Question & Answer – 32

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 32: உடலிலிருந்து ஆத்மா பிரிந்தபின் அவ்வாத்மா எப்படி இருக்கும்? இதற்கு விளக்கம் தருவிக்க வேண்டுகிறேன்.

பதில்: ஆத்மாவுக்குப் போக்கும் இல்லை; வரவும் இல்லை. போக்க்கும் வரவும் இல்லாப் புண்ணியன் என்று அவர் போற்றப்படுகின்றார். பழம் மரத்தை ஒட்டிக் கொண்டிருக்கும் வரையில் மரத்திலிருந்து சக்தியைப் பெறுகிறது. மரத்தை விட்டுப் பிரிந்ததும் அது காய்ந்து போகிறது. சரீரம் ஆத்மாவைச் சார்ந்திருக்கும் வரையில் அதனிடத்து இயக்கம் இருக்கிறது. ஆத்மாவை விட்டுப் பிரிந்தபின் அவ்வடிவம் அழிகிறது. இங்கு பிரிவது உடலே அன்றி ஆத்மா அன்று.

ஸ்தூல சரீரம், சூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் என்னும் மூன்று சரீரங்கள் ஆத்மாவை மறைக்கும் திரைகளாக இருக்கின்றன. சரீர உணர்வுக்குக் கட்டுப்பட்டு இருக்கின்றபொழுது நாம் சரீரம் மயமாக இருக்கின்றோம். அப்பொழுது நாம் ஜீவாத்மாக்கள் என்று அழைக்கப்படுகின்றோம். நம் உணர்வு இம்மூன்று சரீரங்களையும் கடந்து செல்லும்பொழுதுதான் ஆன்மிக உணர்வு பெறுகின்றோம். தன்னில் தானாக இருக்கும் பேருணர்வு மயமாக ஆத்மா யாண்டும் இருக்கிறது. மனது ஆத்மாவைச் சார்ந்திருக்கிறபொழுது அதனிடத்துள்ள ஜடத்தன்மை நீங்கி ஆத்ம சொரூபத்தில் அது ஒன்றித்துவிடுகிறது. விறகுக் கட்டை நெருப்பில் போட்டதும் நெருப்பு மயமாவது போன்று சொரூபத்தில் போடப்பட்ட மனது சொரூபமயமாய் விடுகின்றது. மனது சொரூபமயமாகும்பொழுது மனதின் தோற்றத்துக்குக் காரணமாயிருந்த அக்ஞானம் என்னும் காரண சரீரமும் அழிகின்றது. நாம் அகண்ட சச்சிதானந்த சொரூபம் ஆகிவிடுகின்றோம்.

ஸ்தூல உடலுக்கு நாசம் உண்டாகும் பொழுது சூக்ஷ்ம சரீரமும், காரண சரீரமும் ஆத்மாவைப் பற்றியிருக்கின்றன. சூக்ஷ்ம சரீரம் தக்க சூழ்நிலை வரும்பொழுது மற்றொரு ஸ்தூல சரீரத்தை எடுக்கிறது. அதைத்தான் பிறப்பு என்கிறோம். ஸ்தூல சரீரம் அழிவதை இறப்பு என்கிறோம். எனவே பிறப்பு இறப்பு என்பன ஸ்தூல சரீரத்துக்கே அன்றி ஆத்மாவுக்கு இல்லை. ஞானத்தின் மூலமாகத்தான் சூக்ஷ்ம சரீரத்தை அழிக்க முடியும். மனோநாசம் நிகழும்பொழுது மீண்டும் நமக்குப் பிறப்பு எடுக்கும் நிலை இல்லை. மனோநாசம் நிகழும் வரையில் பிறப்பும், இறப்பும் இருக்கும்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s