Monthly Archives: November 2016

Question & Answer – 35

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 35: நானாஜீவவாதக் கட்டளைப்படி ஈசுவரன் நிர்மல ஜலப்பிரதி பிம்பன்; ஜீவகோடிகளாகிய நாம் மலின ஜலப்பிரதி பிம்பர்கள்; இப்படி இருக்க ஈசுவரனுக்கு மட்டும் பஞ்சகிருத்தியங்கள் செய்ய அதிகாரம் இருக்க நமக்கு அதில் ஒரு சிறிதும் தெரிந்துகொள்ளக்கூட முடியாமல் இருக்கிறோம். இதன் காரணமென்ன?

பதில்: மாயா சகிதனாயிருக்கும் பரம்பொருளை ஈசுவரன் என்கிறோம். மாயா ரகிதனாயிருக்கும் அதே பொருளை நிர்க்குணப் பிரம்மம் என்கிறோம். தன் பெருமையை விளக்குதற்குத் தன்னிடத்திலேயே அமைந்துள்ள சக்தியை மாயை என்கிறோம். சுடுவது தீயின் சக்தி. வெண்மையாயிருப்பது பாலின் சக்தி. தீயினிடத்திருந்து சூட்டைப் பிரிக்க முடியாது. பாலினிடத்திருந்து வெண்மை நிறத்தைப் பிரிக்க முடியாது. ஈசுவரனிடத்திருந்து அவனுடைய மாயா சக்தியைப் பிரிக்க முடியாது. ஆகையினால்தான் அவன் மாதொரு பாகன் ஆனவன் என்றும், அர்த்த நாரீசுவரன் என்றும் அழைக்கப்படுகிறான்.

ஜீவர்களாகிய நாம் ஈசுவரனுக்கு அந்நியமாக இல்லை. கிரணங்களெல்லாம் சூரியனைச் சார்ந்திருப்பது போன்றும், அலைகளெல்லாம் கடலைச் சார்ந்திருப்பது போன்றும் ஜீவகோடிகளனைத்தும் ஈசுவரனைச் சார்ந்திருக்கின்றன. சூரியனைச் சர்வசக்திமான் என்று சொல்லலாம். கிரணங்களை அப்படிச் சொல்ல முடியாது. சூரியன் செய்கிற கிருத்தியங்களையெல்லாம் கிரணங்கள் ஒரு சிறிய அளவில் செய்து வருகின்றன. பேராற்றலுடன் பெருங்கிருத்தியங்களைச் செய்ய அவைகளுக்கு முடியாது. கடல் எங்கும் வியாபித்திருப்பது போன்று, அலைகள் எங்கும் வியாபித்திருப்பதில்லை. கடலுக்குள்ள சக்தி அலைக்கு இல்லை. ஆனால் கடல் தன் செயலை அலைகள் மூலமாகவே செய்கிறது. ஈசுவரன் தனது பஞ்சகிருத்தியங்களையும் ஜீவர்கள் மூலமாகவே செய்கிறார். ஆதலால் அவருடைய கிருத்தியங்களுக்கு நாம் புறம்பானவர்கள் என்று கருதலாகாது. அக்கிருத்தியங்களைப் பற்றி நாம் ஒன்றும் அறியாதவர்களல்லர். சிறிதளவு அறிந்தும், சிறிதளவு பஞ்ச கிருத்தியங்களைச் செய்பவர்களாகவும் நாம் இருந்து வருகிறோம். சிருஷ்டித் தொழில் நம் மூலம் நிகழ்வது வெளிப்படை. ஸ்திதி அல்லது நம்மைப் பாதுகாத்து வைத்தல் என்னும் செயலிலும் நாம் பங்கெடுத்துத்தான் வருகிறோம். பிறகு நம் உடல் அழிதற்கு நமது வினைப்பயன் மூலமாக நாமும் முகாமையாகவிருந்து வருகிறோம். இனி மறைத்தல், அருளல் என்னும் ஏனைய இரண்டு கிருத்தியங்கள் ஆத்மசாதனத்தோடு சம்பந்தப்பட்டவைகள். அக்ஞானத்தில் இருப்பவர்களுக்கு இருளில் இருப்பவர்கள் போன்று உண்மை ஏகதேசம் விளங்குகிறது; முழுவதும் விளங்குவதில்லை. பக்குவம் அடைந்து அருளுக்குப் பாத்திரம் ஆகிறவர்கள் பகல் வேளையில் பொருள்களை உள்ளபடி காண்பது போன்று பரம்பொருளைக் காணவும் வல்லவராகின்றனர். எனவே நாம் ஈசுவரனுக்கோ, அவனுடைய பஞ்சகிருத்தியங்களுக்கோ அந்நியமானவர்களல்லர்.

