2013 Mahasamadhi Day Article

சுவாமி விவேகானந்தர் உலகுக்கு நல்கிய அருட்பேறு

V91

(சுவாமி விவேகானந்தரின் மகாசமாதி தினத்தையொட்டி ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் எழுதிய ‘ஸ்ரீவிவேகானந்தர் ஜீவிதம்’ என்ற நூலைச் சுருக்கி வீரத்துறவி விவேகானந்தர் என்ற தலைப்பில் 6 பாகங்களாகப் பதிவேற்றி இருந்தோம். அதில் சேர்க்க முடியாது விடப்பட்ட பகுதி இந்த ஆண்டு சுவாமி விவேகானந்தரின் மகாசமாதி தினத்தையொட்டி பதிவேற்றுகிறோம்.

சுவாமி விவேகானந்தர் தமது இறுதிக் காலத்திற்கு முன்பு பேலூர் மடத்தில் வதிந்திருந்தபொழுது எல்லோருக்கும் எவ்வாறெல்லாம் வழி காட்டினார் என்பதை பெரியசாமி அவர்கள் ‘பாரமார்த்திகப் பெற்றி’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அதை அப்படியே பதிவேற்றியிருக்கிறோம். வாசித்துப் பயன்பெறுங்கள்!)

[சுவாமி விவேகானந்தரின் நினைவுச் சின்ன புகைப்படங்கள் கட்டுரையின் இறுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.]

நிலவுலகுக்கு நலனை வழங்குவது மழை. இனி, பருவங்களில் பெய்கின்ற மழையில் இரண்டுவிதங்கள் உண்டு. கார்மேகம் திரண்டு கூடி, பளீரென்று மின்னல் மின்னி, தடதடவென்று இடியிடித்து, மழைத் தாரையைச் சொரேலென்று சொரிந்து மண்ணுலகைக் குளிரச் செய்வது ஒரு முறை. நீர் நிரம்பிய மேகம் விண்ணுலகெங்கும் நிறைந்திருந்துகொண்டு இடைவிடாது மண்ணுலகில் துளிகளாக விழுந்து அதைச் செழிப்புறச் செய்வது மற்றொரு முறை. இந்த இரண்டாம் முறையில் பருவக்காற்றும் மழையுடன் கூடியிருந்து மரம் செடி கொடிகளை அசையச் செய்கிறது. அப்படி அசைவதால் அவைகளின் வேர் உறுதி பெறுகிறது. கிளைகளுக்கு வலிவு உண்டாகிறது. விவேகானந்த சுவாமிகள் உலகுக்கு நல்கிய அருள்பேறு இந்த இரண்டுவித மாரிகளுக்கு ஒப்பாகும்.

மேகமானது மின்னி, இடித்து, பொழிந்தது போன்று அவர் பாருலகெங்கும் பாரமார்த்திகத்தைப் பண்புடன் வழங்குவாராயினர். பெரு வாழ்வுக்கு உரியவன் மனிதன் என்னும் பேருணர்வை மக்கள் உள்ளத்தில் அவர் ஊட்டுவாராயினர். பின்பு, தமது வாழ்வின் கடைசிப் பகுதியில் தம்மை வந்து சரணடைந்திருந்த சிஷ்யர்களுக்கும், தம்மிடம் குருதேவரால் ஒப்படைக்கப்பட்டிருந்த குரு சகோதரர்களுக்கும் ஆழந்த முறையில் பாரமார்த்திகப் பெற்றியை எடுத்து வழங்குவாராயினர். காற்றும் மழையும் ஒன்று கூடி நிலைத்திணையை நிலைபெறச் செய்வது போன்று சுவாமிகள் அன்பு கனிந்த பராமரிப்பின் மூலமாகவும் ஆர்வம் ததும்பும் கண்டிப்பு முறைகள் வாயிலாகவும் அத்துறவியர்களை ஆத்மீக வாழ்வுக்குத் தகுதியுடையவர்களாகத் திருத்தியமைத்து வருவாராயினர்.

