Gurudevar Jayanthi Special Article

நிர்விகற்ப சமாதி

[முன்னுரை, நிர்விகற்ப சமாதி, தோதாபுரி, ஸ்ரீராமகிருஷ்ணர், கிரியைகள், நிர்விகற்ப சமாதி எய்துதல், புறவுணர்ச்சிக்குத் திரும்புதல், தோதாபுரியின் சிந்தாந்தம், மாயையின் வன்மை – நிகழ்ச்சி 1, மாயையின் வன்மை – நிகழ்ச்சி 2, மாயையின் அநிர்வசனீய வன்மை, பக்திப் பெருக்கு, பிரம்மமும், மாயாசக்தியும், தோதாபுரி கற்றுக்கொண்ட படிப்பினை]

முன்னுரை:

சொல்லுதற்கரிய பரம்பொருளை ஒரு சொல்லால் கூறத்துணியின், அதை அகண்ட சத்-சித்-ஆனந்தம் எனலாம். அது மனம், மொழிக்கு எட்டாதது. மாயாகாரியங்களாகிய படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய விகாரங்கள் ஆங்கில்லை. இன்பம், துன்பம், உடைமை, வறுமை, நன்மை, தீமை முதலிய துவந்தங்கள் அற்ற எல்லையில்லாப் பேரின்பம் அது. அந்த அகண்ட சேதனத்தில் ஞாதுரு, ஞானம், ஞேயம் முதலிய பேதங்கள் முடிவுறுகின்றன. அது பிறவாத, மூவாத, இறவாத, சாசுவத சத்வடிவம் துரியத்துக்கும் எட்டாத அந்த அதீத அவஸ்தையிலே ஐயங்கள் யாவும் அற்றுப்போகின்றன. உள்ளம் ஒடுங்கிவிடுகிறது. ஊழ்வினை ஓய்ந்து போகிறது. ஆன்மா நெடுங்காலம் குடியிருந்த காயம் காய்ந்து போகிறது, மனம் மாய்ந்து போகிறது. அகங்காரம் அழிந்து போகிறது. தித்திக்கும் பிரம்மானந்தமொன்றே திகழ்ந்து நிற்கிறது. கால-தேச-நிமித்தம் யாவும் அந்த நித்தியவஸ்துவினுள் நிராகரிக்கப்படுகின்றன. எண்ணத்துக்கும் எட்டாத மோனநிலை அது. நிர்விகற்ப சமாதியிலே ஜீவாத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து கிடக்கும் போது அது எவ்வாறு உணர்கிறதென்று யார்தான் சொல்லக்கூடும்? அந்நிலையை அனுபவித்தவரே அதன் பெருமையை அறிவர்!

நிர்விகற்ப சமாதி:

சமாதியிலே அநேக விதமுண்டு. அவை யாவும் பொதுப்பட பாவ சமாதியென்றும் நிர்விகற்ப சமாதியென்றும் இரண்டு விதங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீராமகிருஷ்ணர் இது பரியந்தம் அனுபவித்து வந்தவைகள் யாவும் பாவ சமாதிகளாம். சில வேளைகளில் அவர் தாமே விரும்பிச் சமாதியில் மூழ்குவார். வேறு சில சமயங்களில் அவரது தூய சுபாவமே அவரைச் சமாதி நிலைக்கு இழுத்துச் செல்லுமாம். ஆனால் இவை யாவும் ஆத்மாநுபவத்தின் முடிவான நிலைகளல்ல. மனம் முற்றுமே அற்றுப் போய் நிர்விகற்ப சமாதியடையும்போதுதான் அகண்டாகார அநுபூதி பூர்த்தியாகிறது. இந்த இலட்சியம் எவ்வளவு மேலானதோ அவ்வளவு கடினமானது அதற்குரிய சாதனையும்.

