Monthly Archives: January 2016

Swami Vivekananda Birthday

பேச்சாளன்

நீரில் வாழும் ஜீவ ஜந்துக்கள் பொதுவாக ஓசையை உண்டு பண்ணத் தகுதியற்றவைகளாக இருக்கின்றன. ஆனால் நிலத்தில் வசிப்பவைகளும் வானத்தில் பறப்பவைகளுமாகிய உயிர் வகைகளுள் பெரும்பகுதி ஏதேனும் ஒரு விதத்தில் ஓசையை உண்டுபண்ணித் தங்கள் உணர்வை வெளியாக்குகின்றன. இன்பம், துன்பம், ஆபத்து, பசி இவை போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துதற்கு ஏற்ற ஓசைகள் அவ்வுயிர்களுக்கு இயல்பாக அமைந்திருக்கின்றன. மக்களுள்ளோ அது மொழியாக வடிவெடுக்கிறது. மொழிகளுள்ளும் பலப்பல பாங்குடையவைகள் இருக்கின்றன. எத்தனை எத்தனையோ கருத்துக்களைச் சரியாக வெளிப்படுத்தும் வல்லமைக்கு ஏற்ப ஒரு மொழியின் சிறப்பு மேலோங்குகிறது. இனி மனிதன் மொழி ஒன்றை முறையாகக் கற்பது தன் கருத்துக்களைச் சரியாகப் பிறர்க்கு எடுத்து வழங்குதற் பொருட்டேயாம். மொழியைச் சரியாகப் பேசிப் பழகுவது நல்ல கலைஞானமாகிறது. பேச்சுத் திறமை எல்லார்க்கும் ஒரே விதத்தில் அமைவதில்லை. பேச்சின் சிறப்பைக் குறித்து,

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்

என வள்ளுவர் விளம்பியுள்ளார்.

பேச்சுத் திறமையினால் ஒருவன் மற்றவர்களையெல்லாம் வசப்படுத்தித் தன் வழிக்குத் திருப்பிவிடலாம். நல்ல தின்பண்டத்தை ஒரு தடவை சுவை பார்த்த சிறுவன் ஒருவன் திரும்பத் திரும்ப அதைச் சுவைக்க அவாவுறுகிறான். அதே விதத்தில் சொல் வல்லான் ஒருவன் பேச்சை ஒரு தடவை கேட்டவர்கள் திரும்பத் திரும்ப அதைக் கேட்கக் காமுறுகின்றனர். முன்பு கேளாதவர்களையும் அப்பேச்சை வந்து கேட்கும்படி அவர்கள் தூண்டி அழைத்துச் செல்லுகின்றனர். பேச்சுத் திறமைக்கு அத்தகைய சக்தி உண்டு. விவேகானந்தர் முறையாகப் பேசும் கலையை நன்கு அடையப் பெற்றவர். அவர் பேச்சை ஒரு தடவை கேட்டவர்கள் அதனோடு திருப்தி அடைந்திருக்கமாட்டார்கள். திரும்பத் திரும்ப அவர் பேச்சுக்குச் செவி சாய்க்க விரும்புவர்.

அமெரிக்காவில் நிகழ்ந்த சர்வமத மகாசபையில் கூடியவர்களையெல்லாம் அன்றாட நிகழ்ச்சிகளில் கடைசி வரையில் காத்திருக்கச் செய்வதற்குச் சபாநாயகர் அரிய முறை ஒன்றைக் கையாண்டு வந்தார். சபையில் கூடியவர்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தால் தக்க சமயத்தில் விவேகானந்தர் மற்றுமொருமுறை பேசுவார் என்று சபாநாயகர் ஆர்வமூட்டுவார். சுவையற்ற மற்ற பேச்சுக்களுக்கெல்லாம் செவி கொடுத்தும் கொடுக்காதும் பலப்பலர் பொறுமையுடன் காத்திருப்பார்கள். அப்படி அவர்கள் பொறுமை சாதித்ததெல்லாம் விவேகானந்தர் நிகழ்த்துதற்கிருந்த அறிவுரைக்குக் காது கொடுத்து அதை இனிது அருந்துதற்பொருட்டேயாம்.

