Question & Answer – 18

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 18: நீங்கள் ஆங்கிலத்தில் “Ramakrishna Lives Vedanta – இராமகிருஷ்ணர் வேதாந்த வாழ்வு வாழ்கிறார்” என்னும் நூல் ஒன்றை இயற்றியிருக்கிறீர்கள். அப்புஸ்தகத்தில் Vedanta severely leaves to itself the mythological doctrine of the incarnations of God – பகவான் அவதார மூர்த்திகளாக வருகிறார் என்று புராணங்கள் புகட்டுகிற கோட்பாட்டை வேதாந்த தர்சனம் சிறிதேனும் பொருள்படுத்துவதில்லை என்று கூறியிருக்கிறீர்கள்.

பகவத்கீதை என்னும் வேதாந்த சாஸ்திரத்தை நீங்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறீர்கள். அதில் ஒரு சுலோகமும் அதன் மொழிபெயர்ப்பும் வருமாறு:

अवचावन्ति मां मूदा मानुषीं तनुमाश्रितम् ।
परं भावभजानन्तो मम भूतमहेश्वरम् ॥

என்னுடைய பரசொரூபத்தையும், நான் உயிர்களுக்கெல்லாம் ஈசனாயிருப்பதையும் அறியாத மூடர்கள் ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்.

பகவத்கீதை பிரஸ்தானத்ரயத்தில் ஒன்று. அதாவது அங்கீகரிக்கப்பட்டுள்ள முடிவான வேதாந்த சாஸ்திரங்கள் மூன்றினுள் ஒன்று ஆகிறது. அவதார வாதத்திற்கு பகவத் கீதையில் வேண்டியவாறு பிரமாணம் இருக்கிறது. அப்படி இருந்தும் அதை வேதாந்த தர்சனம் ஆதரிக்கிறதில்லை என்று கூறுகிறீர்கள். இந்த முரண்பாட்டிற்கு விளக்கம் தரும்படி வேண்டுகிறேன்.

பதில்: உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரங்கள், பகவத்கீதை ஆகிய இம்மூன்று சாஸ்திரங்களையே ப்ரஸ்தானத்ரயம் என்கின்றோம். இம்மூன்றினுள் முடிவான பிரமாணம் உபநிஷதங்களே. உபநிஷதங்களைத்தான் உண்மையில் வேதாந்தம் என்கிறோம். வேதங்களின் அந்தம் ஆக அவைகள் அமைந்திருப்பதால் அவைகள் வேதாந்தம் எனப்படுகின்றன. மறைமுடி என்பது அவைகளுக்கு மற்றொரு பெயர். உபநிஷதங்களுக்கு நிகரான பிரமாணம் வேறு ஒன்றுமில்லை. உபநிஷதங்களில் அடங்கியுள்ள தத்துவங்களைப் பாகுபடுத்திப் பகர்வது பிரம்ம சூத்திரங்கள் அல்லது வேதாந்த சூத்திரங்கள் என்னும் நூல் ஆகும். இனி, பகவத்கீதையோ உபநிஷதங்களின் சாரம் எனப்படுகிறது. ஆயினும் பகவத்கீதையை ஸ்மிருதி என்று சொல்லுவது வேதாந்திகளின் ஐதிகம். உபநிஷதங்களைச் சுருதி என்பதும், பகவத்கீதையை ஸ்மிருதி என்பதும் வேதாந்த சம்பிரதாயக்காரர்கள் எல்லாருடைய போக்கு எனலாம். சுதி, ஸ்மிருதி ஆகிய இவ்விரண்டுக்குமிடையில் எங்கேயாவது அபிப்பிராய வித்தியாசம் இருக்குமாகில் ஸ்மிருதியே இரண்டாந்தரத்துக்குத் தள்ளப்படுவது ஆகும். சுருதி எப்பொழுதுமே முதன்மை ஸ்தானம் பெற்று வருகிறது. மதவாதிகள் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த முடிவு இதுவேயாம். உபநிஷதங்களில் அவதார வாதத்திற்கு இடமில்லை. அவதார மூர்த்திகளைப் பற்றிய பேச்சுக்கும் ஆங்கு இடமில்லை. அதிகாரி புருஷர்கள் என்னும் ஒரு கூட்டத்தாரைப் பற்றிய பேச்சுக்கு ஆங்கு இடமுண்டு. அதிகாரி புருஷர்கள் என்பவர்கள் நிறை ஞானிகளாகி வேதாந்த தத்துவங்களையெல்லாம் தங்கள் வாழ்க்கையின் வாயிலாக விளக்குபவர்களாம். மக்களுள் முயற்சியால் யார் வேண்டுமானாலும் அதிகாரி புருஷன் ஆகலாம். முயன்று தகுதி வாய்க்கப் பெற்றவர்கள் சங்கீத வித்வான்கள் ஆவது போன்றும், நல்ல கலைஞானிகள் ஆவது போன்றும், மருத்துவ நிபுணர்களாவது போன்றும் யார் வேண்டுமானாலும் அதிகாரி புருஷன் ஆகலாம். ரிஷிகள் எல்லாரும் அதிகாரி புருஷர்கள். ரிஷி ஒருவருடைய நிலையை அடைவது யாருக்கும் தனி உரிமை ஆகாது.

