Sri Paramahamsarin Apta Mozi – 101

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 101

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 100: https://swamichidbhavananda.wordpress.com/2016/08/18/sri-paramahamsarin-apta-mozi-100/ )

மனதை மாசுபடுத்தும் பேச்சு

பரமஹம்ஸதேவரின் அறையினது கீழ் வாயில் அருகில் நரேந்திரரும், மஹேந்திரரும் அமர்ந்துகொண்டு தங்களுக்கு இடையிலே ஏதோ உரையாட ஆரம்பித்தார்கள்.

நரேந்திரர்: இக்காலத்திய இளைஞரைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

மஹேந்திரர்: அவர்கள் அவ்வளவு மோசமானவர்கள் அல்லர். ஆனால் அவர்களுக்குச் சன்மார்க்க போதனையையோ, சமய உணர்ச்சியையோ ஊட்டுவார் யாருமில்லை.

நரேந்திரர்: ஆனால் எனக்குத் தோன்றிய அளவில் அவர்கள் நிலைமை நாளுக்கு நாள் மிக மோசமானதாகிறது. அவர்கள் புகை பிடிக்கிறார்கள், பொருள்படாத புல்லிய விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் அவர்கள் ஊக்கம் மிகக் கொண்டிருக்கின்றனர். பகட்டான வாழ்க்கையில் அவர்களுக்கு விருப்பம் மிக உண்டு. இடையிடையே கல்லூரிகளுக்குப் போகாது இருந்துவிடுவதும் உண்டு. இவைபோன்ற பொருள்படாத பழக்கவழக்கங்கள் பல அவர்களிடம் தென்படுகின்றன. போகத்தகாத இடங்களுக்குப் போகின்ற சிலரையும் நான் பார்த்திருக்கிறேன்.

மஹேந்திரர்: நாங்கள் படித்து வந்த காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளை நாங்கள் கண்டது கிடையாது.

நரேந்திரர்: விதவிதமான பாங்குடைய மாணாக்கர்களோடு நீங்கள் ஒரு வேளை நெருங்கிப் பழகாது இருந்திருப்பீர்கள். ஒழுக்கம் தவறியவர்களோடு அவர்கள் தாராளமாக உறவாடுவதையும் நான் கண்டிருக்கிறேன். அத்தகைய கூடா ஒழுக்கம் உடையவர்களோடு அவர்கள் உறவாடவும் துணிந்துவிட்டார்கள் போலும்!

மஹேந்திரர்: அப்படியாயின் அது மிகவும் விபரீதமானதே.

நரேந்திரர்: தீய ஒழுக்கங்களில் மேலும் மேலும் அழுந்திர்விடுபவர்கள் உண்டு. இத்தகைய நடத்தையினின்று அவர்களைத் தடுத்துவிடுதல் பொருட்டுப் பெற்றோர்களும், கல்லூரி நிர்வாகிகளும் கருத்துமிக எடுத்துக் கொண்டால் நலமாயிருக்கும்.

இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருந்தபொழுது பரமஹம்ஸ தேவர் அருகில் வந்தார். “நல்லது, நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?” என்று புன்னகை பூத்தவராக அவர் வினவினார்.

நரேந்திரர்: பள்ளிக்கூடத்து, கல்லூரி மாணாக்கர்கள் எத்தகைய பாங்குடையவர்களாக இருக்கிறார்கள் என்று மஹேந்திரரிடம் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இக்காலத்திய இளைஞர்களுடைய ஒழுக்கம் பாராட்டத்தக்க நிலையில் இல்லை.

இதைக் கேட்டதும் பரமஹம்ஸ தேவர் கூர்த்த முகமுடையவர் ஆய்விட்டார். எச்சரிக்கை செய்கின்ற பாங்கில் மஹேந்திரரிடம் அவர் மேலும் இயம்புவாராயினர்: “இது போன்ற சம்பாஷணை பாராட்டத்தக்கதன்று. கடவுளைப் பற்றிய பேச்சை வேண்டியவாறு பேசலாம். ஆனால் மனதைப் பாழ்படுத்துகின்ற பேச்சு ஒன்றிலும் மனிதன் ஈடுபடலாகாது. நீ வயதில் முதிர்ந்தவன், அறிவாளி. அப்படியிருந்தும் இது போன்ற புல்லிய விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு ஒருவிதத்தில் நீ ஆதரவு கொடுத்திருக்கின்றாய். இது பொருந்தாது.”

நரேந்திரருக்கு அப்பொழுது வயது பத்தொன்பது. மஹேந்திரருக்கு வயது இருபத்தெட்டு. இங்ஙனம் பரமஹம்ஸர் அவரைத் திரஸ்கரித்தபொழுது மஹேந்திரர் சிறிது நாணமடைந்தவரானார். மற்றவர்களும் வாய்பொத்தி வெறுமனே இருந்தனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s