Sri Paramahamsarin Apta Mozi – 87

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 87

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 86: https://swamichidbhavananda.wordpress.com/2016/05/05/sri-paramahamsarin-apta-mozi-86/)

பக்தியின் பிரிவுகள்

அன்பர்களுடன் பரமஹம்ஸர் தட்சிணேசுவர ஆலயத்தில் தமது அறையில் அமர்ந்து கொண்டிருந்தார். பக்தியைப் பற்றிய பேச்சு அவர்களுக்கிடையிலே எழுந்தது. கடவுளை அடைதற்குப் பக்தி மிகச் சுலபமான மார்க்கம் என்று பரமஹம்ஸர் பகர்ந்தருளினார். ‘மக்களோடு நாம் விதவிதமான இணக்கம் வைக்கிறோம். அதே இணக்கத்தைக் கடவுளிடத்தும் நாம் வைக்கலாம். மக்களிடம் வைக்கும் இணக்கம் பந்த பாசத்தை உண்டுபண்ணுகிறது. அதே இணக்கத்தைக் கடவுளிடத்து வைத்தாலோ அது பந்தத்திலிருந்து பக்தனை விடுவிக்கிறது. அதற்கு ஐந்துவிதமான இணக்கங்கள் இருக்கின்றன.

i) சாந்த பாவனை:

போற்றுதற்குரிய பொருள் ஒன்றினிடத்து நாம் அன்பு கொள்கிறோம். மேன்மை தங்கிய அப்பொருளைப் பாராட்டாது நம்மால் இருக்க முடியாது. எல்லா மேன்மைகளும் கடவுளிடத்து இருக்கின்றன என்பதை அறிந்துகொள்கின்றவர்கள் இயல்பாகவே அக்கடவுளை ஆராதிக்கின்றனர். பண்டைக்காலத்து ரிஷிகள் பரம்பொருளிடத்துப் பேரன்பு கொண்டிருந்தனர். போற்றுதற்குரிய பொருளே என்று அப்பெரிய பொருளை அவர்கள் வணங்கினார்கள். மாந்தரது உள்ளத்தைக் கொள்ளைகொண்டு போகவல்லது அப்பொருள். ஆகவே பாராட்டுதற்குரிய பொருள் என்றும் கடவுளை நாம் வணங்கலாம். இதற்குச் சான்று ஒன்று எடுத்துக்கொள்ளலாம். இயற்கையில் அழகிய காட்சி ஒன்று தென்படுகிறது. அதைப் பார்த்து ரசிக்கும் இயல்பு நம்மிடத்து இருக்கிறது. பிரதிபலன் எதையும் எதிர்பார்த்து நாம் அதை ரசிப்பதில்லை. அதை மெச்சுவது ஒன்றே நமக்குப் போதுமானது. கடவுளின் மகிமையை அறியுமளவு நாம் அவரை மெச்ச ஆரம்பித்துவிடுகிறோம்.

ii) தாஸ்ய பாவனை:

கடவுளைத் தன் பிரபு என்றும் தன்னை அவருடைய தாஸன் என்றும் பக்தன் கருதுகிறான். இதே கோட்பாட்டை ஆண்டான் அடிமை என்றும் இயம்புகிறோம். கடவுளுக்குத் தொண்டு செய்துகிடப்பதைத் தவிரப் பக்தன் வேறு எதையும் கருதுவதில்லை. ஸ்ரீராமச்சந்திரரிடம் ஆஞ்சநேயருக்கு இத்தகைய தாஸ்ய பாவனை இருந்தது. ஆஞ்சநேயர் புரிந்த செயல்களையெல்லாம் தமது பிரபுவின் பொருட்டே செய்து முடித்தார். தாம் எடுத்துக்கொண்ட செயல்களெல்லாம் ராம காரியம் என்ற எண்ணம் அவருடைய உள்ளத்தில் ஊறிக்கிடந்தது. அதினின்று அவருக்கு அலாதியான திறமை ஒன்று உண்டாயிற்று. கடவுள் கைங்கரியத்துக்காக நான் வாழ்ந்திருக்கிறேன் என்ற எண்ணத்திலிருந்து பக்தன் ஒருவனுக்குப் பேராற்றல் உண்டாகிறது.

iii) சக்ய பாவனை:

கடவுளிடத்துத் தொடர்பு வைப்பதற்கு இதுவும் சிறந்ததொரு உபாயமாகிறது. தோழமை கொண்டாடுதல் என இது பொருள்படுகிறது. கடவுளை நம்முடைய அன்பன் என நாம் கருதலாம். அன்பர்களிடத்து உயர்வு தாழ்வு கிடையாது. சம உரிமை அவர்களுக்கிடையில் வந்துவிடுகிறது. ஸ்ரீதாமன் என்னும் கோகுலவாசி ஒருவன் கிருஷ்ணனோடு இத்தகைய தோழமை கொண்டாடினான். கனி ஒன்றை அவன் அருந்திக் கொண்டிருந்தபொழுது கிருஷ்ணன் அங்கே தோன்றி வந்தான். தான் அருந்துதற்கிடையில் எஞ்சியிருந்த எச்சில் பழத்தைக் கிருஷ்ணனுக்கு அவன் கொடுத்தான். கிருஷ்ணனும் அன்புடன் அதை ஏற்று அருந்தினான். எந்தவிதமான வேற்றுமையும் அவர்களுக்கிடையில் உண்டாகவில்லை. தோழமையை முன்னிட்டுக் கிருஷ்ணனுடைய தோளின்மீதும் ஸ்ரீதாமன் ஏறி உட்கார்ந்துகொண்டான். கிருஷ்ணனுக்கு அதனால் பெருமகிழ்வு உண்டாயிற்று. இத்தகைய தோழமையில் அச்சத்துக்குச் சிறிதேனும் இடமில்லை. பரஸ்பரம் நட்பு கொண்டாடுவதே சகாபாவனையின் குறிக்கோள் ஆகிறது.