சாதாரண சாதகன் ஒருவன் பூரண நிர்விகற்ப சமாதி அடைந்துவிட்டால் அவனுக்குத் திரும்பவும் பிரபஞ்ச உணர்ச்சி வருகிறதில்லை என்று பெரியோர் சொல்லுகின்றனர். சமாதி அடைந்த சொற்ப நாளைக்குள் அவன் உடலை உகுத்துவிட்டுப் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுகின்றான். உலகத்தை உய்விப்பதற்கென அவதரித்திருக்கும் ஏதோ ஒரு சிலர் மட்டும் இந்தச் சமாதியடைந்த பிறகும் கூடப் பிரபஞ்ச ஞாபகம் பெறுகிறார்கள். உலக நன்மையின் பொருட்டே அவர்கள் மீண்டும் இவ்வுலகில் வாழ்கிறார்கள். அருள் சக்தியும் பகவத் சம்பத்தும் அவர்கள் மாட்டுப் பெரிதும் மிளிர்கின்றன. இந்த அவதார புருஷர்கள் எண்ணிய மாத்திரத்தில் பக்தி, விவேகம், வைராக்கியம் முதலியவற்றை எவர்க்கேனும் அளிக்க முடியும். சாதாரண உலகப் பொருள்களைப் போல் தூய்மை, அருள் முதலியவற்றைப் பிறருக்கு வழங்க இவர்களால் இயலும். இப்பெரியோர்களிடத்திலிருந்து உதிக்கும் அருள்ஒளி உலகெங்கும் வியாபித்து உயரிய எண்ணங்களையும் நோக்கங்களையும் மக்களனைவர்க்கும் புகட்டி அவர்களை ஈடேற்றுகிறது. ஆதலாலேதான் லௌகிக அந்தஸ்து என்பது சிறிதேனும் அவர்கள்மாட்டு இல்லாதிருப்பினும் அநேக ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் புவியெங்கும் போற்றப்படுகின்றனர்.

தோதாபுரி:

தக்ஷிணேசுவரத்துக்குத் தோதாபுரியென்ற மகாபுருஷர் வந்து சேர்ந்தார். ஜகத்குரு சங்கராச்சாரியர் மரபிலே வந்துள்ள தசநாமிகள் அல்லது பத்துவிதப் பெயர்கள் பூண்டுள்ள பரமஹம்ச சந்நியாசிகளுள் ‘புரி’ என்னும் பட்டம் தரித்துள்ள பிரிவைச் சார்ந்தவர் இவர். நர்மதை நதிக்கரையோரத்தில் இவர் நாற்பது வருஷ காலம் கடுந்தவம் புரிந்து நிர்விகற்ப சமாதியடைந்தவர். இந்த ஜீவன்முக்தர் தமது பிராரப்தகரும்ம் ஓயுமளவும் புண்ணிய தீர்த்தங்களுக்கு யாத்திரை பண்ணி வந்தார். வேதாந்த கேசரி போல நாடெங்கும் உலாவித் திரிந்த இவர் மூன்று இரவுக்கு மேல் ஓரிடத்திலும் தங்குவதில்லை. கங்கா சாகரம் சென்று திரும்பி வந்த தோதாபுரி அரும்பெரும் காரியமொன்று ஆற்றுதற்கெனத் தெய்வாதீனமாக ஏவப்பட்டு, தக்ஷிணேசுவரம் வந்து சேர்ந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்:

கோயில் வாசலில் அமைதியாக உட்கார்ந்திருந்த ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்த்தவுடனே அவரது பக்குவ நிலையைத் தோதாபுரி அறிந்துகொண்டார். சிறிது நேரம் அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரை வியப்புடன் உற்றுப் பார்த்துவிட்டு அவர் அருகில் போய், “முதிர்ந்த பக்குவம் அடைந்தவனாக நீ காணப்படுகிறாய். அத்வைத சாதனை கற்றுக்கொள்ள உனக்கு விருப்பமா?” என்று வினவினார்.

“எனக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் அன்னையின் திருவுளப்படி ஆகுக. அவள் உத்தரவின்றி நான் எதற்கும் இணங்கேன்” என்று ஸ்ரீராமகிருஷ்ணர் ஆவல் இல்லாமல் மறுமொழி பகர்ந்தார்.

“சரி, அவளைப் போய் கேட்டுவா. நான் இங்குப் பல நாள் தங்கமாட்டேன்” என்றார் புதிதாக வந்த சந்நியாசி.

ஸ்ரீராமகிருஷ்ணர் பேசாது சந்நிதி சென்று அம்பிகையின் விருப்பம் யாதோவென்று வேண்டி நின்றார். பரவசமடைந்திருந்த அவருக்கு அன்னை, “ஆம் பிள்ளாய், அத்வைத வேதாந்தமும் கற்றுக்கொள். உனக்கு புகட்டுவதற்கெனவே அவர் இங்கு வந்திருக்கிறார்” என்று அருள் புரிந்தாள்.

