Holy Mother’s Birthday

குருதேவரின் கருவி

இயற்கையை ஆராய்ந்து பார்த்தால் ஓர் உண்மை வெளியாகும். ஒவ்வொரு பொருளும் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டே போகிறது. பக்குவத்தில் உச்சநிலையை அடைந்தான பிறகு அப்பொருள் உலகுக்குப் பயன்படுவதாக மாறியமைகின்றது. மரத்தினின்று வருகின்ற மலர்களையும், கனிகளையும் இதற்குச் சிறந்த சான்றுகளாகச் சொல்லலாம்.

மக்களும் அவரவர் அடைந்து வரும் பண்புக்கு ஏற்பப் பிறர்க்குப் பயன்படுபவர் ஆகின்றனர். உடல் உழைப்பால் சிலர் பயன்படுகின்றனர். கல்வி, கேள்விகளில் சிறப்புறிருந்து வேறு சிலர் பயன்படுகின்றனர். சீலத்திலும், ஒழுக்கத்திலும் உயர்நிலைக்கு வந்து இன்னும் சிலர் உலகுக்கு உதவுகின்றனர். அருள் துறையில் பரிபக்குவம் அடைந்து யாரோ சிலர் உலகை உய்விக்கும் உத்தமர் ஆகின்றனர். அக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணரும் அவர்க்குத் துணையாய் வாய்த்த அன்னை சாரதா தேவியாரும் ஆவார்கள்.

தமது சிஷ்ய கூட்டத்துக்குத் தக்க பயிற்சியைத் தந்தான பிறகு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தமது திருமேனியைத் துடைத்துவிட்டார். அதனால் சாரதா தேவியார் தாற்காலிகமாக ஆழ்ந்த துயரத்தில் ஈடுபட்டிருந்தார். தாம் இனித் திருமேனி தாங்கியிருப்பதில் பயன் ஒன்றும் இல்லை, விரைவில் அதைத் துடைத்துத் தள்ளுவதே தமக்குப் பொருந்தும் என்றும் அவர் தீர்மானித்தார். கண்ணீரும் கம்பலையுமாய் இருந்த அவருக்கு குருதேவரது திருக்காட்சி ஞான நிலையில் எட்டியது. அன்னையாரின் முன் பரமஹம்ஸர் அருள் உருவாய்த் தோன்றி ஆக்ஞாபித்ததாவது:

“இத்தகைய துயரம் எதற்காக? ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்கு மனிதன் போவது போன்று ஆத்மா பூத உடலைத் துடைத்துவிட்டு அருள் நிலைக்கு வருகிறது. இவ்வுண்மையை அறிபவர்க்குத் துயரம் உண்டாவது எங்ஙனம்?”

அதற்கு அன்னையார் விடுத்த மறுமொழியாவது:

“இனி இத்தேகத்தை வைத்திருப்பதால் ஆவது என்ன? தங்கள் பூத உடலுக்குப் பணிவிடை செய்து வந்த இப்பூத உடலும் முடிவடைந்து போவதுதானே முறை”

அருட்காட்சியில் தென்பட்ட பரமஹம்ஸர் மேலும் பகர்ந்தார்:

“உயிரனைத்தும் ஒரே பேருயிரின் வெவ்வேறு தோற்றங்கள். உடல் தாங்கியுள்ள மற்ற உயிர்களுக்கும் பணிவிடை செய்வதற்கென்றே மேன்மையுற்ற ஒவ்வொருவரும் தமது உடல் வாழ்க்கையைப் பயன்படுத்த வேண்டும். அருள்தாகம் கொண்டுள்ள ஆன்மாக்களுக்கு ஞான உணவை வழங்குதல் என்னும் பணிவிடையைச் செய்து கொண்டிருப்பாயாக. அதன் பொருட்டு உன் உடல் நெடிது உலகில் நிலைத்திருக்கட்டும்.”

மற்றுமோர் ஆணை பரமஹம்ஸரிடத்திலிருந்து பிறந்து வந்தது. உலக இயல்புக்கு ஒப்ப அன்னை சாரதா தேவியார் விதவைக் கோலத்தை ஏற்றுக் கொண்டார். அச்செயலைப் பரமஹம்ஸர் சிறிதும் ஆமோதிக்கவில்லை.

“இக்கோலம் எதற்காக? அழிவற்ற என்னை அழிந்து போனதாக நீ கொள்வது தகுமோ? ஆத்மாவின் நிலைப்பேறு உடலைத் தாங்கியிருப்பதை பொறுத்தன்று. நான் அருளுருவாய் இருப்பதை இப்போது காணும் நீ அதற்கேற்ற மங்களகரமான கோலத்திலேயே வாழ்ந்திருப்பாயாக.”

