Life History of Swami Vivekananda-Part 5

இலங்கை:

கொழும்புவில் எடுக்கப்பட்ட புகைப்படம்

1897ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் நாள் சுவாமிகள் ஊர்ந்து வந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நுழைந்தது. வரவேற்புக் கழகத்தார் சுவாமிகளுக்கு மாலை சூட்டி, பாத பூஜை செய்து, இரட்டைக் குதிரை பூட்டிய விமானமொன்றில் அமரவைத்து ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். சுவாமிகளை தரிசிக்க ஆயிரக்கணக்கானோர் வீதியின் இருபுறங்களிலும் நின்றுகொண்டிருந்தனர். பிறகு விடுதியை வந்தடைந்து ஆசனமொன்றில் வீற்றிருக்கச் செய்து ஊரார் அனைவரும் வரவேற்புப் பத்திரங்களை வாசித்தனர்.

கண்டியிலும், யாழ்ப்பாணத்திலும் அவரை எதிர்கொண்டு அழைத்தனர். வீதிதோறும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பக்தியும், விசுவாசமும் பொதிந்துள்ளதுதான் மெய்யான மத அனுஷ்டானம் என்னும் கருத்தடங்கிய உபந்நியாசங்கள் சிலவற்றை நிகழ்த்தினார். மக்களை வாழ்த்திவிட்டு, விடைபெற்று இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

ராமநாதபுரம்:

Ramnadapuram Palace Old

ராமநாதபுரம் அரண்மனை

பாம்பனில் சுவாமிகளது நல்வரவை ராமநாதபுரம் சம்ஸ்தானமும், மகாராஜா பாஸ்கர சேதுபதியும் பேராவலுடன் எதிர்பார்த்திருந்தது. வெளிநாடுகளில் வேதாந்தக் கொடியேற்றிய விவேகானந்தர் தாய் நாட்டிலே திருவடிகளை நாட்டியபோது அதிர்வேட்டுகள் ஆகாயத்தைப் பிளந்தன; ஜய பேரிகைகள் முழங்கின.

ராமேஸ்வரம் கோயிலில் இவரைக் காணச் சூழ்ந்திருந்த ஜனங்களுக்கு மெய்யான சிவபூஜையைப் பற்றிய உபந்நியாசம் நிகழ்த்தினார். விக்கிரகத்தைக் கடவுளாக பாராட்டுவது போல துக்கவேடமும், தரித்திர வேடமும் தாங்கியிருக்கும் மக்களையும் கடவுள் சொரூபமாக  வணங்கவேண்டும் என்பது அதன் அடிப்படையான கருத்து.

பிறகு இராமநாதபுரம் அரண்மனைக்கு ராஜரீதியுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவரை ரதத்தில் இருத்தி மக்களும், அரசனும் வடம் பிடித்து இழுத்து வலம் வந்தனர். ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வாழ்த்துக்கள் வாசிக்கப்பட்டன. ஆங்கு கூடியிருந்தவர்களுக்கு உபந்நியாசம் ஒன்று செய்தருளினார்.

மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம்:

சென்னையை நோக்கி வடதிசையாக அவருடைய திருக்கூட்டம் புறப்பட்டது. மதுரையில் சுவாமிகள் மூன்று நாள் தங்கியிருந்தார். அப்பொழுது பக்தி விசுவாசத்துடன் வணங்க வந்தவர்களைக் கணக்கிடுவது இயலாத காரியமாயிற்று. பிறகு ரயில் மார்க்கமாக கும்பகோணம் புறப்பட்டார். திருச்சி, தஞ்சை முதலிய இடங்களில் வரவேற்புப் பத்திரங்கள் ஸ்டேஷனிலேயே வாசித்து அளிக்கப்பட்டன. கும்பகோணத்தில் மட்டும் சிரம பரிகாரம் செய்துகொள்ளுதற்காக சுவாமிகள் 3 நாள் தங்கியிருந்தார். அப்போது, ‘வேதாந்தத்தின் போதனை’ என்னும் விஷயத்தைப் பற்றி அரிய உபந்நியாசம் செய்தார். பிறகு சென்னை நோக்கி புறப்பட்டார்.