நிர்மல ஜலம், மலின ஜலம் ஆகிய இரண்டுக்குமிடையிலுள்ள வேற்றுமையை இப்பொழுது தெரிந்துகொள்ள வேண்டும். அசையாது தேங்கியிருக்கும் நன்னீர் நிர்மல ஜலம், சூரிய பிம்பம் அத்தகைய நீரில் உள்ளபடி ஒளிரும். ஆனால் அசைந்து அலைகளாகச் சிதறடைந்து கிடக்கும் நீரை மலின நீர் என்று மொழியலாம். அதன் மீது சூரிய பிம்பம் பிரதிபலித்தாலும் சூரியனை உள்ளபடி காட்டுவதில்லை. திரிவுபடுத்தியே அதை மலின நீர் விளக்குகிறது. அப்படித் திரிவுபட்ட பிம்பங்களே ஜீவர்களாகிய நாம். நமது சித்தத்தைச் சலனமற்றதாகவும் நிர்மலமாகவும் நாம் செய்யவல்லவர்களாகிற பொழுது அருளுக்குப் பாத்திரமாகிறோம். நமது நிஜசொரூபம் விளங்குகிறது. ஈசுவரனுக்கும், ஜீவனுக்குமுள்ள தொடர்பும் அப்பொழுது தெளிவாகிறது. எனவே அறிந்திருக்கிற வேளையிலும், அறியாத வேளையிலும் ஈசுவரனுக்கு அந்நியமாக நமக்கு வியக்தியில்லை. பக்குவம் அடைந்து உண்மையை அறிந்துகொள்ளுங்கால் வேற்றுமையும், ஐயமும் தாமே அகன்றுபோய்விடுகின்றன.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Sri Paramahamsarin Apta Mozi – 111

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 111

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 110: https://swamichidbhavananda.wordpress.com/2016/11/03/sri-paramahamsarin-apta-mozi-110/)

துர்க்கை பூஜை

புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷம் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்களில் துர்க்கை பூஜை வங்காளத்தில் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது. உபாசனைக்கென்று துர்க்கையின் வடிவம் களிமண்ணைக் கொண்டு அலங்காரமாக அமைக்கப் பெற்றிருக்கும். துர்க்கையுடன் லக்ஷ்மி, சரஸ்வதி, கணேசன், முருகன் ஆகியவர்களின் மூர்த்திகளும் சேர்ந்தே அமைக்கப் பெற்றிருக்கும். மஹிஷாசுரன் என்னும் ஓர் அரக்கனைத் துர்க்காதேவி சம்ஹாரம் செய்வதாகவும் அவ்வடிவம் அமைக்கப் பெற்றிருக்கும். அம்பிகையின் சிங்கமும், அந்த அசுரன் மீது பாய்ந்து கொண்டிருக்கும். அம்மூர்த்தியின்கண் தேவியை ஆவாஹனம் செய்து மூன்று நாட்களுக்கு மக்கள் சிறப்பாக வழிபடுகின்றனர். வங்காள நாடு முழுவதிலும் அது ஒரு தேசிய விழாவாகும். பூஜை முற்றுப் பெற்றான பிறகு விஜய தசமியன்று அம்பிகையை விசர்ஜனம் செய்துவிட்டு வழிபட்ட மூர்த்தியை எடுத்துச் சென்று ஓர் ஏரியிலோ, நதியிலோ ஜல விசர்ஜனம் செய்துவிடுவார்கள்.

durga-pooja-belur-math

அத்தகைய விஜய தசமியன்று மஹேந்திரர் தட்சிணேசுவரத்துக்கு வந்து பரமஹம்ஸருடைய அறையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது ராக்கால் என்னும் இளைஞர் பரமஹம்ஸ தேவரோடு தட்சிணேசுவரத்தில் வசித்து வந்தார். நரேந்திரரும், பவநாதரும் அடிக்கடி தட்சிணேசுவரத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.

