Monthly Archives: December 2016

Question & Answer – 37

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 37: சங்கரரின் அத்வைத வேதாந்தத்தின்படி ஆத்மா ஒன்று. பல ஜீவாத்மாக்கள் காணப்படுவதற்குக் காரணம் என்ன?

பதில்: சங்கராச்சாரியர் பரப்பிரம்மம் ஒன்றே நித்திய வஸ்து என்கிறார். ஜகத்தும் ஜீவனும் தோன்றியிருந்து மறையக்கூடியவைகள். ஆகையால் அவைகளுக்கு நிலைபேறு கிடையாது. நிலைபேறு படைத்திருப்பது பரமாத்மா அல்லது பரப்பிரம்மம் ஒன்றே. தாற்காலிகமாகத் தோன்றுகிற எண்ணிறந்த ஜீவகோடிகள் அந்தப் பரமாத்மாவின் பிரதிபிம்பங்களாம். ஒரு சூரியன் அனந்தங்கோடி சூரியன்களாகக் கடல் அலைகள் மீது பிரதிபிம்பிப்பது போன்று ஒரு பரமாத்மா அனந்தங்கோடி ஜீவாத்மாக்களாக அனந்தங்கோடி அந்தக்கரணங்களில் பிரதிபிம்பித்துக் கொண்டிருக்கிறார். பிரதிபிம்பங்களை நித்திய வஸ்துக்களாக அவர் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இந்தக் கோட்பாடு எல்லார்க்கும் விளங்காது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Mahapurush Maharaj Birthday Article – 2016

குருவும் சிஷ்யரும்

swamiji-with-mahapurushji

பெரிய சுவாமிஜி – ‘மஹாபுருஷ மஹராஜ்’ சுவாமி சிவானந்தர்

இடம்: ஊட்டி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்.

