Swami Sivananda Birthday

(பெரிய சுவாமிஜி சித்பவானந்தர் அவர்களின் குருநாதர் ‘மஹாபுருஷ மஹராஜ்’ சுவாமி சிவானந்தர் அவர்களின் பிறந்த தின [நட்சத்திரப்படி] சிறப்புப் பகிர்வு.)

மஹாபுருஷ மஹராஜ் காட்டிய வழி

Swami Shivananda2-1
‘Mahapurush Maharaj’ Swami Sivananda

 

காசி அத்வைத ஆசிரமம்:

சுவாமி விவேகானந்தரின் விருப்பத்திற்கிணங்க மஹாபுருஷ மஹராஜ் சுவாமி சிவானந்தர் வேதாந்தப் பிரசாரம் செய்வதற்காக காசிக்குப் பயணமானார். காசியில் தற்போது இருக்கும் அத்வைத ஆசிரமத்தின் கட்டிடத்தை பத்து ரூபாய் வாடகைக்கு அமர்த்திக் கொண்டார். 1902ல் ஜூலை 4ஆம் தேதியிலிருந்து ஆசிரம வேலைகளை ஆரம்பித்தார். அத்தினமே சுவாமி விவேகானந்தர் தம் பூத உடலை உகுத்தார். மறுதினம் இத்துன்பச் செய்தியை அறிந்து இடி விழுந்தது போல துக்கக் கடலில் மூழ்கினார். இருப்பினும் தலைவரின் கட்டளையை மீறாது அவரிட்ட பணியைச் செய்வதே அவருக்குச் செலுத்தும் அஞ்சலி என்றறிந்து காசியிலேயே இருந்துவிட்டார். காசியில் நடைபெறும் ரதயாத்திரைத் திருவிழாவன்று சிறப்புப் பூஜை, யாகம் முதலியவற்றை நடத்திவிட்டு குருதேவரின் திருவுருவப்படத்துடன் சுவாமி விவேகானந்தரின் படத்தையும் பிரதிஷ்டை செய்தார்.

காசி அத்வைத ஆசிரமத்தில் இருந்த பொழுது சுவாமி சிவானந்தர் ஆசிரம பணியாளர்களைப் பற்றி, ஆசிரமவாசிகளிடம் குறிப்பிடுகையில், “அவர்களை வேலையாட்கள் என்று ஏன் நினைக்கிறீர்கள்? நமக்கு உதவி செய்பவர்கள் என்று எண்ணுங்களேன்” என்பார். சந்நியாசிகளையும், பிரம்மச்சாரிகளையும் பற்றிக் குறிப்பிடுகையில், “இவர்கள் அனைவரும் குட்டி நாகங்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் அடைக்கலமாக யார் வருகிறார்களோ, அவர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்லர்” என்பார்.

1904ஆம் ஆண்டு, குளிர்காலம். ஒரு விடியற்காலைப் பொழுதில் பிரம்மசாரி ஒருவர் ஆசிரமத்திற்கு வந்தார். மஹாபுருஷ மஹராஜ், தம் கையாலேயே அவருக்குத் தேநீர் தயாரித்தளித்தார்.

மற்றொரு நாள், ஏதோ காரணத்தால் துணி துவைக்க முடியாத பிரம்மச்சாரி ஒருவரின் துணிகளை சுவாமி சிவானந்தரே துவைத்தார். சுவாமி சிவானந்தரிடம் இருந்த ஒரு வேதாந்திக்குள்ள கடினத் தன்மையும், ஒரு தாய்க்குள்ள மென்மையும் நினைந்து நினைந்து கொண்டாடத் தக்கது.

பேலூர் மடத்தின் மேலாளர்:

பேலூர் மடத்தின் மேலாளராக சுவாமி சிவானந்தர் இருந்த காலகட்டத்தில் சுவாமிகளின் வழிகாட்டுதலில் இளம் சந்நியாசிகளின் வாழ்க்கை குருதேவர், அன்னையார், சுவாமிஜி காட்டிய மார்க்கத்தில் சென்றது.

எது தவம்?

உடலை வருத்தி, கோவணாண்டியாக, கழுத்தளவு நீரில் நின்று ஜபம் புரிவது, காலை முதல் மாலை வரை சூரியனைப் பார்த்தவாறு மனஒருமையைப் பயிற்சி செய்வது போன்றவற்றில் ஒரு சந்நியாசி தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். அவர் பேலூர் மடத்திலிருந்த சந்நியாசிகள் மத்தியில் தாம் ரிஷிகேஷில் கடைப்பிடித்த தவங்களைக் கூறி மகிழ்ந்தார்.

