Sri Paramahamsarin Apta Mozi – 68

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 68

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி-மொழி 67: https://swamichidbhavananda.wordpress.com/2015/12/17/sri-paramahamsarin-apta-mozi-67/)

கடல் தாண்டுதல்

ஆஞ்சனேயன் ‘ராம’ என்னும் தாரக மந்திரத்தை ஓதிக்கொண்டு கடலைத் தாண்டிக் குதித்தான். ஆனால் அக்கடலைக் கடப்பதற்கு நாயகனாகிய ராமன் தானே பாலம் கட்ட வேண்டியதாயிற்று. கடவுளிலும் பெரியது கடவுளின் திருநாமம் என்பதில் நாம் விசுவாசம் வைக்க வேண்டும்.

மனிதனுக்குக் கடவுளிடத்து விசுவாசம் இருக்குமானால் அவன் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. எத்தகைய மஹா பாபத்தை வேண்டுமானாலும் விசுவாசம் வருவதற்கு முன்பு அவன் செய்தவனாய் இருக்கலாம். ஈசுவர விசுவாசம் அந்தப் பாபங்களையெல்லாம் அடியோடு அகற்றவல்லது.

விசுவாசத்தின் மகிமையை விளக்கிக் காட்டுகின்ற பாங்கில் பரமஹம்ஸர் பாடல் ஒன்று பாடினார்:

“துர்க்கா தேவியின் திருநாமத்தை ஓதிக்கொண்டு உடலை உகுக்க வல்லவன் நான் ஆவேனோ? அங்ஙனம் நான் செய்வேனாகில், ஆதி சக்தியே, முக்தி என்னும் வாய்ப்பை எனக்கு வகுத்து அளிக்காது நீ எங்ஙனம் இருக்க முடியும்?”

இங்ஙனம் பாடிய பின்பு பரமஹம்ஸர் மேலும் பகரலானார்: பக்தி விசுவாசத்தின் மூலம் ஒருவன் பகவானை மிக எளிதில் பெற்று விடலாம். பேரன்பின் மூலம் பரம்பொருள் உணரப்படுகிறார்.

பிரம்மமும் சக்தியும் ஒன்றே

மற்றொரு பாடலைப் பரமஹம்ஸர் பாடினார்:

“ஓ மனதே, கடவுள் எத்தகையவர் என்பதை அறிந்துகொள்ள நீ பெருமுயற்சி எடுத்துக்கொள்கின்றாய். என்னே! இருட்டறையிலே அடைபட்டுக் கிடக்கும் பித்தன் ஒருவன் போன்று நீ அலைமோதித் திரிகின்றாய். பக்தி வலையில் படுவோன் பரமன். அந்தப் பக்தி இல்லாது அவனை நீ எங்ஙனம் அறியப் போகின்றாய்? முற்றிலும் அவனை நம்பியிருப்பாயாகில் நீ அவனை அடையக்கூடும். அவன் இருக்கின்றானா என்று ஆராய்ச்சி பண்ணி அவனை அடைய முடியாது. வேதங்களும், ஆகமங்களும், தர்சனங்களும் அவனைத் தரிசித்தவைகள் அல்ல. ஏனென்றால் வெறும் புள்ளி விவரங்களைத் தருபவைகளாகவும் ஆராய்ச்சி பண்ணுபவைகளாகவும் அவைகள் ஆய்விட்டன. அன்பு என்னும் அமிர்தத்திலே அவன் ஆனந்த சொரூபியாய் இருக்கிறான். உள்ளத்தினுள்ளே பேரானந்தம் வடிவெடுத்தவனாய் அவன் புதைந்திருக்கின்றான். அவனிடத்து மாறாத பக்தியைப் பெறுதற் பொருட்டு யுகந்தோறும் யோகிகள் முயன்று வருகின்றனர். அன்பு ஊற்றெடுக்கும்பொழுது கடவுள் என்னும் காந்தத்தினிடம் உயிர் என்னும் ஊசி கவரப்படுகிறது. இனிமையே வடிவெடுத்த சிவனை அன்னை என்று அன்பர் அழைக்கின்றனர். அதாவது சிவமும் சக்தியும் ஒன்றே. அதை நமக்கு அறிவுறுத்துதற்கே அவன் அர்த்தநாரீசுவரன் ஆயிருக்கிறான். ஓ மனதே! இதற்கு மேல் அம்மெய்ப்பொருளைப் பற்றி வெட்ட வெளியாய்ப் பகர்வது யாருக்கும் இயலாது. அந்த மாண்பொருளை இனி நீயே அறிந்துகொள்வாயாக”

இங்ஙனம் பாடிக்கொண்டிருக்கையில் பரமஹம்ஸருடைய மனது பரவச நிலை அடைந்துவிட்டது. சமாதிநிலை அவருக்குக் கூடிவிட்டது. உயர்ந்த கருத்துக்களைப் பற்றிப் பேசும்போதோ, பாடும்போதோ, பேசக் கேட்குபோதோ அவருக்கு எளிதில் சமாதிநிலை கூடிவிடும். சமாதி நிலைக்குச் செல்லுவது அவருக்கு மிக எளிது. சமாதி நிலையினின்று மனதை உலக ஞாபகத்துக்குக் கொண்டு வருவது அவருக்கு மிகக் கஷ்டமானதாயிருக்கும். நாற்காலியின் மீது மேற்கு முகமாக அவர் அமர்ந்திருந்தார். உடல் தானே நிமிர்ந்துவிட்டது. கைகள் குவிந்து படிந்து கிடந்தன. அசைவற்று அவர் அமர்ந்திருந்தார். அனைவரின் பார்வையும் அவர்பால் சென்றது. வித்யாசாகரும் திகைத்துப் போய்ப் பேச்சற்று அவரைப் பார்த்தவண்ணமாய் இருந்தார். இப்படிச் சிறிது நேரம் கழிந்தது. பரமஹம்ஸருக்குச் சிறிது சிறிதாகப் பாஹிய உலக ஞாபகம் வந்தது. ஆழ்ந்து சுவாசித்த பின் புன்னகை பூத்தவராக அவர் பகர்வாராயினர்:

(தொடரும்…)

மூலம்: மஹேந்திரநாத குப்தா

விளக்கம்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s