Monthly Archives: February 2016

Sri Paramahamsarin Apta Mozi – 77

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 77

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 76: https://swamichidbhavananda.wordpress.com/2016/02/18/1063/)

போலிச் சமயமும் உண்மைச் சமயமும்

தட்சிணேசுவர ஆலயத்தில் ஹஸ்ரா என்பவர் ஒருவர் வசித்திருந்தார். அவர் குடும்பத்தில் தொல்லைகள் சில இருந்தன. அத்தொல்லைகளிலிருந்து தப்பித்துக்கொள்லுதற்பொருட்டுப் பாரமார்த்திக வாழ்க்கை வாழத் தமக்கு விருப்பம் இருந்ததாகச் சாக்கு சொல்லிக்கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியே கிளம்பியவர். தமது மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை அவர் முறையாகச் செய்தவர் அல்லர். அது ஒன்றும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்னும் தப்பான அபிப்பிராயத்தில் அவர் ஊறியிருந்தார். அவரிடத்துப் பாண்டித்தியம் மிக இருந்தது. அதற்கு நேர்மாறாக ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் கல்வி ஒன்றும் கிடையாது. இவர்கள் இருவரும் ஏககாலத்தில் தட்சிணேசுவர ஆலயத்தில் வசித்து வந்ததிலே பொருள் ஒன்று புதைந்திருந்தது என்று பகரலாம். எல்லாம் அம்பிகையின் திருவுளப்படி நிகழ்கிறது என்று பரமஹம்ஸர் பகர்வதுண்டு. பரமஹம்ஸ தேவருடைய வாழ்க்கை என்னும் நாடகத்தை நடத்தி வைத்தவளும் அன்னை பராசக்தியே. அந்த நாடகத்தில் விதவிதமான பாத்திரங்கள் வந்து கலந்துகொண்டார்கள். பாண்டித்தியத்துக்கும், போலித் துறவுக்கு சான்றாக இருந்தவர் என்று ஹஸ்ராவைப் பற்றிப் பகரலாம்.

துறவறத்தில் வெளிவேஷங்களை ஆடம்பரமாக அமைத்துக் கொள்ளுதலில் ஹஸ்ராவுக்கு விருப்பம் மிக இருந்தது. அவரிடம் புலித்தோல் ஒன்று இருந்தது. பல தடவைகளில் அவர் அதைக் கொண்டுவந்து பரமஹம்ஸருடைய அறையின் சுவரில் மாட்டித் தொங்க விட்டுவிடுவார். அதன் அடிப்படையான நோக்கம் ஒன்று இருந்தது. பரமஹம்ஸரைப் பார்க்க வருகிறவர்கள் இவ்வளவு அழகிய ஆசனம் யாருடையதென்று கேட்பார்கள். அதினின்று ஹஸ்ராவைப் பற்றிய பேச்சுக் கிளம்பும். அப்படித் தம்மைப் பற்றி மற்றவர்கள் புகழ்ந்து பேச வேண்டும் என்னும் கருத்துடனே அவர் அதை அங்கு மாட்டி வைத்திருந்தார். அவருடைய மனப்பான்மைக்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்று ஆகும். பரமஹம்ஸரிடம் வருகின்ற பல பக்தர்களைத் தம்மிடம் வர வேண்டும் என்று அவர் அழைப்பார். ராமகிருஷ்ண பரமஹம்ஸருக்குப் பாண்டித்தியம் போதாது என்றும் அவர் பகர்வதுண்டு. இங்ஙனம் பக்கம் பக்கம் இரண்டு பாத்திரங்கள் வசித்திருக்கலாயினர். உண்மையான சமய அனுஷ்டானம் யாது, போலி அனுஷ்டானம் யாது என்பவைகளை நாம் தெரிந்து கொள்வதற்கு இவ்விருவரும் அன்னை பராசக்தியின் கையில் கருவிகளாக இருந்தார்கள் என்று பகரலாம்.