swami1

பிரசங்கத்துக்காகவென்று மேடையின்மீது விவேகானந்தர் எழுந்து நிற்கும் பொழுதே மக்கள் கருத்தெல்லாம் அவரிடம் சாரும். இனி, அவர் பேச ஆரம்பித்தால், மடை திறந்தால் நீர் புரண்டோடி வருவது போன்று அரிய பேச்சு அவரிடமிருந்து பெருக்கெடுத்து ஓடிவரும். உலகெங்கும் அவர் கையாண்ட மொழி ஆங்கிலம். அவரது தாய்மொழியாகிய வங்காளத்தில் அவர் எவ்வளவு வாக்குத் திறமை படைத்திருந்தாரோ அவ்வளவு திறமை ஆங்கில மொழியிலும் அவர் படைத்திருந்தார். சொல்மாரி அவரிடமிருந்து ஓயாது சொரிவது, நிலத்தில் பயிர்களுக்கு உயிர் ஊட்டுவது போன்று மக்களிடத்து அருளூட்டி வந்தது. வாக்குவன்மை வாய்க்கப்பெற்றவர்கள் சிலர் உலக சரித்திரத்தையே மாற்றியமைத்திருக்கிறார்கள். வாக்குவன்மை வாய்க்கப்பெற்றிருந்த விவேகானந்தர் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கற்றறிந்த மேன்மக்களது மனப்பான்மையை அறவே மாற்றியமைத்து வைத்தார். அவர் உள்ளத்தில் ஊற்றெடுத்து வந்த பாரமார்த்திகப் பெருங்கருத்துக்களுக்கெல்லாம் பணிவிடை செய்வது போன்று சீரிய சொற்கள் முறையாக முன் வந்து நிற்கும். கேட்போருக்கு அவர் பிரசங்கம் செவியமுதாய் அமைந்தது உடனடியாக வாய்த்த பெரும் பேறாகும். குரலோசையின் இனிமையும், சொல்லமைப்பின் மகிமையும், சோராது சொல்தொடர் அவர் நாவினின்று கிளம்பி வெளிவந்து கொண்டிருந்ததும் செவிசாய்த்தோர்க்க்குப் போதிய அருள் விருந்தாயிற்று. விவேகானந்தருடைய சொல்திறனை அமெரிக்க சமாசாரப் பத்திரிக்கைகள் “The Hindu cyclone” என்றும் “An orator by divine right” என்றும் சிலாகித்துக் கூறலாயின. “ஹிந்துச் சூறாவளி” என்றும், “தேவானுக்கிரகம் பெற்ற பேச்சாளன்” என்றும் அவஆங்கிலச் சொற்றொடர்கள் பொருள்படுகின்றன. சூறாவளி ஒன்று கிளம்பி விரைந்து அடிக்கின்றபொழுது காட்டு மரங்களையெல்லாம் வீழ்த்துகிறது. குப்பை தூசிகளையெல்லாம் வாரி எங்கேயோ கொண்டு போகிறது. விவேகானந்தருடைய பிரசங்கம் அங்ஙனம் மேல் நாட்டுப் பண்பிலும் கிறிஸ்துவ சமய உணர்ச்சியிலும் தற்பெருமை கொண்டிருந்தவர்களை யெல்லாம் தகர்த்துக் கீழே தள்ளியது. மக்கள் உள்ளத்தில் அதுகாறும் இடம் பெற்றிருந்த புல்லிய கருத்துக்கள் பலவற்றை விவேகானந்தர் பிரசங்கம் என்னும் புயல்காற்று மோதியடித்து அப்புறப்படுத்தியது.

நல்ல விவேகிகள் விவேகானந்தரின் மேடைப் பிரசங்கத்தைப் பற்றி மற்றொரு விதத்தில் அபிப்பிராயம் கூறினர். அப்பெருமகனிடத்திருந்து கிளம்பி வந்தது வெறும் வாக்குப் பிரவாகம் அன்று; அருட்பிரவாகமே வாக்குப் பிரவாகம் போன்று உருவெடுத்து வந்தது. அவர் திருவாய் மலர்ந்தருளியதற்குச் செவி கொடுத்தவர்கள் எல்லாரும் இம்மண்ணுலக வாழ்வை அறவே மறந்துவிட்டு விண்ணுலகப் பேரின்பத்தில் திளைத்திருந்தனர். அமிர்தபானம் பண்ணியது போன்ரு அவர்கள் ஆனந்தமுற்று இருந்தனர். கண்ணனது குழலோசை உயிர்கள் அனைத்தையும் அதீத நிலைக்கு அழைத்துச் சென்றது போன்று விவேகானந்தப் பிரசங்கப் பிரவாகம் அமெரிக்கப் பெருமக்களையெல்லாம் பரமானந்தத்தின்கண் அழைத்துச் செல்வதாயிற்று. தமது பிரசங்கத் திறமையின் மூலம் விவேகானந்தர் உலகுக்கு அளித்த அருள் விருந்து இத்தகையதாம்.

