Thiruvembavai – 1

முன்னுரை

மாணிக்கவாசகர் மதுரைக்குப் பக்கத்தில் உள்ள திருவாதவூரில் பிறந்தார். ஆதலால் அவருக்குத் திருவாதவூரர் என்னும் பெயர் அமைந்தது. அவருடைய திருப்பாடல்களுக்குத் ‘திருவாசகம்’ என்னும் பெயரும் அவருக்கு மாணிக்கவாசகர் என்ற திருநாமமும் அமைந்தது முற்றிலும் பொருத்தமாம்.

vacakar

இடைக்காலத்தில் தோன்றிய ரிஷிகளில் ஒருவர் மாணிக்கவாசகர். தமது சாதன வகைகளையும் அனுபூதியின் படித்தரங்களையும் அவர் நன்கு விளக்கி இருக்கிறார். தமது உள்ளத்தை அவர் ஓவாது உருக்கினார். உருக்கிய ஒவ்வொரு தடவையும் சொல் ஓவியம் உரு எடுத்தது.

திருவாசம் ஐம்பத்தொரு (51) திருப்பதிகங்களுடன் திகழ்கிறது. அவைகளில் அடங்கியுள்ள பாடல்களின் தொகை அறுநூற்று ஐம்பத்தாறு (656).

இன்னிசையை எம்மொழியில் வெளிப்படுத்தினாலும் அது இன்னிசையே. அங்ஙனம் பரதத்துவம் எம்மொழியில் பகரப்பெறினும் அது வேதமே. திருவாசகத்தைத் தமிழ் மொழியில் அமைந்த வேதம் எனலாம்.

அருள் நாட்டம் கொண்டிருப்பவர்களுக்கு அருள் தாகத்தை வளர்க்கும் தன்மையதாய்த் திருவாசகம் அமைந்திருக்கிறது. அருள்தாகம் பிடித்தவர்கள் பாக்கியவான்கள். அருள்தாகம் பிடித்தவர்களுள் திருவாசகத்தோடு முறையாக இணக்கம் வைக்கிறவர்கள் மேலும் பாக்கியவான்கள் ஆகிறார்கள்.

மார்கழி மாதத்தை முன்னிட்டு தினம் ஒரு ‘திருவெம்பாவை’ மற்றும் ‘திருப்பள்ளியெழுச்சி’ ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் விளக்கிய ‘திருவாசகம்’ புத்தகத்திலிருந்து பொருளுடன் பதிவேற்றுகிறோம். வாசித்துப் பயனடைவீர்!


மார்கழி – 1

17.12.2015-வியாழன்

திருவெம்பாவை

(வெண்டளையான் வந்த இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா)

தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் ஆறு மாத காலம் சூரியனுடைய உத்தராயனம். அது தேவர்களுக்குப் பகல். ஆடி முதல் மார்கழி வரையில் சூரியனுடைய தக்ஷிணாயனம். அது தேவர்களுக்கு இரவு. நமக்கு அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறுமணி வரையில் பிரம்ம முகூர்த்தம். கடவுள் வழிபாட்டுக்கு அது சிறந்த நேரம். அதே போன்று தேவர்களுடைய நாளில் மார்கழி முழுதும் பிரம்ம முகூர்த்தம். ஆதலால் மாதங்களுள் மார்கழி மிகச் சிறந்தது. மக்களும் அம்மாதத்தில் வழிபாடு மிகச் செய்கின்றனர். மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்திருப்பதற்குத் திருவெம்பாவை திருவண்ணாமலையில் பாடப்பெற்றது. பரபோதம் பெற்று எழுந்திருக்க இது எக்காலத்திலும், எங்கும், யாவருக்கும் பயன்படும்.

Annamalai
திருவண்ணாமலை

ஆதியு மந்தமு மில்லா வரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதா ரமளியின்மே னின்றும் புரண்டிங்ங

னேதேனு மாகாள் கிடந்தா ளென்னேயென்னே

யீதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.


ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடம் கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின் செவி தான்

மாதேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டும் இங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எம்தோழி பரிசு ஏல் ஓர் எம்பாவாய்.


அருஞ்சொற்பொருள்:

வாள் தடம் கண் – ஒளியுடைய விசாலமான கண்.

வளருதியோ – தூங்குகின்றாயோ.

மாதேவன் – மகாதேவன்.

வார்கழல்கள் – நெடிய வீரக்கழலை யணிந்த திருவடிகள்.

விம்மிவிம்மி – ஏங்கியழுது.