பேரியக்கம் ஒன்று தொடர்ந்து வலிவு பெற்று வருவது அதற்கென்றே தங்கள் வாழ்வை ஒப்படைத்திருக்கிறவர்களது கைவசத்திலிருக்கிறது. அத்தகைய நன்மக்கள் நலம் மிகப் பெறுமளவு அவரள் மூலம் அருள் இயக்கமும் உறுதி மிகப் பெறுவதாகும். இதை நன்கு உணர்ந்திருந்த விவேகானந்த சுவாமிகள் இறுதிக் காலத்தில் தமது கருத்து முழுதையும் அத்துறவியர்கள்பால் செலுத்தி வந்தார்.

வாழ்க்கை முறையில் மக்களுக்கிடையில் வேற்றுமை மிகவுண்டு. ஏனோ தானோவென்று வெறுமனே வாழ்ந்திருப்பவர்கள் பெருங்காரியம் எதற்கும் உதவமாட்டார்கள். ஏதேனும் ஒரு விதத்தில் பொழுதைப் போக்கி வாழ்வை முடித்துக்கொள்ளும் அன்னவர்கள் வெறும் கயவர்கள் ஆகின்றார்கள். பின்பு ஆர்வம் ததும்பும் வாழ்வு வாழ்கின்றவர்களே அரும்பெரும் காரியங்களைச் சாதிக்க வல்லவர்களாகிறார்கள். உள்ளத்திலே கிளம்பி வருகிற ஆர்வத்துக்கோ வரையறை ஒன்றும் கிடையாது. ஆர்வம் ஓங்குமளவு வாழ்வு பெருவாழ்வு ஆகிறது. ஆர்வம் ஒன்றே மனிதனை அதிவிரைவில் இறைவனது சான்னித்தியத்துக்கு எடுத்துச் செல்லுகிறது. அத்தகைய ஆர்வம் ததும்பியவராகப் பரமஹம்ச தேவர் வாழ்ந்திருந்தார். அவரைப் பின்பற்றிய அவருடைய சீடர்களும் அதே முறையில் பாரமார்த்திக வாழ்விலே ஆர்வம் மிக நிறைந்தவர்களாக இருந்தார்கள். இனி, அடுத்த தலைமுறையாக வருகின்ற சிஷ்யர்கள் உள்ளத்திலும் அதே ஆர்வத்தை ஊட்டும் பொறுப்பு விவேகானந்த சுவாமிகளுடையதாயிருந்தது. அத்தகைய பேரூக்கம் வெறும் வாய்ப்பேச்சின் மூலமாகப் பிறரிடம் உண்டு பண்ணப்படுவதன்று. பேரூக்கம் படைத்திருக்கிறவனே பிறர் உள்ளத்தில் அதை ஓதாது புகுத்துகிறான். தமது வாழ்க்கை முறையின் மூலமாக இப்பொழுது விவேகானந்த சுவாமிகள் வாழையடி வாழையெனத் தம்மிடம் வந்து சேர்ந்திருந்த சிஷ்யர்கள் உள்ளத்தில் பாரமார்த்திகப் பெருவாழ்வுக்குரிய ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஊட்டி வந்தார்.

இயற்கையின் நடைமுறையில் எங்கு திரும்பிப் பார்த்தாலும் கிரமம் என்பது ஒன்று உண்டு. கிரகங்கள் சுழல்வதிலும் பருவங்கள் மாறியமைவதிலும் ஒழுங்குப்பாட்டைக் காண்கிறோம். வாழ்க்கையிலே மேலாம் காரியங்களை நன்கு சாதிக்க முயலுகிறவர்களிடத்து அதற்கேற்ற காரியக்கிரமம் அமைவது முற்றிலும் அவசியமாகிறது. தமது மடாலயத்திலே விவேகானந்த சுவாமிகள் அதை ஒழுங்குபட அமைத்து வைத்தார். அதிகாலையில் துயிலெழுந்திருத்தல் முதற்கொண்டு இரவில் படுக்கப்போகும் வரையில் இன்னின்ன வேளைகளிலே இன்னின்ன கிருத்தியங்கள் சரிவர நடைபெற்றாக வேண்டும் என்னும் திட்டத்தை அவர் பாங்குடன் அமைத்து வைத்தார். அந்தந்த வேளைகளில் அதற்கேற்றபடி மணியடிக்கப்படும்; நித்திய கர்மங்களெல்லாம் செவ்வனே நடைபெற்று வர வேண்டும். அப்படி அவர் வகுத்து வைத்த ஏற்பாடு ஒழுங்காக நிகழ்ந்து வருவதாயிற்று. காலமும் நன்கு பயன்படுத்தப்படுவதாயிற்று. அதன் வாயிலாகத் துறவியர்கள் அருள் துறையிலே ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்’ என்னும் பழமொழிக்கு ஒப்ப அருள்செல்வர்களாக வளர்ந்து வந்தனர்.