பேச்சாளர் சிலர்க்கிடையில் சொற்சுவை மட்டும் சிறப்புற்று விளங்கும். செவி சாய்த்துக் கொண்டிருக்கும் வரையில் அது இன்பம் நல்குவதாகும். ஆனால் சொற்பெருக்கு முடிவுறும்பொழுது அந்த இன்பத்துக்கு முடிவு வருகிறது. சொற்பொழிவைக் கேட்டு என்ன அறிந்துகொண்டாய் என்று பொதுமக்களைக் கேட்குமிடத்துப் பிரசங்கம் மிக நன்றாய் இருந்தது என்று மட்டும் மொழிவர். அதற்குமேல் ஒன்றும் எடுத்துரைக்க அவர்களுக்கு இயலாது.

வேறு சிலர்க்குப் பொருள் சுவை மட்டும் வாய்க்கிறது; சொற்சுவை சிறிதேனும் அவர்களிடத்து அமைவதில்லை. ஆதலால் பொருள் சுவை மேகத்தில் மறைந்த சூரியன் போன்று கேட்போருக்குப் பெரிதும் பயன்படாது போகிறது. சொல் குறைபாடுகளுக்கிடையில் சீரிய கருத்துக்களைப் பேசுபவரிடமிருந்து பொறுக்கி எடுக்கும் திறமை யாரோ சிலருக்குண்டு; பெரும்பாலோர்க்கு அது இயலுவதில்லை. ஆதலால் தனியாகப் பொருள் சுவை பெரிதும் பயன்படாது போகிறது.

பின்பு விவேகானந்தரிடத்தோ பொருள் சுவை, சொற்சுவை ஆகிய இரண்டு சுவைகளும் வேண்டியவாறு புதைந்து கிடந்தன. ஆதலால்தான் விவேகானந்தர் பிரசங்கம் கேட்க மக்கள் திரள் திரளாகச் சென்றனர். அவர் பிரசங்கம் கேட்டு அவர்கள் பெருநலன் அடைந்தனர். வாழ்க்கைக்கே புதியதொரு விளக்கத்தை அவர்கள் அவ்வள்ளலிடமிருந்து பெறுவாராயினர். வெறும் வாய்ப்பேச்சால் உலகத்துக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது என்பது பொதுவாக அமைந்துள்ள கொள்கையாகும். ஆனால் அருளாளன் ஒருவன் சேர்ந்தாற்போன்று சொல்லாளனாயும் இருப்பானாகில் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது போன்று பொருள் சுவை, சொற்சுவை ஆகிய இரண்டும் சேர்ந்து மக்களுடைய மனப்பான்மையையே திருத்தியமைக்கிறது. மேடைகளின் மீது விவேகானந்தர் புரிந்த அரிய சொற்பொழிவுகள் அத்தகைய சீரிய நலனை உலக மக்களுக்கிடையில் உண்டு பண்ணுவனவாயின.

