Sri Paramahamsarin Apta Mozi – 72

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 72

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி-மொழி 71: https://swamichidbhavananda.wordpress.com/2016/01/14/sri-paramahamsarin-apta-mozi-71/)

நெஞ்சகமே கோயில்

பரமஹம்ஸர் தொடர்ந்து வித்யாசாகரிடம் பகர்வாராயினர்:

“பூமிக்குள் பொன் மறைந்து கிடக்கின்றது. அதை அறியாதவர்கள் அதன் மீது நடந்து செல்கின்றனர். தாங்கள் மிதிக்கும் இடத்தில் விலையுயர்ந்த பொருள் இருக்கின்றது என்பதை அவர்கள் உணர்வதில்லை. அதே பாங்கில் ஒப்பற்ற பொருள் ஒன்று ஹிருதயத்தினுள் மறைந்து கிடக்கின்றது. அக்ஞானம் அதை இலேசாக மூடிக்கொண்டிருக்கின்றது. ஆயினும் உள்ளத்தினுள்ளே இருக்கின்ற அரிய பொருளை அறிந்து நாடுபவர்கள் அதனிடத்திலேயே நாட்டம் கொள்ளுவர்.

குழந்தைய ஈன்றெடுத்தான பிறகு தாய் அக்குழந்தையை வளர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறாள். அவளுக்கு மாமியார் வீட்டில் வேறு எந்த வேலையும் கொடுப்பதில்லை. அருள் நாட்டம் அடையப் பெற்றவர்களுடைய வாழ்வும் அத்தகையதாகிறது. தெய்வத்தோடு இணக்கம் வைப்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர்.”

உள்நோக்கிச் செல்

விறகு வெட்டி விற்று வாழ்ந்து வந்த விறகுத் தலையன் ஒருவன் இருந்தான். நாள்தோறும் விறகு வெட்ட அவன் காட்டுக்குள் சென்று வந்தான். வழியில் அவனைச் சந்தித்த சாது ஒருவர் ‘இன்னும் உள்நோக்கிச் செல்’ என்று உபதேசித்தார். அதன்படி அவன் காட்டுக்குள் கொஞ்சம் தூரம் நுழைந்து சென்றான். சந்தன மரங்கள் அகப்பட்டன. அதனால் அதிக ஊதியம் பெற்றன். உள்நோக்கிச் செல் என்று சொன்ன சாது அதற்கு எல்லை ஒன்றும் கொடுக்கவில்லை. மேலும் உள்நோக்கிச் சென்று பார்ப்போம் என்று விறகுத் தலையன் தீர்மானம் செய்தான். தாமிரத்தாது அங்கு அகப்பட்டது. அதனால் அவன் இன்னும் அதிக ஊதியம் பெற்றான். கொஞ்சநாள் பொறுத்து மேலும் உள் நோக்கிச் சென்றான். வெள்ளித் தாது அகப்பட்டது. அதன் பிறகு ரத்தினங்கள் கிடைத்தன. அவன் பெரும் பணக்காரன் ஆய்விட்டான்.

நமது உள்ளம் என்னும் குகைக்குள் ஆழ்ந்து சென்று பழக வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அதனுள் ஆழ்ந்து செல்லுகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு தெய்வ சான்னித்தியத்தை ஆங்கு அதிகமாகக் காணலாம்.

பிரதிபலனை எதிர்பாராது ஆருயிர்களுக்கு அரும்பணி செய்து வந்தால் அதனால் உள்ளம் தெளிவடைகிறது. கடவுள் பக்தி அப்பொழுது அதிகரிக்கிறது. பக்தி பெருகுமளவு கடவுளின் சான்னித்தியத்தை மனத்தகத்து உணர முடியும். அதுமட்டுமல்ல, கடவுளைச் சாக்ஷாத்கரிக்கவும் முடியும். நாம் ஒருவரோடு ஒருவர் பேசுவது போன்று கடவுளோடு பேசவும் இயலும்.

இங்ஙனம் பரமஹம்ஸர் பகர்ந்துகொண்டு வருகையில் ஆங்கு குழுமியிருந்தவர்களெல்லாம் வியப்புடன் அவர் வாயினின்று வந்த திருவாய்மொழிகளைப் பருகிக் கொண்டிருந்தனர். பரமஹம்ஸர் நாவில் கலைமகளே குடியிருந்துகொண்டு இவ்வரிய கருத்துக்களைப் பகர்ந்தருளினாள் போன்று அக்காட்சி தென்பட்டது. அங்ஙனம் பகர்ந்தருளிய பொய்யாமொழி ஆங்குக் கூடியிருந்தவர்களுக்கு மட்டும் பயன்பட்டது என்று சொல்லலாகாது. மானுட வர்க்கத்துக்கே அவ்வரிய செய்தி உருவெடுத்து வந்தது போன்று அக்காட்சி தென்பட்டது.

(தொடரும்…)

Advertisements

One thought on “Sri Paramahamsarin Apta Mozi – 72

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s