ஸ்ரீராமகிருஷ்ணர் திரும்பிப்போய்த் தமக்கு அனுமதி கிடைத்துவிட்டதென்று சொல்லியபோது அந்தப் பெரியாருக்கு இவரது களங்கமற்ற குழந்தை சுபாவத்தைப் பார்த்து வியப்பும், சக்தியின் அருளில் இவர் வைத்திருந்த நம்பிக்கையைப் பார்த்து நகைப்பும் உண்டாயின. ஈசுவரன் அல்லது சகுணப்பிரம்மம் என்பதும் பராசக்தி என்பதும் மாயையின் கூறுபாடுகளாதலால் அவை அஞ்ஞானத்தில் தோன்றி அஞ்ஞானத்தோடு அழிகின்றனவென்பது தோதாபுரியின் கொள்கை. தான் கற்பித்துக்கொண்ட அஞ்ஞானத்தை ஜீவன் தன் முயற்சியால் அகற்ற வேண்டுமேயொழிய ஈசுவரன் அல்லது சக்தியின் வரத்தை வேண்டுவது அறியாமை என்பதும் அவரது சித்தாந்தம். ஆனால் அவர் இதைப்பற்றி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் ஒன்றும் சொல்லவில்லை. ஞானம் உதயமாகும்போது இந்தக் குருட்டு நம்பிக்கை இயல்பாகவே அற்றும் போய்விடுமென்று அவர் எண்ணியிருந்தார்.

கிரியைகள்:

வைதிக விதிப்படி சந்நியாசம் ஏற்றுக்கொள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் இணங்கினார். பிறப்பு, இறப்பு இரண்டையும் அறுத்தலின் அறிகுறியாக இந்தச் சடங்கைச் செய்து முடிக்க ஒரு நல்ல நாள் குறிப்பிடப்பட்டது. அன்றைய தினம் ஸ்ரீராமகிருஷ்ணர் உபவாச விரதம் இருந்தார். குலம், குடி யாவையும் அன்று முதல் அவர் நீத்துவிடுகிறபடியால் தமது மூதாதைகளுக்குத் தாம் செய்யக் கடமைப்பட்டிருந்த சிராத்தச் சடங்கை சிரத்தையுடன் அன்று கடைசியாகச் செய்து முடித்தார். தமது பிதிர்க்கள் எவ்வுலகில் இருப்பினும் அவர்களுக்குச் சாந்தியுண்டாகுக வென்று வேண்டிப் பிண்டம் படைத்தார். இன்னும் இம்மையிலிருந்த தமது இனத்தாருக்குத் தாம் செய்தற்குரிய கடமைகளை சந்நியாசம் பூண்டபின் தம்மால் செய்ய இயலாது போய்விடுமாதலால், அந்தப் பொறுப்பை விஷ்ணு பகவானிடம் ஒப்பித்தார். கடைசியாகத் தமக்கென இம்மை மறுமைகளாகிய எவ்வுலகும் வேண்டியதில்லை என்பதற்கு அறிகுறியாகத் தமக்கே ஆத்மபிண்டம் அளித்துக் கொண்டார். பிறகு அன்று பகல் முழுவதும், இரவு முதல் மூன்று ஜாமமும் ஜப தப தியானங்களில் கழிக்கப்பட்டன. நான்காம் ஜாமத்தில் பிரம்ம முகூர்த்தத்திலே பஞ்சவடியில் ஒரு குடிசையில் குருவும் சிஷ்யரும் கூடினார்கள். வேள்வித் தீ மூட்டி அதில் ஓமம் செய்தார்கள்.

ஓமச்சடங்குகள் முடிந்ததும் உடற்கூற்றை எரித்துவிட்டதற்கு அறிகுறியாக அக்கினியின் வடிவாகிய காவியுடையைச் சிஷ்யனுக்கு அளித்து பிரம்மோபதேசம் செய்வதற்கு அவரைத் தன் முன்னிலையில் உட்காரவைத்தார் தோதாபுரி. இதற்குள்ளாக விடியற்காலமும் வந்துவிட்டது. புலருதற்கிருந்த அந்தப் புதுநாள் போற்றுதற்கு உரிய ஒரு பெருநாள் அன்றோ! பொதுவாக உலகுக்கும் சிறப்பாக இந்தியாவுக்கும் புத்துயிர் அளிப்பதற்கிருந்த திருநாள் அதுவாகும். ஆதியந்தமிலா அறநெறியாகிய வேதாந்தத்தை உலகெங்கும் புதிய முறையில் புகட்டும் போதகர் ஒருவர் அன்று நியமிக்கப்பட்டார். புத்தரது கருணையும், சங்கரரது நுண்ணறிவும் இப்பெரியார்மாட்டு ஒருங்கே மிளிர்ந்திருந்தன. நாகரிகத்தில் ஒன்றுடன் ஒன்று ஒவ்வாத மேல்நாடு, கீழ்நாடு இரண்டையும் இணை சேர்க்கும் கடமையை மேற்கொள்ள இவர் தோன்றினார். நவீன வாழ்வுமுறையைப் புராதன பாரமார்த்திக நோக்கத்துடன் பொருத்தி வைத்தலும் இவரது அருட்பாரமாயிற்று. இப்புண்ணிய காலத்தில் சிஷ்யருக்குப் பிரம்மோபதேசம் செய்து அகண்டாகாரப் பிரம்ம நிஷ்டை புரியும்படி தோதாபுரி பணித்தார்.