சுவாமி விவேகானந்தருடைய மேடைப் பிரசங்கங்களைக் கேட்டுப் பயனடைந்தவர்கள் கணக்கற்ற பேர். ஆனால் அவரோடு நேரில் உரையாடி நலன் பெற்றவர்கள் அத்தனை பேர் அல்லர். ஆயிரக்கணக்கான பேருக்கு அவரோடு நேரில் தொடர்வு வைக்கும் வாய்ப்பு அமையவில்லை. அது சாத்தியமும் அன்று. பின்பு நேரில் அவரோடு இணக்கம் வைத்தவர்கள் அவருடைய பேச்சுத்திறனை இன்னும் நன்றாக மதிப்புப் போட்டிருக்கின்றனர். அவர் எப்பொழுதுமே பாரமார்த்திக விஷயம் ஒன்றைப் பற்றி மட்டும் பேசுவது வழக்கம் எனக் கருதலாகாது. எந்த விஷயத்தைப் பற்றிப் பேச்செடுத்தாலும் அதையொட்டிய அரிய கருத்துக்கள் அவரிடமிருந்து வெளியாகும். தெய்விக விஷயங்கள், உலக விஷயங்கள் ஆகியவைகளுள் அவர் எதைப் பற்றிப் பேசினாலும் அதில் புதைந்திருக்கும் சிறப்பு அவர் வாயிலாக வெளியாகும். இனி அவரோடு கருத்துக்களைக் கலந்துகொள்கின்றவர்களுக்குக் குழப்பம் ஏதும் உண்டாவதற்குச் சிறிதேனும் இடம் இராது. கண்ணாடியில் எல்லாரும் அவரவர் முகம் காண்கின்றனர். முகத்தை அலங்கரிப்பதற்கான எண்ணமும் அதினின்று உள்ளத்தில் எழுகிறது. விவேகானந்தரோடு உரையாடுவது அவரவர் உள்ளத்தை அப்பரம்புருஷன் வாயிலாக அலசி ஆராய்வதற்கு ஒப்பாகும். குழந்தைகளோடு பேசுகிறபோது அவருக்கும் ஒரு குழந்தையின் உள்ளம் வாய்க்கும். தனக்கு ஒத்த மற்றொரு குழந்தையோடு இணக்கம் கொள்ளுவது போன்று அக்குழந்தை உணரும். அது ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்லதொரு கருத்தை விவேகானந்தர் அன்பொடு கலந்து, அருளொடு கலந்து அதற்கு ஊட்டுவார். பண்படாத மனநிலையில் இருக்கிறவர்களோடு சுவாமிகள் உரையாடவேண்டி வருமிடத்துத் தம்மையும் ஒரு பாமரன் நிலையில் வைத்துக்கொள்வார். ஆதலால் அவரோடு பேசுகிறவர்களுக்கு இவருடைய பாண்டித்தியமோ பாரமார்த்திகப் பெருநிலையோ குறுக்கிட்டு நிற்காது. யார் யார் எத்தகைய பண்புடையவராயிருந்தாரோ அந்தப் பண்புக்கேற்ற பேச்சும் அதினின்று அவரை ஒருபடி மேலே உயர்த்துவம் விவேகானந்தருடைய கடமையாயிருந்தது. எனவே அவர் மக்கள் எல்லோருக்குமே உரையாடுவதில் இனியவராயிருந்தார். பின்பு அவரவர்க்கு உண்டாயிருந்த சொந்தப் பிரச்னைகளை சுவாமிகளோடு கலந்து கொண்டவர்களுக்கு அவருடைய காருண்யமும் பேச்சுத் திறமையும் நன்கு புலனாயிற்று.

தாய் ஒருத்தித் தன் குழந்தைக்கு ஊட்டுகிற பால் அதன் உடலுக்கு ஒத்துகொள்வதாயிருக்கிறதா என்னும் கேள்வி ஒருபொழுதும் எழுவதில்லை. குழந்தையின் உடல்நிலைக்கு ஏற்றதாகவே தாய்ப்பால் தானாக மாறியமைகிறது. அத்தகைய தாய்ப்பால் போன்றது விவேகானந்தர் தனித் தனியாக ஒவ்வொருவரோடும் பேசிய பேச்சு. குழந்தைக்கு நாளடைவில் ஜீரணசக்தி அதிகரிப்பதற்கு ஏற்ப தாய்ப்பாலும் சற்றுத் தடித்ததாகும். அதே விதத்தில் கருத்தை ஏற்பவர்களுடைய பரிபாகத்துக்கேற்றபடியே விவேகானந்தர் நல்லெண்ணங்களை அன்னவர்களுக்கு எடுத்தூட்டுவார். அப்படி அவர் செய்வது ஒரு போதகாசிரியர் முறையில் அன்று. தாயும் சேயும் ஒட்டி உறவாடுவது போன்றோ அல்லது தோழர்கள் கருத்து ஒருமித்து இணங்கி இருப்பது போன்றோ விவேகானந்தரது கூட்டுறவு அமைந்திருக்கும். பேச்சை அவர் தம்மோடு இணங்கியிருப்பவரது பரிபாகத்துக்கு ஏற்றவாறு அமைப்பார்.