இந்தச் செய்தி சுவாமி சிவானந்தரின் காதுக்கு எட்டியது. தவமியற்றும் முறையில் பலவகை இருந்தாலும் இந்த யுகத்துக்கான தர்மத்தை – சேவை மூலம் சிவனை அடைவதும், சிரிக்கும் ஏழை எளியவர் முகத்தில் சிவ தரிசனம் காண வேண்டுவதை – ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்து சந்நியாசிகள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டுமென்று கருதினார் சுவாமிகள். அப்போது அவர் கூறியதாவது, “உண்மையான சேவை எது தெரியுமா? கழுத்தளவு நீரில் நிற்பதும், சூரியனை வெறித்துப் பார்ப்பதும் அல்ல. புகழ்ச்சி இகழ்ச்சி, மரியாதை அவமரியாதை, இன்பம் துன்பம் இவற்றையெல்லாம் பொருட்டாக நினைக்காமல், கடவுளிடம் முழு மனதையும் நிலைக்கச் செய்வதும் தியானத்திலும் பிரார்த்தனையிலும் தம்மை இழப்பதுதான் சிறந்த தவம். வெறும் உடலை வருத்துவது தவம் அல்ல”.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சுவாமிகளே மரபுப்படி பல காலம் தவம் இயற்றியவர்தாம். அப்படிப்பட்ட அவர் உண்மையான, இயல்பான, நீடிப்பதான, பிறர்க்கும் பயன்படும்படியான தவம் எது என்பதைப் பற்றிக் கூறுவது பொருத்தமே.

குரு பக்தி:

மடத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பொருளும், மடத்திற்காகச் செய்யப்படும் ஒவ்வொரு பணியும் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு உரியது என்ற எண்ணத்தை எல்லோரின் மனதில் ஊன்ற வைப்பதற்குப் பாடுபட்டார் சுவாமி சிவானந்தர். சிறுசிறு விஷயங்களிலும் மிகுந்த கவனம் செலுத்துவார். பல சமயங்களில் அவரே பல வேலைகளைச் செய்வார். தோட்டக்காரன், மடத்துப் பசு, மற்ற பல உயிரினங்கள் என்று எங்கும் அவர் அன்பு படர்ந்தது. தமது வளர்ப்பு நாயான ‘கேலோ’வைச் சுட்டிக்காட்டி அவர், “கேலோ எனது நாய். நான் குருதேவரின் நாய்” என்று கூறுவார்.

மருத்துவப் பணிவிடைகள்:

ஒரு சமயம் பேலூரில் மலேரியாக் காய்ச்சல் பரவலாயிற்று. அப்போது ஒரு மாதம் வரையில் மடமே ஒரு சிறு மருத்துவச்சாலை ஆகிவிட்டது. மஹாபுருஷ மஹராஜ் நோயாளிகளுக்குத் தொண்டு செய்வதில் முழுமூச்சுடன் இறங்கினார். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கவனிப்பதிலும், உணவு வகைகளைத் தயார் செய்வதிலும் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். ஜவ்வரிசி கஞ்சி, பார்லி கஞ்சி, சூப் முதலியவற்றை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதைப் பிறருக்கு அருகில் இருந்தபடி கற்றுத் தருவார்.

ஜப-தியானத்தின் அவசியம்:

சுவாமி சிவானந்தர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தபோது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இயக்கத்தின் புதிய கிளைகள் திறக்கப்பட்டன. அவர் துறவிகளிடம் பொதுநலப் பணிகளைச் செய்வதோடு அல்லாமல் நான்கு யோகங்களையும் பழகி ஆன்மாவை அடையும் முயற்சியையும் கைவிடலாகாது என்று கூறி அறிவுறுத்தினார். ஒருநாள் அவர் துறவி ஒருவரிடம் பின்வருமாறு பேசினார்: “ஜப தியானத்தை தினமும் செய்து வா. ஏனெனில் அதுதான் எல்லா ஆற்றல்களில் களஞ்சியமாகும். தியான நேரத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் குறைத்துவிடாதே.”