சென்னை:

சுவாமிகள் எழுந்தருளவிருந்த நன்னாளன்று அதிகாலையிலிருந்தே பெரும் ஜனத்திரள் எழும்பூர் ஸ்டேஷனை நோக்கிச் சென்றது. 1897ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் நாள் காலையில் ரயில் வண்டி ஸ்டேஷனில் நுழைந்ததும் இடியிடித்தாற்போல் மக்களது ஆரவாரச் சத்தம் ஒலித்தது. வண்டியிலிருந்து சுவாமிகள் இறங்கியதும் திருநாம கோஷம் கொட்டகையைத் தூக்கிற்று; பூமாரி பொழிந்தது. மக்கள் சார்பாக நீதிபதி சுப்பிரமணிய ஐயர் மாலை சூட்டினார். ஊர்வலம் துவங்கியது. சுவாமிஜி சென்ற குதிரை வண்டியிலிருந்து குதிரைகளை அவிழ்த்துவிட்டு இளைஞர்களே அதனை இழுத்தனர். மெல்ல நகர்ந்து சென்ற ஊர்வலம் திருவல்லிக்கேணியில் கடலோரம் இருக்கும் ‘காசில் கர்னன்’(Castle Kernan) அல்லது ஐஸ் ஹவுஸ் மாளிகைக்கு(தற்போது விவேகானந்தர் இல்லம்) போய் சேர்ந்தது. அங்குதான் சுவாமிகளுக்கு விடுதி ஏற்பாடாகி இருந்தது.

800px-Vivekanandar_Illam

Castle Kernan (தற்போது விவேகானந்தர் இல்லம்)

பத்திரிக்கைகள் அவரது விஷயத்தை விரிவாக வர்ணித்து எழுதலாயின. The Hindu பத்திரிக்கை வர்ணித்ததாவது: “இத்தகைய வரவேற்பு இதுவரை யாருக்குமே கிடைத்ததில்லை. நவீன ஆச்சாரியரான ஸ்ரீமத் சுவாமி விவேகானந்தருக்கு அளிக்கப்பட்ட்து போன்ற வரவேற்பும், மக்களின் அன்பும் மரியாதையும் வேறு எந்த அரசனாவது, ராஜபிரதிநிதியாவது இந்தியாவில் எப்போதும் பெற்றது கிடையாது.” சாமானிய மனிதன் ஒருவனைத் தலைபுரளப் பண்ணிவிடுவதற்கு இந்த ஆரவாரங்களில் ஒரு சிறு பகுதியே போதுமானது.

Victoria Hall

சென்னையில் சுவாமிகள் உபந்நியாசம் நிகழ்த்திய விக்டோரியா ஹால்

சென்னையில் அவர் வசித்திருந்தது 9 நாட்கள். சென்னையில் சுவாமிகள் நிகழ்த்தின உபந்நியாசங்கள் 5. அல்லும் பகலும் அவரைக் காண பண்டிதர்களும், பாமரர்களும் வந்த வண்ணம் இருந்தனர். காசில் கர்னன் மாளிகையின் வெளிப்பக்கத்தில் கொட்டகை அமைக்கப்பட்டது. சில நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்போம்.

பண்டிதர் ஒருவர் முன் வந்து மாயாவாதத்தைப் பற்றி என்னென்னவோ பிரச்சனைகளைக் கிளப்பினார்.

மாயை என்பது வாதத்துக்குரிய விஷயமன்று. பிரபஞ்சத்தின் நடைமுறையைப் பற்றிய தத்துவம் மாயையெனப்படுகிறது என்று சுவாமிகள் மறுமொழி கூறினார். இத்தகைய விளக்கத்தை ஜகத்குரு சங்கரர் இம்முறையில் எங்குமே தமது பாஷியங்களில் பகரவில்லையே என்று பண்டிதர் தடை கூறினார். எதைப் பகராது சங்கரர் மீதி வைத்திருந்தாரோ அதைத் தெளிவுபடுத்தி நிறைவாக்குதல் பொருட்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இக்காலத்தில் தோன்றி வந்துள்ளார் என்று சுவாமிகள் விடையளித்தார். பண்டிதரும் அக்கூற்றை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.