மஹேந்திரரிடம் பரமஹம்ஸர் கேள்வி ஒன்று கேட்டார்:

“துர்க்கை பூஜையை முன்னிட்டு நீங்கள் விடுமுறை ஏதேனும் எடுத்துக் கொண்டீர்களா?”

மஹேந்திரர்: ஆம் ஐயனே, பூஜைக்காகவென்று விடுமுறை தரப்பட்டிருந்தது. பூஜை நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது நான் நாள்தோறும் கேசவ சந்திர சேனருடைய வீட்டுக்குச் சென்று வந்தேன்.

பரமஹம்ஸர்: அப்படியா, மிக நன்று

மஹேந்திரர்: துர்க்கை பூஜையைப் பற்றிய ஒரு நூதனமான விளக்கத்தை ஆங்கு நான் கேள்விப்பட்டேன்.

பரமஹம்ஸர்: அதையெல்லாம் சொல் பார்ப்போம்.

துர்க்கா வடிவத்தின் தத்துவம்

மஹேந்திரர்: கேசவ சந்திர சேனர் தினந்தோறும் அவருடைய வீட்டில் பிரார்த்தனைகள் செய்வார். முற்பகல் பத்துமணி அல்லது பதினொரு மணி வரையில் அவை நடைபெற்று வந்தன. இங்ஙனம் வழிபாடு நிகழ்ந்து கொண்டிருந்தபொழுது துர்க்கையைப் பற்றிய அத்யாத்மிகக் கருத்தை அவர் வெளியிட்டார்:

“சாதகன் ஒருவன் தன்னுடைய மனத்தகத்துத் துர்க்கா தேவியைப் பிரதிஷ்டை செய்து வைத்துவிடுவானாகில் அதன் விளைவாக லக்ஷ்மியும், சரஸ்வதியும், கணபதியும், முருகக் கடவுளும் ஆங்கு எழுந்தருளிவிடுவார்கள். அதாவது செல்வமும், கல்வியும், வெற்றியும், ஆற்றலும் வந்துவிடுகின்றன. அம்பிகை மனத்தகத்து எழுந்தருளியிருப்பதைச் சாதகன் ஒருவன் அனுபூதியில் அறிவானாகில் இந்தத் தெய்வ சம்பத்துக்களெல்லாம் முயற்சி ஒன்றும் இல்லாமலேயே தாமாக வந்து அமைந்துவிடுகின்றன.”

கேசவ சந்திர சேனர் நடத்திய பிரார்த்தனைகளின் விரிவான பகுதிகளைப் பற்றிப் பரமஹம்ஸர் கேள்விகள் பல கேட்டார். அதற்கு ஏற்ற விடைகளை மஹேந்திரர் தந்து கொண்டிருந்தார். இவை யாவையும் விசாரித்தான பிறகு பரமஹம்ஸ தேவர் ஆழ்ந்த கருத்து அடங்கிய விஷயம் ஒன்றை மஹேந்திரருக்குச் சொன்னார்.

“அருளை நாடி இங்குமங்கும் ஓட வேண்டாம். நீ இவ்விடத்துக்கே வருவாயாக. அன்னையின் அருளால் அது உனக்கு இனிது அகப்படும். இவ்விடத்துக்குரிய அந்தரங்கச் சிஷ்யர்கள் இங்கேதான் வருவார்கள். நரேந்திரன், ராக்கால், பவநாத் போன்ற தூய இளைஞர்கள் இவ்விடத்துக்கென்றே உரியவர்கள். அவர்களை சாமான்ய மக்கள் என்று கருத வேண்டாம். அவர்களுக்கு நீ ஒருநாள் விருந்து செய்து வை. அத்தகைய தூய ஆத்மாக்களுக்கு விருந்து ஓம்புதல் போற்றுதற்குரிய பெரும்செயலாகும்” என்று பகர்ந்துவிட்டு “நரேந்திரனைப் பற்றி நீ என்ன நினைக்கின்றாய்?” என வினவினார்.

(தொடரும்…)