ஹஸ்ராவுடைய மனப்பான்மையை ராமகிருஷ்ண பரமஹம்ஸர் நன்கு அறிந்திருந்தார். ஆனால் அவரிடத்து வெறுப்பு கொள்ளவில்லை. தம் பக்தர்களிடத்து வைத்தது போன்று நெருங்கிய நட்பும் வைக்கவில்லை. விருப்பு வெறுப்பு அற்றவராக ஹஸ்ராவுடன் அவர் பழகி வந்தார். ஒரு நாள் மாலையில் பரமஹம்ஸருடைய அறைக்கு வடகிழக்குத் திசையிலிருந்த நீண்ட திண்ணையின்மீது பரமஹம்ஸர் உட்கார்ந்திருந்தார். அவரிடம் ஹஸ்ரா வந்து சேர்ந்தார். வந்தவரிடம் அன்புடன் பரமஹம்ஸர் பேசிக் கொண்டிருந்தார். அப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் மஹேந்திரர் கல்கத்தாவினின்று புறப்பட்டு வந்து சேர்ந்தார். பரமஹம்ஸர் முன்னிலையில் அவர் பணிவுடன் வணங்கி அடக்க ஒடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தார். மஹேந்திரரிடம் பரமஹம்ஸர் பகர்வாராயினர்….

(தொடரும்.)

Advertisements

THE GARLAND OF PARAPARAM – 3

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக் கண்ணி

கண்ணி – 3

சிந்தித்த எல்லாம்என் சிந்தை அறிந்தே உதவ

வந்த கருணை மழையே பராபரமே.

விளக்கம்:

அனைத்துமாய் இலங்குபவனே, அனைத்துக்கும் ஆப்பாலுமாய் இருப்பவனே, உன்னைக் கருணை மழையே என்று கூறுவது பொருந்தும். மழை பெய்வதாலேயே உடல் எடுத்துள்ள உயிர் வகைகள் உணவு பெற்று வாழ்ந்து வருகின்றன. ஐம்பூதங்களில் ஒன்றாகிய மழையை உனது கருணை எனல் வேண்டும். அதற்குமேல் ஜீவர்களைப் பக்குவப்படுத்துவதை முன்னிட்டு உன்னைக் கருணை மழை என்று கூறுவது முற்றிலும் பொருந்தும். ஆசையினால் தூண்டப்பெற்று எனக்குச் சிந்தனை வளர்ந்தது. ஆதலால் என் சிந்தனையும் ஆசையும் ஒன்றேயாம். பல பிறவிகளில் நான் ஆசைப்பட்டவைகளையெல்லாம் நீ அன்பு கூர்ந்து நிறைவேற்றி வைத்தாய். ஏதேனும் ஓர் ஆசைப்பொருள் அகப்பட்டபொழுதெல்லாம் எனக்கு நிரந்தரமாகத் திருப்தி வாய்க்குமென்று அப்பொழுது கருதினேன். ஆனால் பிரபஞ்சப் பொருள்களில் நான் நிரந்தரமான திருப்தியைப் பெறவில்லை. அனுபவித்து, அனுபவித்து ஒவ்வொரு பொருளையும் நான் ஒதுக்கி வைத்தேன். புதியது புதியதாக நான் விரும்பிய பொருள்களை நீ எனக்காகப் படைத்து வைத்தாய். அவையாவையும் பெற்று அனுபவித்து இப்பொழுது ஆசையைத் துடைத்த நிலையில் இருக்கின்றேன். இனி, எனக்கு நிலையற்ற உலகப் பொருள்களில் ஆசையில்லை. உன்னையே நான் நாடி நிற்கின்றேன். எனக்குப் பாரமார்த்திகப் பெருவாழ்வு வழங்க்க் காத்திருக்கும் கருணை மழை நீயாவாய்.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


 

THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

Verse – 3:

சிந்தித்த எல்லாம்என் சிந்தை அறிந்தே உதவ

வந்த கருணை மழையே பராபரமே.

sindhiththa ellAmen sinthai aRinthE udhava

vandha karuNai mazaiyE parAparamE.


Thou art the Rain of Compassion.

All that I thought, Thou knew.

An knowing my thoughts Thou came to my succor,

Oh Para Param!

Hymns by

KaviyogiSuddhananda Bharathi

Translation:

O Paraparam, you are the rain of grace that cognizes my needs and bestows them befittingly.

-Swami Chidbhavananda.