நிர்விகற்ப சமாதி எய்துதல்:

கரணங்கள் யாவையும் நீத்து உட்செல்லுதல் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு எளிதாயிருந்தது. ஆனால் அவர் முடிவாகக் கண்டது பராசக்தியின் திவ்விய, தேஜோமய, சின்மய வடிவமேயாம். அவளைத் தவிர தாம் வேறு எதையும் காணவில்லை என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். தோதாபுரிக்கு இம்மொழி சிறிது பதைபதைப்பை உண்டாக்கிற்று. “விவேகம் என்னும் வாளால் அவளை வெட்டித் தள்ளி அப்பால் செல்!” என்றார் அவர். அவ்விதமே செய்து பார்த்த ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அன்னையின் வடிவத்துக்கு அப்பாலுள்ளது வெறும் பாழ் என்று காணப்பட்டது. தம்மையும் காணமுடியாத சூனியந்தானே அப்பாலுள்ளதென்று அவர் பரிதாபகரமாகத் தம் குருவிடம் தெரிவித்தார். இக்கூற்றைக் கேட்ட தோதாபுரி அவரது நெற்றியிற் குறியிட்டு மனத்தை அங்கு நிலை நிறுத்தும்படி சொன்னார். வெறும் பாழ் புலப்படும்போது ஞான விளக்கேற்றி அதையும் கடந்து போகும்படி சிஷ்யனுக்கு அவர் விளக்கிக் காட்டினார். அவ்விதமே செய்த ஸ்ரீராமகிருஷ்ணருக்கு நிர்விகற்ப சமாதி கை கூடியது. மூச்சு, பேச்சு எல்லாம் அடங்கிவிட்டன. அவர் உடல், சிலைபோல அசைவற்றிருந்தது. அகண்டாகாரப் பிரம்மத்தில் அவர் ஐக்கியமாகிவிட்டார்.

இவற்றையெல்லாம் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்த தோதாபுரி சந்தடி செய்யாது குடிசையை விட்டு வெளியே வந்து கதவை மூடிப் பூட்டிவிட்டார். இவ்விதம் ஒரு நாள் – இரண்டுநாள் – மூன்றுநாள் கழிந்தன. ஆனால் அவர் எதிர்பார்த்த வண்ணம் ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி கலைந்து அவரைக் கூப்பிட்டபாடில்லை. தோதாபுரிக்குப் பெரும் வியப்பு உண்டாயிற்று. கதவைத் திறந்து அவர் குடிசைக்குள்ளே போனார். ஸ்ரீராமகிருஷ்ணர் அதே நிலையில் உட்கார்ந்திருந்ததை அவர் பார்த்தார். உயிரின் அறிகுறி எதுவும் அவரது உடலில் காணப்படவில்லை. ஆனால் அவர் முகத்தில் மட்டும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. இந்த அற்புதக் காட்சியைத் தோதாபுரி வியப்புடன் நோக்கினார். “நான் நாற்பது வருஷம் பயின்றபின் பெற்ற நிர்விகற்ப சமாதியை இவர் ஒரே நாளில் பெறக்கூடுமா?” என்று அவர் ஐயமுற்று அருகிற்போய்ப் பார்த்தார். இதயம் துடிப்பது நின்றிருந்தது. சுவாசப் போக்கு வரவு அறவே இல்லை. நிர்விகற்ப சமாதியின் லட்சணங்கள் யாவும் காணப்பட்டன. “சங்கர மஹாதேவ! இக்காட்சி அரிதிலும் அரிது” என்று அடங்கா அகமகிழ்ச்சியுடன் அவர் அலறினார். நிர்விகற்ப சமாதியிலே அத்வைத சித்தி ஸ்ரீராமகிருஷ்ணருக்குக் கிட்டிவிட்டது.

