V V S Iyer & Periya Swamiji Conversation

(இங்கு பதிவேற்றப்பட்டுள்ள சிறப்புக் கட்டுரை 2014ஆம் வருடம் கீழ்கண்ட முகவரியில் பதிவேற்றப்பட்டிருந்தது: https://www.facebook.com/SwamiChidbhavananda/photos/a.311689515572647.70928.279312812143651/831554646919462/?type=1 )

வ.வே.சு. ஐயர் – பெரிய சுவாமிஜி சம்பாஷணை

(03..06.2015 – தேச பக்தர் வ.வே.சு. ஐயர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புக் கட்டுரை)

VVS Iyer 5

சுவாமி சித்பவானந்தர் அவர்கள் பிரம்மச்சாரியாக திரையம்பக சைதன்யர் என்ற நாமத்துடன் பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் பயிற்சி பெற்று வந்த காலத்தில் தவமியற்றுவதற்காக தென்திசை நோக்கி பயணப்பட்டார். அப்போது அவருக்கு வயது 27. அந்த பயணத்தின்போது தேச பக்தர் வ.வே.சு. ஐயர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த சந்திப்பில் அவர்களுக்கிடையில் நடைபெற்ற உரையாடலை 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘வ.வே.சு. ஐயர் அவர்களின் நூற்றாண்டு விழா’வின் போது ஆற்றிய உரையில் இயம்பினார். அவ்வனுபவத்தை சுவாமிஜி சொல்ல கேட்பதே சாலச் சிறந்ததாகும். அதை அப்படியே கொடுத்துள்ளோம்.

1923ஆம் வருடத்திலே நான் சென்னையில் படிப்பை முடித்துவிட்டு பேலூர் சென்று பிரம்மச்சாரியாக ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலே சேர்ந்திருந்தேன். 1925ஆம் வருடம் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் கொஞ்சநாள் குற்றாலத்தில் தங்கியிருந்து தவம் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்னைக்கு வந்து, எழும்பூர் ஸ்டேஷனில் ரயில் ஏறி புறப்பட்டு, தென்பக்கம் வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது மகாலிங்க ஐயர் என்பவரை சந்திக்க நேர்ந்தது. அவர் சேரன்மகாதேவி பரத்வாஜ ஆஸ்ரமத்தின் நிதி வசூலுக்காகச் சென்னை வந்தவர் – தமது பணியை முடித்துக்கொண்டு தெற்கே அதே ரயிலில் வந்து கொண்டிருந்தார். நாங்கள் ஒரே வண்டியில் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்த போது பேச்சு நடந்தது. சேரன்மகாதேவியில் இப்படி ஆச்ரமம் ஒன்று இருக்கிறது. அதை போய்ப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று என்னை வேண்டினார்.

ஆனால் அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை. தட்டிக் கழிக்கவும் விருப்பமில்லை. அங்கு இறங்கிப் பார்த்துவிட்டு சில மணி நேரத்தில் அடுத்த வண்டியில் குற்றாலம் போகலாம் என்ற எண்ணத்தோடு ஒத்துக் கொண்டேன்.

சேரன்மகாதேவியில் காலையில் வந்து சேர்ந்தோம். ஆச்ரமத்திற்கு போனோம். முதல்முதலாக வ.வே.சு. ஐயரை அங்கு நான் சந்தித்தேன். அவரைப் பார்த்த போது ஒரு ரிஷியினுடைய பொலிவு அவரிடத்தில் தென்பட்டது. சாந்தம் மிளிர்ந்து கொண்டிருந்தது. இவர் சாமான்யமான மூர்த்தியல்ல என்று என் மனதில் பட்டது. சில மணிக்கணக்கில் திரும்ப வேண்டும் என்று எண்ணிய நான் மூன்று நாட்கள் அவருடன் தங்கியிருந்தேன்.

காலையில் ஒருதடவை, மாலையில் ஒரு தடவை உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

எங்களுக்கிடையில் நடந்த சம்பாஷணை:

வ.வே.சு. ஐயர்: நாட்டு சேவைக்காக ராமகிருஷ்ண மடத்தில் நீங்கள் என்ன பண்ணுகிறீர்கள்?

நான்: பாரமார்த்திகப் பெரு வாழ்வு வாழ்வதே நாட்டு சேவை

வ.வே.சு. ஐயர்: அது எப்படி நாட்டுச் சேவை ஆகும்?

நான்: நம்முடைய மனதைத் திருத்தி அமைக்க அமைக்க அதனால் வருகின்ற அருள் நிலை மற்றவர்களைத் திருத்தி அமைக்கிறது. அதற்கு நிகரான சேவை வேறு ஒன்றுமில்லை.

