V V S Iyer Remembrance Day Article – 2014/Part 1

(இங்கு பதிவேற்றப்பட்டுள்ள சிறப்புக் கட்டுரை 2014ஆம் வருடம் கீழ்கண்ட முகவரியில் பதிவேற்றப்பட்டிருந்தது:

ஜூன் 4: –

ஸ்ரீமான் வ.வே.சு. ஐயர் நினைவு தின சிறப்புப் பகிர்வு – 1

VVS Iyer 1

ஸ்ரீமான் வ.வே. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் 1881ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் நாள் திருச்சி நகரிலுள்ள வரகனேரியில் பிறந்தார். வேங்கடேச ஐயர் இவரது தந்தை. சின்னாளப்பட்டி காமாட்சி அம்மாள் இவரது தாய். இவரே முதல் குழந்தை. தாய் தந்தையர் இவருக்கு சுப்பிரமணியன் என்று பெயரிட்டனர். பிற்காலத்தில் தம் பெயரை வ.வே.சு. ஐயர் என்று சுருக்கமாக இவர் ஆக்கிக்கொண்டார். தம்முடைய 12ஆம் வயதில் மாகாணத்திலேயே முதலிடம் பெற்று மெட்ரிகுலேஷன் தேர்வில் தேறினார். மாகாணத்தில் முதலாகத் தேறிய அவ்வாண்டிலேயே மாமன் மகள் பாக்கியலட்சுமியை மணந்தார். 16ஆம் வயதில் பி.ஏ.யும், 1901ல் சட்டப் பரீட்சையும் தேறி, 19ஆம் வயதில் வழக்கறிஞர் ஆனார். ஐந்து ஆண்டுகள் திருச்சிராப்பள்ளியிலும், ஓராண்டு ரங்கூனிலும் வக்கீல் தொழில் நடத்தினார்.1907ல் தம் 26ஆம் வயதில் பாரிஸ்டராவதற்காக இவர் லண்டன் சென்றார். ஐயர் பள்ளியிலேயே லத்தீனை இரண்டாம் மொழியாகக் கற்றதோடு பி.ஏ. வகுப்பில் அம்மொழியில் முதன்மை பெற்றிருந்தது இப்போது பெரிதும் உதவியது.

லண்டனில் சில மாதங்களுக்குள் தீவிர புரட்சிக்காரராக இவர் மாறினார். அங்கு இவர் விநாயக சாவர்க்கர் தலைவராயிருந்த ‘அபிநவ பாரத’ சங்கத்தின் துணைத் தலைவரானார். பாரிஸ்டர் தேர்விலும் சிறப்புற்று விளங்கினார். ஆனால் பட்டமளிப்பு விழாவின்பொழுது இங்கிலாந்து அரசனுக்கு ராஜவிசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்ள இவர் மறுத்துவிட்டார். அதன் விளையாக இவரை ஒரு ராஜத்துரோகியாக அதிகார வர்க்கம் கருதியது. இவரைப் பிடித்துக் கைது பண்ண அரசாங்கம் ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தது. இதை அறியவந்த ஐயர் அவர்கள் அதிகாரவர்க்கத்தின் கையில் அகப்படாது மாறுவேடம் பூண்டு பாரீஸ் நகருக்குச் சென்றார். அங்கிருந்து பார்சிக்காரர் வேஷம் பூண்டு ரோமாபுரிக்குப் போனார். அந்நகரினின்று இஸ்லாமியப் பக்கிரி வேஷம் பூண்டுகொண்டு கய்ரோவுக்குச் சென்றார். பின்னர் மெக்கா, மதினாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய ஹஜ் யாத்திரிகர்களுடன் இவர் பம்பாய் வந்து சேர்ந்தார். அதே மாறுவேஷத்தில் அங்கிருந்து இவர் கொழும்புக்குக் கப்பலில் சென்றார். கொழும்பிலிருந்து கல்கத்தா போகும் கப்பலில் பயணம் செய்து நாகப்பட்டினம் அடைந்தார். அங்கிருந்து புதுச்சேரி வந்து சேர்ந்தவுடன் இவர் பழையபடி வ.வே.சு. ஐயர் ஆனார். ஆங்கில அதிகாரவர்க்கம் இவரைப் பிடிக்க எடுத்துக்கொண்ட தீவிர முயற்சி பயன்படாது போயிற்று. பிரஞ்சு அதிகாரத்திலிருந்த புதுச்சேரிக்கு வந்தான பிறகு தாம் இருக்குமிடத்தை ஆங்கில அதிகாரவர்க்கத்துக்கு இவர் தாமே தெரிவித்தனர்.