 1. பெரிய சுவாமிஜீ சித்பவானந்தர் அவர்களின் தந்தையார் திரு. பெரியண்ணன் அவர்கள் பாரமார்த்திக வாழ்வில் பற்றுகொண்டிருந்ததை மக்கள் யாரும் அறிந்திலர். அவர் உள்ளத்தில் யோகத்தன்மை விழிப்புற்றிருந்ததை அறிந்த மஹாபுருஷ மஹராஜ் சுவாமி சிவானந்தர், அவரைக் ‘குப்த யோகி’ எனப் புகழ்ந்தார்.
 2. சின்னு (பெரிய சுவாமிஜியின் பூர்வாசிரம பெயர்) பேலூர் செல்லும் வழியில் புவனேஸ்வரத்தில் மஹாபுருஷ மஹராஜ் சுவாமி சிவானந்தர் அவர்களைச் சந்தித்துத் தாம் துறவியாக வேண்டும் என்ற தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவர், சின்னுவைத் தம் சிஷ்யராக ஏற்றுக்கொண்டு தீட்சை வழங்கினார்.
 3. சின்னு, மஹாபுருஷ மஹராஜ் அவர்களால் பிரம்மச்சாரி ‘திரையம்பக சைதன்யர்’ என்று பெயர் சூட்டப்பட்டார். அப்பொழுது பேலூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர்  மஹாபுருஷ மஹராஜ் சுவாமி சிவானந்தர் ஆவார். பேலூர் மடத்தில் காலையில் யாரும் உணவு எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தேநீர், காபி போன்ற பானம் மட்டும் அருந்துவர். ஆனால் சின்னுவுக்கு மட்டும் காலையில் சிற்றுண்டி ஏதாவது தரவேண்டுமென்று அங்குள்ளவர்களுக்கு மஹாபுருஷ மஹராஜ் கட்டளையிட்டார்.
 4. பேலூரில் வதிந்திருந்தபொழுது சின்னு ஒருமுறை தமக்குக் காசிக்குச் செல்ல வேண்டுமென்ற விருப்பத்தை மஹாபுருஷ மஹராஜிடம் தெரிவித்தார். “இப்போது வேண்டாம்” என்று பதிலுரைத்தார் மஹாபுருஷ மஹராஜ் அவர்கள்.
 5. One of the Swamijis in the Belur Matt was bringing up a dog. Mahapurush Maharaj was fond of it. The pet dog used to be kept tied to a post near Mahapurushji’s dwelling place. Because of its urination etc. the place was smelling foul. Chinnu therefore, removed it from the path and tied it to a distant pillar. The Swamiji who was brining it up got annoyed and shouted to Chinnu saying, “You know, Chinnu, that dog is being brought up by me. Why have you changed its place?” “Swamiji, this Chinnu dog (pointing himself) is being brought up by Mahapurush Maharaj. So this dog (Chinnu) has driven away that do to a distant place to provide peace to his Master”.
 6. மஹாபுருஷ மஹராஜ் அவர்கள் இளமைக் காலத்தில் இலங்கையில் பிரசாரம் செய்துகொண்டிருந்தபொழுது தாயுமானவரின் பாடல்களைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார். தாயுமானவரின் ‘பராபரக்கண்ணி’ பாடல்கள் மஹாபுருஷ மஹராஜை வெகுவாகக் கவர்ந்தன. மஹாபுருஷ மஹராஜ் சுவாமிகளுக்குத் தமிழ் தெரியாது.  என்றாலும் மொழியைக் கடந்துள்ள தாயுமானவரின் உணர்வுகளை உணரும் நிலையில் சுவாமிகள் இருந்தார். தாயுமானவரின் பாடல்கள் உயர் ஆன்மீக நிலைகளிலிருந்து எழுதப்பட்டவை என்று சுவாமிகள் கூறுவார். சுவாமி சித்பவானந்தர் தாயுமானவரின் பாடல்களுக்கு விளக்கமும், உரையும் எழுதுவதற்கு மஹாபுருஷ மஹராஜ் அவர்களே தூண்டுகோலாக விளங்கினார்.
 7. பெரிய சுவாமிஜி ஒருமுறை தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “ஒருமுறை மஹாபுருஷ மஹராஜ் சந்நியாசம் வழங்குதற்கு இருக்கின்றார். சந்நியாசம் பெறப் போகிற பிரம்மச்சாரிகளோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது நம்மிடம் சொன்னார், ‘உனக்குச் சித் என்று வருகின்ற பெயர் கொடுக்கப் போகிறேன்’ என்று. அதுபோன்றே சந்நியாச பெயரையும் சூட்டினார்”. மஹாபுருஷ மஹராஜ் தீர்க்க தரிசியல்லவா? பெரிய சுவாமிஜிக்கு அத்தகைய நாமத்தை வழங்கியதன் வாயிலாக சுவாமிகளினுடைய மகிமையை மஹாபுருஷ மஹராஜ் சுவாமி சிவானந்தர் நமக்கு உணர்த்துகிறார்.