குறிப்பிட்ட வேளைகளில் தியானம் பயிலுவது துறவியர்களுக்கு இன்றியமையாத கடமையாகிறது. பேலூர் மடத்திலே வதிந்து வந்த துறவியர்கள் காலை மாலை வேளைகளில் தியான அறையிலே கூடுவார்கள். அமைதியாக அமர்ந்துகொண்டு தங்கள் மனதை அகமுகப்படுத்துவார்கள். அவர்களுக்கெல்லாம் தலைவராகச் சுவாமி விவேகானந்தரும் அவருக்குரிய ஓரிடத்தில் தியானத்தில் அமருவார். பொதுவாக அவர் தியானத்தில் உட்காரும்பொழுது அதற்ககவென்று தொடர்ந்து இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்ளுவார். அந்த இரண்டு மணிநேரத்துக்கு அவர் அசைவற்று வார்த்தெடுத்த விக்ரகம் போன்று அமர்ந்திருப்பார். அவருடன் கூடியிருந்து தியானம் பண்ணுவது மிக எளிதாயிருந்ததென்று அவருடைய குரு சகோதரர்களும் சிஷ்யர்களும் ஏகோபித்து இயம்பியிருக்கின்றனர். அவர் முன்னிலையில் மற்றவர்களுக்கு மனம் குவிந்ததில் வியப்பொன்றுமில்லை. ஏனென்றால் மனதோடு மனது சம்பந்தப்பட்டிருக்கிறது. நாம் அதை அறியாதிருந்தாலும் அதுவே உண்மையாகும். நல்லார் இணக்கத்தின் மூலம் மற்றவர்கள் மனது எளிதில் பண்படுகிறது. அவ்வுண்மையை பேலூர் மடத்துவாசிகள் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று விவேகானந்தர் சன்னிதியில் உணர்வாராயினர். தியானத்தை முடித்தான் பிறகு விவேகானந்த சுவாமிகள் “சிவ சிவ” என்று ஓதிக்கொண்டு எழுந்திருப்பார். குருதேவரது திருவுருவப் படத்தின் முன் சென்று வீழ்ந்து வணங்குவார். பிறகு முற்றத்துக்குச் சென்று அமைதியாக இங்குமங்கும் உலாவிக்கொண்டிருப்பார். அவ்வேளையில் பரமனது புகழ், இனிய அடங்கிய கம்பீரமான குரலிலே அவரது திருவாயினின்று வெளியே கிளம்பிக்கொண்டிருக்கும்.

