Sri Paramahamsarin Apta Mozi – 104

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 104

wpid-paramahamsarin-apta-mozi.png.png

முந்தைய பகுதி – மொழி 103: https://swamichidbhavananda.wordpress.com/2016/09/15/sri-paramahamsarin-apta-mozi-103/

பரமஹம்ஸரின் மனநிலை

பக்தர்கள் சிலர் பரமஹம்ஸருடன் தட்சிணேசுவரத்திலேயே இராத் தங்கியிருந்தார்கள். அதிகாலையில் அவர்கள் துயில் எழுந்திருந்தார்கள். அப்பொழுது அதிசயமான காட்சி ஒன்றை அவர்கள் கண்டார்கள். அவர்களுக்கு முன்னமேயே பரமஹம்ஸர் துயில் எழுந்திருந்தார். அவர் எப்பொழுது எழுந்திருந்தார் என்பது இவர்களுக்குத் தெரியாது. ஒரு பாலன் போன்று பரமஹம்ஸர் உடல் உணர்ச்சியையெல்லாம் கடந்தவராக இருந்தார். தமது சரீரத்தின் மீது உடை ஒன்றும் இல்லாது அவர் நிர்வாணமாய் இருந்தார். அறைக்குள் இங்குமங்கும் அவர் ஒருவிதப் பரவச நிலையில் உலாவிக் கொண்டிருந்தார். வெவ்வேறு தெய்வங்களின் திருநாமங்களை அவர் உச்சரித்துக்கொண்டிருந்தார். அமிர்தம் போன்று அவருடைய குரலினின்று இனிமை சொட்டிக் கொண்டிருந்தது. சில வேளைகளில் மேல் திசையிலிருந்த கங்கையை அவர் உற்றுப் பார்த்தார்; வேறு சில வேளைகளில் தமது அறையில் சுவர்களிலே அமைக்கப் பெற்றிருந்த தெய்வங்களின் படங்களை உற்று நோக்கினார்; அவைகளின் எதிரே அவர் தலைவணங்கி நின்றார். இறைவனுடைய திருநாமங்களை இனிய குரலில் அவர் ஓயாது உச்சரித்துக்கொண்டே இருந்தார். ‘வேதம், புராணம், ஆகமம், கங்கை, கீதை, காயத்ரீ, பகவான், பக்தன், பாகவதம்’ இத்தகைய பதங்களை அவர் திருவாய் மலர்ந்தருளினார். கீதையைக் குறித்து அவர் பலதடவை பகர்வாராயினர்.

கீதையின் அடிப்படைக் கோட்பாடு

கீதா என்னும் சொல்லை மாற்றியமைத்தால் ‘தாகீ’ என்பதாகிறது. தியாகி என்பதின் திரிபு தாகீ. தியாகம் பண்ணியவர்களுக்கே பரம்பொருள் கிட்டுகிறது என்பது கீதையின் கருத்து. உலக சம்பந்தமான அனைத்தையும் தியாகம் பண்ணிவிடு என்பதே கீதையின் அடிப்படைக் கோட்பாடு ஆகும்.

அனைத்தும் சக்தி சொரூபம்

இடையிடையே அவர் பகர்வாராயினர்: “தாயே, இப்பிரபஞ்சமாகத் தென்படுபவள் நீயே. பரப்பிரம்மமாக இருப்பவள் நீயே. புருஷ தத்துவம் எனப் பகரப்பெறுவதும் நீயே. பிரகிருதி என்று பகரப்பெறுவதும் நீயே. அகிலாண்டமும் ஆயிருப்பவள் நீயே. அகண்ட நிர்க்குணப் பிரம்மம் நீயே. அனைத்துமாய் உள்ள சகுணப் பிரம்மம் நீயே. இருபத்து நான்கு தத்துவங்களாகத் தோன்றிக் கொண்டிருப்பவளும் நீயே”

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s