Sri Paramahamsarin Apta Mozi – 86

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 86

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 85: https://swamichidbhavananda.wordpress.com/2016/04/28/sri-paramahamsarin-apta-mozi-85/)

கடவுளை நாடுபவர்களின் வகைகள்

திரும்பவும் மௌனம் நிலவுகிறது. கூடியிருந்த அனைவரும் ஒருவிதமான ஆனந்தத்தில் திளைத்திருந்தனர். அப்பொழுது மற்றொரு கேள்வி எழுந்தது. ஓர் அன்பர் கேட்டார், “கடவுளுடைய சன்னிதி சார்வது என்று சொல்லுகிறீர்கள். கடவுளை அடைவது பற்றியும் பகர்கின்றீர்கள். இப்படியெல்லாம் சொல்லுவதினுடைய பொருள் யாது? கடவுளை ஒருவன் எப்படி அடைகின்றான்?”

பரமஹம்ஸரிடமிருந்து பதில் வருகிறது. “வைஷ்ணவ சித்தாந்தத்தில் கோட்பாடு ஒன்று உளது. அதன்படி கடவுளை நாடுகின்றவர்களும், கடவுளை அறிந்து அடைகின்றவர்களும் நான்கு விதத்தவர்களாக வகுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். பிரவர்த்தகர் என்றும், சாதகர் என்றும், சித்தர்கள் என்றும், பரம சித்தர்கள் என்றும் அவர்களைப் பிரித்து வைத்துப் பகர்வதுண்டு.

(I) பிரவர்த்தகர்கள்:

பகவத் நாட்டத்தில் கருத்து வைத்து அதற்குரிய முயற்சிகளை அப்பொழுதுதான் எடுத்துள்ள நன்மக்கள் பிரவர்த்தகர்கள் எனப்படுகின்றனர். பள்ளிக்கூடத்தில் அப்பொழுதுதான் சேர்க்கப்பட்டுள்ள பாலகர்களுடன் அவர்களை ஒப்பிடலாம். பள்ளிக்கூடத்துக்குள் வந்ததும் அவர்களுக்குப் புதிய அலுவல்கள் சில ஏற்படுகின்றன. அங்ஙனம் கடவுள் நாட்டத்தில் முயற்சிகொள்ளுகின்றவர்களுக்கும் அது சம்பந்தமான புதிய செயல்கள் சில இருக்கின்றன.

(II) சாதகர்கள்:

சாதகர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்கள் சில காலத்துக்குத் தொடர்ந்து ஆத்ம சாதனங்கள் செய்தவர்கள் ஆகின்றனர். நித்திய அனுஷ்டானங்களை அவர்கள் முறையாகச் செய்துகொண்டு வந்தவர்கள். ஒழுங்குப்பாடான வாழ்க்கை அவர்களிடம் தென்படுகிறது. இயல்பாகவே அவர்கள் அதிகாலையில் எழுந்திருக்கின்றனர். எழுந்திருக்கும்பொழுதே அவர்கள் உள்ளத்தில் வரும் முதல் எண்ணம் கடவுளைப் பற்றியது. அதன்பின் நீராடுதல் முதலிய நித்திய கர்மங்களைச் செய்து முடிக்கின்றனர். பிறகு கடவுளைக் குறித்து அவர்கள் தியானம் செய்கின்றார்கள். கடவுளின் நாமத்தைத் தங்களுக்குரிய மந்திரமாக வைத்துக்கொண்டு மனத்தகத்து அதைத் திரும்பத் திரும்ப ஓதி ஜபம் செய்கின்றனர். கடவுளின் திருநாமங்களை உரக்க உச்சரித்து நாமபஜனை செய்கின்றனர். கடவுளைக் குறித்து ஸ்தோத்திரங்கள் பாடுகின்றனர். பகவத் விஷயங்களைப் புகட்டும் சாஸ்திரங்களைப் பக்தி சிரத்தையுடன் அவர்கள் படிக்கின்றனர். பகவத் விஷயங்களைத் தங்களுக்குள் பேசிக்கொள்ளுதலில் அவர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். மலர் கொய்தல், மாலை தொடுத்தல், வழிபடு தெய்வத்துக்கு ஆராதனை, அர்ச்சனை செய்தல் ஆகிய காரியங்களையும் பேரூக்கத்துடன் அவர்கள் செய்து வருகின்றனர். இத்தகைய கூட்டத்தாரைச் சாதகர்கள் என்று சொல்லலாம்.

