Sri Paramahamsarin Apta Mozi – 80

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 80

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 79: https://swamichidbhavananda.wordpress.com/2016/03/17/sri-paramahamsarin-apta-mozi-79/)

தீங்கற்ற ஆசை

சிஷ்யர்கள் சிலருடன் பரமஹம்ஸ தேவர் தட்சிணேசுவர ஆலயத்தில் அமர்ந்திருந்தார். அப்பொழுது அவர் தம்மைப் பற்றிய ஒரு வரலாற்றைச் சிஷ்யர்களுக்கு எடுத்து இயம்பினார்.

நான் முன்பு சாதனங்கள் புரிந்துகொண்டிருந்தபொழுது எனக்குப் புதியதொரு மனோநிலை உண்டாயிற்று. அந்த மனோநிலையில் நான் வேண்டுமென்றே சிறிது ரஜோ குணத்தை என்மீது வரவழைத்துக்கொண்டேன். அப்பொழுது உலகப் பொருள்கள் சிலவற்றைக் குறித்துத் தியாகம் பழகுதல் பொருட்டு ஒருவிதப் பயிற்சியை நான் கையாள வேண்டி வந்தது. குற்றமற்ற இரண்டொரு ஆசைகளை எனக்கு நானே உண்டுபண்ணிக் கொண்டேன். விலையுயர்ந்த வேஷ்டி ஒன்றை அணிந்துகொள்ள விரும்பினேன். அழகான சால்வை ஒன்றையும் மேலே போட்டுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் உண்டுபண்ணிக் கொண்டேன். விரலில் மோதிரம் ஒன்றைப் போட்டுக்கொள்ள வேண்டுமென்கின்ற விருப்பமும் உண்டாயிற்று. இவை யாவையும் குறித்து அப்பொழுது உயிர்வாழ்ந்திருந்த மதுரநாத விசுவாசரிடம் தெரிவித்தேன். அவரும் இப்பொருள்களையெல்லாம் மகிழ்வுடன் எனக்குக் கொண்டுவந்து சேர்த்தார். அவைகளையெல்லாம் நான் அணிந்துகொண்டேன். அது ஒரு பகட்டான காட்சியாகத் தென்பட்டது. அப்பொழுது என் மனதுக்கு நான் இங்ஙனம் எடுத்தோதினேன்: ‘ஓ மனமே, நீ விரும்பும் ஜரிகை வேஷ்டி இதோ இருக்கிறது பார். அதை அணிந்து நீ மகிழ்வடைகிறாயா? வேண்டியவாறு அதில் நீ திருப்தியடைந்திரு. அதே பாங்கில் இதோ சால்வை ஒன்றும் உனக்குக் கிட்டியிருக்கிறது. மோதிரம் ஒன்றையும் இப்பொழுது நீ பெற்றுள்ளாய். இவை யாவையும் அணிந்திருப்பதினால் உனக்குக் கிடைத்துள்ள புதிய பேறு ஏதாவது உண்டா? நன்கு எண்ணிப்பார். இவைபோன்ற பொருள்களில் நாட்டம் வைப்பதற்கு ஒரு முடிவே கிடையாது. இனிமேல் இத்தகைய பொருள்களைக் கனவிலும் கருதாதே. தன்னில்தானே திருப்தியடைந்த பாங்கில் இருந்து பழகு.’ இப்படி என் மனதுக்கு நான் பகர்ந்தவுடனே இப்பொருள்களில் விரக்தி உண்டாயிற்று. தாற்காலிகமாக வரவழைத்துக்கொண்ட பற்று அறவே நீங்கிவிட்டது. அப்பொருள்களையெல்லாம் எடுத்துத் தூர வீசி எறிந்தேன். பிறகு அவைகளை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருநாளும் என் மனதில் உதிக்கக் கிடையாது.

மனது ஆசையற்ற நிலையில் இருப்பதே சாதகன் ஒருவனுக்கு மிகச் சிறந்தது. ஆனால் குற்றமற்ற ஆசைகள் சில உண்டு. ஏதேனும் ஒரு தின்பண்டத்தை அருந்தலாம் என்கின்ற ஆசை ஒரு சாதகனுக்கு மனதில் உதிப்பதுண்டு. ஏதேனும் ஒரு ஸ்தலத்தைப் போய்ப் பார்த்து வரலாமென்ற எண்ணம் தோன்றுவதுண்டு. நல்ல மனிதர் சிலருடன் உறவாடலாம் என்கின்ற அபிலாஷையும் உள்ளத்தில் தலையெடுக்கலாம். இத்தகைய எண்ணங்களை நிறைவேற்றி வைப்பதில் தீங்கு ஒன்றும் இல்லை. அவைகளை நிறைவேற்றி வைப்பதற்கிடையில் மனதுக்கு நல்ல பாடம் ஒன்றையும் புகட்ட வேண்டும். நிராசையில் நிலைபெற்றிருப்பதற்கு நிகரானது வேறு ஒன்றுமில்லை என்னும் கோட்பாட்டை மனதில் ஆழ்ந்து பதியவைக்க வேண்டும்.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s