர்த சாகரத்தில் என் மனது மூழ்கியிருக்குமாகில் பின்பு ஆராதனைக்கும், நித்திய கர்மத்துக்கும், யாகத்துக்கும் பயன் யாது உளது? தெய்வத்தின்பால் பேரன்பு கொண்டு அவ்வன்பிலே லயித்திருப்பது சாதகன் ஒருவனுக்கு முற்றிலும் அவசியமானது. இந்த அமிர்த சாகரமே மூவாமருந்து எனப் பெயர் பெறுகிறது. மரணத்தினின்று மனிதனைப் பாதுகாக்கும் தன்மை அதனிடத்திருப்பதால் அவன் மரணமிலாப் பெருவாழ்வை ஆங்கு பெற்றுவிடுகிறான். கடவுளைப் பற்றி மிகைபட எண்ணினால் மனத்தகத்துக்குத் தடுமாற்றம் ஏற்பட்டுவிடும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். அவர்கள் கருத்தில் பொருள் ஒன்றுமில்லை. அமிர்த சாகரத்தில் மூழ்குபவர்க்கு அழிவோ, கேடோ எங்ஙனம் உண்டாகக்கூடும்? கேடுகள் அனைத்துக்கும் அதுவே மருந்து. அதை அடைகின்ற ஒருவனுக்கு மரணம் போன்ற கேடு ஒன்றுமில்லை. அவன் அமிர்த சொரூபி ஆகின்றான். மரணம் என்னும் இருளைக் கடந்தவன் ஆகின்றான் அவன். கடவுளிடத்து உள்ளன்பு உருவெடுத்து வருமாகில் பிறகு இத்தகைய புறச் சடங்குகளுக்குத் தேவை ஒன்றும் இல்லை. ஒரே புழுக்கமாக இருக்கும்பொழுது வீசுதற்கு ஒருவனுக்கு விசிறி அவசியம். மெல்லிய தென்றல் வீச ஆரம்பித்துவிடும்பொழுது விசிறிக்குத் தேவை ஒன்றும் இல்லை. அத்தென்றலுக்கு ஒப்பானது தெய்வபக்தி.”

(தொடரும்…)

மூலம்: மஹேந்திரநாத குப்தா

விளக்கம்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Thiruvembavai – 15

மார்கழி – 15

31.12.2015-வியாழன்

மாணிக்கவாசகர் இயற்றிய

திருவெம்பாவை

15

ஓரொருகா லெம்பெருமா னென்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர

நீரொருகா லோவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்

பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறு

மாரொருவ ரிவ்வண்ண மாட்கொள்ளும் வித்தகர்தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

யேருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.


ஓர் ஒருகால் எம்பெருமான் என்று என்றே நம்பெருமான்

சீர் ஒருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர

நீர் ஒருகால் ஓவா நெடும் தாரை கண் பனிப்பப்

பார் ஒருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்

பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும்

ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்

வார் உருவம் பூண் முலையீர் வாய் ஆர நாம் பாடி

ஏர் உருவம் பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய்.


அருஞ்சொற்பொருள்:

சீர் – பெருமை.

வாய் ஓவாள் – வாயால் உச்சரித்தலை நிறுத்தமாட்டாள்.

ஓவா – இடையறாமல்.

தாரை – நீர்ப்பெருக்கு.

கண்பனிப்ப – கண்ணினின்று துளி அரும்ப.

பார் – பூமி.

விண்ணோரைத் தான் பணியாள் – வேறு யாருக்கும் வணங்காள்.

பேர் அரையற்கு – பெரிய இறைவன் பொருட்டு.

ஆர் ஒருவர் – யார் ஒருவர்.

வித்தகர் – ஞான வடிவினர்.

வார் – கச்சு.

உருவ – அணியப் பெற்று.

பூண் – பூண் அணிந்த.

ஏர் உருவம் – அழகிய வடிவம்.

பூம்புனல் – மலர்கள் செறிந்த நீர்.


பொழிப்புரை:

எம்பெருமான் என்றே ஒருவேளையில் சொல்லிக்கொண்டிருப்பாள். மற்றொரு வேளையில் நம்பெருமானது பெருமையை ஓயாது வாயால் உச்சரித்துக்கொண்டே இருப்பாள். மனதில் களிப்பு ஓங்குவதை முன்னிட்டு மற்றொரு வேளையில் கண்ணீர் பெருக்கிய வண்ணமாயிருப்பாள். இன்னொரு வேளையில் பூமியில் வீழ்ந்து கிடப்பாள். எவ்வளவு பெரியவராயிருந்தாலும் வேறு யாரையும் மதிக்கமாட்டாள். இறைவனிடத்தே பித்து கொண்டிருப்பாள். ஓர் உயிரை இப்படி முற்றிலும் தன்மயமாக்கிக்கொள்ளும் ஞான வடிவினர் யாராயிருக்கக் கூடும்? கச்சும் பூணும் அணிந்த ஸ்தனபாரத்தையுடைய பெண்களே, நம் இறைவனாரை வாயார ஸ்தோத்திரம் பண்ணி அழகிய பூ நிறைந்த பொய்கையில் குதித்து நீராடுவோம். பெண்ணே, இவையெல்லாம் ஏற்கவும் எண்ணிப்பார்க்கவும் செய்வாயாக.


சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:

இப்பாடலில் இடம்பெறும் மஹாபாவங்கள் 1. स्तम्भः ஸ்தம்ப: 2. अश्रु அச்ரு 3. धैर्य्यम् தைர்ய்யம்

  1. स्तम्भः ஸ்தம்ப: – உணர்ச்சியின் வேகத்தால் ஸ்தம்பித்துக் கட்டைபோன்று அசையாது கிடப்பது.
  2. अश्रु அச்ரு – கண்ணீர் மல்குதல்
  3. धैर्य्यम् தைர்ய்யம் –

தைரியம். அனைத்தையும் ஒன்றாகக் கருதி, மனதில் உறுதியும் அமைதியும் குடிகொண்டிருக்கும் நிலை இது. ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் வனத்துக்குள் ஹரி பஜனை பண்ணிக்கொண்டு போனபொழுது ஒரு புலி வந்து அவரோடு ஆனந்தக் கூத்தாடியது. அவருக்குப் புலியும் தானும் கிருஷ்ண சொரூபம் என்ற உறுதியான மனநிலையிருந்தது. அது தைரியம் எனப்படுகிறது.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)