புறவுணர்ச்சிக்குத் திரும்புதல்:

எவ்விதத்திலாவது சமாதியைக் கலைத்து ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பிரபஞ்ச உணர்ச்சி வரச்செய்வதற்கான முயற்சிகளை இப்போது தோதாபுரி கையாண்டார். “ஹரி ஓம்” என்னும் மந்திரத்தைத் திரும்பத் திரும்ப அவரது காதில் ஓதினார். சிறிது சிறிதாகப் புறவுணர்ச்சி பெற்றெழுந்த ஸ்ரீராமகிருஷ்ணர் தம் குருநாதர் கிருபா நோக்கத்துடன் தம்மெதிரே நிற்பதைக் கண்டார். என்ன கைம்மாறு செய்வதென்று அறியாத சிஷ்யர் தோதாபுரியின் தாளிணையில் வீழ்ந்து வணங்கினார். குருவும், சிஷ்யனைத் தூக்கி எடுத்து அன்புடன் கட்டி அணைத்துக் கொண்டார். மூன்று இரவுக்கு மேல் ஓரிடம் தங்காத தோதாபுரி பதினொரு மாத காலம் இந்த அற்புத சிஷ்யருடன் வசிக்கலானார்.

Gurudevar colour

தோதாபுரியின் சிந்தாந்தம்:

தோதபுரி சுவாமிகள் சிறுவயதிலேயே துறவறம் பூண்டவர். அறிவும், ஆற்றலும் அதிகம் வாய்க்கப் பெற்றவர். சுமார் எழுநூறு சந்நியாசிகள் இருந்த ஒரு மடத்துக்கு அவர் கொஞ்ச காலம் அதிபதியாக இருந்தவர். துன்பம் என்பதே இன்னதென்று அறிந்திலர். வாழ்வு அனைத்தும் இன்பகரமாகவே அவருக்கு இருந்து வந்தது. தன் முயற்சியால் மனிதன் ஒருவன் பிரம்மஞானம் உட்பட எல்லா நன்மைகளையும் தேடிக்கொள்ள முடியுமென்பது அவரது கொள்கை. ஆதலால் துன்பம் துய்ப்பவர்கள்மாட்டு அவர் இரங்கி அனுதாபம் காட்டமாட்டார். சிலருக்கு அந்தமிலா அல்லலும் வேறு சிலருக்கு துன்பமிலா இன்பமும் அளிக்கும் அநிர்வசனீய மாயாசக்தி ஒருத்தி இருக்கிறாள் என்பதில் ஞான குருவாகிய தோதாபுரிக்கு நம்பிக்கையில்லை. தம்மை ஆதரித்து வருபவள் பராசக்தி என்பதை அவர் உணரவில்லை. ஆதலால் மனிதனது சுயேச்சை, சுயப் பிரயத்தனம் இவைகளைப் பற்றிய உண்மையை அவருக்குப் புகட்டுவதற்கெனவே ஜகன்மாதா அப்பெரியாரை தக்ஷிணேசுவரத்தில் அவ்வளவு காலம் அமர்த்தி வைத்திருந்தாள் போலும்!

மாயையின் வன்மை – நிகழ்ச்சி 1:

வேதாந்த விஷயங்களைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணரும் தோதாபுரி சுவாமிகளும் நெடுநேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் சில நுட்ப விஷயங்களைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து அப்பெரியார் தெரிந்துகொள்ள நேரிடும். மாயா சக்தியின் வன்மையைப் பற்றி மட்டும் இருவருக்குள்ளும் அபிப்பிராய பேதம் இருந்து வந்தது. தோதாபுரி சுவாமிகள் தீ மூட்டி அதன் அருகில் அமர்ந்துகொண்டு நெடுநேரம் தியானம் செய்வது வழக்கம். இந்த வழக்கத்திலிருந்து அவர் என்றைக்கும் தவறியதில்லை. பிரம்ம ஞானியாகிய அவர் ஏன் தியானம் முதலிய சாதனங்களில் அவ்வளவு கருத்தாயிருக்க வேண்டுமென்று ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர் கேட்டார். தோதாபுரி தம்மிடத்திருந்த ஒரு பித்தளைக் கமண்டலத்தைக் காட்டி, “இதைத் தினந்தோறும் துலக்காவிட்டால் ஒளி மழுங்கிப்போம். மனமும் அது போன்றது” என்றார். “ஆனால் பொன் கமண்டலத்தைத் தினந்தோறும் துலக்க வேண்டியது அவசியமல்லவே!” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். பின்னர், ஒருவர் கூற்றை ஒருவர் மெச்சி மகிழ்ந்தார்கள். அவர்கள் மனங்களும் பித்தளையும் பொன்னும் போன்றவை போலும்!