 8. 1926ஆம் ஆண்டு ஊட்டி ராமகிருஷ்ண மடம் சுவாமி சிவானந்தரால் திறக்கப்பட்டது. ஜூலை மாதம் 26ஆம் நாள் பௌர்ணமி நன்னாளில் மஹாபுருஷ மஹராஜ் பெரிய சுவாமிஜிக்கு சந்நியாச தீக்ஷை கொடுத்து, ‘சுவாமி சித்பவானந்த’ என்ற பெயரைச் சூட்டினார். பேலூர் மடத்தில் மட்டுமே சந்நியாச தீக்ஷை செய்விக்கும் வழக்கமுடைய சுவாமி சிவானந்தர், சின்னுவுக்கு மட்டும் ஊட்டியில் தீக்ஷை வழங்கியுள்ளார்.
 9. 1934ஆம் ஆண்டு மஹாபுருஷ மஹராஜ் சமாதி அடைவதற்கு முன்பு பெரிய சுவாமிஜி நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
 10. தம் குருநாதரிடம் தங்களுக்கு வழிகாட்டுபவர் யார் என்று சுவாமிஜி கேட்டபொழுது மஹாபுருஷ மஹராஜ், “குருதேவர் உன்னோடு இருக்கிறார்; சுவாமிஜி உன்னோடு இருக்கிறார்; புனித அன்னையார் உன்னோடு இருக்கிறார்; நான் உன்னோடு இருக்கிறேன். தொடர்ந்து பணி செய்து வரவும்” என்றார். மேலும், “தமிழ்நாட்டுக்கு உன் பணி பயன்பட வேண்டும்” என்று கூறினார்.
 11. பெரிய சுவாமிஜி தங்கள் குருநாதர் பெயரைச் சொல்லமாட்டார்கள். ‘மஹாபுருஷ்ஜி’ என்றோ அல்லது ‘பெரியவர்’ என்றோதான் சொல்வார்கள்.
 12. மஹாபுருஷ மஹராஜ் அவர்களின் ஜெயந்தியை முதன்முதலில் கொண்டாடியது நமது பெரிய சுவாமிஜி சித்பவானந்தரே. பேலூர் மடத்தில் பிரம்மச்சாரியாக சின்னு இருந்தபொழுது திரையம்பக சைதன்யரும் (பெரிய சுவாமிஜி), மஹாபுருஷ மஹாராஜின் சீடர்களான சில பிரம்மச்சாரிகளும் சேர்ந்து முதன்முதல் பேலூரில் கொண்டாடினார்களாம். அதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து வேஷ்டியும், அங்கவஸ்திரமும் வரவழைத்துள்ளார்கள். அது கல்கத்தா வந்து  சேர்ந்த அன்று விடுமுறையாக இருந்ததால் அஞ்சல் அலுவலகம் சென்று அதிகாரியை வேண்டியதால் விடுமுறை நாளிலும் அலுவலகத்தைத் திறந்து பார்சலை எடுத்துக்கொடுத்தாராம்.
 13. அதேபோல், மஹாபுருஷ மஹராஜ் ஜெயந்தி தினத்தன்று ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் காலைச் சிற்றுண்டியில் ஏதேனும் இனிப்பு பரிமாறப்படும்.
 14. பெரிய சுவாமிஜியிடம் அவரது குருவான மஹாபுருஷ மஹராஜ் சுவாமி சிவானந்தரைப் பற்றி அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அம்பாக்கள் கேட்டிருக்கிறார்கள். ‘சுவாமிஜி, பெரியவரைப் பற்றி ஏதாவது சொல்லுங்களேன்…’ என்று கேட்பார்கள். ஆனால் பெரியசுவாமிஜி, ‘பெரியவர் பெரியவர்தான்’ என்று ஒரே வாக்கியத்தில் நிறைவு செய்துவிடுவார்.
 15. பெரிய சுவாமிஜி அவர்கள் 1984ஆம் ஆண்டு மஹாபுருஷ மஹராஜ் அவர்களின் ஜெயந்தி தினத்தின்போது மதுரை ஸ்ரீ சாரதா ஸமிதியில் தங்கியிருந்தார். அன்று காலை 10:30 மணியளவில் மஹாபுருஷ மஹராஜ் சுவாமி சிவானந்தரைப் பற்றி நீண்டதொரு சொற்பொழிவை ஆற்றினார். மஹாபுருஷ மஹராஜ் பற்றி மடை திறந்த வெள்ளம் போல தகவல்களை உரைத்தார். மதியம் 12 மணி ஆரதி எடுக்கும் நேரத்தைக் கடந்து சொற்பொழிவு நிகழ்த்தினார். அனைவரும் சொற்பொழிவில் ஒன்றிப்போய் மெய்ம்மறந்து கேட்டு அனுபவித்துக்கொண்டிருந்தனர். பின்பு சொற்பொழிவு நிறைவு பெற்றதும் 12:45 மணிக்கு ஆரதி காண்பிக்கப்பட்டது. ஆனால் இந்த நீண்ட சொற்பொழிவை குறிப்பு எடுக்கவோ அல்லது ஒலிப்பதிவு செய்யவோ பெரிய சுவாமிஜி யாரையும் அனுமதிக்கவில்லை.

துணை நூற்பட்டியல்:

1, 2, 3, 4, 8, 11 – பராய்த்துறை மேவிய பரமபுருஷர் – சுவாமி நித்தியானந்தர்.

5 – Tapovana Tapasvi – Siddhanta Tulasi.

6 – மஹாபுருஷர் சுவாமி சிவானந்தர் – ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை.

7 – யதீஸ்வரி பகவதிப்ரியா அம்பா அவர்கள் நெல்லையில் நடைபெற்ற சுவாமி சித்பவானந்தர் நூற்றாண்டு விழாவில் ஆற்றிய உரை.

9, 10, 12, 13, 15, 16 – யதீஸ்வரி சதாசிவப்ரியா அம்பா, யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா ஆகியோர் சொன்ன தகவல்கள்.

Photo Courtesy: Sobin Joe Augustine.