Sri Paramahamsarin Apta Mozi – 95

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 95

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 94: https://swamichidbhavananda.wordpress.com/2016/07/07/sri-paramahamsarin-apta-mozi-94/ )

மகான்களின் மகிமை

தட்சிணேசுவரத்துக்கு அருகில் கங்கைக் கரையோரத்தில் அரியதாகா என்னும் இடம் ஒன்று இருக்கிறது. பரமஹம்ஸர் வசித்து வந்த காலத்தில் அவ்விடத்துக்கு மஹாபுருஷர் ஒருவர் எங்கிருந்தோ வந்து சேர்ந்தார். அவ்வூரில் அவர் வாசம் செய்துவரும் செய்தி பரமஹம்ஸருடைய காதுக்கு எட்டியது. அப்பெரியாரைச் சென்று பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. ஆகவே அவரைப் போய்ப் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இதைக் குறித்துப்  பரமஹம்ஸர் தட்சிணேசுவரத்தில் வசித்து வந்த ஹலதாரியிடம் பகர்ந்தார். “கிருஷ்ணகிசோரும், நானும் அரியதாகாவுக்கு வந்திருக்கும் சான்றோரைப் பார்க்கச் செல்கிறோம். நீரும் எங்களுடன் வருகின்றீரா?” என்று கேட்டார்.

அதற்கு ஹலதாரி, “எதற்காக அம்மனிதரைப் போய் நாம் பார்க்க வேண்டும்? மானுட உடலம் வெறும் களிமண் கூண்டுக்குச் சமானமானதுதானே! அத்தகைய உடலத்தைப் போய்ப் பார்ப்பதால் வரும் பயன் யாது?” என்றார். அவர் இங்ஙனம் பகர்ந்ததைக் கேட்ட பரமஹம்ஸர் அவருடைய கூற்றை அப்படியே கிருஷ்ணகிசோரிடம் தெரிவிக்க, கிருஷ்ணகிசோருக்குப் பதைபதைப்பு மிக உண்டாய்விட்டது.

“கொழுப்பு வாய்ந்தவர்கள்தாம் இப்படிப் பொருளற்ற பேச்சைப் பேசுவார்கள். சாது மஹா புருஷர் ஒருவர் அல்லும் பகலும் கடவுள் சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கிறார்.  அத்தகையவருடைய சரீரத்தை வெறும் களிமண் கூண்டு என்று சொல்ல எந்த விவேகிதான் துணிவான்! அச்சான்றோர் இடையறாது ஸ்ரீராமனைச் சிந்தித்து வருகின்றார். தெய்வத்தின் பொருட்டுப் பிரபஞ்ச சம்பந்தமான அனைத்தையும் துறந்தவர் அவர். கடவுள் சிந்தனையைத் தவிர வேறு எந்த எண்ணமும் அவருடைய உள்ளத்தில் இல்லை. சைதன்யமே வடிவெடுத்தவர் என்று அவரைப் பகர வேண்டும். அத்தகைய பெரியவரை வெறும் களிமண் பொதி என்று ஹலதாரி பகர்ந்தாரே, இவருடைய அறிவுதான் என்னே!” இங்ஙனம் அவர் இயம்பலானார்.

அதன் பிறகு ஹலதாரியைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் கிருஷ்ணகிசோர் மறுத்துவிட்டார். தட்சிணேசுவர ஆலயத்துக்கு வரும்பொழுது ஹலதாரியைச் சந்திக்க நேரிட்டால் அவரைப் பார்க்காது கிருஷ்ணகிசோர் வேறு ஒரு பக்கம் திரும்பிக்கொள்வார். ஹலதாரி பகவத்கீதை போன்ற வேதாந்த சாஸ்திரங்களைக் கற்றவர். ஆனால் அவைகளை அவர் முறையாக அர்த்தம் பண்ணிக்கொள்ளவில்லை. வேதாந்தத்துக்கு விபரீத வியாக்கியானம் பண்ணியுள்ள போலி வேதாந்தி என்று அவரைப் பகர வேண்டும்.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s