மாயையின் வன்மை – நிகழ்ச்சி 2:

தாம் வளர்த்த தீயை ஞானாக்கினியின் வடிவெனப் பாராட்டுவது தோதாபுரியின் வழக்கம். ஒருநாள் இருவரும் தீயண்டை அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது கோயில் வேலையாள் ஒருவன் அவர்களிடையே போய்க் கொள்ளிக்கட்டை ஒன்றை எடுத்துச் சுருட்டுப் பற்ற வைத்தான். பரிசுத்த அக்கினியை அவன் அவ்வாறு உபயோகித்ததைப் பார்த்த தோதாபுரிக்குக் கோபம் மூண்டுவிட்டது. வேலையாளை அவர் பலமாகக் கடிந்துகொண்டதுமல்லாமல் அவனைப் புடைத்துவிடுபவர் போலவும் பயமுறுத்தினார். இக்காட்சியைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர் விலாவலிக்க விழுந்து விழுந்து சிரித்தார். தமது சிஷ்யரின் விபரீத நடத்தையைப் பார்த்த பெரியார் “ஏன் இப்படி சிரிக்கிறீர்? இவன் செய்தது தப்பல்லவா?” என வினவினார். “ஆம். ஆனால் நான் தங்களது ஞானத்தின் ஆழத்தைச் சோதித்துப் பார்த்தேன். இப்போதுதான் ‘பிரம்மம் ஒன்றே சாத்தியம்; தோன்றிய யாவும் அந்த பிரம்மத்தின் திரிபு’ என்று சாதித்தீர்கள். அடுத்த கணத்திலேயே அவற்றையெல்லாம் மறந்துவிட்டு மனித சொரூபமான அந்தப் பிரம்மத்தை அடிக்கப் போகிறீர்கள். மாயா சக்தியின் வன்மையைப் பார்த்து நான் நகைக்கிறேன். அவள் யாரைத்தான் ஏமாற்றிவிடமாட்டாள்!” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். இதற்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாது தோதாபுரி திகைத்து நின்றார்.

மாயையின் அநிர்வசனீய வன்மையைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லியதாவது:

“பரப்பிரம்மம்கூட அவளால் கட்டுண்டு பதைக்கிறது. ‘முள் ஏது வலி ஏது?’ என்று நீ விசாரம் செய்கிறாய். ஆனால் எதிர்பாராது திடீரென்று முள் ஒன்று கையில் தைத்தால் ஓவென்று கதறுகிறாய். அது போல நீயே பிரம்மமென்றும், உனக்குப் பிறப்பேது, இறப்பேது, பசி தாகமேது என்றும் விசாரம் செய்யலாம். ஆனால் அடுத்த கணத்தில் உடலுக்கு ஏதாவது பிணியோ, மனத்தில் ஏதாவது மோகமோ கோபமோ வந்துவிட்டால் தத்துவ ஞானம் பறந்துவிடுகிறது. ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே மாயாசக்தி இருக்கிறாள். அவள் விலகி நின்று அநுக்கிரகம் செய்யாவிடில் ஜீவனுக்குப் பரமாத்ம தரிசனம் கிட்டாது. அவளது அருளைப் பெறாது எவ்வளவுதான் ஆத்மவிசாரம் செய்தபோதிலும், ‘இது அன்று அது அன்று’ என்னும் நேதிவிசாரணை செய்த போதிலும், பயனில்லை.”

பக்திப் பெருக்கு:

தோதாபுரிக்குப் பக்தி மார்க்கத்தில் நம்பிக்கை இல்லை. மனத்தை ஒருமைப்படுத்துவதற்குப் பக்தியும் ஒரு சிறந்த உபாயம் என்பது அவருக்குத் தெரியாது. வெறும் பக்தியைக் கொண்டே அத்வைத நிலை அடைந்து முக்தி பெறலாம் என்பதை அவர் ஒரு போதும் ஒத்துக் கொள்ளமாட்டார். பிரார்த்தனை, தோத்திரப்பாக்கள், ஜபம் முதலியவைகள் பயனற்றவைகளென அவருக்குத் தோன்றின. எனினும் ஸ்ரீராமகிருஷ்ணர் கசிந்துருகிப் பாடினதைக் கேட்ட மாத்திரத்தில் அவரது கண்களில் தம்மையறியாமலே கண்ணீர் பெருகிவிடும்.