விவேகானந்தரோடு விவாதிக்க வேண்டிய சூழ்நிலைகள் பலர்க்கு வாய்க்கும். அப்படி வாதிக்கின்றபொழுது மக்களுடைய மனப்பரிபாகம் விவேகானந்தரது மனதில் முன்னணியில் வந்து நிற்காது. விவாதிக்கப்படுகிற விஷயம் முன்னணியில் வந்து நிற்கும். சம்பாஷிக்க வந்தவனை எப்படியாவது சந்தோஷப்படுத்தி அனுப்புவது விவேகானந்தரது போக்கு அன்று. விவாதிக்க வந்தவனது அறிவுத் திறனையும் ஆராய்கின்ற முறையையும் ஒழுங்குபடுத்தி அனுப்புவது சுவாமிகளது கடமையாயிற்று. அப்படி அவனது அறிவுத் திறனை ஒழுங்குபடுத்துதலில் தயவு தாட்சண்யத்துக்குச் சிறிதேனும் அவர் இடம் கொடுக்கமாட்டார். நோயாளி ஒருவனுக்குக் காயத்தைக் கசக்கிக் கட்டுவதை முன்னிட்டு உண்டாகிற வலியை ரண வைத்தியர் கருத்தில் வாங்கிக் கொள்வதில்லை. எந்த முறையில் காயத்தைத் திருத்திக் கட்டினால் காயப்பட்டவனுக்கு நலன் உண்டாகுமோ அந்த முறையில் நல்ல மருத்துவர் ரண வைத்தியத்தைக் கையாளுவார். மக்களது மனநோயைக் களைவது விவேகானந்தரது கடமையாயிற்று. எனவே ஏதேனும் ஒரு தத்துவத்தை எடுத்து விவாதிக்கும்பொழுது தமது சொற்கேட்பவனுக்குக் கசப்பு ஏதேனும் வரலாகாது என்று அவர் கருதுவதில்லை. எப்படியும் விவாதிக்கிறவனுடைய மனதை அவர் நேர்மைப்படுத்தி வைப்பார். அதற்கிடையில் அவர் பொறையே வடிவெடுத்தவர். பலர் உரையாடும்பொழுது பிறர் பேச்சை முழுதும் வாங்கிக்கொள்ளப் பொறையற்றவர்களாயிருப்பார்கள். எதிர்த்துப் பேசுபவனது இரண்டொரு வார்த்தைகளைக் கேட்டதும் சரமாரியாகத் தங்கள் கருத்தை வாரிக் கொட்டுவர். அத்தகைய சம்பாஷணை பெரிதும் குழப்பத்திலும் மனத்தாங்கலிலும் சென்று முடியும். அது போன்ற இழுக்குக்கு விவேகானந்தர் ஒருபொழுதும் இடந்தர மாட்டார். மற்றவனுடைய கூற்று முழுதையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்பார். அவன் பேசியதை யெல்லாம் விமர்சனப்படுத்துகிற முறையில் சுருக்கமாகத் தாம் ஒரு தடவை எடுத்து மொழிந்து ‘இதுதானே நீ பகர வந்துள்ள கருத்து?’ என அவர் வினவுவார். மற்றவன் தனது கூற்று முழுதையும் விவேகானந்தர் சரியாகக் கிரகித்துக்கொண்டார் என்று அவர் ஒத்துக்கொண்ட பிறகு அக்கூற்றிலுள்ள குறைபாட்டை அவர் படிப்படியாக எடுத்து விளக்குவார். ஏதேனும் ஒரு படித்தரத்தில் விவேகானந்தரது மறுப்பு அவனுக்குச் சமாதானம் அளிக்கவில்லையென்றால் அந்தப் பகுதியை மேலும் அவர் பலப்பலவிதங்களில் விளக்கிக் காட்டித் தம்மோடு உரையாடுபவனுடைய கருத்தைத் திருத்தியமைப்பார்.

தலைசிறந்த பரமாச்சாரியர் ஒருவரிடம் இருக்க வேண்டிய நற்குணங்களெல்லாம் ஒன்று சேர்ந்து விவேகானந்தரிடத்துத் திகழ்வனவாயின. தன் அறிவுக்கெட்டியவாறு ஒரு விஷயத்தைக் கருத்தில் வாங்கிக்கொள்ளும் சுதந்தரம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு என்பதை விவேகானந்தர் கணப்பொழுதிலும் மறந்துவிடவில்லை. அவரவர் சுயேச்சைப்படி விஷயங்களை ஓர்கின்றபொழுதே அவர்களுக்கு நல்ல முறையில் மன வளர்ச்சி உண்டாகிறது. சொல்லுவதைக் கேட்டு அக்கூற்றுக்கு அடிபணிகிறவர்களாய் மக்கள் இருக்க வேண்டும் என்னும் கருத்துடைய ஆசிரியர்களும், போதகர்களும், ஆசாரியர்களும்ம் உலகில் பலர் இருக்கின்றனர். ஆனால் அப்படி வலிந்து தமது கருத்தைப் பிறர் மீது திணிப்பது அறிவு வளர்ச்சிக்குப் பொருந்தாதது என்பது விவேகானந்தரது கொள்கை. ஒவ்வொரு குழந்தையும் தன் போக்கில் நின்றும் நடந்தும் பழகுகிறது. சிந்தனா சக்தியும் அதே விதத்தில் அந்தந்த மனிதனுடைய மனப்பான்மைக்கு ஏற்றவாறு வடிவெடுத்து வளர வேண்டும். அவரவர் போகின்ற போக்கில் போவதற்குச் சுதந்தரம் கொடுத்து உற்சாகமூட்டுவது விவேகானந்தர் கையாண்ட முறை. அப்படி உற்சாகமூட்டுதற்கிடையில் மக்கள் உள்ளத்தில் உண்டாகிற கோணல்களை மட்டும் அவர் அமைதியாக ஒழுங்குபடுத்துவார். தன்னிடத்திருந்த கோணல் திருத்தியமைக்கப் பெற்றிருக்கிறது என்பதையே பலர் உணர்ந்து கொள்ளாதபடி அவ்வளவு திறமையாக விவேகானந்தர் தம் பேச்சைக் கையாண்டார். பேச்சின் மூலம் மக்களுடைய பான்மைகளையே போராட்டத்துக்கு இடமில்லாது சரிப்படுத்தலாம் என்பதற்கு விவேகானந்தரது சொல்திறமை எடுத்துக்காட்டாக விளங்கிற்று. ஒருவர் பேசிக்கொண்டிருப்பதற்கிடையில் மற்றவர்கள் குறுக்கிட்டுத் தங்கள் கருத்துக்களை வாரிக்கொட்டுவது ஒரு சிலரிடத்துள்ள குறைபாடு. அத்தகைய நெருக்கடி விவேகானந்தருக்குத் திரும்பத் திரும்ப நிகழும். ஆனால் அது போன்ற சோதனை வேளைகளில் அவர் ஒரு பொழுதும் தமது பொறுமையை இழக்கமாட்டார். அமைதியும் இனிமையுமே வடிவெடுத்தவராயிருந்து தமது சீரிய கருத்துக்களைக் கேட்பவர்களுடைய உள்ளத்தில் அமுதூட்டுவது போன்று செலுத்துவார்.

