Sri Paramahamsarin Apta Mozi – 99

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 99

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 98: https://swamichidbhavananda.wordpress.com/2016/08/04/sri-paramahamsarin-apta-mozi-98/)

போலி வழிபாட்டைச் செப்பனிடல்

நான் அப்பொழுது படைத்திருந்த ஆனந்த பரவச நிலையில் ஒரு நாள் வாரநாகூரில் கங்கைக்கரைக்குச் சென்றிருந்தேன். ஆங்கு ஜய முகர்ஜி என்பவர் கங்கையில் நீராடிவிட்டு, கரையில் ஓர் இடத்தில் அமர்ந்துகொண்டு இறைவனுடைய நாம ஜபத்தை ஓதிக்கொண்டிருந்தார். வெறுமனே அவருடைய வாய் மட்டும் பகவானுடைய பெயரை உச்சரித்தது. மனது எங்கேயோ அல்ப விஷயங்களில் உழன்றுகொண்டிருந்தது. அவருடைய அத்தகைய பொருத்தமற்ற வழிபாடு என் மனக்கண்ணுக்கு விளங்கிவிட்டது. விரைந்து நான் அவர் அருகில் சென்றேன். கன்னத்தில் இரண்டு அறைகள் விட்டேன்.

தட்சிணேசுவர ஆலயத்தை நிறுவிய இராணி ராசமணி கொஞ்சகாலம் அந்த ஆலயத்திலேயே வசித்து வந்தாள். அவள் அப்பொழுது தரிசனத்துக்காக நாள் தோறும் ஆலயத்துக்கு வருவதுண்டு. வழிபாடு முடிந்ததும் அம்பிகைக்கு நான் சில ஸ்தோத்திரங்கள் பாட வேண்டுமென்று அவள் வேண்டிக்கொண்டாள். அவள் விருப்பத்துக்கு இணங்க அம்பிகை மீது நானும் ஸ்தோத்திரங்கள் பாடிக் கொண்டிருந்தேன். ஆராதனைக்குரிய புஷ்பங்களை வகைப்படுத்திக் கொண்டே அவள் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அதற்கிடையில் அவளுடைய மனது வேறு எங்கேயோ உலக வியவகாரங்களில் போய்விட்டது. நான் அதைக் குறிப்பால் அறிந்தேன். உடனே அவள் கன்னத்தில் இரண்டு அறைகள் கொடுத்தேன். செய்வது இன்னதென்று தெரியாது அவள் திகைத்துப் போய்விட்டாள். கைகூப்பி உட்கார்ந்துகொண்டு மன்னிப்பு கேட்கின்ற பாங்கில் அவள் என்னை நோக்கி இருந்தாள்.

பரமஹம்ஸரின் பிரார்த்தனை

அப்பொழுது என்னிடத்திருந்த இத்தகைய மனப்பான்மையைக் குறித்து நான் மகிழ்ச்சி அடையவில்லை. பிறரிடம் குற்றம் காணும் மனப்பான்மை என்னிடத்து வலுத்து வந்துகொண்டிருந்ததே என்று நான் விசனப்பட்டேன். அப்பொழுது தட்சிணேசுவரத்தில் வசித்து வந்த ஹலதாரியிடத்திலும் இதைப் பற்றி நான் பரிவுடன் பகர்ந்தேன். பிறகு அம்பிகையிடம் நான் வணங்கி வேண்டிக் கொண்டேன். இந்த மனப்பான்மை என்னைவிட்டுப் போய்விட வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்தேன். அவ்வண்னமே என் மனதும் விரைவில் மாறி அமைந்துவிட்டது.

நான் ஆத்ம சாதன தசையிலிருந்தபொழுது எனக்கு லௌகிக சம்பாஷணை ஏதும் பிடிக்கவில்லை. அத்தகைய பேச்சு எங்கேயாவது கிளம்புமாகில் அது எனக்குப் பெரிய வேதனையை உண்டு பண்ணியது. என் எதிரில் உலக விஷயங்களைப் பற்றி யாராவது பேச ஆரம்பித்துவிட்டால் நான் கண்ணீரும் கம்பலையுமாக அம்பிகையிடத்தில் பிரார்த்தனை பண்ணுவேன். “இவ்விஷயங்கள் என் காதில் விழாதிருக்கும்படி தாயே நீ அருள் புரிய வேண்டும்” என்று நான் விண்ணப்பித்துக் கொள்வதுண்டு.

மதுரநாத விஸ்வாசருடன் நான் காசிக்குச் சென்றிருந்தேன். அங்கே நாங்கள் அனைவரும் ராஜா பாபுவினுடைய மாளிகையில் தங்கியிருந்தோம். ஒரு நாள் அந்த மாளிகையின் முன் மண்டபத்தில் நாங்கள் அமர்ந்திருந்தகாலை மதுரநாத விஸ்வாசரும், ராஜாபாபுவும் உலக வியவகாரங்களைப் பற்றி உரையாட ஆரம்பித்தார்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள லாப நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளைப் பற்றிய பேச்சு பெருமிதமாக எழுந்தது. அதனால் எனக்குப் பெரும் வேதனை உண்டாயிற்று. அம்பிகையிடத்தில் அப்பொழுது நான் நொந்துகொண்டு முறையிட்டேன். “தாயே, என்னை நீ எங்கே அழைத்து வந்துள்ளாய்! தட்சிணேசுவர ஆலயத்தில் இருந்தபொழுது நான் அல்லும் பகலும் உனது எண்ணத்திலேயே ஊறியிருந்தேன். ஆனால் இங்கு இத்தகைய உலக வியவகாரங்களையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளும் சூழ்நிலையினுள் என்னை நீ ஏன் அழைத்து வந்துள்ளாய்?” என வினவினார்.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s