பிரம்மமும், மாயாசக்தியும்:

தக்ஷிணேசுவரத்தில் வதிந்திருந்தபோது தோதாபுரியின் தேகக்கட்டுச் சிறிது சிறிதாகக் குலைந்து வந்தது. அஜீரணம் தோன்றி முடிவில் வயிற்றுக்கடுப்பு வந்துவிட்டது. ஆகாராதிகளில் அவருக்குச் செய்ய வேண்டிய சௌகரியங்களை எல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணர் செய்துவைத்தார். நல்ல மருத்துவர்களைக் கொண்டு எத்தனையோ சிகிச்சைகளை மதுரநாதர் கையாண்டு பார்த்தார். ஆனால் நோய் மட்டும் குறைந்தபாடில்லை. நாளேற ஏற வயிற்றுவலி அதிகரித்தது. தோதாபுரி சுவாமிகளுக்குத் தியானம் செய்ய முடியாமற் போய்விட்டது. மனத்தை உயர்நிலைக்குக் கொண்டுபோக வொட்டாது உடல் வேதனை அவரை வாட்டி வந்தது. ஆதலால் அப்பெரியார் தம் உடலிடம் அலுப்புக் கொண்டார்; இப்புழுக்கூட்டுடன் போராடுவதைக் காட்டிலும் மனத்தைப் பிரம்மாந்தரத்தில் நிறுத்திக்கொண்டு அதை கங்கையினுள் உகுத்துவிடுவது நலமென்று அவர் தீர்மானித்தார். தாம் பிரம்மம் என்று அறிந்தபின் பொய்யான உடலைப் போற்றி வைப்பது எதற்காக? எனவே பிரம்ம சாக்ஷாத்காரத்தில் மனத்தை உறுதிபடுத்திக் கொண்டு அந்த ஞானியார் கங்கையினுள் பிரவேசித்தார். என்ன அதிசயம்! அன்றிரவு கங்கை வற்றிப் போய்விட்டதோ? நதியைக் கடந்து அக்கரை போய்விட்டார். புகைக்கப்பல் போகும் அவ்வாற்றில் அன்றிரவு அவரது மூன்றரை முழ உடலை மூழ்குவிப்பதற்கான நீர் இல்லாது போய்விட்டது! “இதென்ன மாயை” என்று தோதாபுரி வியந்தார். உடனே தமது அறிவை மூடியிருந்த திரையொன்று நீங்கினாற் போல ஒரு காட்சி கண்டார்! தோன்றிய யாவும் எல்லாம்வல்ல பராசக்தியின் சொரூபமாக அவருக்குப் புலப்பட்டன. நீர் ஆனதும் சக்தி; நிலம் ஆனதும் சக்தி; உடலாய் உலவினதும் சக்தி; உள்ளமாய் எண்ணினதும் சக்தியே; இன்பம் துன்பம் இரண்டும் சக்திகளே. வாழ்வும் சக்தி; மரணமும் சக்தி. பார்த்த, கேட்ட எண்ணின யாவும் சக்தியின் வடிவங்களேயாம். பராசக்தி விரும்பிய மாத்திரத்தில் உளது இலதாயும் இலது உளதாயும் மாறுகின்றன. தேகம் எடுத்த எந்தப் பிராணியும் அவளது எல்லைக்கு மீறி நடக்க முடியாது. தன் இஷ்டம் போலச் சாவதற்குங் கூட ஒருவனால் இயலாது. இச்சக்தியே சிவமாய் அல்லது குணம் குறியிலாப் பிரம்மமாய் இருக்கிறாள் என்பது அப்பெரியாருக்கு அப்போது விளங்கியது. பிரம்மமும், மாயாசக்தியும் இருவித நிலைமைகளுடன் இருக்கும் ஒரே வஸ்துவாம்.