இனி மதவெறி பிடித்தவர்களும், கருத்து வெறி பிடித்தவர்களும், அகங்காரம் மிகப் படைத்தவரகளும் உலகில் பலர் உண்டு. இன்னும் சிலர் விவேகானந்தரை வாய்ப்பேச்சில் தோற்கடிக்க வேண்டும் என்னும் செருக்குடன் வந்து விவாதத்தில் அவரை எதிர்ப்பார்கள். அத்தகைய புல்லிய பாங்கு படைத்திருந்த கிறிஸ்தவப் பாதிரிமார்களும், கல்வி செருக்கர்களும் பலர் அமெரிக்காவில் விவேகானந்தரைப் பேச்சில் தோற்கடிக்க வந்தனர். அவர்கள் விவேகானந்தரிடம் பட்டபாட்டைக் குறித்து அக்காலத்திய சமாசாரப் பத்திரிக்கை யொன்று இங்ஙனம் எழுதலாயிற்று:-

“விவேகாந்தரது வேதாந்தக் கோட்பாடுகளில் குற்றம் காண வேண்டும் என்னும் குறுகிய மனப்பான்மையுடன் அவரை எதிர்த்தவர்கள் அடைந்த அலங்கோலத்தை என்னென்பது? விவேகானந்தரை எதிர்த்தவர்களில் பலர் அவருடைய வேதாந்தக் கோட்பாடுகளெல்லாம் வீணான வெறும் மனக்கோட்டைகள் என்று குற்றம் காண முயன்றனர். அந்தோ! அம்முயற்சியில்தான் அவர்கள் அறவே தோல்வியடைந்தனர். எதிரிகள் கூறிய குற்றங்களுக்கு விவேகானந்தர் விடுத்த விடைகள் மின்னல் கொடிகள் போன்று கார்மேக மயமான எதிரிகளின் உள்ளங்களைப் பிளந்து கொண்டு போயின. சொற்போரில் விவேகானந்தரைத் தோற்கடிக்க முயன்றவர்கள் ஒரே மறுமொழியில் வாயடக்கப்பட்டனர். அவருடைய வாலறிவு என்னும் வடிவேலுக்கு எதிரே எதிரிகளின் மடமை தாக்குப் பிடிக்கத் தகுதியற்றதாய்த் தகர்த்தெறியப்பட்டது. எத்தகைய கூர் அம்புகள் போன்று அவருடைய தெளிந்த கருத்துக்கள் இருந்தன என்பதையும், அவருடைய அறிவுத் திறனில் எத்தகைய பிரகாசம் ஜொலித்துக்கொண்டிருந்தது என்பதையும், எவ்வளவு பெரிய ஞானக்களஞ்சியம் அவருடைய உள்ளத்தில் இடம் பெற்றிருந்தது என்பதையும், விவாதத்திலே எத்தகைய பண்பாடடைந்த மேன்மகனாக விவேகானந்தர் விளங்கினார் என்பதையும், அவரை எதிர்த்து விவாதம் பண்ண முற்பட்ட செருக்கர்கள் அறிந்துகொண்டு வாயடங்கி வெறுமனே திரும்பிப் போயினர்.”