பகவத்கீதை ஸ்மிருதியாயிருப்பதால் புராணக் கோட்பாடுகளையும் அது தன்னகத்து அடக்கி வைத்திருக்கிறது. புராணங்களில் பகர்ந்துள்ள அவதார தத்துவத்திற்குப் பகவத்கீதை ஆதரவு தருகிறது. அதை முன்னிட்டுப் பகவத்கீதைக்கும் உபநிஷதங்களுக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறது என்று முடிவு கட்டலாகாது. வேதாந்த தர்சனத்தில் இன்னும் முற்றும் பரிபாகம் ஆகாதவர்களுக்கு அவதார வாதத்தை வேண்டியவாறு விரித்து எடுத்துப் புகட்டலாம். புராணங்கள் அப்படிச் செய்திருக்கின்றன. ஆனால் அப்படிப் புகட்டுதலில் குறைபாடு ஒன்று புராணக்கதைகளுள் புகுந்திருக்கிறது. அக்குறைபாட்டை அகற்றி வைத்துவிட்டு அவதார மூர்த்திகளின் மகிமைகளை எவ்வளவு வேண்டுமானாலும் விரித்துக்கொண்டு போகலாம். புராணங்கள் பகருகிற ஸ்ரீ கிருஷ்ணன், ஸ்ரீ ராமன் போன்ற மூர்த்திகள் வாழ்ந்த வாழ்வில் வேதாந்தத்துக்கு வேண்டியவாறு விளக்கம் காண்கிறோம். அவர்களுடைய குணாதிசயங்கள் ஆராய்ச்சிக்கும், சிந்தனைக்கும் உரியவைகளாம். அவர்களுடைய குணாதிசயங்களை மனனம் பண்ணுகின்ற அளவு சாதகர்கள் மனபரிபாகம் அடைகின்றனர்.

பின்பு, புராணங்கள் விவரித்துக்கூறுகின்ற அவதார மூர்த்திகளைப்பற்றிய வேறு சில கொள்கைகள் ஆத்ம சாதகர்களுக்குப் பயன்படாதவைகளாயிருக்கின்றன. ஆத்மசாதகர்களைப் பலவீனப்படுத்தும் கோட்பாடுகளும் அவைகளில் அடங்கியிருக்கின்றன. அத்தகைய பகுதிகளை ஒதுக்கி வைப்பது முற்றிலும் அவசியமாகிறது. புராணங்கள் புகட்டுகின்ற அனைத்தையும் முடிவான பிரமாணங்களாக எடுத்துக்கொள்ளலாகாது. சிறந்த தத்துவங்கள் அவைகளுள் பொதிந்திருக்கின்றன. பொருளற்ற புன்மைகளும் அவைகளுள் புதைந்திருக்கின்றன. வேதாந்த தர்சனத்தை நன்கு அறிந்திருப்பவர்களே புராணங்களிலிருக்கின்ற தத்துவங்களுக்கும், பொருளற்ற கற்பனைகளுக்குமிடையில் பாகுபாடு காண முடியும். கற்பனைகளுள் சில மனிதனுடைய உள்ளத்தில் குருட்டு நம்பிக்கையையும் பலவீனத்தையும் ஊட்டக்கூடியவைகளாக இருக்கின்றன. அப்பகுதிகளை மக்களுக்கிடையில் வேதாந்திகள் பரப்பலாகாது. உறுதிப்பாடும், ஒழுக்கமும், தன்னம்பிக்கையும் நிறைந்துள்ள சீரிய கோட்பாடுகளையே பொதுமக்களுக்கிடையில் பரப்ப வேண்டும்.