போது ஆர் – புஷ்பம் நிறைந்த.

அமளியின்மேல் – படுக்கையின் மேல்.

பரிசு – இயல்பு.

எம்பாவாய் – எமது பாவை போன்ற தோழியே.


பொழிப்புரை:

பரமன் அகண்ட வஸ்து; அவன் அருள் பெருஞ்ஜோதி. அவனுடைய மகிமையை நாங்கள் பாடிக்கொண்டு வருகிறோம். ஆனால் ஒளிபொருந்திய அகன்ற கண்களையுடைய தோழீ, நீ ஏன் தூங்கிக்கொண்டிருக்கிறாய்? உன் காதுகள் கூரியவைகளல்லவோ? மகாதேவனுடைய மாட்சிமைகளை நாங்கள் பாடக் கேட்ட மற்றொருத்தி திடீரென்று எழுந்திருந்தாள், தேம்பியழுதாள், பரவசமடைந்தாள், மலர் தூவிய படுக்கையில் புரண்டு பக்தி நிறைந்தவள் ஆனாள், உணர்ச்சியின் வேகத்தால் அவள் கட்டை போன்று ஸ்தம்பித்துக் கிடந்தாள். இதுவன்றோ பாராட்டத்தக்க நிலை! பாவை போன்ற எமது தோழீ, இப்பரவச நிலையைப் பற்றிக் காதுகொடுத்துக்கேள். இதை ஓர்ந்து எண்ணிப் பார். பின்பு நீயும் இப்பெருநிலையைப் பெற முயல்வாயாக.


சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:

பரபோதத்தில் விழிப்படைந்துள்ள ஜீவாத்மனுடைய பக்தி லக்ஷணம் ஈண்டு விளக்கப்பட்டுள்ளது. மஹாபாவம் அல்லது பராபக்தியின் கூறுகள் 1. सूददीप्तः ஸூததீப்த: 2. स्तम्भः ஸ்தம்ப: 3. धूमायिताः தூமாயிதா: 4. विच्छित्ति விச்சித்தி ஆகியவைகள் தோற்றத்துக்கு வருகின்றன.

  1. सूद्दीप्तः ஸூத்தீப்த:

மங்களகரமாக மஹோன்னத நிலைக்கு வந்துள்ள கனல். வெண்ணிறமாகக் காய்ந்த இரும்பை மேலும் உருக்கினால் அது குழம்பு ஆகிறது. தன் வடிவத்தை அப்பொழுது அது இழக்கிறது. அளவு கடந்த வெப்பத்தை அதன்பால் செலுத்தினால் குழம்பின் நிலையைக் கடந்து அது காற்றின் நிலையை எய்துகிறது. சூரியன் முற்றிலும் அக்னிக் காற்றேயொழிய அது அக்னிக் குழம்பு அன்று. பக்தியின் வேகம் அணை கடந்தது ஆகும்பொழுது பக்தனது உடல் உணர்வு அணுவணுவாய் வெந்து மாய்கிறது. பெயர் அளவுக்கு மற்றவர் கண்ணுக்கு உடல் ஒன்று தென்படுகிறது. ஆனால் ஜீவபோதம் முற்றிலும் பரபோதமாய் உயர்நிலை எய்துகிறது. வேதனைப்படுவது போன்ற புறக்காட்சியானது பரமனது பரமானந்தமாக அகத்தில் ஒளிர்கிறது. பரம் ஒன்றே அந்நிலையில் எஞ்சியிருக்கிறது.

  1. स्तम्भः ஸ்தம்ப:

உணர்ச்சியின் வேகத்தால் ஸ்தம்பித்துக் கட்டைபோன்று அசையாது கிடப்பது.

  1. धूमायिताः தூமாயிதா:

முன்பு யதார்த்த நிலையில் நன்றாயிருந்து இப்பொழுது வடிவம் குலைந்து புகையாய்ப் போய்விட்டது போன்று தென்படுதல்.

  1. विच्छित्ति விச்சித்தி

அகத்தில் ஆத்மஜோதி ஒளிர்தற்கிடையில் புறத்தில் பிரக்ஞை போய், உடலானது ஜடம் போன்று கிடத்தல்; எடுத்த காரியத்தை நிறைவேற்றது சிறுவர் செய்வது போன்று புதியதொரு காரியத்தில் புகுதல்; செய்வது இன்னதென்று தெரியாது திகைத்தல்.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)

Advertisements

2 thoughts on “Thiruvembavai – 1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s