Question & Answer – 15

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 15: ஜீவாத்மா, பரமாத்மா இணக்கம் என்ன பாங்கில் அமைந்துள்ளது?

பதில்: பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து அதன் நடைமுறையை முறையாகச் சாதித்து வருபவன் பரம்பொருள் அல்லது ஈசுவரன். உலகுக்கு அதிபதியாயிருப்பவன் ஈசன். இதே உலகில் கட்டுண்டு கிடப்பவன் ஜீவாத்மா. உலகில் கட்டுண்டு கிடந்தாலும் ஈசன் அல்லது பரமாத்மனுக்குப் புறம்பானவன் அல்லன் ஜீவாத்மா. ஈசனைக் கடலோடு ஒப்பிட்டால் ஜீவாத்மாக்கள் அக்கடலில் தோன்றும் அலைகளுக்கு நிகர் ஆவார்கள். மரம், செடி, கொடிகள் ஆகிய ஸ்தாவரங்களும், புழு, பூச்சி, பறவை, விலங்கு, மக்கள் ஆகிய ஜங்கமங்களும் ஜீவாத்மாக்களேயாம். எண்ணிறந்த வடிவங்களிலிருக்கும் ஜீவாத்மாக்களனைத்தும் இயற்கையில் கட்டுண்டு இருக்கின்றன. அப்படி கட்டுண்டு இருப்பதற்கிடையிலும் ஈசனையே அவையாவும் சார்ந்திருக்கின்றன. அலைகள் கடலைச் சார்ந்திருப்பதற்கு நிகர் உயிர் வகைகள் ஈசனைச் சார்ந்திருப்பது.

ஜீவாத்மாவின் யதார்த்தநிலை பரமாத்மாவுக்குரிய ஸத் சித் ஆனந்த சொரூபமாம். யாண்டும் அழிவற்றிருப்பது ஸத். தன் சொரூபத்தைத் தானே அறிவது பேரறிவு அல்லது சித். தன்னில் தான் திருப்தியடைந்திருப்பது ஆனந்தம். இத்தகைய ஸத் சித் ஆனந்தம் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் பொது. ஆனால் அறியாமையினால் ஜீவாத்மன் சச்சிதானந்தத்தைப் புறவுலகமாகிய பிரபஞ்சத்தில் தேடித் திரிகிறான். பிறவிகள் பல எடுத்துத் தன் முயற்சியில் தோல்வியடைந்த பிறகு சச்சிதானந்த சொரூபம் புறத்தில் இல்லை; அகத்தில் இருக்கிறது என்பதை ஜீவாத்மன் அறிய வருகிறான். அந்த அறிவு உறுதி பெறுவதற்கேற்பப் புறவுலகப் பற்று குறைகிறது. பரமனுடைய சொரூபத்தை ஜீவாத்மன் தன் அகத்தில் நாடுகிறான். அந்த நாட்டத்திற்கு அருள்தாகம் என்று பெயர். அருள்தாகம் ஓங்குதற்கேற்பவும் ஜீவாத்மன் ஆத்ம பரிபாகம் அடைகிறான்.

“அற்றது பற்று எனில் உற்றது வீடு” என்பது கோட்பாடாகும். பல பிறவிகளில் தன்னுடைய பிரபஞ்ச வாழ்வைப் பலப்படுத்துதல் பொருட்டு ஜீவாத்மன் அதில் பற்று வைத்திருந்தான். இப்பொழுது பரமனிடத்துப் பற்றுதல் ஓங்குதற்கேற்ப அவன் புரிகின்ற செயல்களனைத்தும் பரமாத்மாவின் பெருமையின் பொருட்டேயாம். அத்தகைய முயற்சி கர்மயோகம் என்னும் பெயர் பெறுகிறது. ஜீவாத்மனுடைய பரம்பொருல் நாட்டம் ஓங்குதற்கேற்ப ஐம்பொறிகளின் வேகமும் தானாகவே தணிகிறது. பொறிவாயில் ஐந்தையும் அவன் அறவே அடக்கியாண்டு வருகிறான். அத்தகைய முயற்சி ராஜயோகம் என்னும் பெயர் பெறுகிறது. ஜீவாத்மன் தன் மீது வைத்திருந்த பற்றுதலும், உலகத்தின் மீது வைத்திருந்த பற்றுதலும் தெய்வப்பற்றாகத் திருந்தியமைகிறது. பரமனிடத்து வைத்திருக்கின்ற பேரன்பு பக்தியோகம் என்னும் பெயர் பெறுகிறது. கடைசியாக ஜீவனும், ஜகத்தும் பரமனுடைய தோற்றங்களாய் இருப்பதால் தன்னையும், ஜகத்தையும் ஈசன் மயமாகவே ஆத்மசாதகன் கண்டு பழகுகிறான். அத்தகைய பயிற்சி ஞானயோகம் என்னும் பெயர் பெறுகிறது. இங்ஙனம் இந்த நான்குவித யோகங்களையும் முறையாகக் கையாண்டு ஜீவாத்மன் பிரபஞ்ச வாழ்க்கையினின்று விடுபட்டுப் பரத்தில் ஒன்றுபடுகிறான். அப்படி ஒன்றுபடுவது கடலில் தோன்றிய அலை கடலிலே மீண்டும் ஒடுங்குவதற்கு ஒப்பானதாகும். ஜீவாத்மன் பரத்தில் ஒன்றுபட முயல்வது சாதனையாகும். சாதனையின் மூலம் தன்னைப் பரசொரூபமாகத் திருத்தியமைத்து இறுதியில் ஜீவாத்மன் பரத்தில் ஒன்றுபட்டு முக்தியடைகிறான்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s