இவ்வாணையைச் செவியுற்ற சாரதா தேவியார் கைம்பெண் கோலத்தைக் களைந்துவிட்டார். மாங்கல்ய ஸ்திரீயின் சின்னங்களையே பிறகு ஆயுட்கால மெல்லாம் தாங்கியிருந்தார். உலகத்தவர் காட்சிக்கு இது அடாத செயலாகத் தென்பட்டது. விதவா என்பது தவா அல்லது தலைவனை இழந்தவள் எனப் பொருள்படுகிறது. ஸதவா என்பது தவா அல்லது தலைவனை உடையவள் எனப் பொருள்படுகிறது. காயத்தையே மெய்பொருள் என்று கருதுபவர் கணவனின் காயம் மறைந்த பிறகு கணவனை இழந்த கைம்பெண் எனக் கருதுகின்றனர். ஆத்ம சொரூபத்தை மெய்ப்பொருளென அறிபவர்க்கு அத்தகைய விதவைக்கோலம் பொருளற்றது. இந்தச் சிறந்த கோட்பாட்டைச் சமுதாயம் அறிந்திலது. சாரதா தேவியின் மூலம் பரமஹம்ஸர் இதை உலகுக்குப் புகட்டி இருக்கிறார்.

74 Holy Mother's ornaments.jpgood

அன்னையார் ஆயுட்கால மெல்லாம் அணிந்திருந்த நகைகள்

ஞான வாழ்க்கையில் ஈடுபடும் பெண்மக்களுக்கு விதவைக் கோலம் பொருளற்றது. பரம்பொருளோடு ஒன்றித்திருக்கும் பாரமார்த்திகப் பெருவாழ்வுக்குப் புறச்சின்னமாய் உடலைக் காத்து வைத்திருப்பதே பெண்பாலர்களது உயர்ந்த லக்ஷியமாகும். அன்னை சாரதா தேவியாரின் ஜீவிதம் இக்கோட்பாட்டுக்கு விளக்கமாகும்.

பரமஹம்ஸர் திருமேனியைத் துடைத்தான பிறகு சுமார் 35 ஆண்டுகள் அன்னையார் மாங்கல்ய ஸ்திரி கோலத்திலேயே உடலைத் தாங்கி வைத்திருந்து உலகுக்கு அருள் விருந்தை வழங்கி வந்தார். பரமஹம்ஸருடைய ஆணைக்கு உட்பட்டு உலகுக்கு ஞானத்துறையிலே ஒப்பற்ற முறையிலே அவர் அரும்பணியாற்றி வந்தார். இன்றைக்கு உருவாயிருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துத் திருக்கூட்டத்தில் பெரும்பாலோர் அன்னை சாரதாதேவியாரின் சிஷ்யர்கள் ஆவர். இத்திருக்கூட்டத்தை உரு ஆக்குவதற்கென்றே இந்த ஞானத் தம்பதிகள் இக்காலத்தில் உரு வெடுத்து வந்துள்ளார்கள்.

நாளடைவில் பக்தர்களும் ஆத்ம சாதகர்களும் உலகில் வெவ்வேறு இடங்களிலிருந்து அன்னை சாரதா தேவியைத் தரிசிக்கவும் அவருடைய ஆசியைப் பெறவும் வந்துகொண்டிருந்தார்கள். மேல் நாடுகளிலிருந்தும் ஆடவரும், மகளிரும் தீர்த்த யாத்திரை செய்வது போன்று அன்னையிடம் வந்து கொண்டிருந்தார்கள். நூற்றுக் கணக்கானபேர் அன்னையினால் ஆத்மீக வாழ்க்கையின் பொருட்டு ஆட்கொள்ளப்பட்டவர்கள் ஆனார்கள்.

ஆயினும் அவருடைய வாழ்க்கையில் தனிச் சிறப்பு ஒன்று திகழ்வதாயிற்று. ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய பிரதிநிதியாயிருந்து அவர் அருள் விருந்தை உலக மக்களுக்கு வழங்கி வந்தார். எனினும் அந்த உயர்ந்த பதவியைப் பற்றிய உணர்ச்சி கணப்பொழுதும் அவர் உள்ளத்தில் புகுந்தது கிடையாது. பரமஹம்ஸருடைய அருளுக்குத் தாம் எவ்வளவு தூரம் பாத்திரம் ஆயிருந்தாரோ அவ்வளவு தூரம் மற்ற எல்லாப் பக்தர்களும் பாத்திரமாகிறார்கள் என்பது அவருடைய துணிபு.

Holy Mother Shrine Pose 1898
Holy Mother, 1898.

(அன்னையாரின் பிறந்த தினத்தை இன்று [நட்சத்திரப்படி] கொண்டாடும் விதமாக, மேற்காணும் கட்டுரை ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் இயற்றிய ‘பரமஹம்ஸரின் பெருமை’ என்ற நூலிலிருந்து எடுத்து பதிவேற்றப்பட்டது. அன்னையாரைப் போன்று நாமும் பரம்பொருளின் கருவியாய் இருந்து, திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.)

2014ஆம் ஆண்டு அன்னையார் பிறந்த தினத்தன்று பதிவேற்றப்பட்டக் கட்டுரையை வாசிக்க இங்கே CLICK செய்யவும்:

New year

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s