iv) வாத்ஸல்ய பாவனை:

தாய்க்கும் சேய்க்கும் உள்ள இணக்கம் வாத்ஸல்ய பாவனை எனப் பெயர் பெறுகிறது. தன் குழந்தை ஒன்றைத் தாய் அன்புடன் பராமரிக்கின்றாள். தன்னால் அக்குழந்தை பாதுகாக்கப்படுகிறது என்றும் அவள் உணர்கின்றாள். அக்குழந்தையின் பொருட்டு எத்தனைவிதமான சிரமங்களையும் எடுத்துக்கொள்ள அவள் ஆயத்தமாய் இருக்கின்றாள். சிரமங்கள் உண்மையில் அவளுக்குச் சிரமங்களாகத் தென்படுவதில்லை. இத்தகைய இணக்கத்தைக் கடவுளிடத்தும் நாம் வைக்கலாம். கடவுள் இராமனாகவும், கிருஷ்ணனாகவும் அவதரித்து வந்தார். அவதரித்து வந்த அவர்கள் பாலராமனாகவும், பாலகிருஷ்ணனாகவும் இருந்தபொழுது அவர்களைப் பராமரிக்கும் பேறு கோசாலைக்கும், யசோதைக்கும் கிட்டிற்று. தங்களுடைய செல்வர்கள் பரம்பொருள் என்பதை அவர்கள் அறியவில்லை. தங்கள் பராமரிப்பில் இருக்கும் குழந்தைகள் என்றே அவர்கள் உணர்ந்தார்கள். யசோதை கையில் கொஞ்சம் வெண்ணெயை எடுத்துக்கொண்டு பாலகிருஷ்ணனிடம் பரிந்து சென்றாள். அக்குழந்தை அதை அருந்தவேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தாள். தான் நன்கு கவனித்துக் கொள்ளாவிட்டால் அக்குழந்தையின் கதி என்னவாகும் என்று அவள் ஏக்கம் கொண்டிருந்தாள். இத்தகைய மனநிலையில் கடவுளே மானுடரால் காப்பாற்றப்படுபவர் ஆகின்றார். இத்தகைய இணக்கமும் கடவுள் பக்திக்கு மிகச் சிறந்தது ஆகிறது.

v) மதுர பாவனை:

இது நாயகன் நாயகி உணர்வு எனவும், தலைவன் தலைவி உணர்வு எனவும் பொருள்படுகிறது. கடவுளை வழிபடும் பக்தன் ஒருவன் தன்னை மனைவியின் நிலையில் வைத்துக்கொள்கின்றான். பின்பு கடவுளைக் கணவனது நிலையில் பக்தன் வைக்கின்றான். கற்புடைய மாது ஒருத்தி தன் கணவனுக்கு என்னென்ன பாங்குகளில் எல்லாம் பணிவிடை செய்கின்றாளோ அத்தகைய பாங்குகளையெல்லாம் பக்தனும் தன் தெய்வத்திடத்துக் காட்டுகின்றாள். வேலைக்காரி போன்று கணவனுக்குத் தொண்டு புரிதல், தோழி போன்று உரிமை பாராட்டுதல், தாய் போன்று பராமரித்தல் இத்தனைவிதமான உணர்வுகளெல்லாம் நாயகன் நாயகி இணக்கத்தில் அடங்கியிருக்கின்றன. ஸ்ரீமதி ராதை ஸ்ரீ கிருஷ்ணனிடம் அத்தகைய இணக்கம் கொண்டிருந்தாள். தன் உடல், பொருள், ஆவி எல்லாம் கிருஷ்ணனுடைய பணிவிடைக்கென்றே அவள் ஒப்படைத்து வைத்திருந்தாள். தான் கொண்டிருந்த பேரன்பில் கலந்துகொள்ளும்படி மற்ற கோபியர்களையும் அழைத்தாள். நாயகன், நாயகி உறவு போன்று மதுரபாவம் தென்படுகிறது என்றாலும் உலக இயல்போடு ஒட்டியதாக அது சுயநலம் படைத்ததன்று. மற்ற உயிர்களெல்லாம் அப்பேரன்பில் வந்து கலந்துகொள்ள வேண்டுமென்று அது கூவி அழைக்கின்றது.  தலைவன் தலைவி இணக்கத்தில் பக்தி உச்சநிலைக்கு வந்துவிடுகிறது. கடவுள் என்னும் தலைவனிடம் உயிர்கள் எனும் தலைவிகளையெல்லாம் கொண்டு சேர்க்கவல்லது ஆகின்றது அப்பேரன்பு.

 (தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s