திருவுருவப் படத்தின் வாயிலாகப் பரமஹம்ச தேவருக்குத் துறவியர்கள் புரிந்து வந்த ஆராதனையானது மிகவும் எளிதாக இருக்க வேண்டுமென்று சுவாமிகள் வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார். மாலைகள் தொடுப்பதிலும் ஆடம்பரமாக அலங்காரங்கள் செய்வதிலும், ஆராதனையிலே கிரியா விசேஷங்களைப் பெருக்கிக்கொண்டு போவதிலும் பயனொன்றுமில்லையென்று அவர் வற்புறுத்திக் கூறியிருக்கிறார். கிரியைகளைப் பெருக்குவதைவிட சாலச் சிறந்தது கருத்துக்களை ஏற்பதிலும், அக்கருத்துக்களை முறையாக ஆராய்ச்சி செய்வதிலும், அவைகளைப் பற்றி ஆழ்ந்து சம்வாதம் செய்வதிலும் நலன் மிகவுண்டு என்று அவர் இயம்பியிருக்கிறார். எங்கெல்லாம் வெறும் ஆடம்பரமான பூஜைகள் நிகழுகின்றனவோ அங்கெல்லாம் பண்பாடு மிகக் குறைந்திருக்கும் என்பது அவருடைய கருத்து. துறவியர்களோ பண்பட்டு ஒன்றிலேயே தங்களது கவனத்தைப் பெரிதும் செலுத்த வேண்டும். ஆடம்பரமான ஆராதனை முறைகள் பாமரர்களுக்கு ஒத்ததாயிருக்கலாம். பின்பு, பண்பாடுடையவர்களோ மனபரிபாகத்திலேயே தங்கள் எண்ணத்தைச் செலுத்த வேண்டும் என்பது சுவாமிகளது சித்தாந்தம்.

நாள்தோறும் குறிப்பிட்ட வேளைகளில் சாஸ்திர ஆராய்ச்சி நடைபெற்று வருவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் சுவாமிகள் நன்கு அமைத்து வைத்திருந்தார். உபநிஷதம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, பாகவதம், புராணம் ஆகிய சாஸ்திரங்கள் அவர்களுடைய ஆராய்ச்சியில் முறையாக இடம்பெற்று இருந்தன. அவைகளைக் கிரமமாக வாசித்தல், கேட்டல், விவாதித்தல் வாயிலாக அந்நூல்களில் அடங்கியுள்ள மேலாம் கருத்துக்கள் ஆத்ம சாதகனுக்குச் சொந்தமாகின்றன. உணவை உண்டு செமித்து அதை உடல் மயம் ஆக்குவது உயிர் வாழ்ந்திருப்பவைகளின் இயல்பு. மேலாம் நூல்களிலே அடங்கியுள்ள சீரிய கருத்துக்களைக் கேட்டு, ஓர்ந்து, தெளிதல் சான்றோர்களின் செயல்களாகும். வேதாந்த சிரவணம் சிரத்தையுடன் நடைபெற்று வரவேண்டும் என்பது விவேகானந்த சுவாமிகள் வகுத்துள்ள மேலாம் திட்டங்களில் ஒன்று ஆகும்.

ஆத்ம சாதனங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு என்னென்னவோ சந்தேகங்கள் வருவதுண்டு. அந்த ஐயங்களை அகற்றிக்கொள்ளுதற்கு ஏட்டுக் கல்வி பயன்படாது. ஆனால் சாதனத்தில் முதிர்ச்சியடைந்துள்ள சான்றோர் ஒருவர் சாதகர்களுக்கு உற்ற ஐயங்களை எளிதில் அகற்றி வைக்க இயலும். இருட்டறைக்குள் எரிந்துகொண்டிருக்கிற தீபத்தைக் கொண்டுவருவதற்கு நிகரானது சான்றோர் கொடுக்கிற விளக்கம். சுவாமிகளிடம் சாதகர்கள் பலர் வந்து தங்கள் சந்தேகங்களைத் தெரிவிப்பதுண்டு. சுவாமிகளும் அவர்களுடைய மனநிலையை முற்றிலும் அறிந்துகொள்வார். குழந்தை ஒன்றுடன் உறவாடுகிறவன் தானே குழந்தை மயம் ஆய்விட வேண்டும். அதே விதத்தில் நல்லாசிரியன் ஒருவன் தன்னிடம் வந்துள்ள மாணாக்கன் எந்த மனநிலையில் இருக்கின்றானோ அந்த நிலைக்குத் தனும் இறங்கி வர வேண்டும். சுவாமிகளும் அதைத்தான் கிருபை கூர்ந்து செய்து வந்தார். சந்தேகம் கேட்பவனுடைய நிலையில் தம்மை முற்றிலும் வைத்துக்கொண்டு அவனோடு சேர்ந்து சந்தேகத்துக்குரிய விஷயத்தை அவர் துருவி ஆராய்ச்சி பண்ணுவார். அதன் மூலம் கேள்வி கேட்பவனது மனது படிப்படியாக மேல் நிலைக்குக் கொண்டுவரப்படும்.  சில வேளைகளில் சந்தேகக்காரர்களுடைய போக்கு விபரீதமானதாயிருக்கும். அதையெல்லாம் தொல்லையென்று கருதாது சுவாமிகள் அமைதியாகவும் அனுதாபத்துடனும் ஐயங்களையெல்லாம் அலசி அலசி ஆராய்ந்து கேட்பவர்களுடைய உள்ளத்தில் விவேக விளக்கேற்றி வைப்பார். இத்தகைய அறப்பணி கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நடைபெற்று வந்தது.

