Thiruvembavai – 7

மார்கழி – 7

23.12.2015-புதன்

மாணிக்கவாசகர் இயற்றிய

திருவெம்பாவை

7

அன்னே யிவையுஞ் சிலவோ பலவமர

ருன்னற் கரியா னெருவ னிருஞ்சீ ரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்

தென்னாவென் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பா

யென்னானை யென்னரைய னின்னமுதென் றெல்லோமுஞ்

சொன்னோங்கேள் வெவ்வேறா யின்னந் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியா

லென்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.


அன்னே இவையும் சிலவோ பல அமரர்

உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ் சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்

தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய்

என்னானை என் அரையன் இன் அமுதது என்று எல்லோமும்

சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ

வன்நெஞ்சம் பேதையர்போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின்பரிசு ஏல் ஓர் எம்பாவாய்.


அருஞ்சொற்பொருள்:

உன்னற்கு – எண்ணுதற்கு.

ஒருவன் – ஒப்பு உயர்வு அற்றவன்.

இரும்சீரான் – பெருஞ் சிறப்பையுடையவன்.

சின்னங்கள் – காளம் ஊதும் ஒலி.

என்னானை – எனக்கு இனியவனை.

அரையன் – அரசன்.


பொழிப்புரை:

அம்மா, இப்படியும் சில இயல்புகள் உன்னிடம் இருக்கின்றனவா? தேவர்கள் பலரால் நினைத்தற்கரியவனும், ஒப்பு உயர்வு அற்றவனும், பெருஞ்சிறப்பு உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளி வருவதற்கு அடையாளமாகக் காளம் ஊதும் ஒலி கேட்டவுடனே ‘சிவ’ என்று நீ வாய் திறப்பாயே! தென்னா என்று அவன் பெயரைச் சொல்லுதற்கு முன்பே தீயிலிட்ட மெழுகுபோல மனம் உருகுவாயே! அத்தகையவளாகிய உனது முன்னிலையில் எனக்கு இனியவன் என்றும், என் அரசன் என்றும், இனிய அமுதன் என்றும் நாங்கள் எல்லாரும் தனித்தனியே சொன்னோம். அவையெல்லாம் கேட்டும் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாயா? கல்நெஞ்சத்தையுடைய அறிவிலிகள் போல நீ உணர்ச்சியற்றுக் கிடக்கின்றாயே! நித்திராதேவியின் தன்மை இத்தகையதோ!


சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:

ஆத்மபோதம் அடையப்பெறாதவர்கள் ஜடம் போன்று கிடக்கின்றனர். தீசேர் மெழுகு ஒத்த மனம், மகாபாவத்தில் – सूद्दीप्त्: ஸூத்தீப்த: – இடம்பெறுகிறது.

सूद्दीप्तः ஸூத்தீப்த:

மங்களகரமாக மஹோன்னத நிலைக்கு வந்துள்ள கனல். வெண்ணிறமாகக் காய்ந்த இரும்பை மேலும் உருக்கினால் அது குழம்பு ஆகிறது. தன் வடிவத்தை அப்பொழுது அது இழக்கிறது. அளவு கடந்த வெப்பத்தை அதன்பால் செலுத்தினால் குழம்பின் நிலையைக் கடந்து அது காற்றின் நிலையை எய்துகிறது. சூரியன் முற்றிலும் அக்னிக் காற்றேயொழிய அது அக்னிக் குழம்பு அன்று. பக்தியின் வேகம் அணை கடந்தது ஆகும்பொழுது பக்தனது உடல் உணர்வு அணுவணுவாய் வெந்து மாய்கிறது. பெயர் அளவுக்கு மற்றவர் கண்ணுக்கு உடல் ஒன்று தென்படுகிறது. ஆனால் ஜீவபோதம் முற்றிலும் பரபோதமாய் உயர்நிலை எய்துகிறது. வேதனைப்படுவது போன்ற புறக்காட்சியானது பரமனது பரமானந்தமாக அகத்தில் ஒளிர்கிறது. பரம் ஒன்றே அந்நிலையில் எஞ்சியிருக்கிறது.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s