Song Review

‘தென்னாட்டில் சைவம் ஓங்க’

பாடல் விளக்கம்.

சுவாமி விவேகானந்தர் போன்ற சீடர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய அருளால் உலகம் போற்றும் உத்தமர்களாக விளங்கியதை அனைவரும் அறிவர். சகோதரி நிவேதிதை போன்ற உத்தமச் சீடர் சுவாமி விவேகானந்தருக்கு அமைந்தது போன்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களுக்கு யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்கள் அமைந்திருந்தார்கள்.

Amba 1
யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா

அம்பா அவர்களிடம் காணப்பட்ட இந்த வியத்தகு குருபக்திக்கு மூலகாரணம் என்னவாயிருக்கும் என்று சிந்திக்கும்போது பேருண்மையொன்று பளிச்சிடுகிறது. ஸ்ரீமத் சுவாமிஜி அவர்களுடைய அருட்திறத்தை அறிவது யார்க்கும் எளிதல்ல. ஆனால் வைர வியாபாரி ஒருவன் ஒரு வைரக்கல்லை சரியாக மதிப்புப் போடுவது போல அதிஅற்புதமான அருள்தாகம் கொண்டிருந்த அம்பா அவர்கள் குருநாதரைக் கண்ட மாத்திரத்திலேயே நெடுநாளாகத் தேடி அலைந்த பொக்கிஷத்தைக் கண்ட வறியவன் போல தான் தேடியலைந்த குரு இவரே என்பதை உணர்ந்து பேரானந்தம் அடைந்தார்கள். குருநாதரைத் தரிசிக்கும் முன், ‘ஞான சற்குரு ஒருவர் வேண்டும். அவர் சுவாமி விவேகானந்தரைப் போல இருக்க வேண்டும்’ என்று பேராவல் கொண்டிருந்தார். ஞான பண்டிதனாகிய முருகன் குருவாக வரமாட்டானா? ஆதிகுரு தட்சிணாமூர்த்தி தனக்கும் ஸத்குருவாக வருவாரா என்று ஏங்கியிருந்த இந்த ஏக்கம் ஒரு காலமன்றி சதா கால ஏக்கமாக அவர்கள் உள்ளத்தை உருக்கியது. இரும்பை உருக்கி தூய்மைப்படுத்தி எஃகு ஆக்குவது போல உள்ளத்தில் இடைவிடாது கனன்று கொண்டிருந்த இந்த அருள் தாகமே அம்மா அவர்களைத் தம்மை ஆட்கொண்ட அண்ணலின் அருமையை அறிய வைத்தது.

யதீஸ்வரி சிவப்ரியா அம்பா அவர்கள் சாதகர்களை அருட்துறையில் முன்னேற்றவல்ல உபதேசங்கள் பலவற்றைக் கூறியிருக்கிறார்கள். அவை அனைத்திலும் பெரிதாக உள்ள அருட்கொடை என்னவென்றால் குருநாதர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் மஹிமையைக் கூறியதுதான்.

சாதகர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கு ஏற்ற வகையில் அருள் புரிந்த குருநாதரின் உண்மைப் பெருமை உலகம் முழுதுக்கும், குறிப்பாகத் தமிழ் நாட்டுக்கு எத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஒரு பாடலில் பட்டியல் போட்டுக் காட்டியிருக்கிறார். அந்தப் பாடலை கீழே சிற்சில வார்த்தைகளின் பொருளுடன் அப்படியே கொடுத்திருக்கிறோம். பாடலைக் கேட்பதோடு நில்லாமல் பொருளையும் சேர்த்து தெரிந்துகொள்வோம்.

அந்தப் பாடலைக் கேட்டு மகிழ: (Click PLAY Play buttonbutton.)

விருத்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ண தேவன் அருட்சீடன்

          தாரக் மகராஜன் தந்த திருப்பேராளன்

ஸ்ரீமத் சுவாமிஜி செய்ய திருப்பாதம்

          நற்பதவி நல்கும் நமக்கு.

பாடல்

தென்னாட்டில் சைவம் ஓங்க செய்திட்ட அப்பரென்கோ

முன்னாளில் திருச்சி வாழ்ந்த மாமுனி தாயுமானார்

பொன்னாம் தன்1 பாடலுக்குப் பொருள் சொல்ல வந்தான் என்கோ2

தன்நேர் இல்3 தமிழ்தாய் பெற்ற சுவாமிஜி பாதம் போற்றி.

 1. பொன்னாம் தன் – பொன்னுக்கு நிகரானவனுடைய. அதாவது தாயுமானார் அவர்களுடைய.
 2. என்கோ – என் தலைவன்.
 3. தன் நேர் இல் – தன்னிகர் இல்லாத.

வேதாந்த தர்ம திகிரி1 வீசிடும் வெந்தி வீரன்

கீதாந்த கர்மயோக நெறி2யினில் நிற்கும் தீரன்3

போதாந்தர்யோகம் என்னும் புதுநெறி பரப்பி நாட்டில்

தீதுஅந்தம்4 கண்டோன் எங்கள் சுவாமிஜி பாதம் வாழ்க.