சுவாமிகளைத் தரிசிப்பதற்காகவும் அவரிடமிருந்து சத்விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காகவும் அன்பர்கள் வெவ்வேறு மாகாணங்களிலிருந்து சிரமப்பட்டு வந்து சேர்வார்கள். அப்படி வந்தவர்களை ஆதரவுடன் வரவேற்று அவர்களுக்குத் தக்க வசதிகளைச் செய்துகொடுத்து அவர்கள் நாடிவந்த எண்ணத்தைச் சுவாமிகள் முற்றிலும் நிறைவேற்றி வைப்பார். வேளை தவறி வந்தவர்களைச் சிறிது காத்திருக்கச் செய்ய வேண்டியதாகும். ஆனால் வந்தவர்களுக்குப் பேட்டி கொடுக்காது அனுப்பி வைப்பதற்குச் சுவாமிகள் ஒருபொழுதும் ஒருப்படார். காண வருகிறவர்களைச் சரியாகக் கவனிப்பதே ஒரு கருணாகரச் செயலாகும். கருணாகரராகிய சுவாமிகளும் அச்செயலைச் செவ்வனே செய்து வந்தார்.

தமது பாரமார்த்திக இயக்கத்தின் மேலாம் கருத்துக்களை உலக மக்களுக்கிடையில் பரப்புதற்பொருட்டு ஆங்கிலத்தில், ‘பிரபுத்த பாரதம்’ என்னும் மாதாந்திரப் பத்திரிக்கையும், வங்காளத்தில் ‘உத்போதன்’ என்னும் மாதாந்திரப் பத்திரிக்கையும் துவக்கப்பெற்றிருந்தது. அப்பத்திரிக்கைகளைச் செவ்வனே நடாத்துதற்குச் சுவாமிகளின் அபிப்பிராயங்கள் இன்றியமையாதவைகளாயிருந்தன. அவைகளையெல்லாம் அப்போதைக்கப்போது அறிந்துகொள்ளுதர்கு அப்பத்திரிக்கை ஆசிரியர்களும் நிர்வாகிகளும் இடையிடையே சுவாமிகளிடம் வருவார்கள். அவர்கள் நாடிவந்த விஷயங்களைச் சுவாமிகள் கையாண்டதில் அலாதிச் சிறப்பு ஒன்று இருந்தது. அவர்கள் தாங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டிய சின்னஞ்சிறு விஷயங்களைப்பற்றி சுவாமிகள் வாய் திறந்து ஒன்றும் பேசமாட்டார். நிர்வாகிகளுக்குத் தோன்றியபடி காரியங்களைச் செய்து முடிக்கும்படி விட்டுவிடுவார். ஆனால் பத்திரிக்கைகளின் சீரிய கொள்கைகள் போன்ற விஷயங்களைச் சுவாமிகள் வேண்டியவாறு அவர்களூக்கு எடுத்துப் புகட்டுவார். மேலாம் உடன்பாட்டுக் கருத்துக்களையே அப்பத்திரிக்கைகளில் வெளியிட வேண்டும் என்று சுவாமிகள் எடுத்துரைப்பார். பிறரை எழுத்தின் மூலம் தாக்குதல் அல்லது முகஸ்துதி பண்ணுவது பொருந்தாது என்று அவர் சொல்லி வைத்தார். கட்டுரைகளெல்லாம் கண்ணியமான முறையில் உண்மையைத் தெளிவுபடுத்துதல் பொருட்டு அமைந்திருக்க வேண்டுமென்றும் அவர் வற்புறுத்தினார். அப்பத்திரிக்கைகளின் ஒழுங்கான நடைமுறையும் அண்ணலது உள்ளத்தில் இடம்பெறுவதாயிற்று.

உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சுவாமிகளுக்குக் கடிதங்கள் வந்து குவிந்துகொண்டிருக்கும். அக்கடிதங்களில் விசாரணைக்குரிய விஷயங்கள் பலப்பல புதைந்து கிடக்கும். அவையாவுக்கும் தக்க முறையில் விடையெழுதி அனுப்புவது சுவாமிகளுடைய பொறுப்பாயிற்று. அப்பொறுப்பையும் அவர் செவ்வனே நிறைவேற்றி வந்தார். அவர் எழுதியுள்ள கடிதங்களில் பெரும்பகுதி சேகரிக்கப்பட்டு இன்று ஒரு சிறந்த நூலாக வெளி வந்திருக்கிறது. அதை ஆராய்ந்து பார்ப்பதே ஒரு ஞானக் களஞ்சியத்தை ஆராய்தற்கு ஒப்பாகும். எத்தனையெத்தனையோ பாங்குடைய மாந்தர்க்கு எத்தனையெத்தனையோ விஷயங்களை எத்தனையெத்தனையோ விதங்களில் எழுதியனுப்ப வேண்டிய பொறுப்பு அப்பரமாச்சாரியருடையதாய் இருந்தது.

மடத்திலே வசித்து வந்த துறவியர்களின் ஆகார நியதிகளிலும் சுவாமிகள் கருத்து மிகச் செலுத்தி வந்தார். ஆகாரத்துக்கும், ஆத்மசாதனத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பொருந்தியதும் சத்துடையதுமான உணவையே கால நியதிக்கொப்ப அருந்த வேண்டும் என்பது சுவாமிகளது கோட்பாடு. காலையிலும் இரவிலும் பெருமித உணவு ஏற்கலாகாது. நண்பகலில் மட்டும் சாதகன் ஒருவன் பேருண்டி உண்ணலாம். இப்படியெல்லாம் ஆகார நியதிகளை அவர் ஏற்படுத்தி வைத்தார்.

வேலைக்காரன் வராததை முன்னிட்டோ, அல்லது வேறு எக்காரணத்தை முன்னிட்டோ மடாலயத்தின் எப்பகுதியாவது குப்பைக் கூளம் நிறைந்ததாயிருக்குமாயின், அதையெல்லாம் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் செயலைச் சுவாமிகள் தாமே எடுத்துக்கொள்ளுவார். சில வேளைகளில் துறவியர்களுள் சிலர் தங்களுடைய துணி வகைகளையும் படுக்கைகளையும் புத்தகங்களையும் தாறுமாறாகப் போட்டுவிடுவார்கள். அத்தகைய ஒழுங்குப்பாடற்ற காட்சியைக் காணும்பொழுதெல்லாம் சுவாமிகளிடத்துத் தாயின் உள்ளம் முன்னணியில் வந்து நிற்கும். தன் குழந்தைகளின் உடைமைகளையெல்லாம் ஒழுங்காக எடுத்துப் பாதுகாத்து வைப்பது அன்னையின் அன்புச் செயலாகும். சுவாமிகளும் அதைத்தான் மனமுவந்து செய்து வந்தார். அப்படி அவர் புரிந்து வந்த அன்புச் செயல் ஏனையவர்களுக்கு அரியதொரு பாடத்தைப் புகட்டியது. பேச்சின்மூலம் புகட்டுவதைவிட பன்மடங்கு உயர்ந்தது பணிவிடையின் மூலம் புகட்டுவது. சுவாமிகளும் உள்ளன்போடு தமது சிஷ்யர்களுக்கு அன்பார்ந்த பணிவிடைகளைச் செய்து வந்தார். அப்பணிவிடைகளின் வாயிலாகச் சிஷ்யர்கள் பன்மடங்கு அதிகமாகத் தங்கள் குருநாதரிடம் கவர்ந்து இழுக்கப்படுபவர் ஆயினர். இத்தனைவிதமான அலுவல்களுக்கிடையில் சுவாமிகளது மனது அடிக்கடி அதீத நிலைக்குப் போய்விடும். உடலானது ஒரு யந்திரம் போன்று செயல்களைப் புரிந்து வந்ததற்கிடையில் அவருடைய உள்ளம் பாரமார்த்திகப் பெருநிலையில் தோய்ந்துவிடும். வேறு சில வேளைகளில் அவர் ஆழ்ந்து அரிய சிந்தனைகளில் மூழ்கியிருப்பார். அவ்வேளைகளில் அவர் அருகில் செல்லுதற்குக்கூட அனைவரும் தயங்கி நிற்பர். இங்ஙனம் சுவாமிகளது பேரியல்பு பாரமார்த்திகப் பெற்றியில் யாண்டும் புதைந்திருந்தது.