விவேகானந்தரது பேச்சுத்திறமையைக் குறித்து மற்றுமொரு பத்திரிக்கை இங்ஙனம் எழுதுவதாயிற்று:

“விவேகானந்தரது வாலறிவு முழுதையும் அறிந்துகொள்ளுதற்கு அவருடன் சம்பாஷணை புரிவதே உற்ற உபாயமாகும். மேடைப் பிரசங்கத்தில் ஏதேனும் ஒரு கருத்தை ஏதேனும் ஒரு போக்கில் பிரசங்கத்தில் ஏதேனும் ஒரு கருத்தை ஏதேனும் ஒரு போக்கில் பொருத்தமாக அவர் பேசி முடிக்கிறார். ஆனால் அவருடன் நேரே சம்பாஷிக்கின்றபொழுதே அவரிடத்துள்ள சீரிய ஞானம் நன்கு வெளியாகிறது. விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் சீரிய எண்ணத்துடன் அவருடன் உரையாடினால் பகர்பவரும் பகரப்பெறுபவரும் ஒன்றுபட்டிருப்பது முதலாய அற்புதமாகும். அவருடைய ஆழ்ந்த அனுபவங்களையெல்லாம் தமக்குத்தாமே பேசிக்கொள்வது போன்று அவர் வெளியிடுவார். பிறர்க்கெடுத்துத் தம் கருத்தை வழங்குதல் என்னும் பேதம் அவருடைய மனதினின்று அறவே அகன்றுபோகிறது. சொல்லுபவர்க்கும் கேட்பவர்க்குமிடையில் ஐக்கியம் உண்டாகிறது. அப்படி நிகழ்கின்ற சம்பாஷணை அமிர்தத்தை வாரி வழங்குவது போன்று இனியதாக இருக்கிறது. விவேகானந்தரது பாண்டித்தியம், சொல்வன்மை, சோர்வு என்பதை அறியாத சமயோசித புத்தி, கடலிலும் ஆழ்ந்த அனுதாபம் ஆகிய சீர்மைகளெல்லாம் அவரிடத்திருந்து சோராது வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கும். இன வேற்றுமை, தேச வேற்றுமை, பழக்கவழக்கங்களின் வேற்றுமை, மொழி வேற்றுமை ஆகியவைகளெல்லாம் அவ்வேளையில் இருக்குமிடம் தெரியாது மறைந்துபட்டுப்போம். எந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகிறாரோ அந்த விஷயம் கண்ணெதிரே காட்சி கொடுப்பது போன்று விவேகானந்தரால் பேசப் பெறுகிறவர்களுக்கு விளங்கும். சரித்திரத்தைப் பற்றிப் பேசினால் பேசப்பெறும் நிகழ்ச்சி ஆங்கு நிகழ்வது போன்று இருக்கும். பரதத்துவத்தைப் பற்றி அவர் பேசினால் அனுபவம் அடையப் பெற்றவனாகப் பேசப் பெறுபவன் அந்தச் சிறிது நேரத்துக்காவது மாறியமைவது திண்ணம். அதுவே விவேகானந்தரது பேச்சுத் திறமை. அது பொருள் மிகப் புதைந்தது. அது ஒப்பு உயர்வு அற்றது.”

நாவலர் பலர் உலகில் இருக்கின்றனர். ஆயினும் அவர்கள் எல்லோரும் மெய்ப்பொருள் காட்சி கண்டவர்கள் அல்லர். தாம் தாம் கற்றறிந்தும் கேட்டும் உணர்ந்தும் இருக்கும் சிறு கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சிலாகித்துப் பேசுவதே அன்னவர்களின் போக்கு. ஆனால் சுவாமி விவேகானந்தரோ மெய்ப்பொருளை முற்றிலும் உணர்ந்தவர். பாரமார்த்திகத் தத்துவங்களையெல்லாம் அனுபவபூர்வமாகத் துருவி ஆராய்ந்தவர். ஆதலால் விருப்பு வெறுப்பின்றியும், மக்களைத் தாக்குதலோ தாங்குதலோ இன்றியும் எடுத்துக் கொண்ட விஷயங்களை நடுநிலை கோணாது விளக்கியருள்வார்.

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்னும் பொய்யாமொழியானது விவேகானந்தர் வாயிலாக நன்கு விளக்கப் பெறுவதாயிற்று. அவர் தாமே ஒரு சொல் வேந்தர். அவர் வாயினின்று வெளியானவையெல்லாம் உண்மை.