சென்னையில் எடுக்கப்பட்ட புகைப்படம்

துண்டுக் காகிதங்களில் வினாக்கள் எழுதி அனுப்பப்பட்டிருந்தன. ஒருவர் வினாக்களை வாசிக்க, சுவாமிகள் அதற்கு விடைகளைக் கூறினார். இறுதியாக ஒரு வினா: “மக்கள் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் யாது?” விடை: “துன்பங்களுக்கெல்லாம் மூலகாரணம் அக்ஞானம், அக்ஞானம், அக்ஞானம்”.

சென்னைஅன்பர்களுடன் சுவாமி விவேகானந்தர். இந்த புகைப்படத்தில் சுவாமிகளுக்கு பின்னால் வலதுபுறம் நிற்பவர் சுவாமிகளின் உபந்நியாசங்களை சுருக்கெழுத்தில் பதிவேற்றிய சிஷ்யர் அவர்கள்

சென்னையில் தங்கியிருந்த சில நாட்களுக்கிடையில் தமிழ் சொற்கள் பலவற்றை சுவாமிகள் கற்றுக்கொண்டார். சமையல்காரனோடு சில தமிழ் வார்த்தைகள் அவர் உரையாடினது கேட்டவர்களுக்குப் பெருமகிழ்வூட்டியது.

MadrasGroupPhoto

சென்னைஅன்பர்களுடன் சுவாமி விவேகானந்தர்.

(இந்த புகைப்படத்தில் சுவாமிகளுக்கு பின்னால் வலதுபுறம் நிற்பவர் சுவாமிகளின் உபந்நியாசங்களை சுருக்கெழுத்தில்(Short Hand) பதிவேற்றிய சிஷ்யர் J.J. Goodwin அவர்கள்.)

இலங்கையிலிருந்து சென்னை வரை செய்த பிரயாணத்தாலே சுவாமிகளுக்குப் போதிய அளவு ஓய்வும் உறக்கமும் இல்லாது போய்விட்டன. இரவும் பகலும் இடையறாது மாந்தர் அவரை மொய்த்துக்கொண்டேயிருந்தனர். கல்கத்தா போய்ச் சேர ஆயிரம் மைல் பயணம் செய்ய வேண்டும். நிலமார்க்கமாக சென்றால் மாந்தர் அவரை அன்பால் அலைகழித்திருப்பார்கள். எனவே, சென்னைலிருந்து கப்பலேறி, கடல் மார்க்கமாய் கல்கத்தாவுக்குப் புறப்பட்டார். விரிகடலிலே அவரது உடல் ஓய்வுற்றிருந்தது.

Thiruvallaikeni 1900

சுவாமி விவேகானந்தர் சென்னையில் தங்கியிருந்தபோது வழிபட்ட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில்

கல்கத்தா:

கல்கத்தா வாசிகளுக்கு சுவாமிகளது வரவு எத்தகைய இன்பத்தை ஊட்டியிருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். தங்கள் மாகாணத்தில் பிறந்த மகான் அல்லவா அவர்! துறைமுகத்தினின்று சுவாமிகளை ஏற்றி வந்த ரயில் வண்டியும் கடைசியாகக் கண்ணுக்குப் புலப்பட்டது. சுவாமிகள் தங்களெதிரே தோன்றவே தலைகள் அத்தனையும் ஒருமித்துச் சாய்ந்து வணங்கின.

calcutta-1897-feb28-2-w-arr

சுவாமிகளுக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி

7 ஆண்டுகளுக்கு முன்பு வாரநகர் மடத்தில் குரு சகோதரர்களை விட்டுப் பிரிந்த சுவாமிகள் திரும்பவும் சந்தித்தார். சர்வமத மகாசபையில் பிரசித்தி அடையும் வரை அவர் எங்கு இருந்தார் என்பதே அவர்களுக்குத் தெரியாது. பரமஹம்ஸர் சுவாமிகளைப் பற்றி முன்பு கூறியதெல்லாம் இப்போது பிரத்தியட்சமாய் நடைபெற்று வருவதைக் கண்டு மகிழ்வுற்றனர்.

calcutta-1897-3

குரு சகோதரர்கள், சிஷ்யர்கள் மற்றும் சுவாமிஜி

கல்கத்தாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில 1897:

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் நிறுவுதல்:

1897ஆம் ஆண்டு மே மாதத்தில் பரமஹம்ஸரின் சிஷ்யர்கள் அனைவரையும் சுவாமிகள் கல்கத்தாவிலே ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்தார். சத்சங்கமொன்று நிறுவப்பெற்றது. அதில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் என்றும், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் என்றும் இணைபிரியாத அம்சங்கள் இரண்டு அமைக்கப் பெறுவனவாயின.

