Question & Answer – 2

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் – 2: பெருநெறி, சிறுநெறி ஆகியவைகளை எப்படிப் பாகுபடுத்துவது?

பதில்: இக்கேள்வியை வேறொரு பாங்கில் பகருமிடத்து எதைச் சன்மார்க்கம் என்றும் எதைத் துன்மார்க்கம் என்றும் பகர்வது என முடியும். இன்னும் ஒருவிதத்தில் இயம்புமிடத்து எதைத் தூய ஒழுக்கம், எதைத் தீய ஒழுக்கம் எனப் பாகுபடுத்தலாம் என்பதாக முடியும்.

நல்லொழுக்கமும் கெட்டொழுக்கமும் எல்லா நாடுகளிலும் ஒரே பாங்கில் இல்லை. அதற்கேற்றபடி சன்மார்க்கமும், துன்மார்க்கமும் ஒரே அளவையை அடிப்படையாகக் கொண்டிருக்கமாட்டா. ஆதலால் பெருநெறி, சிறுநெறி என்பனவற்றைப் பற்றியே அபிப்பிராய வித்தியாசம் இருக்கும். ஆதலால் அனுஷ்டானத்திலும் மாறுபாடு இருக்கும்.

இரண்டொரு சான்றுகள் எடுத்துக் கொள்ளுவோம். பாதரட்சை அணிந்துகொண்டு தேவாலயங்களுக்குள் நுழையலாகாது என்பது ஆசியாக் கண்டவாசிகளுக்கு நல்லொழுக்கமாகிறது. பாதரட்சை அணிந்துகொண்டுதான் தேவாலயங்களுக்குள் புகவேண்டுமென்பது ஐரோப்பிய நாடுகளுக்கு நல்லொழுக்கமாகிறது.

சகோதரர்களின் சந்ததிகளுக்கிடையில் மணம் புரிந்து கொள்ளலாகாது என்பது இந்திய ஐதிகம்.  சகோதரர்களின் சந்ததிகளுக்கிடையில் மணம்புரிந்து கொள்ளுதல் குற்றமில்லை என்பது அரேபிய நாட்டு ஐதிகம். இத்தகைய வேறுபாடுகளைத் தேசாச்சாரம் என்று சொல்லலாம். பெருநெறியென்றோ, சிறுநெறியென்றோ இவைகளைப் பற்றி இயம்புவது எளிதன்று.

இனி, வேதாந்த பூர்வமாகச் சன்மார்க்கத்தையும் துன்மார்க்கத்தையும் பாகுபடுத்துதற்கு வேறு ஓர் அளவையுண்டு. வாழ்ந்திருக்கும் காலமெல்லாம் மனிதன் தன்னை உயர்நிலைக்கு எடுக்கக் கடமைப்பட்டிருக்கிறான். தான் அடைந்துள்ள நிலையினின்று அவன் கீழ்நிலைக்குப் போகலாகாது. மனம், மொழி, மெய் என்னும் திரிகரணங்களைப் படைத்தவனாக மனிதன் இருக்கிறான். இம்மூன்று கரணங்களுள் ஸ்தூலமாயிருப்பது மெய் அல்லது உடல். அதைவிடச் சிறிது சூட்சுமமாயிருப்பது மொழி அல்லது சொல். இன்னும் சூட்சுமமாயிருப்பது மனம் அல்லது உள்ளம்.

உடலைப் பலஹீனப்படுத்துவது துன்மார்க்கம். உடலை உறுதிபடைத்ததாக ஆக்குவது சன்மார்க்கம். உடலை அசுசியாக்குவது துன்மார்க்கம். உடலைத் தூயதாக வைத்திருப்பது சன்மார்க்கம்.

மீதூண்கொடுத்து அல்லது உணவைக் குறைத்து உடலை வாழ்க்கைக்குத் தகுதியற்றதாகச் செய்வது துன்மார்க்கம். அளவுடன் அதற்கு உணவும் ஓய்வும் கொடுத்து முறையாக அதை வேலையில் ஈடுபடுத்துவது சன்மார்க்கம்.

இனி, சொல்லைக் கையாளுதலிலும் முறையொன்று உள்ளது. வாக்குத் தெளிந்ததாக இருக்க வேண்டும். உண்மையையே பேச வேண்டும். உண்மையையும் மற்றவர்களைத் துன்புறுத்துகிற பாங்கில் பேசலாகாது. இன்சொல் பேசுதல் வேண்டும். இப்படிச் செய்வது பேச்சுக்குரிய பெருநெறியாகிறது. பொய், புன்மொழி ஆகியவற்றைப் பேசுவது சிறுநெறி; பிறரைத் துன்புறுத்துகிற பாங்கில் பேசுவதும் சிறுநெறியாகும். பிறரைக் கண்டிக்க வேண்டிய இடத்திலும் பொருந்திய பாங்கில் பேசிக் கண்டிக்கலாம். ஆக, சொல்லைச் சரியாகக் கையாளுதல் பெருநெறியாகிறது.

இனி, மனதைப் பற்றிய கோட்பாடு இவ்விரண்டிலும் மேலானது. உள்ளத்தில் நல்லெண்ணமே உதயமாக வேண்டும். நல்லெண்ணம் மனிதனை உயர்நிலைக்கு உயர்த்துகிறது. வாய்திறந்து பேசாதிருந்தாலும் கெட்ட எண்ணம் உள்ளத்தில் உதிக்குமாகில் அது மனிதனைப் பாழ்படுத்துகிறது. உள்ளத்தில் உதிக்கிற நல்ல எண்ணத்தை மனிதன் தாராளமாகப் பிறரிடம் எடுத்து இயம்பலாம். கெட்ட எண்ணமோ பிறரிடம் தெரியப்படுத்துவதற்குத் தகுதியற்றதாகிறது. எண்ணத்துக்கு ஏற்றவாறு மனிதன் மேன்மையுறுகிறான் அல்லது கீழ்மையுறுகிறான்.

இனி, பெருநெறி எது என்பதைச் சுருக்கமாகக் கூறலாம். மனம், மொழி, மெய் ஆகிய திரிகரணங்களைப் பயன்படுத்துதலில் மனிதன் மேன்மையுறுவானாயின் அது பெருநெறியாகிறது. அப்படியல்லாது கீழ்மையுறுவானாயின் அது சிறுநெறி ஆகிறது. யாண்டும் தன்னை உயர்நிலைக்கு எடுப்பது பெருநெறியாம்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s