(அத்தருணத்தில் அவர் Rebel ஆகி எதிரிகளைக் கொன்று ராஜ்யத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர் – மகாத்மா காந்தியினுடியய எண்ணத்திற்கு மாறியமைகின்ற Transition Periodல் இருந்தார். அதற்கிடையில் பாரமார்த்திக வாழ்வு எந்த விதத்தில் நாட்டுக்குப் பயன்படும் என்பதை அறிந்துகொள்ள அவா உடையவராக இருந்தார்.

வ.வே.சு. ஐயர்: நீங்கள் தியானம் மட்டும் பண்ணிக் கொண்டிருந்தால் போதுமா? மக்களோடு தொடர்பு வைக்க வேண்டாமா? அவர்களுக்குப் பணிவிடை பண்ண வேண்டாமா?

நான்: மக்களோடு தொடர்பு கொள்கிறோம். அவர்களுக்குப் பணிவிடையும் செய்கின்றோம்.

வ.வே.சு. ஐயர்: எந்த விதத்தில்?

நான்: கொள்ளை நோய், காலரா, பிளேக் வந்துவிட்டால் துறவிகளாகிய நாங்கள் ஆங்கு சென்று பணிவிடைப் பண்ணி அவர்களுக்குத் தக்க சிகிச்சை முறைகளைக் கையாளுகின்றோம். வெள்ளம், புயல் வந்தால் ஆங்கு சென்று அவர்களுக்குத் தக்க வசதிகளைச் செய்து தருகின்றோம். இப்படி பௌதீகத்தின் விளைவாக தெய்வாதீனமாக வருகின்ற கஷ்டங்களை எல்லாம் பகவானுடைய சேவையாகக் கருதிப் பணிவிடை பண்ணுகின்றோம். இது ஒரு போக்கில் நடக்கின்றது.

பிறகு மக்களுக்கிடையிலே, மனப்பான்மையை மாற்றியமைக்கிற பாங்கிலே வாழ்க்கையினுடைய மேலான பகுதியைக் குருட்டு நம்பிக்கை இல்லாத பாங்கிலே அவர்கள் வாழ்க்கையைத் திருத்தி அமைப்பதற்கான வழிகளைச் சாஸ்திர ஆராய்ச்சியின் வாயிலாக விளக்குகின்றோம்

வ.வே.சு. ஐயர்: நாடு புற ஆட்சியில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடுகிறதே… அதற்குச் சேவை ஒன்றும் நீங்கள் செய்ய வேண்டாமா? வெறும் ஆன்மிகத் துறையில் மட்டும் சென்றால் போதுமா?

நான்: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வாழ்ந்திருந்தார். அவருடைய வாழ்வு அலாதியான போக்கு. நாடு முழுதும் ஆங்கில அரசாட்சியில் அடிமைப்பட்டிருந்தபொழுது பரமஹம்ஸருடைய மனதில் அந்த எண்ணம் வரக் கிடையாது. வாயில் அந்த சொல் வந்தது கிடையாது. திரிகரணங்களில் அவர் ஆங்கில அரசாட்சிக்கு அடிமைப்பட்டவரல்ல. அன்னை பராசக்தியின் செல்வராக அவர் வாழ்ந்து வந்தார். முப்பத்து முக்கோடி மக்கள் ஆங்கில அரசாட்சிக்கு அடிமையாய் இருந்தபொழுது ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அன்னை பராசக்தியினுடைய குழந்தையாகத் தன்னை உணர்ந்தார். எந்த அரசனுக்கோ, அரசாட்சிக்கோ தான் அடிமைப்பட்டவன் என்ற எண்ணமே கிடையாது. அத்தகைய எண்ணம் ஆயிரக்கணக்கான பேர் ஸ்தூலமாகப் போராடுவதைவிட சக்தி வாய்ந்தது.

ஐயர் அவர்களுடைய ஜீவிதத்திலே மேல் நாடு சென்றதன் விளைவாக மேனாட்டு முறைப் பிரகாரம் எதிரிகளைக் கொன்று புரட்சிகரமான போக்கில் இராஜ்ஜியத்தைப் பெற வேண்டும் என்று எண்ணினார். மகாத்மா காந்தியைச் சந்தித்ததன் விளைவாக மனது மாறியமைந்தது. சாத்விகமான போக்கில் எதிரிகளைத் திருத்த வேண்டும் என்பது மகாத்மாவினுடைய திட்டம். ஆன்மிகத் துறையில் போகின்றவர்கள் புறத்திலோ, அகத்திலோ எதிரிகளை அங்கீகரிப்பதில்லை. தங்களை தெய்வத்திற்குரிய குழந்தைகளாகக் கருதக் கருத அந்த தபோபலன் அதைவிடப் பன்மடங்கு மேலானதாக மாறியமைகிறது. இந்த மூன்று கோட்பாடுகளையும் ஐயர் அவர்கள் ஆழ்ந்து எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மூலம்:
2014 ஜூலை மாத “தர்ம சக்கரம்” இதழ்
(ஜய வருடம் ஆடி மாதம் சக்கரம் 63 ஆரம் 7)
தலைப்பு: ஆரா அமிழ்து.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s