மற்றொரு நாள் துறவி ஒருவர், வேலை செய்வதைவிட தியானத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பது போல் பேசினார். அவருக்கு சுவாமிகள் பின்வருமாறு பதில் கூறினார்: “தியானம் மிகவும் முக்கியமானது. கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி தியானம் மிகவும் முக்கியமானது. வேலை செய்வதைப் பற்றி பேசினாய். குருதேவரும் சுவாமிஜியும் அளித்துச் சென்றுள்ள லட்சியங்களுக்கு ஏற்பப் பணிகளைச் செய்ய வேண்டுமானால் ஜபமும், தியானமும் கட்டாயம் வேண்டும். ஜபமோ, தியானமோ இல்லாமல் அவர்களின் பணியைச் செய்ய முடியாது என்பதை அறிந்துகொள். வேலை, வழிபாடு இரண்டையும் சமச்சீராகச் செய்ய வேண்டும்.”

ஆராதிக்கும் முறை:

மூப்பும், நோயும் உடம்பை வெகுவாகப் பாதித்த போதிலும் மடத்து நிர்வாகத்தில் மிகுந்த அக்கறை காட்டினார் சுவாமி சிவானந்தர். அதிலும் குருதேவரின் பூஜை, சேவை முதலியவற்றில் சிறந்த கவனம் செலுத்தினார்.

பூஜை செய்து வரும் துறவியிடம் சுவாமி சிவானந்தர், “பூஜை நிறைவேற்றியதும், குருதேவர் மீதுள்ள ஓரிரு ஸ்தோத்திரங்களை ஓது. பிற்பகலில் பூ கட்டுகிறாய்; பல மாலைகள் கட்டுவதற்குப் பதிலாக ஒரே ஒரு மல்லிகை மாலை கட்டு. மீதி நேரத்தில் ஜப தியானம் செய். சாஸ்திரங்களைப் படி. கோடை காலத்தில் குருதேவரைத் தூங்கச் செய்த பிறகு கொஞ்ச நேரம் வீசு.” என்று கூறினார். ஏனென்றால் குருதேவர் உயிர் உணர்வுடன் நடமாடுவதைக் காண்பவர் அல்லவா மஹாபுருஷ மஹராஜ் அவர்கள்.

அனைவருக்கும் விடுத்துள்ள செய்தி:

மற்றொரு முறை சுவாமி சிவானந்தர் துறவிகளிடம், “வெறுமனே பேசுவதாலோ, வற்புறுத்துவதாலோ மக்களிடம் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. உண்மையிலேயே உங்களிடம் ஆன்மீக ஆற்றல் இருக்குமானால், அதைக் கொண்டு அவர்களுடைய மனப்போக்கை மாற்றி நல்ல பாதைக்குத் திருப்ப முயற்சி செய்யுங்கள். இறைவனிடம் இடைவிடாமல் பிரார்த்தனை செய்யுங்கள்; அவரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவரே வேண்டிய மாற்றங்களைச் செய்யட்டும். இறைவன் மட்டும் தமது கருணையைப் பொழிய ஆரம்பித்துவிட்டால் எவ்வளவு பெரிய தீமையும் அகற்றப்பட்டு மனத்தில் பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி”

இறுதி நாட்கள்:

1933ஆம் வருடம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே யாரும் எதிர்பாராத விதத்தில் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. சுவாமி சிவானந்தரின் வலது பக்க உறுப்புகள் செயலிழந்தன. பேசும் சக்தியை இழந்தார். பேச்சும் நடமாட்டமும் இல்லாத நிலையில் சுவாமிகள் இடது கையால் சைகை செய்தோ, பார்வையால் உணர்த்தியோ அனைவருக்கும் தமது அன்பையும், ஆசியையும் வழங்கினார்.

1934 பிப்ரவரி 18ஆம் நாள் ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. 20ஆம் நாள் செவ்வாய் மாலை 5:36 மணிக்கு சுவாமி சிவானந்தர் மகாசமாதி அடைந்தார். உயிர் பிரியும் நேரத்தில்கூட அவர் முகம் ஆனந்தமாக இருந்தது. தலை முடிகள் அனைத்தும் விறைத்து நின்றன. இவை இரண்டும் புனிதமான அடையாளங்களாகக் கருதப்பட்டன.


2014ஆம் ஆண்டு சிறப்புப் பகிர்வு வாசிக்க இங்கே ‘See more’ click செய்யவும்:

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s