Sri Paramahamsarin Apta Mozi – 75

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 75

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 74: https://swamichidbhavananda.wordpress.com/2016/02/04/sri-paramahamsarin-apta-mozi-74/)

இறையனுபூதி

பாடகர் பணிவுடன் பரமஹம்ஸரிடம் கேள்வி ஒன்று கேட்டார்:

“ஐயனே, ஈசுவரானுபூதியை அடைவதற்கு உபாயம் யாது?”

பரமஹம்ஸரிடமிருந்து விடை வருகிறது:

“கடவுளிடத்துப் பேரன்பு கொண்டிருப்பதே கடவுளை அடைவதற்கு உற்ற உபாயமாகும். கடவுள் எல்லார் உள்ளத்திலும் உறைந்திருக்கின்றார். அப்படியானால் யாரை நாம் பக்தன் என்று சொல்லுவது? எல்லார் உள்ளத்திலும் இறைவன் உறைந்திருக்கின்றார் எனினும் அதை அறிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. உள்ளத்தில் உறைந்திருக்கும் இறைவனிடத்து யாருடைய மனது தைலதாரை போன்று ஓயாது சென்று கொண்டிருக்கிறதோ அம்மனிதனையே பக்தன் என்று பகர வேண்டும். பக்தி எல்லார்க்கும் எளிதில் கிடைத்துவிடுமா என்பது கேள்வி. இல்லை, பக்தி எல்லார்க்கும் உண்டாவதில்லை. யாருடைய உள்ளத்தில் ஆணவமும் அகங்காரமும் உருண்டு திரண்டு கிடக்கின்றனவோ அவர்களுடைய உள்ளம் பக்திக்குப் புறம்பானதாய்விடுகிறது. நீரானது மேட்டினின்று பள்ளத்துக்குப் பாய்கிறது. பள்ளத்தினின்று மேட்டுக்கு அது போகாது. கடவுளின் கிருபை என்னும் நீர் பணிவான உள்ளம் படைத்திருப்பவர்களிடத்துப் பாய்கிறது. ஆணவமும், அகங்காரமும் மேடு போன்றவைகளாகும். அருள் வெள்ளம் அத்தகையவர்களுடைய உள்ளத்தில் பாய்வதில்லை. பக்தன் தன்னை எங்ஙனம் பாவிக்கின்றான் என்பதையும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தான் வெறும் கருவி. தன்னைக் கையாளும் கர்த்தாவாகக் கடவுள் இருக்கின்றார் என்று அவன் கருதுகிறான்.”

குறி ஒன்று – நெறிகள் பல

கேதார் முதலிய அன்பர்களைப் பார்த்துப் பரமஹம்ஸர் மேலும் பகரலானார்:

“கடவுளைச் சுவானுபூதியில் அடைந்தாக வேண்டும். அவரை அடைதற்கு மார்க்கங்கள் பல இருக்கின்றன. கடவுளை அடைதற்குச் சமயங்களும் பல இருக்கின்றன. ஒரு சமயம் மேலானது என்றும், மற்றொரு சமயம் கீழானது என்றும் கருதலாகாது. கடவுளின் ஆணைப்படி சமயங்கள் பல உண்டாய் இருக்கின்றன. ஆகையினால் அவை யாவும் மெய்ப்பொருளை அடைவதற்கான மார்க்கங்களேயாம். ஏதேனும் ஒரு சமயத்தைத் தீவிரமாகக் கடைப்பிடித்துக் கடவுளை அடைந்தாக வேண்டும். கடவுளை அடைவதே குறிக்கோள் என்பதை மறந்துவிடலாகாது. மாடிக்குச் செல்ல ஒருவர் விரும்புகிறார். கீழ்த்தரையினின்று மாடிக்குப் போய்ச்சேர உபாயங்கள் பல இருக்கின்றன. கல்லால் கட்டி வைத்துள்ள படிக்கட்டு இருக்கிறது. செங்கல்லால் கட்டி வைக்கப்பட்டுள்ள படிகளும் இருக்கின்றன. மரத்தால் செய்து வைத்துள்ள ஏணி இருக்கிறது. இவைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி மாடிக்குப் போய்விடலாம். கிளைகள் நிறைந்துள்ள மூங்கில் ஒன்று கட்டடத்திற்குப் பக்கத்தில் நாட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த மூங்கில் மீது ஏறியும் மாடிக்குப் போய்விடலாம். மேலே இருந்து கட்டித் தொங்கிக் கொண்டிருக்கும் கயிறு ஒன்றைப் பிடித்து ஏறி மேலே போய்விடவும் முடியும். இவையாவும் மாடியை அடைதற்கு உற்ற உபாயங்களாகின்றன. அதே பாங்கில் கடவுளை அடைவதற்கும் பல மார்க்கங்கள் இருக்கின்றன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s