Monthly Archives: July 2016

Question & Answer – 21

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 21: தங்களது தினசரி தியானம் என்னும் நூலின் முதல் பக்கத்தில் அடங்கியுள்ள விஷயத்தில் எனக்கு ஐயம் ஒன்று உண்டாகிறது. வாழ்வை இனியதாக்குவது அன்பு. குடும்ப வாழ்வை மேன்மைப்படுத்துவது அன்பு. உலக வாழ்க்கையைச் சுவைக்கச் செய்வது அன்பு. அழகற்றதற்கு அழகூட்டுவது அன்பு. இதெல்லாம் எனக்கு விளங்குகிறது. கஷ்டங்களையெல்லாம் மீளச் செய்வது அன்பு. இது எனக்கு விளங்கவில்லை. கருணை கூர்ந்து இதை விளக்க வேண்டுகிறேன்.

பதில்: மாணாக்கன் ஒருவன் தனது அறிவை வளர்ப்பதில் ஊக்கம் மிக வைக்க வேண்டும். அந்த ஊக்கத்தை அன்பு என்று இயம்புவது பிழையாகாது. கணக்குப் போடுதலிலும் பாடம் படிப்பதிலும் கஷ்டம் மிக உண்டு. ஆனால் அறிவுத்துறையில் அன்பு வளர்வதற்கு ஏற்பக் கஷ்டத்தைப் பொருள்படுத்தாது கணக்கைத் திரும்பத் திரும்பப் போடவும் விளங்காத பாடத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கவும் மாணாக்கன் ஒருவன் முந்துகிறான். கல்வியில் அவனுக்கு அன்பு அதிகரிக்குமளவு, கற்பதில் உண்டாகிற கஷ்டத்தை அவன் பொருள்படுத்துவதில்லை.

ஏழைத் தந்தையொருவன் தன் மைந்தனைக் கற்றவன் ஆக்கத் தீர்மானிக்கிறான். மைந்தனுடைய கல்விக்காகவென்று செலவழிப்பதற்குப் போதிய செல்வம் அவனிடம் இல்லை. ஆனால் அதற்கு வேண்டிய செல்வத்தை ஈட்டுதற்பொருட்டுப் புதிய உத்தியோகம் ஏதாவது ஒன்றை அவன் எடுத்துக் கொள்கிறான். அந்த உத்தியோகத்தைச் செய்வதற்குப் போதிய அளவு அவகாசம் இல்லை; ஆற்றலும் இல்லை. ஆதலால் அது கஷ்டம் நிறைந்ததாய் இருக்கிறது. ஆனால் மகன் மீது வைத்துள்ள அன்பை முன்னிட்டுக் கஷ்டத்தை அம்மனிதன் பொருள்படுத்துவதில்லை. மைந்தன் நன்கு கல்வி பயின்று சிறந்த முன்னேற்றம் அடைந்து வருகிறான். அதைப் பார்க்கிற தந்தைக்கு மகன் மீது அன்பு அதிகரிக்கிறது. அந்த அன்பின் வேகத்தால் தனக்கு உண்டாகிற கஷ்டங்களையெல்லாம் பொருள்படுத்தாது பாடுபட்டுப் பொருளைச் சம்பாதிக்கிறான். அன்பின் வேகத்துக்கு ஏற்பக் கஷ்டத்தின் கொடுமை அம்மனிதனது உள்ளத்தில் புகுவதில்லை. இதற்குச் சான்றாக இராமாயணத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம்.

சீதாபிராட்டியின் மீது ஸ்ரீராமன் வைத்த அன்பு தெய்வீக அன்பு ஆகும். வனவாசம் செய்து கொண்டிருந்தபொழுது தனது பேரன்புக்குரிய சீதையை இழக்கும்படி இராமனுக்கு ஏற்பட்டது. காணாமற்போன சீதையைக் கண்டுபிடிப்பதற்கும், மீட்டெடுப்பதற்கும் இராமன் பட்ட கஷ்டம் இவ்வளவு அவ்வளவல்ல. இராமன் மீது அன்பு வைத்திருந்த சுக்ரீவன் முதலாயினோர் பட்ட கஷ்டமும் அளப்பரியதாகும். அப்படிக் கஷ்டப்பட்டவர்களுள் யாருக்குமே தனது கஷ்டத்தை முன்னிட்டு மனத்தளர்ச்சி உண்டாகவில்லை. பட்ட கஷ்டமெல்லாம் ஒரு பொழுதும் கஷ்டமாக மனதில் தோன்றவில்லை. அன்புதான் அதற்கெல்லாம் காரணமாயிற்று. எல்லாருடைய வாழ்விலும் ஏதேனும் ஒரு விதத்தில் கஷ்டம் வந்து வாய்க்கிறது. ஆனால் உயிர் வாழ்ந்திருப்பவர்கள் வாழ்க்கையில் கொண்டுள்ள லட்சியத்தில் அன்பை வளர்ப்பதற்கு ஏற்ப அவர்கள் படுகிற கஷ்டங்களெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோன்று மறைந்துபட்டுப் போகின்றன. ஆக, அன்பு ஒன்றுதான் மாந்தர் படுகின்ற கஷ்டங்களையெல்லாம் பொருள்படுத்தாதிருக்கச் செய்கிறது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Sri Paramahamsarin Apta Mozi – 97

