Sri Paramahamsarin Apta Mozi – 82

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 82

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 81: https://swamichidbhavananda.wordpress.com/2016/03/31/sri-paramahamsarin-apta-mozi-81/)

கர்மம் செய், கர்த்திருத்துவம் வேண்டாம்

நெடுநேரத்துக்குப் பிறகு பரமஹம்ஸரின் மனது கீழ்நிலைக்கு இறங்கி வந்தது. மஹேந்திரரைப் பார்த்து அவர் இயம்பியதாவது: “உனக்கேற்பட்டுள்ள கடமைகளை முழு மனதுடன் செய். ஆனால் அவைகளையெல்லாம் உனக்காகவென்று செய்ய வேண்டாம். அவைகளுக்கு நீ கர்த்தா என்கின்ற உணர்வும் உள்ளத்தில் உண்டாகலாகாது. தனக்கென்று கர்மம்  புரிவதால்தான் கேடுகள் பல உதிக்கின்றன. உலக நன்மைக்கென்றே உழைக்கும் உத்தமர்கள் சிலர் உலகில் இருக்கின்றனர். பேர் உழைப்புக்கிடையில் அவர்கள் தங்களைப் பற்றி நினைப்பதே கிடையாது. அத்தகைய மனப்பான்மையுடன் தொண்டுபுரிவது பெரிதும் பாராட்டத்தக்கது. நீ புரிந்துவரும் கர்மத்தின் பயன் என்ன ஆகுமோ என்னும் கவலை வேண்டாம். கடவுளுக்கென்றே தம் கடமையைச் செய்கின்றவர்களுக்குச் சிறிதளவும் கவலை கிடையாது. கடவுளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதும், கடவுளிடத்துப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருப்பதும் கடவுளுக்கென்றே பணிபுரிவதும் ஒன்றே.”

மஹேந்திரர் பணிவுடன் கேள்வி ஒன்று கேட்கின்றார். ‘எங்கு ராமன் இருக்கின்றானோ அங்குக் காமன் இல்லை. எங்குக் காமன் இருக்கின்றானோ அங்கு ராமன் இல்லை’ இங்ஙனம் சாஸ்திரங்கள் சில சொல்லுகின்றன. என் போன்றவர்கள் உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். உலகத்தவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துகொண்டிருப்பதற்கிடையில் ஈசுவர லாபம் அடைய முடியுமா?”

பரமஹம்ஸர் அதற்கு விடையளிக்கிறார்:

“கர்மம் புரியாது யாராவது இருக்க முடியுமா? எல்லாரும் கர்மம் செய்துகொண்டே இருக்கின்றனர். இறைவனுடைய திருநாமத்தை உச்சரித்துக்கொண்டிருந்தால் அது கர்மம். அத்வைதி ஒருவன் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்னும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பானாகில் அதுவும் கர்மம். ஜீவராசிகள் சுவாசிக்கின்றன. சுவாசிப்பதும் கர்மமாகின்றது. இத்தகைய கர்மங்களை யார்தான் விட்டுவிட முடியும். தேகம் எடுத்திருப்பவர்களுக்குத் தேகம் இருக்கும் பரியந்தம் கர்மமும் இருக்கின்றது. ஆக கர்மம் புரிந்தே ஆக வேண்டும். ஆனால் கர்மத்தின் பலனை கடவுளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டு அவர் பொருட்டே நான் எல்லாம் செய்து வருகிறேன் என்னும் எண்ணத்தில் நிலைபெற்றிரு. கர்மத்தினின்று விடுபடுவதற்குக் கர்ம பலனை எல்லாம் ஈசன்பால் ஒப்படைப்பதே உற்ற உபாயமாகிறது. சான்றோர்கள் உலகில் எப்படி வாழ்ந்திருந்தார்கள் என்பதை எண்ணிப்பார். கர்மத்தை அவர்கள் துறந்துவிடவில்லை. கர்மத்துக்கு நான் கர்த்தா என்னும் எண்ணத்தை அவர்கள் அறவே துறந்துவிட்டார்கள். நீயும் அங்ஙனம் செய்.”

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s