Sri Paramahamsarin Apta Mozi – 71

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 71

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி-மொழி 70: https://swamichidbhavananda.wordpress.com/2016/01/07/sri-paramahamsarin-apta-mozi-70/ )

சுயநலத்தியாகமே பொதுத்தொண்டு

பொதுநல சேவை என்பன சிலரால் செய்யப்படுகின்றன. அத்தகைய மனப்பான்மை எல்லார்க்கும் வந்துவிடுவதில்லை. பெரும்பாலர் தங்களுடைய சுயநலத்திலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். பிறர் நலத்தைப் பற்றி நினைக்கவும் அவர்களுக்கு நேரமில்லை. அத்தகையவர்கள் மக்களுள் கடையானவர்கள் ஆகின்றனர். பிறர் நலத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பவர்களே பாக்கியவான்கள். பிறர் நலத்தில் அவர்கள் ஈடுபட்டு இருக்குமளவு சுயநலம் அவர்களுடைய மனதை விட்டு நீங்கிவிடுகிறது. ஆனால் பிறர்க்குப் பணிவிடை செய்வதன் மூலம் பிறர்க்கு உபகாரம் செய்கிறோம் என்றோ, பிறரைத் திருத்தியமைக்கின்றோம் என்றோ சாதகன் ஒருவன் எண்ணுவானாகில் அவன் ஒரு நலத்தையும் அடையமாட்டான். அகங்காரம் படைத்துள்ள ஒருவனுடைய உள்ளத்தில் அத்தகைய எண்ணம் வருகிறது. பிரதிபலனை எதிர்பாராதும், நான் உலகுக்குப் பெரிய உபகாரம் செய்வதாக எண்ணிக் கொள்ளாதும் சேவை செய்ய வேண்டும். தான் தெய்வத்துக்குப் பணிவிடை செய்வதாக எண்ணிக்கொண்டு கைங்கரியங்களில் ஈடுபடுதல் முறை. அதனால் சாதகனுக்கு எல்லா நன்மையும் உண்டாகும். மெய்யன்பு அவனுடைய உள்ளத்தில் வளர்ந்து வரும். அகங்காரம் இருக்குமிடம் தெரியாது தேய்ந்து போகும். அகங்காரம் அகன்றவிடத்து ஈசுவர அனுபூதி தானாக வந்தமைகிறது.

தான் புரிகின்ற உபகாரத்தால் உலகுக்கு ஏதோ நன்மை வந்துவிட்டது என்று சாதகன் ஒருவன் எண்ணுவானாகில் அந்த எண்ணம் அவனை மேலும் அக்ஞான இருளில் ஆழ்த்திவிடும். உலகுக்கு உதவிபுரிய மனிதனுக்கு ஒரு நாளும் இயலாது. உலகுக்குப் பணிவிடை செய்ய அவனுக்கு இயலும். உதவி என்பது உண்மையில் தெய்வத்திடமிருந்து வருகிறது. அகங்காரம் படைத்த மனிதன் அந்த உதவியைத் தன்னுடையது என்று எண்ணுகிறான். அதனால் அவன் கீழோன் ஆய்விடுகின்றான். கருணாகரனாகிய கடவுள் ஒருவரே உலகுக்கு எல்லாவித நன்மையையும் செய்து வருகிறார். இப்பிரபஞ்சத்தையெல்லாம் படைத்தவர் அவர். குழந்தைகளிடத்து ஆழ்ந்த அன்பு கொள்ளும்படி பெற்றோர்களைப் பரம்பொருள் அமைத்து வைத்துள்ளார். பொற்றோருடைய அன்பு என்னும் கருவியின் வாயிலாக இறைவனுடைய அருள் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. பரந்த மனப்பாங்கு உடையவர்களாகச் சில மக்களைக் கடவுள் செய்து வைக்கின்றார். பிறர் நலத்துக்கென்றே பாடுபடும் மனப்பான்மை அவர்களுக்கு வருகிறது. இது கடவுளிடத்திருந்து வந்துள்ள கருணை என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சான்றோர்களும், பக்தர்களும் கடவுள் மீது மாறாத அன்பு பூண்டு ஒழுகுகின்றனர். அந்தச் சான்றோர்களுடைய சான்னித்தியம் பலபேரை நல்வழியில் நடாத்துதற்கு உதவுகிறது. இந்தப் பேரமைப்பும் கடவுளிடத்திருந்து வந்தது என்பதை நாம் மறந்துவிடலாகாது. சுயநலம் கருதாது பிறர்க்குச் சேவை செய்கின்றவன் தன்னை மேல்நிலைக்கு உயர்த்திக் கொள்கின்றான். சுயநலம் கருதுவதால் அல்லது பிறர்க்குத் தான் உபகாரம் செய்வதாக எண்ணுவதால் தன்னையே அவன் சிறுமைப்படுத்திக் கொள்கின்றான். சுயநலம் கருதாதும், அகங்காரம் கொள்ளாதும் பணிவிடை செய்கின்றவர்களே பாக்கியவான்கள். நிச்சயமாகவே அவர்கள் மேன்மக்கள் ஆகின்றனர்.

(தொடரும்…)

Advertisements

One thought on “Sri Paramahamsarin Apta Mozi – 71

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s