Question & Answer – 9

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 9: கடவுள் தாமே உயிர்கள் அனைத்துமாய் இலங்குகிறார் என்பது கோட்பாடு. அப்பெரிய பொருள் எந்த பந்தபாசத்திலும் கட்டுப்பட்டதன்று. அத்தகைய நித்திய முக்த வஸ்துவினின்று வந்துள்ள ஜீவர்களாகிய நாம் ஏன் கட்டுண்டவர்களாக இருக்கின்றோம்? தங்கத்தினின்று வருவதெல்லாம் தங்கம்தானே? அங்ஙனம் கடவுளிடத்திருந்து வந்துள்ள உயிர்களனைத்தும் கடவுள் போன்று எதிலும் கட்டுப்படாதவைகளாகத்தானே இருக்க வேண்டும்? நமக்கு பந்தபாசம் எப்படி வந்தது? அருள்கூர்ந்து விளக்கியருள வேண்டுகிறேன்.

பதில்:

ஈசுவரன் மாயாசகிதராயிருக்கிறார். ஜீவர்களாகிய நாமும் மாயாசகிதர்களாக இருக்கிறோம். ஈசுவரனோ மாயைக்கு அதிபதியாக இருக்கிறார். ஜீவர்களாகிய நாமோ மாயையில் கட்டுண்டவர்களாக இருக்கிறோம். இந்த பந்தபாசம் நமக்கு எங்கிருந்து எப்படி வந்தது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஈசுவரன் கிருத்திய வடிவினராக இருக்கின்றார். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுக்ரஹம் ஆகிய பஞ்ச கிருத்தியங்களும் அவருக்குச் சொந்தம். அவைகளை முறையே படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்று இயம்புகின்றோம். இந்தப் பஞ்ச கிருத்தியங்களை நிகழ்த்துதற்கிடையில் இவைகளில் எவ்விதத்திலும் கட்டுண்ணாதவராக இறைவன் இருக்கிறார். மற்று ஜீவர்களாகிய நாமோ இந்த ஐந்து வினைகளிலும் கட்டுண்டவர்களாக இருக்கிறோம். ஜீவர்கள் அனைவரும் இந்த ஐம்பெரும் செயல்களில் கட்டுண்ணாதவர்களாக இருப்பார்களானால் பிரபஞ்சத் தோற்றத்திற்கு இடமில்லை.

மறைத்தலுக்கும், அருளுதலுக்கும் இயற்கையில் சான்றுகள் எடுத்துக்கொள்வோம். விதை ஒன்றனுள் ஒரு மரத்தின் பாங்குகளாகிய புஷ்பம், பழம் முதலியன மறைந்துகிடக்கின்றன. முறையாக வளர்ந்து அம்மகிமைகள் தோற்றத்திற்கு வரும்பொழுது அச்செயலை அருளல் எனலாம். இங்ஙனம் ஸ்தாவர உலகில் மறைத்தலும் அருளலும் இடம்பெற்று இருக்கின்றன. பறவை உலகில் முட்டையினுள் உயிர்த்தத்துவம் மறைந்திருக்கிறது. முட்டைகளை அடைகாத்துக் குஞ்சுபொரித்து வளர்த்து வருவது ஈசன் செயல். தக்க தருணத்தில் பறவைகள் அழகு வாய்ந்தவைகளாகவும் இனிய ஓசை வடிவெடுத்தவைகளாகவும் இலங்குகின்றன. இச்செயல்களில் மறைத்தலும், அருளலும் சேர்ந்து அமைந்துள்ளன. இதே பாங்கில் விலங்குகள் குட்டிபோட்டு அவைகளை வளர்த்து மேல்நிலைக்குக் கொண்டு வருகின்றன. அந்தந்த உயிர்வகைகள் தத்தம் இயல்புகளினின்று சிறிது காலம் மறைந்திருந்து பின்பு அவைகளைப் பெறுகின்றன. அவைகள் பரிணமித்து மானுட நிலையை எட்டும் வரையில் பிரகிருதியிலேயே கட்டுண்டவைகளாக வாழ்ந்து வருகின்றன.

