Question & Answer – 8

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண்: 8 உபநிஷத் வாக்கியங்களாகிய மாத்ருதேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ என்னும் ஆப்த மொழிகளோடு மூர்க்க தேவோ பவ என்று புதிதாக இணைத்து விவேகானந்த சுவாமிகள் பகர்ந்துள்ளார். அப்படியானால் மூர்க்கனைத் தண்டிக்கக் கூடாதா?

பதில்:

மூர்க்கன் ஒருவன் செய்கின்ற அடாத செயலைக் குறித்து அரசாங்க வர்க்கம் அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைதவறி நடப்பவர்கள் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தீங்கு வளர்ந்துகொண்டே போகும். ஆனால் அதிகார வர்க்கம் செய்கின்ற தர்மத்தைத் துறவியர்கள் செய்யலாகாது. (Resist not evil) தீமையை எதிர்க்காதே என்னும் கோட்பாடு யதி தர்மம். இது அலாதியாகத் துறவியர்களுக்கே உரியது. அரசாங்கம் மட்டுமன்று; கிரஹஸ்தாச்ரம தர்மமும் தீமையை எதிர்த்தலேயாம். தீமையை எதிர்த்து அதைத் தண்டித்து அடக்கி வைப்பது இவ்வுலக வாழ்க்கைக்குரிய கடமையாகும். துறவறத்தைக் கையாண்ட அப்பர் சுவாமிகளும், மாணிக்கவாசகரும் இன்னல்கள் பலவற்றிற்கு ஆளானார்கள். இன்னல்கள் புரிந்தவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று தெய்வத்திடத்தும் அவர்கள் பிரார்த்தனை பண்ணவில்லை. தங்களுக்கு வந்த துயரத்தைப் பொறுமையாக ஏற்றுக்கொண்டு அத்துயரத்தினின்று அவர்கள் மீண்டார்கள். இம்முறையை உலக மக்கள் எல்லாரும் கையாள முடியாது. கையாள வேண்டுமென்று சாஸ்திரமும் ஆணையிடவில்லை.

விவேகானந்த சுவாமிகள் உபநிதங்களில் அடங்கியுள்ள நான்கு ஆப்த வாக்கியங்களை அனுசரித்துத் ‘துக்கீ தேவோ பவ’; ‘தரித்திர தேவோ பவ’; ‘மூர்க்க தேவோ பவ’ என்னும் மூன்று முதுமொழிகளை இணைத்துள்ளார்.

நரர்களை நாராயண சொரூபமாகக் கருதி அவர்களுக்குப் பணிவிடை பண்ணுவது தலைசிறந்த நரயக்ஞம் அல்லது மானுட சேவை என்று விவேகானந்த சுவாமிகள் வற்புறுத்தியிருக்கிறார். துக்கத்தில் அழுந்திக் கிடக்கின்ற ஒருவனை அனுதாபத்தோடு அணுகி அவனுக்கு முறையாகப் பணிவிடை பண்ணினால் அதனால் அவன் பெரிதும் ஆறுதல் அடைகிறான். அதற்கு மாறாகப் பழவினைப் பயனாக அவன் துக்கத்தில் அழுந்திக் கிடக்கிறான் என்னும் மனப்பான்மையுடன் அவனை விட்டு ஒதுங்கிப் போவது பக்தன் ஒருவனுடைய பாங்கு ஆகாது. பக்தன் ஒருவன் யாண்டும் துக்கப்படுபவர்களுக்கு முறையாக ஆறுதல் வழங்கவே முயன்று வருகிறான்.

இனி ‘தரித்திர தேவோ பவ’ என்பது வறுமை நோயில் வருந்துகிற ஒருவனுக்கு நேர்மையான உழைப்பு முறையும், பொருத்தமான மனப்பான்மையும் வழங்குவது நல்ல மானுட சேவையாகிறது. அத்தகைய மானுட சேவையே யோகியின் மனதைப் பண்படுத்துகிறது.

அடுத்தபடியாக மூர்க்கன் என ஒதுக்கப்படுபவன் அறிவிலியாகவிருக்கலாம் அல்லது முரடனாகவிருக்கலாம். நரசேவையே நாராயண சேவை என்னும் கொள்கையில் உறுதிபடைத்திருக்கும் யோகி மூர்க்கனைக் கண்டு ஒதுங்குவதில்லை, அல்லது அவன்மீது கண்டிப்பான நடவடிக்கை எடுப்பதில்லை. இதற்கு சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம்.

விவேகானந்தர் காலத்தில் பவ ஆஹாரி பாபா என்னும் சான்றோர் ஒருவர் இருந்தார். சமைப்பதற்கு அவர் ஒரே பித்தளைப் பாத்திரம் வைத்திருந்தார். அதை ஒரு திருடன் வந்து திருடினான். திருடிக்கொண்டு போகிற வேளையில் பவ ஆஹாரி பாபா அவனைச் சந்திக்க நேர்ந்தது. உடனே பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டுத் திருடன் ஓட்டம் பிடித்தான். அந்தப் பாத்திரத்தைக் கையில் தூக்கிக்கொண்டு பவ ஆஹாரி பாபா அவனைப் பின் தொடர்ந்து ஓடினார். பாத்திரமும் கையுமாகப் பிடித்துத் தன்னைப் போலீஸ்காரனிடம் ஒப்படைக்கத் துரத்திக்கொண்டு வருகிறார் என்று எண்ணி மிகவேகமாகத் திருடன் ஓடினான். இந்தச் சான்றோரோ அவனை விடவில்லை. துரத்தி ஆளைப் பிடித்துக்கொண்டார். இருவரும் விரைந்து மூச்சு வாங்குவது ஓய்வு அடையும் வரையில் பவ ஆஹாரி பாபா காத்திருந்தார். பின்பு அன்போடு அவர் பகர்ந்ததாவது: “அன்பா, எப்பொழுது இந்தப் பாத்திரத்தில் நீ பற்று வைத்தாயோ அப்பொழுதே இந்தப் பாத்திரம் உனக்குரியது ஆயிற்று; அது எனக்குரியது அன்று; தயவு செய்து இதை எடுத்துக்கொண்டு போ.” பவ ஆஹாரி பாபாவின் தூய மனப்பான்மையும், உள்ளன்பும் அந்தத் திருடனுடைய மனதை அக்கணமே மாற்றிவிட்டது. அவன் இயம்பியதாவது: “பெரியோய், எனக்கு இப்பொழுது புத்தி வந்தது. திருடுகிற இப்பொல்லாத செயலை இனிச் செய்யமாட்டேன்.”

கெட்டவனை நல்லவனாகுவதற்கு இது அன்பு முறை. எல்லாராலும் இதைக் கையாள முடியாது. எனவே மூர்க்க தேவோ பவ என்னும் கோட்பாட்டை மனபரிபாகம் அடையாதவர்கள் கையாண்டால் அது கேடாய் முடியும்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s