முந்தையது முற்றும் பாரமார்த்திகமானது. யோகங்கள் வாயிலாக சந்நியாசிகளும், பிரம்மச்சாரிகளும் கடவுளை அடைய முயலுவதற்கென அது ஏற்பட்டுள்ளது.

பிந்தியது பரோபகார சம்பந்தமானது. பிரசாரம் செய்தல், பள்ளிகளை கட்டுதல், மருத்துவமனை நடத்துதல், கஷ்டநிவாரண ஊழியங்கள் புரிதல் ஆகிய பல அலுவல்களை அதே சந்நியாசிகளும், பிரம்மச்சாரிகளும் இந்த அங்கத்தின் மூலமாக நிர்வகித்து வருகின்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பின்பற்றுகிற ஒவ்வொருவனிடத்திலும் இந்த இரண்டு அம்சங்களும் இருக்க வேண்டும்.

அல்மோரா:

ஓய்வில்லாத உழைப்பால் உடல் நலம் குலைந்திருந்த சுவாமிகளின் உள்ளமும் தளர்வுற்றிருந்தது. ஆகவே மலைநாடு சென்று ஓய்வெடுப்பது என்று இணங்கி இமயமலையிலுள்ள அல்மோரா போய்ச் சேர்ந்தார். அல்மோராவாசிகளது விருப்பத்துக்கிணங்கி சுவாமிகள் ஆங்கு ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் உபந்நியாசங்கள் செய்தருளினார்.

220px-Annie_Besant_in_1897

அன்னி பெஸண்ட் அம்மையார்

அல்மோராவில் வசித்திருந்த சமயம் பிரம்ம ஞான சபைக்குத் (Theosophical Society) தலைமை வகித்திருந்த அன்னி பெஸண்ட் அம்மையார்(Mrs. Annie Besant) அவ்வூரில் ஓய்வின் பொருட்டு தங்கியிருந்தார். பெஸண்ட் அம்மையார் சுவாமிகளை அல்மோராவில் சந்தித்து தம்மையும் தமது சபையையும் பற்றித் தாக்கிப் பேச வேண்டாம் என்று வணங்கி வேண்டினார். அதுமுதல் சுவாமிகள் அச்சபையைப் பற்றிய கருத்துக்களை வெளியிடாமல் தம்மோடு வைத்துக்கொண்டார். இது சுவாமிகளின் உதார குணத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

காஷ்மீர் சொற்பொழிவு:

kashmir-1897-group

காஷ்மீரில் எடுக்கப்பட்ட புகைப்படம்

அநேக இடங்களுக்கு சுவாமிகள் வர வேண்டுமென்று அழைப்புக் கடிதங்கள் வந்தன. அவைகளுள் ஒன்று காஷ்மீரிலிருந்து வந்தது. ஊராரது வேண்டுகோளுக்கிணங்கி சுவாமிகள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் உபந்நியாசங்கள் செய்தார். ஹிந்துக்கள், ஆரிய சமாஜத்தினர், முகமதியர்களிடையே இருந்த சில பிணக்குகளையும் அபிப்பிராய வித்தியாசங்களையும் போக்குதற்கு அவருடைய சொற்பொழிவுகள் பெரிதும் பயன்பட்டன.

காஷ்மீரில் சுவாமிஜி

பிறகு பாஞ்சாலம், இராஜபுதனத்தில் ஆள்வார், கேத்திரி சமஸ்தானங்களுக்கு சுவாமிகள் விஜயம் செய்தார். இங்கு அவர் நிகழ்த்திய உபந்நியாசங்களின் வாயிலாக நாட்டை உய்விப்பதற்கான கருத்துக்களை வெளியிட்டார்.