மானுட நிலையை எட்டும்பொழுது பிரபஞ்ச வாழ்வுக்குரிய முன்னேற்றம் உச்சநிலையை அடைகிறது. மானுடப் பிறவியில் ஜீவர்கள் எண்ணிறந்த ஜனன மரணத்துக்கு ஆளாகி வருகின்றனர். அத்தனை பிறவிகளில் படிப்படியாக மனபரிபாகம் வந்தமைகிறது. மனதின்கண் உண்டாகிற முன்னேற்றமே மானுடப் பிறவியின் நோக்கமாகும். பல பிறவிகளுக்குப் பிறகு பிரபஞ்ச வாழ்வின் குறைபாடுகள் மனிதனுக்கு விளங்குகின்றன. மரணமிலாப் பெருவாழ்வு பிரபஞ்சத்தின்கண் இல்லை. மண்ணுலக வாழ்வில் இன்பத்தைவிடத் துன்பம்தான் அதிகரித்திருக்கிறது. இந்திரியங்கள் மூலமாகப் பெறுகின்ற சுகங்கள் எல்லாம் துன்பங்களாக முடிவுறுகின்றன. இத்தகைய அனுபவம் மேலோங்குதற்கேற்ப உலகப்பற்றுக் குறைகிறது. தெய்வ நாட்டம் படிப்படியாக மேலோங்குகிறது. பரநாட்டத்திற்கேற்ப அந்தக்கரண சுத்தியும் அதிவிரைவில் வந்தமைகிறது.

மேலும், நிகழ்கிற முன்னேற்றத்தை ஒரு உபமானக் கதையின் வாயிலாகப் பரமஹம்ஸ தேவர் விளக்குகிறார்:

‘தாயும், குழந்தையும் குலாவி விளையாடுகின்றனர். விளையாட்டுக்கிடையில் தாய் திடீரென்று வேண்டுமென்றே தன்னை மறைத்து வைத்துக் கொள்கிறாள். குழந்தையோ இங்கும் அங்கும் தேடிப்பார்த்துத் தன் தாயைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கிறது; கோவென்று அது கதறி அழுகிறது. அதன் அழுகையில் தாய் ஒருவித இன்பம் காண்கிறாள். ஆனால் நெடுநேரம் தன் குழந்தையை அந்தப் பரிதாபகரமான நிலையில் வைத்திருக்க அவள் விரும்புவதில்லை. திடீரென்று குழந்தையின் முன் தோன்றி அதை மகிழ்விக்கிறாள். இங்கு மறைப்பிலும், அருள் நிலையிலும் உள்ள இனிமை உலக வாழ்க்கையின் மூலமாகக் காட்டப்படுகிறது. இதே செயல் பாரமார்த்திகப் பெருவாழ்விலும் நிகழ்கிறது.

‘யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’

என்னும் கோட்பாடு பக்குவம் அடைந்துள்ள ஒவ்வொரு ஆத்ம சாதகனிடத்தும் நிகழ்கிறது.

‘மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்’

என்னும் கோட்பாடு நிறைவேறுகிறது. இது சிருஷ்டியின் மகிமை. இறைவன் வேண்டுமென்றே தன் சொரூபமாயுள்ள ஜீவர்களிடத்திலிருந்து தன்னை மறைத்து வைக்கிறான். அருள் நாட்டத்தின் வாயிலாகப் பக்குவமான சாதகர்களுக்குத் தன் சொரூபத்தைக் காட்டி அருளுகிறான். மறைத்தல், அருளல் என்னும் இரண்டு செயல்களுக்கும் உட்பட்டவர்களாக ஜீவர்களை இறைவன் வைத்திருப்பதால் பிரபஞ்ச வாழ்வு என்னும் உலக நாடகம் நடைபெறுகிறது. இந்த நாடகம் இறைவனுக்கும் அவனுடைய மெய்யடியார்களுக்கும் இன்பமூட்டுகிறது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Leave a comment