ஜகன்மாதாவாகிய பராசக்தியை அந்த நள்ளிரவில் தோதாபுரி சுவாமிகள் பக்தியுடன் சரண் புகுந்தார். அவளருளாலே அவளை வணங்குபவராய்த் திரும்பவும் கங்கை நதியைக் கடந்து தக்ஷிணேசுவரம் வந்து சேர்ந்தார். அதன் பிறகு வயிற்றுவலி தம்மை அதிகம் வாட்டியதாக அவர் உணரவில்லை. மறுநாட்காலையில் அவரது க்ஷேமம் விசாரிக்க வந்த ஸ்ரீராமகிருஷ்ணர் அவர் முற்றும் மாறுபட்டிருந்ததைக் கண்டார். நோயின் அறிகுறிகளுக்குப் பதிலாக தோதாபுரியின் முகத்தில் ஆனந்தம் ததும்பியது. தமது அருமைச் சிஷ்யரை அண்டையில் அமர்த்திக்கொண்டு அப்பெரியார் நிகழ்ந்தன யாவற்றையும் நவின்றார். பிணி வந்து தம்மைப் பீடித்ததெல்லாம் முடிவில் தமக்கு நன்மை பயப்பதற்காகத்தான் என்று அவர் கூறினார். “நான் எத்தனையோ தடவை இவ்விடத்தை விட்டு வெளியேற முயன்றும் என்னால் முடியாது போய்விட்டது. மகாமாயை தன் பெருமையை எனக்கு அறிவுறுத்தற்பொருட்டே என்னை இங்கு வைத்திருந்தாள் போலும்! நல்லது, இப்போது அவளது அனுமதியைப் பெறுவோம் வா” என்றார் தோதாபுரி. பரிவ்ராஜக பரமஹம்ஸ ஆசாரியர். அவ்விதமே அவரும் ஸ்ரீராமகிருஷ்ணரும் தேவியின் சந்நிதி சென்று வழுத்தி நின்றபோது தோதாபுரி சுவாமிகள் புறப்பட்டுப் போவதற்கு அவள் அனுமதி தந்துவிட்டாளென இருவரும் உணர்ந்தார்கள். சுவாமிகள் இரண்டொரு நாளில் தமது அருமைச் சிஷ்யரையும், தேவியின் சிறந்த உறைவிடமாகிய தக்ஷிணேசுவரத்தையும் விட்டுப் பிரிந்து வெளியேறினார்.

தோதாபுரி கற்றுக்கொண்ட படிப்பினை:

மாயாசக்தியின் மகிமையை முற்றும் மறுத்து வந்த சுத்த அத்வைத வேதாந்தியாகிய தோதாபுரி சுவாமிகள் தக்ஷிணேசுவரத்தில் கற்றுக்கொண்ட படிப்பினையை ஸ்ரீராமகிருஷ்ணர் கீழ் வருமாறு விவரித்துள்ளார்:-

“பரம்பொருள் அசைவற்று, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில் ஏதும் செய்யாதிருக்கும்போது அது சிவம் என்றும், புருஷன் என்றும் நிர்க்குணப் பிரம்மம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அதே வஸ்து விகாரப்பட்டு, முத்தொழிலையும் ஆற்றும் போது சக்தியென்றும் மாயையென்றும் பிரகிருதி என்றும், ஈசுவரன் என்றும் அழைக்கப்படுகிறது. சிவமும் சக்தியும், பிரம்மமும் மாயையும், நிராகார வஸ்துவும் சாகார வஸ்துவும் வேறுபட்டிருப்பதெல்லாம் வெறும் பேச்சளவே யொழிய வாஸ்தவத்தில் புருஷணுக்கும் பிரகிருதிக்கும் இடையே வேற்றுமை இல்லை. பாலும் அதன் வெண்மை நிறமும் போல நிர்க்குணமும் சகுணமும் ஒரே வஸ்துவில் இணைபிரியாது இருப்பவைகளாகும். வெண்மை நிறத்தோடு ஒட்டியல்லாது பால் இன்னதென்று யாராலும் கிரகிக்க முடியாது. மாணிக்கமும், அதன் ஒளியும் போன்றவை நிர்க்குணமும், சகுணமும். ஒளியினின்று வேறாக மாணிக்கமில்லை. பிரம்மத்துக்கும் பராசக்தியாகிய ஜகன்மாதாவுக்கும் இடையேயுள்ள இணக்கமும் இவைபோன்றதே.”


குறிப்பு:

(இன்று குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஜெயந்தி தினம் ஆகும். அதனை முன்னிட்டு ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய ‘ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதம்’ என்ற நூலிலிருந்து ‘நிர்விகற்ப சமாதி’ என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதியை எடுத்து பதிவேற்றியிருக்கிறோம்.)

சென்ற வருடம் பதிவேற்றப்பட்ட கட்டுரையை வாசிக்கக் கீழே உள்ள உரலியை சொடுக்கவும்:

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s