 1. திகிரி – சக்கரம்.
 2. கீதாந்த கர்மயோக நெறியினில் நிற்கும் – கீதை காட்டும் கர்மயோக நெறியில் நிற்பவன்.
 3. தீரன் – தெளிந்த அறிவு படைத்தவன்.
 4. தீதுஅந்தம் – தீமைகளுக்கு முடிவு. அதாவது அந்தர்யோகம் என்னும் புதுநெறியின் மூலமாக தீமைகளுக்கு முடிவு கண்டோன்.

நிஷ்டை1யே உயிராய் கொண்டோன் நேர்மையில் தராசு போன்றோன்

சட்டமே வாழ்வாய் கண்டோன் தாழாமல்2 உழைக்கும் தொண்டன்

சிஷ்டர்கள்3 போற்றும் துய்யன்4 சிவானந்தம்5 பெற்ற செல்வம்

மட்டில்லா6 பெருமை ஸ்ரீமத் சுவாமிஜி நாமம் வாழ்க.

 1. நிஷ்டை – ஞானத்தில் உறுதியாய் நிற்றல்.
 2. தாழாமல் – தளர்ச்சியடையாது.
 3. சிஷ்டர்கள் – நல்லொழுக்கம் உடையவர்கள்.
 4. துய்யன் – தூய்மையானவன்.
 5. சிவானந்தம் – சிவ ஆனந்தம் பெற்ற செல்வம் அல்லது ‘மஹாபுருஷ மஹராஜ்’ சுவாமி சிவானந்தர் பெற்ற செல்வம்.
 6. மட்டில்லா – அளவில்லாத அல்லது குறைவில்லாத.

காவிரி ஆற்றின் கரையில் குருகுலப் பள்ளி கண்டோன்

ஆவினை1 காக்கும் கண்ணன் அருள்மொழிக்கு உரையைக் கண்டோன்

ஆவி2யின் விடுதலைக்கா அந்தர்யோகம் கண்டோன்

தேவனின் கையிலை3 நடந்த திருப்பாதம் போற்றி போற்றி

 1. ஆவினை – பசுவினை; இங்கு அனைத்து உயிரையும் காக்கின்ற கண்ணன்.
 2. ஆவி – ஜீவன்.
 3. தேவனின் கையிலை – சிவபெருமான் வீற்றிருக்கும் கையிலை.

சுவாமி விவேகானந்தன் வழிவந்த வீரத்துறவி

தாமஸ1 சோம்பல் பேயை சாய்த்திடும் தருகண்ணாளன்2

நேமி3 போல் இரவும் பகலும் நாரணன்4 சேவை செய்யும்

சுவாமியாம் தேசிகன் தன்5 தாளினை சிரமேற்கொள்வோம்

 1. தாமஸ – தமோ குணம்.
 2. தருகண்ணாளன் – தகைமையை உடையவன்.
 3. நேமி – சூரியன்.
 4. நாரணன் சேவை – நரசேவை; நாராயண சேவை.
 5. தேசிகன் தன் – தேசிகனுடைய.

பெண்மணிகள் பெருமை ஓங்க பெருந்தொண்டு செய்தவனே

பெண்களை அம்பிகையாய் எண்ணிய பெருந்தகையே

அன்னை சாரதா தேவி அருந்தவ புத்திரனே

சிவானந்த வள்ளல் தந்த சுவாமிஜி பாதம் போற்றி


திருப்பாதம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி என்றும்

பொன்னடிகள் போற்றி நின்றோன் ஏத்தி ஞானச் சுடரை

என்றும் இலங்க வைக்கும் சீரார்க்கும் கழல்கள் போற்றி

சித்பவ நாமம் போற்றி ஏத்தும் வழி அடியார்.

ஏத்தும்1 வழி அடியார் சீரடி எம் சிரமேற்கொள்வோம்.

 1. ஏத்தும் – போற்றும். சுவாமி சித்பவானந்தரைப் போற்றும் அடியார்கள் அடியைப் வணங்குவோம்.

அம்பா அவர்கள் இந்தப் பாடலை வெள்ளிமலை ஸ்ரீமத் மதுரானந்த சுவாமிகளுடன் இணைந்து இயற்றி மகிழ்ந்தார்கள். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக் கல்வி பெற்ற அம்பா அவர்கள் இவ்வளவு நயமாக, பொருள் பொதிந்த பாடலை இயற்றியது வியப்பளிக்கிறது. சிற்சில சம்ஸ்கிருத சொற்கள் இப்பாடலில் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாக நிஷ்டை, சிஷ்டர், நேமி என்பனவாம்.

சிறு வயதில் பள்ளிப் படிப்பு தடைபட்டாலும், அம்பா அவர்கள் உண்மையை போதிக்கும் நன்னூல்களை வாசித்து வந்துள்ளார்கள். திருக்குறள், திருவாசகம், தாயுமானவர் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பட்டனார் கீதை, கைவல்ய நவநீதம் போன்ற நூல்களை இயன்ற அளவு சிறு வயதில் கற்றிருந்தார்கள்.