பேலூர்:

வாரநகர் மடத்தில் சுவாமிகள் வசித்திருந்தபோது தங்களுக்கு நிலையான ஸ்தலம் நதியின் மேற்குக் கரையில்தான் அமையுமென்று சுவாமிகள் சொன்னார். அவ்வாறே 1898ஆம் ஆண்டின் துவக்கத்தில் மேற்கு திசையில் பேலூர் கிராமத்தில் பதினைந்து ஏக்கர் பூமியொன்றை விலைக்கு வாங்கினார். அதற்கான பெருநிதி சுவாமிகளின் மேல்நாட்டு சிஷ்யர்கள் காணிக்கையாகச் செலுத்தினர்.

அமர்நாத் யாத்திரை:

Amarnath_Yatra_Camp

அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் சிஷ்யர்களும், நண்பர்களும் சுவாமிகளை நாடி வந்தனர். அந்த கோடைக்காலத்தில் அவர்களை கல்கத்தாவில் அமர்த்துவது சரியல்ல என்று எண்ணி இமாலய பர்வதத்துக்கு அழைத்துச் சென்றார். நைனித்தால், அல்மோரா, ஸ்ரீ நகர் போன்ற இடங்களில் கொஞ்ச காலம் தங்கியிருந்தனர். ஹிமாலயத்தில் இருக்கும் அமர்நாத் சிவஸ்தலத்துக்கு யாத்திரை செல்ல ஆயத்தமானார்கள். கடல் மட்டத்துக்கு மேல் 18,000 அடி உயரத்தில் இருக்கிறது. பனிக்கட்டி மீது குறிகலான பாதை வழியாகப் பெரிய கும்பல் நடந்து சென்றது. அமர்நாத் தலத்தை அணுக அணுக சுவாமிகளிடத்தில் சிவபோதம் அதிகரித்துக்கொண்டே போயிற்று. தலத்தை அடைந்ததும் புற உணர்ச்சி அறவே இழந்துவிட்டு பரசொரூபத்தில் புதைந்தார்.

Lord_Amarnath

அமர்நாத் பனி லிங்கம்

பேலூர் மடம்:

காஷ்மீரில் நேர்ந்த ஒரு உபாதையால் நைந்து போன திருமேனியுடன் சுவாமிகள் பேலூர் வந்தார். மடாலயக் கட்டிட வேலை பூர்த்தியாயிருந்தது. குருதேவர் தம்மீது சுமத்தியிருந்த பெருங்காரியமொன்றை நிறைவேற்றிவிட்ட திருப்தி உள்ளத்தில் அவருக்கு எழுந்தது. ஒரு சுப தினத்தன்று குருநாதர் படத்தை வைத்து, பூஜை, ஹோமம், சடங்குகள் செய்தார். இன்றைக்கு உலகெங்குமுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்களுக்கு தலைமை மடமாக இது திகழ்ந்து வருகிறது.

bm temple

பேலூர் ராமகிருஷ்ண மடம் 1940 (West Side View)

பேலூர் மடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 1899:

பத்திரிக்கைகள்:

“பிரபுத்த பாரதம்” (விழிந்தெழுந்துள்ள இந்தியா) என்ற பெயர் பூண்ட மாதாந்திரப் பத்திரிக்கை ஆங்கிலத்திலும், “உத்போதனம்” (நல்லறிவு) என்ற பத்திரிக்கை வங்காள மொழியிலும் சுவாமிகள் துவக்கி வைத்தார்.

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்:

swami-ramakrishnananda

ஸ்ரீ  ராமகிருஷ்ணானந்தர்

பேலூர் மடம் தென்னிந்தியாவில் முதன்முதலில் நிறுவிய கிளை ஸ்தாபனம் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஆகும். சென்னை அடியார்கள் சுவாமி விவேகானந்தரிடம் கேட்டுக்கொண்டதர்க்கிணங்க தமது குரு சகோதரர் ராமகிருஷ்ணானந்தரை சென்னைக்கு அனுப்பி ஒரு ஸ்தாபனத்தை நிறுவ ஆயத்தப்படுத்தினார். மெரினா கடற்கரையில் காஸில் கெர்னன் அல்லது ஐஸ் ஹவுஸில் (தற்போது விவேகான்ந்தர் இல்லம்) இயங்கி வந்த மடம் 1906ஆம் ஆண்டு மயிலாப்பூருக்கு மாற்றப்பட்டது.

Chennai Ramakrishna math

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர் – பழைய திருக்கோயில்

தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s