Sri Paramahamsarin Apta Mozi – 102

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி  102

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 101: https://swamichidbhavananda.wordpress.com/2016/08/25/sri-paramahamsarin-apta-mozi-101/)

சத் காலக்ஷேபம்

அன்பர்கள் அமுது பண்ணிக் கொண்டிருந்தபொழுது பரமஹம்ஸ தேவர் பரமதிருப்தி அடைந்தவராக அக்காட்சியைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அன்றிரவு பேரானந்தத்தில் மூழ்கியவராக அவர் இருந்தார்.

பரமஹம்ஸருடைய அறையில் பாய்கள் சில விரிக்கப் பெற்றிருந்தன. உணவு அருந்திய பிறகு பக்தர்கள் அந்தப் பாய்களின் மீது அமர்ந்தார்கள். ‘ஞான வெளியில் அன்பு நிலா உதயமாகிறது’ என்று துவங்குகிற பாடலைப் பாடும்படி பரமஹம்ஸர் நரேந்திரரிடம் வேண்டினார். அவரும் அப்பாடலைப் பாடினார். வேறு சில அன்பர்கள் அவர் பாடிய பாட்டுக்குப் பக்கவாத்தியங்களாகிய மிருதங்கம், தாளம் முதலியவைகளை நாதித்தார்கள். அத்திருக்கூட்டத்திலிருந்து பேரானந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. பாடலின் கருத்துக்களாவன:

“ஞானவெளியிலே அன்பு என்னும் நிறை நிலா உதயமாகிறது. அன்பு என்னும் பிரவாகம் நாலா பக்கமும் பெருக்கெடுத்துப் பரவுகிறது. இறைவா! நீ பேரானந்த சொரூபி. உன் திருவடி வெல்க. உன்னைச் சூழ்ந்துள்ள அன்பர்கள் சந்திரனைச் சூழ்ந்துள்ள நட்சத்திரங்கள் போன்று இலங்குகின்றனர். பக்தவத்ஸலனாகிய அப்பரமன் கருணைகூர்ந்து அவர்களோடு இன்புற்று விளையாடுகின்றார். பரமபதத்தின் வாயில் இன்று முற்றும் திறந்துவைக்கப் பெற்றிருக்கிறது. வசந்தகாலத்து மந்தமாருதம் நாளையே புதுப்பித்து எல்லை மருவாப் பேரானந்தத்தை ஊட்டுகிறது. இறைவனுடைய அன்பு என்னும் நறுமணத்தை அம்மெல்லிய பூங்காற்று விண்ணுலகினின்று மண்ணுலகுக்குக் கொண்டு வருகிறது. அதை நுகர்ந்த யோகியர்கள் பேரானந்தப் பிராப்தியில் உடலையே மறந்தவர்கள் ஆயிருக்கின்றனர். மண்ணுலகு என்னும் நீர்ப்பரப்பிலே இறைநாட்டத்துக்குரிய நன்னாள் என்னும் தாமரை மலருகிறது. ஆனந்த வடிவினள் ஆகிய அன்னை பராசக்தி அம்மலர்மிசை ஏகியுள்ளாள். அதினின்று சொட்டும் தேனை அருந்திப் பக்தர்கள் என்னும் தேனீக்கள் பரவசநிலை அடைந்திருக்கின்றன. அன்னையின் அருளொளி நிறைந்த அம்முகவிலாசம் உலகத்தவர் உள்ளத்தை கவர்ந்திழுத்துத் தன்மயமாக்குகிறது. அன்பர்கள் பல அன்னையின் திருவடிக்கு அருகில் ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றனர். ஒப்பற்ற இனிமை அன்னையின் சொரூபத்தினின்று எங்கும் வியாபகமாய்க் கொண்டிருக்கிறது. மனத்தகத்து அன்னை எழுந்தருளுங்கால் எல்லை மருவா நிறைவு ஆங்கு உறுதி பெறுகிறது. அன்பர்காள்! இப்பரமானந்தத்தில் நிலைத்திருக்க அனைவரும் விரைந்து வாருங்கள்.”

பரமஹம்ஸ தேவரும் பின்பு பாடவும் ஆடவும் செய்தார். அன்பர்களும் பாடிக்கொண்டு அவரைச் சுற்றிச் சுற்றி நடனம் புரிந்தனர். இங்ஙனம் சங்கீர்த்தனம் முடிந்த பிறகு குருதேவர் தமது அறைகு வடகிழக்கிலிருந்த தாழ்வாரத்தில் இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார். ஆங்கு ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு ஹஸ்ராவும், மஹேந்திரரும் தங்களுக்கிடையில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். இன்னும் சில பக்தர்களும் அவர்களோடு ஆங்கு அமர்ந்துகொண்டிருந்தனர். குருதேவர் அவர்களுக்கு அருகில் வந்தார். நின்று கொண்டிருந்த வண்ணம் அன்பவர் ஒருவரிடம் கேள்வி ஒன்று கேட்டார். “உறங்கும்பொழுது நீ கனவு காண்பதுண்டா?”

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s