DETAILS ABOUT THE AUDIO:

ஆல்பம்: குரு மஹிமா
ஒலிநாடா (Audio Cassette) வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை.
ஆண்டு: 1998
பாடியோர்: Mrs. பரமேஸ்வரி (திருநெல்வேலி சாரதா கல்லூரி இசை ஆசிரியை) மற்றும் ‘கான சாரதா’ இசைக்குழு (கல்லூரி மாணவியர்.)
வயலின்: நெல்லை ரவீந்திரன்.
மிருதங்கம்: நெல்லை ராஜு.

யதீஸ்வரி சிவப்ரியா அம்பா அவர்கள் சந்நியாசம் ஏற்று 11 ஆண்டுகள் சேலம் ஸ்ரீ சாரதா சமிதியில் தவமியற்றிய காலத்தில் இப்பாடலை இயற்றினார். அதுபோழ்து சேலத்தில் வதிந்து வந்த இசை ஆசிரியை ஒருவரைக் கொண்டு இப்பாடலுக்கு இசை அமைத்துள்ளார். பாடலுக்கான ராகத்தைத் தேர்வு செய்ததுகூட யதீஸ்வரி சிவப்ரியா அம்பா அவர்கள்தான். மெட்டு அமைத்துக் கொடுத்த அந்த ஆசிரியையின் பெயர் தெரியவில்லை. சேலத்தில் இருந்த 11 ஆண்டுகளில் பிரம்மச்சாரிணிகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தபோது அவர்களுக்கும் இப்பாடலை இதே மெட்டு அமைப்பில் பாட சொல்லிக்கொடுத்துள்ளார்கள். இந்த பாடலின் ராகம்: காம்போஜி, தாளம்: ஆதி.

Cassette
Audio Cassette

பாடல்கள் பதிவு செய்யப்பட்ட இடம் தூத்துக்குடியில் இருந்த ஒரு Recording Studio. Recording Engineer பெயரும் தெரியவில்லை. இருப்பினும் சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

Cassette card
Cassette Inlay Card

மேலும் குருமஹிமா ஒலிநாடாவில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளன. அதில் ஒன்றை இங்கு தந்துள்ளோம். இன்னும் அம்பா அவர்கள் இயற்றிய பல பாடல்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை ‘அருட்துணை மாதர் சங்கம்’ புத்தகமாக வெளியிட்டுள்ளது. ‘குருமஹிமா’ ஒலிநாடா போன்று, ‘நமோ நமோ சாரதாமா’, ‘எழுமின் விழிமின்’ என்று மொத்தம் மூன்று தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் இடம்பெற்றிருக்கும் பெரும்பான்மையான பாடல்கள் யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா இயற்றியவையே.

அம்பா அவர்கள் தம் சிந்தையில் ஊறிய சீரிய கருத்துக்களை பாடல்கள், கதாகாலக்ஷேபம், வில்லுப்பாட்டு, நாடகம் ஆகிய வடிவிலே உலகுக்கு அளித்துள்ளார்கள். இராமாயணம், கிருஷ்ணலீலை, அருட்திருமூவர் வரலாறு, ஸத்குருநாதர் சுவாமி சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு, மாணிக்கவாசகர், ஆண்டாள், மீரா, சக்குபாய் போன்ற அடியார்களின் வரலாறுகள் ஆகியவற்றை விளக்குவதாக மேற்சொன்ன கதாகாலக்ஷேபம், வில்லுப்பாட்டு, நாடகம் ஆகியவை அமைந்துள்ளன. எளிய தமிழில் உள்ளத்தை உருக்கும் மொழியில் சாதனத்தையும் சாத்தியத்தையும் புகட்டுகின்றன, அம்பா அவர்களின் எழுத்துக்கள்.

இன்று யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அவர்களின் நினைவு தினம் ஆகும். 23.03.2000, வியாழன் அன்று காலை 9-55 மணித் துளிகளில் அவர் தியானத்தில் இருந்தவாறே உடலை உகுத்துவிட்டு பரத்தில் கலந்துவிட்டார்கள்.


நன்றி:

யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா, திருவண்ணாமலை.

உதவிய நூல்:

‘ஆத்ம சாதனையின் அற்புதம்’

வெளியீடு:

அருள் துணை மாதர் சங்கம், மதுரை – 1.


குறிப்பு:

அம்பா அவர்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள முந்தைய ஆண்டுகளில் பதிவேற்றப்பட்ட கட்டுரைகளை ஒருமுறை வாசிக்கவும். Click the links given below:

1. 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அம்பா அவர்களின் ஞான வாழ்வை 5 பாகங்களாக பதிவேற்றியிருந்தோம். அவை:
Part-1:
Part-2:
Part-3:
Part-4:
Part-5:
2. 2014ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று ஆங்கிலத்தில் சுருக்கமாக பதிவேற்றியிருந்தோம். இங்கே click செய்யவும்.
3. 2014ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று பதிவேற்றப்பட்ட சத்-சம்பாஷணை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s