Sri Paramahamsarin Apta Mozi – 100

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 100

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 99: https://swamichidbhavananda.wordpress.com/2016/08/11/sri-paramahamsarin-apta-mozi-99/ )

நரேந்திரர் பாடிய பாட்டுக்கள்

இப்படியெல்லாம் இவர் பேசி முடிந்த பிறகு பிற்பகலில் பரமஹம்ஸரும், அவரைப் பார்க்க வந்திருந்தவர்களும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். மாலை நேரத்தில் நரேந்திரர் பாடல்கள் சில்வற்றைப் பாடிப் பரமஹம்ஸருக்கு மகிழ்வூட்டினார்.

“ஓ மனதே! ஹரியைக் குறித்து நீ தியானம் பண்ணு. அவர் மாசுபடியாப் பரம்பொருள். அவர்பால் ஜ்வலிக்கும் ஜோதி எத்தகைய பெருமை வாய்ந்தது! அதனுடன் ஒப்பிடுதற்கு உலகில் வேறு ஒன்றும் இல்லை. அவருடைய சொரூபமோ உள்ளத்தைக் கொள்ளை கொண்டு போக வல்லது. பக்தர்களிடத்து அவர் எத்தகைய வாத்ஸல்யம் கொண்டிருக்கிறார்!”

இத்தகைய கருத்துக்கள் அவர் பாடிய பாடலில் அடங்கியிருந்தன.

மேலும் அவர் பாடியதாவது:

“மங்களம் அனைத்துக்கும் அழகு அனைத்துக்கும் இருப்பிடமாகிய பரம்பொருள் எப்பொழுது என் உள்ளத்தில் எழுந்தருள்வார்? சத்திய சொரூபியாகிய அவரைத் தரிசிக்கும் நன்னாள் எனக்கு எப்பொழுது கிட்டும்? அவரைத் தரிசித்துக்கொண்டு அவர் மயமாய் உள்ள அந்தப் பேரானந்தக் கடலினுள் நான் மூழ்கியிருக்கும் நாள் எந்நாளோ? இறைவா! பேரறிவு சொரூபியாக நீ என் மனத்தகத்து எழுந்தருள்வாயாக. உனது சான்னித்தியத்தைக் கண்டதும் கட்டிலடங்காத என் மனது அமைதியுற்றுவிடும். இப்பொழுது துன்பம் துய்த்திருக்கும் என் மனது அப்பொழுது உன் திருவடிகளிலே இன்பம் துய்க்க ஆரம்பித்துவிடும். எனது உள்ளமாகிய சிதாகாசத்தில் பெருமானே, நீ அமிர்தானந்தமாய் எழுந்தருள்வாயாக. சந்திரன் உதயமாகும்பொழுது சகோரபக்ஷி ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறது. அதே பாங்கில் நீ எழுந்தருள்வதைக் கண்டு நான் ஆனந்தத் தாண்டவம் ஆடும் நாள் எந்நாளோ?”

அன்பர் பணி

இரவு மணி எட்டு. தட்சிணேசுவர ஆலயத்தில் பரமஹம்ஸர் ஆனந்த பரவசம் அடைந்தவராய் இருந்தார். அவர் வசித்து வந்த அறைக்கு வடபுறம் இருந்த நீண்ட தாழ்வாரத்தில் இங்குமங்கும் அவர் உலாவிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய உள்ளத்தினின்று பேரானந்தம் ஊற்றெடுத்துத் ததும்பிக் கொண்டிருந்தது. ஆனந்த பரவச நிலையில்  இடையிடையே யாருடனோ அவர் பேசிக்கொண்டிருந்தது போன்று தென்பட்டது. “உன்னால் என்ன செய்ய முடியும்?” அவர் பகர்ந்தார். அன்னை பராசக்தியின் அருளுக்குப் பாத்திரமாயிருந்த அவரை மாயை இனி வசப்படுத்த முடியாது என்று ஒருவேளை அவர் பகர்ந்திருக்கலாம். அன்று இரவு நரேந்திரரும், மஹேந்திரரும், பிரியர் என்பவரும் பரஹம்ஸ தேவருடன் தட்சிணேசுவரத்திலேயே தங்கிவிடுவதாகத் தீர்மானித்திருந்தார்கள்.  அதைக் குறித்துப் பரமஹம்ஸர் பெருமகிழ்ச்சி அடைந்திருந்தார். அம்மூவருள் நரேந்திரர் அங்கு தங்கியிருக்கத் தீர்மானித்திருந்தது அவருக்கு மட்டில்லா மகிழ்ச்சியை ஊட்டிற்று.

அன்னை சாரதாதேவியார் அப்பொழுது தட்சிணேசுவர ஆலயத்தில் வசித்திருந்தார். பரமஹம்ஸ தேவரின் பொருட்டும், அவருடைய அருளுக்குப் பாத்திரமாயிருந்த சிஷ்யர்கள் பொருட்டும் அன்னை அமுது சமைத்திருந்தார். பக்தர்கள் குழாம் இது போன்று அடிக்கடி தட்சிணேசுவரத்தில் வந்து தங்கியிருப்பது உண்டு. அதை முன்னிட்டு ஏற்படும் பணச் செலவில் பெரும்பகுதியைச் சுரேந்திரர் தம் பொறுப்பாக ஏற்றிருந்தார். பரமஹம்ஸரின் அறையின் தென்கிழக்குத் தாழ்வாரத்தில் இவர்கள் எல்லோரும் அமுது பண்ணுதற்காகவென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s