புராணங்களில் புகட்டப் பெற்றுள்ள பொருந்தாத கோட்பாடுகள் சிலவற்றை ஈண்டு சான்றாக எடுத்துக்கொள்வோம். அவதார மூர்த்திகளாக வருவது அலாதியாகப் பகவானுடைய திருவிளையாடல் எனப் புராணம் புகட்டுகிறது. எத்தனை எத்தனையோ ஜீவகோடிகளாக இப்பொழுது தோன்றிக் கொண்டிருப்பவரும் பகவானே என்னும் கோட்பாட்டைப் பின்னணிக்குத் தள்ளிவிடலாகாது.

நல்லார் சிலர் வைகுண்டவாசியிடம் சென்று தாங்கள் படும் துயரத்தைக் குறித்து விண்ணப்பம் செய்ய அவர்களுடைய துயரத்தைத் துடைப்பதற்கும் தீயவர்களைத் தகர்த்துத் தள்ளுதற்கும் திருமால் மண்ணுலகில் பிறந்து வருகிறார் என்னும் போதனை மக்களுக்கிடையில் பலவீனத்தை உண்டுபண்ணுகிறது. மனிதனுடைய முயற்சியும் ஈசனுடைய அருளும் சேர்ந்திருக்க வேண்டும் என்பது வேதாந்தக் கோட்பாடு. முயற்சி ஒன்றும் எடுத்துக்கொள்ளாது பலவீனனாகப் பகவானிடம் முறையிடுவது புராணக் கோட்பாடு. அது ஆத்ம சாதகனுக்கு ஏற்புடையதாகாது. திருமால் அவதார மூர்த்தியாக வருவது உண்மையென்றால் தனியாக இந்தியாவில் தோன்றுவது போதாது. தமது சிருஷ்டியாகிய ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய எல்லாக் கண்டங்களிலும் அப்போதைக்கப்போது அவர் அவதரித்து வந்து ஆங்காங்குள்ள மக்களையெல்லாம் அவர் பண்படுத்தியிருப்பாராகில் புராணம் பகருகிற அவதார மூர்த்தியை அப்பொழுது முற்றிலும் போற்றலாம். ஆனால் தசாவதாரங்களுள் ஒன்பது அவதாரங்கள் இந்தியாவில் மட்டும் தனியாக வந்தது எதற்காக? அப்படி வந்த பிறகும் இந்தியாவினுடைய லௌகீக, வைதீக நிலைகள் பாராட்டுதற்குரிய பாங்கில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றன என்று இயம்புதற்கு இடமில்லை. அவதார மூர்த்திகள் தோன்றாத பிறநாடுகள் சிலவற்றுள் பண்பாடும் நாகரிகமும் பாராட்டுதற்குரிய பாங்கில் மேலோங்கி இருக்கின்றன. இவைகளையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்க்குமிடத்து சமயத்தின் பெயரால் பொருந்தாத எதையெதையோ மக்களுக்கிடையில் போதிப்பது முறையாகாது. அவதாரமூர்த்தி என்னும் கோட்பாட்டை அதிகாரி புருஷன் என்னும் நிலையில் வைத்துக் கொண்டால் தெய்வத்தைப் பற்றியோ சமுதாயத்தைப் பற்றியோ பிறகு குறைகூறுதற்கு இடமொன்றுமில்லை.