புதுச்சேரியில் ஓயாத இடுக்கண்களுக்கிடையில் நாட்டின் விடுதலைக்காக புரட்சி இயக்கம் நடத்த வந்ததுடன் இலக்கியத் துறையிலும் பணிபுரிந்தார். இவர் ஆங்கிலத்தில் திருக்குறளையும், குறுந்தொகையையும் மொழி பெயர்த்தார். ஆங்கில அதிகாரத்துக்கு உதவிபுரியும் பாங்கில் பாண்டிச்சேரியில் இருந்த பிரஞ்சு அதிகாரம், பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு எதிரிகளாகத் தங்களூரில் வசித்து வந்தவர்களை ஆப்பிரிக்காவில் அல்ஜீரியா பிரதேசத்துக்கு நாடு கடத்தலாம் என்று எண்ணினார்கள். அந்த நெருக்கடியில் ஐயர் அவர்கள் அவசர அவசரமாகத் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மேலும் கரிபால்டி, நெப்போலியன், சந்திரகுப்த சக்கரவர்த்தி, புக்கர் வாஷிங்டன் முதலியோர் வரலாற்றை எழுதினார். அமெரிக்க அறிஞர் எமர்சன் எழுதிய தன்னம்பிக்கை என்னும் நூலைத் தமிழ்ப்படுத்தினார். மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகளை எழுதி வெளியிட்டார். கம்பராமாயணம், பாலகாண்டத்தில் சில செய்யுட்களை நீக்கிவிட்டுப் பாலகாண்டசுருக்கம் என்று பெயரிட்டு அதனைப் பதம்பிரித்து வெளியிட்டார். நெப்போலியன் போர்முறைகளையும், பாரத நாட்டுப் போர் நூலில் விளக்கப்பட்டிருக்கும் வியூகங்களையும் பிணைத்து, ஆயுதப் புரட்சியை எதிர்நோக்கி அணிவகுப்பு நூல் ஒன்றும் எழுதினார்.

1920ல் இந்திய அரசாங்கம் அரசியல் குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்புத் தரவே ஐயர் புதுச்சேரியைவிட்டு வெளிப்போந்து, சென்னையில் 1920 ஜூலையில் ‘தேசபக்தன்’ என்னும் தமிழ் தினசரியின் ஆசிரியரானார். ஒன்பது திங்களுக்குப் பின் வேறொருவர் எழுதிய தலையங்கத்துக்காக ராஜதுவேஷக் குற்றம் சாட்டப்பட்டு இவர் சிறையிடப்பட்டார். கம்பன் கவிதையானது உலக மகா காவியங்களிலெல்லாம் மேம்பட்டது என்று நிறுவ ஆங்கிலத்தில் மிகச்சிறந்த ஆராய்ச்சி நூல் ஒன்றைத் தாம் சிறையிலிருந்த ஒன்பது மாத காலத்தில் இவர் எழுதிப் பூர்த்தி பண்ணினார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி என்னும் ஊரில் 1923ல் தமிழ்க் குருகுலம் ஏற்படுத்தி மாணவர்களுக்குக் குருகுலக் கல்வி புகட்டினார். குருகோவிந்த சிங்கின் சரிதம், தன்னம்பிக்கை முதலிய நூல்களை எழுதியதுடன் ‘பாலபாரதி’ என்ற சிறந்த தமிழ் மாத சஞ்சிகையையும் வெளியிட்டார். அதில் கம்பராமாயணம் என்ற தலைப்பில் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்.

1925ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி (‘திருக்குறள்’ புத்தகத்தில் உள்ளபடி) தமது 44ஆம் வயதில் குருகுல மாணவர்களை அழைத்துக்கொண்டு பாபநாசத்திற்கு உல்லாசப் பயணம் போனார். அங்கே கல்யாண தீர்த்தத்தில் விபத்திலே சிக்கிய தம் செல்வி சுபத்திரையை விடுவித்தல் பொருட்டு இவரும் நதிக்குள் குதித்தார். விதிவசத்தால் தந்தையும் செல்வியும் காலகதி அடைந்தார்கள். இவர் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

[‘திருக்குறள்’ செய்யுள்களுக்கு திரு. வ.வே.சு ஐயர் அவர்கள் ஆங்கில விளக்கம் எழுதியிருக்கிறார். ‘திருக்குறள்’ நூலில் இடம்பெற்றிருக்கும் வ.வே.சு ஐயர் பற்றிய வரலாற்றை மேலே கொடுத்திருக்கிறோம். இப்புத்தகம் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை பிரசுரித்துள்ளது. படித்துப் பயன்பெறவும்.]

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s