(1963ஆம் ஆண்டு விவேகானந்தரின் பிறந்த தின நூற்றாண்டின் போது ‘தென்னகத்து விவேகானந்தர்’ சுவாமி சித்பவானந்தர் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்துப் பின்னர் ‘விவேகானந்த விவரணம்’ என்னும் புத்தகமாக வெளியிட்டார். சுவாமி விவேகானந்தர் பிறந்த நட்சத்திரமான இன்று அப்புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதியை, இங்கு பதிவேற்றி இருக்கிறோம்.)


 

சென்ற வருடம் பதிவேற்றப்பட்ட கட்டுரை:

 

Advertisements

Sri Paramahamsarin Apta Mozi – 73

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 73

(சென்ற வாரத்தின் தொடர்ச்சி)

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி-மொழி 72: https://swamichidbhavananda.wordpress.com/2016/01/21/sri-paramahamsarin-apta-mozi-72/)

பரமஹம்ஸருடைய பக்தர்களில் ஒருவர் கேதார் என்பவர் ஆவார். அவர் முன்பு ஒரு தடவை பிரம்ம சமாஜத்தில் அங்கத்தினராய் இருந்தார். பிறகு அதைவிட்டு விலகிக்கொண்டார். பக்தி மார்க்கத்தில் போவது அவருக்கு மிகவும் விருப்பமானது. அரசாங்கத்தில் அவர் ஓர் உத்தியோகம் வகித்து வந்தார். உத்தியோகஸ்தராகக் கீழ்வங்காளத்தில் டாக்கா என்னும் நகரில் பல ஆண்டுகள் வசித்திருந்தார். அதுபோழ்து அவர் ‘விஜயகிருஷ்ண கோஸ்வாமி’ என்னும் வைஷ்ணவப் பெரியாரோடு தொடர்பு வைத்திருந்தார். இருவரும் அடிக்கடி சந்தித்து உரையாடிக் கொண்டிருப்பது வழக்கம். பல தடவைகளில் அவர்கள் பரமஹம்ஸரைப் பற்றிப் பேசுவார்கள். பரமஹம்ஸரின் பாரமார்த்திகப் பேரனுபவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் அவர்களுக்குப் பிரீதி மிக உண்டாயிற்று. பாரமார்த்திக விஷயங்களைப் பற்றிப் பேசும்பொழுது அவர் கண்களினின்று ஆனந்தக் கண்ணீர் ததும்புவதுண்டு. டாக்காவினின்று கல்கத்தாவுக்குத் திரும்பி வந்தான பிறகு அடிக்கடி அவர் தட்சிணேசுவரத்துக்கு வந்துவிடுவார்.

தட்சிணேசுவரத்தில் ஒரு நாளெல்லாம் பாரமார்த்திக விஷயத்தில் கழித்தற் பொருட்டு அவர் விரிவான ஏற்பாடு ஒன்று செய்திருந்தார். அன்பர்கள் பலரை ஆங்கு அழைத்திருந்தார். விழாப் போன்ற ஒரு வைபவத்தைக் கொண்டாட அவர்கள் ஆயத்தம் செய்திருந்தார்கள். அதற்காகவென்று பக்தி ரசத்துடன் பாடும் பாடகர் ஒருவரும் ஆங்கு வரவழைக்கப்பட்டிருந்தார். அன்றைய தினம் நல்ல முறையில் கழிக்கப்பட்டது. அதைக் குறித்து கேதார் பெருமகிழ்ச்சியுற்றிருந்தார். அன்று மாலை சுமார் 5 மணி ஆய்விட்டது. அப்பொழுது பரமஹம்ஸ தேவர் பரம்பொருளோடு இணக்கம் வைப்பது எங்ஙனம் என்பது பற்றிப் பக்தர்களுக்கு விரித்தெடுத்து விளக்கிக் கொண்டிருந்தார். “சச்சிதானந்தத்தைச் சுவானுபூதியில் அடையும் ஒருவன் இயல்பாகச் சமாதிநிலைக்குப் போய்விடுகிறான். அப்பொழுது அவனுடைய உலகக் கடமைகளெல்லாம் தாமாகவே நழுவி விழுந்துவிடுகின்றன. இங்கு அமர்ந்திருக்கும் இந்தப் பாடகரைப் பற்றி நான் உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். எனக்குத் தோன்றியவற்றையெல்லாம் நான் அவரைப் பற்றிப் பகர முற்படுகிறேன். அப்படிப் பேசிக்கொண்டிருக்கின்ற வேளையில் அவர் தாமே இங்கு வந்து சேர்ந்துவிடுகிறார் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அவரைப் பற்றிய பேச்சு எதற்காக? அவரைக் கண்டதும் பேச்சு நின்றுவிடுகிறது.”

(தொடரும்…)