நாராயணமூர்த்தி நல்லாரைப் பாதுகாப்பதற்கே தசாவதாரங்களாக வந்துள்ளார் என்பது புராணக் கொள்கை. ஆனால் வேதாந்தத்தின்படி அவதார மூர்த்திகள் என்போர் அகண்ட சச்சிதானந்தத்தில் உருவெடுக்கிற பெரிய அலைகளாவர். அத்தகைய மூர்த்திகள் தோன்றி வருகிற காலங்களில் சமுதாயங்களிலுள்ள வாழ்க்கைப் பிரச்னைகள் பலவற்றை அகற்றி வைக்கின்றனர். பின்பு, புராணங்களில் சொல்லியுள்ள மத்ஸ்ய அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம் முதலியவைகள் சரித்திரபூர்வமான நிகழ்ச்சிகள் அல்ல. இயற்கையில் ஓயாது நடைபெற்று வருகின்ற வாழ்க்கை வரலாறுகளை உருவகப்படுத்தி அறியுமிடத்து இந்த அவதார மூர்த்திகள் ஆகின்றனர். இவ்வுண்மையைப் பாமரர், பண்டிதர் ஆகிய எல்லோரும் அறிந்திருப்பது அவசியமாகிறது.

புராணக் கோட்பாட்டின்படி நாராயண மூர்த்தியே சிறப்பாகப் பரசுராமர் என்னும் அவதாரமாக மண்ணுலகில் வந்தவராகக் கருதப்படுகிறது. அதே காலத்தில் தசரதராமன் என்னும் மற்றோர் அவதாரமாக அவர் மண்ணுலகுக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு அவதார மூர்த்திகளுக்கிடையில் போராட்டம் நிகழ்ந்ததெல்லாம் பாராட்டுதற்குரிய பெருஞ்செயல் ஆகாது. மற்ற ஜீவர்களைப் போன்று பரசுராமனையும் கருதுமிடத்துக் குழப்பத்துக்கு இடமில்லை. ஆனால் புராணக் கோட்பாட்டை அனுசரித்து அவரை ஓர் அவதார மூர்த்தியென்று இயம்புதல் வேதாந்தக் கோட்பாட்டுக்கு ஒத்து வராது.

புராணங்கள் பகருகின்ற முதல் எட்டு அவதாரங்களும் ஜீவர்களின் பரிணாமத்திற்கு நல்ல விளக்கங்கள் ஆகின்றன. அந்த அவதார மூர்த்திகளைப் பரிணாமத்திற்கு எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டால் அது வேதாந்த தர்சனத்திற்கு ஒத்ததாகிறது. ஆனால் புராணங்கள் பகருகிறபடி அவர்களை நாம் ஏற்றுக்கொண்டால் யுக்தியோடு அது முரண்படுகிறது. அதற்கு ஒரு சான்று எடுத்துக்கொள்வோம். தசரதராமன் நரோத்தமன். முற்றிலும் பண்பாடடைந்துள்ள நரன் ஒருவன் ஏக பத்தினி விரதம் கொண்டிருப்பதுதான் முறை. அதற்குத் தசரதராமன் நல்ல எடுத்துக்காட்டு ஆகிறான். பின்பு, கிருஷ்ணாவதாரமாக வந்து அதே நாராயண மூர்த்தி ருக்மிணி, சத்தியபாமா என்னும் இரண்டு மனைவிமார்களை ஏற்றுக்கொள்வது பரிணாமத்தோடு முரண்படுகிறது. நாராயண மூர்த்தி பரிணாமத்தில் ஒருபடி மேலே போவதற்குப் பதிலாகப் பலபடி கீழே இறங்கி வந்துவிடுகிறார். இக்காரணங்களையெல்லாம் முன்னிட்டே புராணங்கள் பகருகிறபடி வாய்த்துள்ள அவதார வாதம் முடிந்த உண்மையல்ல என நாம் முடிவுகட்ட வேண்டியதாகிறது. வேதாந்தக் கோட்பாட்டின்படி வாய்த்துள்ள அவதார தத்துவங்களே யுக்திக்கும், இயற்கையின் நடைமுறைக்கும் ஒத்திருக்கின்றன.

பகவான் கீதையில் தம்முடைய பர  சொரூபத்தைப் பற்றிப் பகர்கிற கோட்பாடு வேதாந்தத்தின்படி பிரம்மஞானிக்கும் பொருந்தும். ஆதலால் அப்போதனை அலாதியாக அவதார மூர்த்திக்குரியதென்று நாம் பொருள்படுத்த வேண்டியதில்லை.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s