விவேகானந்த சுவாமிகள் மகாசமாதி அடையும் முன்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரத்திலிருக்கும் அமர்நாத்துக்கு யாத்திரை போயிருந்தார். சிவனாருடைய நாமங்கள் பலவற்றுள் அமரநாதன் என்பது ஒன்று. மரணத்தை வென்றவன் என்பது அதன் பொருள். அமரநாதனுடைய அனுக்கிரகத்தைப் பெற்ற சுவாமிகள் தாமும் அவனருளால் மரணத்தை வெல்லும் பாங்கைப் பெற்றிருந்ததாகப் பகர்ந்தார். அதாவது அவர் அனுமதித்தாலொழிய மரணம் அவரை அணுகாது. அத்தகைய பெருநிலையை ஒரு காலத்தில் பீஷ்மர் பெற்றிருந்தார். இக்காலத்தில் விவேகானந்தருக்கும் அப்பெருநிலை வாய்த்திருந்தது. 1902ஆம் வருஷம், ஜூன் மாதம் முழுதிலும் அவர் உடலை உகுப்பதற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார். ஆனால் அச்செயல்கள் மற்றவர்கள் மனதில் படவில்லை. தான் சாசுவதாக வாழ்ந்திருக்கப் போவதாகவே ஒவ்வொரு மனிதனும் எண்ணிக்கொள்கிறான்.  ஆதலால் மரணத்துக்கு ஆயத்தப்படுத்துதல் என்னும் செயல் அசாதாரணமானது. அச்செயலை விவேகானந்த சுவாமிகள் விரைந்து செய்து வந்தது மற்றவர்கள் கருத்தில் படவில்லை.

1902ஆம் ஆண்டு ஜீலை மாதம் 4ஆம் நாள் இரவு ஒன்பது மணி பத்து நிமிடத்துக்கு தாம் திட்டம் போட்டு வைத்தபடி சுவாமி விவேகானந்தர் பர ஆகாசத்தில் கலந்துவிட்டார்.

Swami Vivekananda Temple Belur Math

சுவாமி விவேகானந்தர் நினைவு திருக்கோயில்

Swami Vivekananda Shrine Image Belur Math

திருக்கோயிலில் உள்ள திருவுருவம்

“நான் விரைவில் உடலை உகுத்துவிட்டு உருவமற்ற ஓசையாக இலங்குவேன்”

-சுவாமி விவேகானந்தர்.


பேலூர் மடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சுவாமி விவேகானந்தரின் நினைவுச் சின்னங்கள் சில:

Swamiji's room outside

சுவாமி விவேகானந்தர் அறை – வெளிப்புறத் தோற்றம்

198197195

சுவாமி விவேகானந்தர் அறை – உட்புறத் தோற்றம்

சுவாமி விவேகானந்தர் பயன்படுத்திய காலணிகள்

Advertisements

One thought on “2013 Mahasamadhi Day Article

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s