(III) சித்தர்கள்:

தங்களுடைய அந்தராத்மாவாக மனத்தகத்துக் கடவுள் எழுந்தருளியிருக்கின்றார் என்பதை அனுபூதி வாயிலாக உணர்பவர்கள் சித்தர்கள் ஆகின்றனர். சான்று ஒன்று சொல்லி இவர்களின் பரிபாகத்தை விளக்கலாம். வீட்டுத் தலைவன் இருட்டறை ஒன்றினுள் சென்று உட்கார்ந்து கொள்கின்றான். அந்த இருட்டு அறைக்குள் அத்தலைவனுக்குரிய உறவினன் ஒருவன் செல்கின்றான். அறையினுள் ஒன்றும் கட்புலனாவாதில்லை. கையால் நெருடிப் பார்க்கின்றான்; ஜன்னலைத் தொடுகின்றான்; இது அல்ல என்று மேலும் நகர்ந்து செல்கிறான். சுவரைத் தொடுகின்றான்; இது சுவர், தலைவன் அல்ல என்று முடிவு கட்டுகின்றான். பிறகு மேஜை ஒன்றன் மீது மோதிக் கொள்கின்றான். அதைத் தொட்டுப் பார்க்கின்றான். அதுவும் தன் தலைவன் அல்ல என்று மேலும் நகர்ந்து செல்கின்றான். நாற்காலி ஒன்று தட்டுப்படுகிறது. அதையும் தொட்டுப் பார்த்துவிட்டுத் தான் தேடும் தலைவன் அது அல்ல என்று மேலும் தேடுகின்றான். ஒரு மூலைக்கு வருகின்றான். கை வைத்துப் பார்த்தான். மானுட சரீரம் ஒன்றன்மீது அவன் கை படிந்தது. இதோ தலைவன் இங்கு இருக்கின்றான் என்று அவன் பகர்கின்றான். தலைவனைத் தொட்டாய்விட்டது. இது சித்தன் ஒருவனுடைய நிலை.

(IV) பரம சித்தர்கள்:

வேதாந்த சாஸ்திரத்தில் நேதி மார்க்கம் என்பது ஒன்று உண்டு. நித்திய, அநித்திய வஸ்து விசாரம் என்றும் அது பகரப்படுகிறது. நிலையற்ற பொருள்களையெல்லாம் இது அல்ல, இது அல்ல என்று சாதகன் ஒருவன் நீகிக் கொண்டே போகிறான். கடைசியில் நித்திய வஸ்துவாகிய கடவுளிடம் வந்துவிடுகின்றான். பரமசித்தனுடைய நிலை முடிவானது. சித்தன் ஒருவன் கடவுளை அடைந்துவிட்டான் என்பது உண்மை. இருட்டறைக்குள் இருக்கும் தலைவனைத் தொட்டுவிட்டதற்கு அது சமானமானது. தலைவனைத் தொட்டுவிட்டால் மட்டும்போதாது. வெளிச்சத்தில் அவனைப் பார்க்க வேண்டும். அவனோடு உரையாட வேண்டும். அவனுடைய நெருங்கிய நட்பைப் பெறுவதும் அவசியமாகின்றது. பரமசித்தன் கடவுளைத் தொட்டு உணர்ந்தான பிறகு கடவுளோடு அனன்ய பக்தி கொள்கின்றான். கடவுளின் சொரூபத்தில் தானே லயித்திருக்கின்றான். அதை முற்றிலும் உணர்ந்தவனாகின்றான். அவனுடைய நிலையே முடிவானது.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s