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 97

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 96: https://swamichidbhavananda.wordpress.com/2016/07/21/sri-paramahamsarin-apta-mozi-96/)

வறுமைக்குப் பக்தன் அஞ்சுவதில்லை

கிருஷ்ணகிசோரைப் பற்றிய மற்றொரு சம்பவத்தைப் பரமஹம்ஸர் இங்ஙனம் பகர்ந்தார்: “கிருஷ்ணகிசோரைச் சந்திக்க ஒரு தடவை நான் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நான் அவரைப் பார்த்தபொழுது அவர் ஏதோ வியாகூலத்தில் மூழ்கியிருந்தது போன்று தென்பட்டது. ‘ஏன் மனவாட்டமுற்று இருக்கின்றீர்கள்?’ என்று நான் அவரைக் கேட்டேன். அதற்கு அவரிடமிருந்து விடை வந்தது. ‘வீட்டுவரி வசூல் பண்ணுகின்றவன் இன்று காலையில் வந்தான். இன்னும் இரு தினங்களில் வரி செலுத்தாவிட்டால் என்னிடம் இருக்கும் பித்தளைப் பாத்திரம், தட்டு முதலியவைகளை வரிக்கு ஈடாக எடுத்துச் சென்றுவிடுவேன் என்று பயமுறுத்திச் சென்றான். அதைக் குறித்து நான் சிறிது வியாகூலமடைந்தவனாக இருக்கிறேன்’ என்றார்.

அதைக் கேட்டதும் நான் அவருக்கு உற்சாகமூட்டினேன்: ‘நீங்கள் ஏன் அதைக் குறித்துக் கவலைப் படுகிறீர்கள். வீட்டில் சில பாத்திரங்கள் இருக்கின்றன. வேண்டுமானால் அப்பாத்திரங்களையெல்லாம் அவன் தூக்கிக்கொண்டு போகட்டும். வீட்டையே வேண்டுமென்றாலும் அவன் ஜப்தி செய்து கொள்ளட்டும். அல்லது உங்கள் உடலத்தையே அவன் கைதுசெய்து கொள்ளட்டும். அதனால் உங்களுக்கு வரும் குறை என்ன? நீங்கள், சிதாகாசம் உங்களுடைய நிஜ சொரூபம் என்று சொல்லுகின்றீர்களே! எங்கும் பரந்துள்ள இந்த ஆகாசத்தை யார் எங்கிருந்து எங்கே தூக்கிச் செல்ல முடியும்?’ புன்னகை பூத்தவனாக நான் இங்ஙனம் பகர்ந்தபொழுது அவரும் தமது வியாகூலத்தை அக்கணமே ஒதுக்கிவிட்டார். போலி பக்தன் ஒருவனுக்குத் துன்பம் வரும்பொழுது அவன் பக்தி பறந்தோடிவிடுகிறது. உண்மையான பக்தன் விஷயம் அத்தகையதன்று, துன்பத்தில் அவன் பக்தி அதிகரிக்கிறது. கிருஷ்ணகிசோர் ஓர் உண்மையான பக்தர்.

மனம் என்னும் கண்ணாடி

அன்பர்கள் பலர் பரமஹம்ஸருடைய அறையில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அன்னவர்களுக்கு அவர் இயம்பிய மேலாம் கருத்துக்கள் பலவற்றினுள் இவைகளும் வருவனவாயின:

“நான் ஆத்ம சாதனையிலிருந்தபொழுது எனக்கு ஒருவிதமான மனநிலை ஏற்பட்டிருந்தது. கண்ணுக்குத் தென்படுபவர் ஒவ்வொருவருடைய மன அமைப்பும் உள்ளபடி எனக்கு விளங்கிவிடும். கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருக்கும் வஸ்துக்களை நாம் காண்பது போன்று மனத்தகத்திருக்கும் கருத்துக்களும், இயல்புகளும் அப்பொழுது எனக்கு விளங்கிவிடும். அவைகளை நான் தங்குதடையின்றி எடுத்துப் பேசுவதுண்டு. சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து வகித்திருந்தவர்கள் விஷயத்தில் பலவாறாகப் பேசலாகாது என்று பொதுப்பட மக்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அந்த மனநிலையில் எனக்குப் பெரியவர் என்றும், சிறியவர் என்றும் வேற்றுமை தென்படவில்லை. என்றும் எதிரில் வருபவர் யாராயிருந்தாலும் அவர்களுடைய மனப்போக்கை நான் அப்படியே எடுத்துப் பகர்ந்துவிடுவதுண்டு. அவர்களுடைய தாட்சண்யத்தைப் பற்றியோ, செல்வாக்கைப் பற்றியோ நான் சிறிதும் சிந்திப்பது கிடையாது.”

(தொடரும்…)