Sri Paramahamsarin Apta Mozi – 111

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 111

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 110: https://swamichidbhavananda.wordpress.com/2016/11/03/sri-paramahamsarin-apta-mozi-110/)

துர்க்கை பூஜை

புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷம் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்களில் துர்க்கை பூஜை வங்காளத்தில் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது. உபாசனைக்கென்று துர்க்கையின் வடிவம் களிமண்ணைக் கொண்டு அலங்காரமாக அமைக்கப் பெற்றிருக்கும். துர்க்கையுடன் லக்ஷ்மி, சரஸ்வதி, கணேசன், முருகன் ஆகியவர்களின் மூர்த்திகளும் சேர்ந்தே அமைக்கப் பெற்றிருக்கும். மஹிஷாசுரன் என்னும் ஓர் அரக்கனைத் துர்க்காதேவி சம்ஹாரம் செய்வதாகவும் அவ்வடிவம் அமைக்கப் பெற்றிருக்கும். அம்பிகையின் சிங்கமும், அந்த அசுரன் மீது பாய்ந்து கொண்டிருக்கும். அம்மூர்த்தியின்கண் தேவியை ஆவாஹனம் செய்து மூன்று நாட்களுக்கு மக்கள் சிறப்பாக வழிபடுகின்றனர். வங்காள நாடு முழுவதிலும் அது ஒரு தேசிய விழாவாகும். பூஜை முற்றுப் பெற்றான பிறகு விஜய தசமியன்று அம்பிகையை விசர்ஜனம் செய்துவிட்டு வழிபட்ட மூர்த்தியை எடுத்துச் சென்று ஓர் ஏரியிலோ, நதியிலோ ஜல விசர்ஜனம் செய்துவிடுவார்கள்.

durga-pooja-belur-math

அத்தகைய விஜய தசமியன்று மஹேந்திரர் தட்சிணேசுவரத்துக்கு வந்து பரமஹம்ஸருடைய அறையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது ராக்கால் என்னும் இளைஞர் பரமஹம்ஸ தேவரோடு தட்சிணேசுவரத்தில் வசித்து வந்தார். நரேந்திரரும், பவநாதரும் அடிக்கடி தட்சிணேசுவரத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.

மஹேந்திரரிடம் பரமஹம்ஸர் கேள்வி ஒன்று கேட்டார்:

“துர்க்கை பூஜையை முன்னிட்டு நீங்கள் விடுமுறை ஏதேனும் எடுத்துக் கொண்டீர்களா?”

மஹேந்திரர்: ஆம் ஐயனே, பூஜைக்காகவென்று விடுமுறை தரப்பட்டிருந்தது. பூஜை நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது நான் நாள்தோறும் கேசவ சந்திர சேனருடைய வீட்டுக்குச் சென்று வந்தேன்.

பரமஹம்ஸர்: அப்படியா, மிக நன்று

மஹேந்திரர்: துர்க்கை பூஜையைப் பற்றிய ஒரு நூதனமான விளக்கத்தை ஆங்கு நான் கேள்விப்பட்டேன்.

பரமஹம்ஸர்: அதையெல்லாம் சொல் பார்ப்போம்.

துர்க்கா வடிவத்தின் தத்துவம்

மஹேந்திரர்: கேசவ சந்திர சேனர் தினந்தோறும் அவருடைய வீட்டில் பிரார்த்தனைகள் செய்வார். முற்பகல் பத்துமணி அல்லது பதினொரு மணி வரையில் அவை நடைபெற்று வந்தன. இங்ஙனம் வழிபாடு நிகழ்ந்து கொண்டிருந்தபொழுது துர்க்கையைப் பற்றிய அத்யாத்மிகக் கருத்தை அவர் வெளியிட்டார்:

“சாதகன் ஒருவன் தன்னுடைய மனத்தகத்துத் துர்க்கா தேவியைப் பிரதிஷ்டை செய்து வைத்துவிடுவானாகில் அதன் விளைவாக லக்ஷ்மியும், சரஸ்வதியும், கணபதியும், முருகக் கடவுளும் ஆங்கு எழுந்தருளிவிடுவார்கள். அதாவது செல்வமும், கல்வியும், வெற்றியும், ஆற்றலும் வந்துவிடுகின்றன. அம்பிகை மனத்தகத்து எழுந்தருளியிருப்பதைச் சாதகன் ஒருவன் அனுபூதியில் அறிவானாகில் இந்தத் தெய்வ சம்பத்துக்களெல்லாம் முயற்சி ஒன்றும் இல்லாமலேயே தாமாக வந்து அமைந்துவிடுகின்றன.”

கேசவ சந்திர சேனர் நடத்திய பிரார்த்தனைகளின் விரிவான பகுதிகளைப் பற்றிப் பரமஹம்ஸர் கேள்விகள் பல கேட்டார். அதற்கு ஏற்ற விடைகளை மஹேந்திரர் தந்து கொண்டிருந்தார். இவை யாவையும் விசாரித்தான பிறகு பரமஹம்ஸ தேவர் ஆழ்ந்த கருத்து அடங்கிய விஷயம் ஒன்றை மஹேந்திரருக்குச் சொன்னார்.

“அருளை நாடி இங்குமங்கும் ஓட வேண்டாம். நீ இவ்விடத்துக்கே வருவாயாக. அன்னையின் அருளால் அது உனக்கு இனிது அகப்படும். இவ்விடத்துக்குரிய அந்தரங்கச் சிஷ்யர்கள் இங்கேதான் வருவார்கள். நரேந்திரன், ராக்கால், பவநாத் போன்ற தூய இளைஞர்கள் இவ்விடத்துக்கென்றே உரியவர்கள். அவர்களை சாமான்ய மக்கள் என்று கருத வேண்டாம். அவர்களுக்கு நீ ஒருநாள் விருந்து செய்து வை. அத்தகைய தூய ஆத்மாக்களுக்கு விருந்து ஓம்புதல் போற்றுதற்குரிய பெரும்செயலாகும்” என்று பகர்ந்துவிட்டு “நரேந்திரனைப் பற்றி நீ என்ன நினைக்கின்றாய்?” என வினவினார்.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s