Question & Answer – 36

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 36: ஒவ்வொரு ஜீவனும் கடவுள் நிலையை அடைய முயல்கிறது. பல பிறவிகளுக்குப் பின்பு தன்னிடத்திலுள்ள குறைகளை அகற்றி ஒவ்வொரு ஜீவனும் கடவுளை அடைந்துவிடுகிறது. இக்கோட்பாட்டின்படி கடவுளுக்கு அப்பால் தனி ஜீவன் என்ற ஒன்று உண்டு என்றும் அதற்குத் தனிச்செயல் உண்டு என்றும் கொள்ள வேண்டி இருக்கின்றது. கடவுள் ஒருவர் என்பதும் பல ஆத்மாக்கள் இல்லை என்பதும் நம்முடைய கொள்கை. இக்கொள்கைக்கு மேற்கூறிய கோட்பாடு முரணாகத் தென்படுகிறது அல்லவா?

பதில்: விழிப்பு நிலையில் உலகத்தையும், பல ஜீவர்களையும் காண்கின்றோம். ஜீவர்களுக்கிடையில் தாரதம்மியம் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. அறிவுத் துறையில் ஒரு ஜீவன் உயர்ந்த நிலையில் இருக்கிறது. அறிவுத்துறையில் மிகக் கீழான நிலையில் இருக்கிற ஜீவனையும் காண்கின்றோம். பண்பாட்டுத் துறையில் ஜீவர்களுக்க்கிடையில் வேற்றுமை இருப்பதைக் காண்கின்றோம். பண்பாட்டுத் துறையில் மேல் நிலையில் இருக்கின்ற ஜீவன் விரைவில் பரமாத்ம சொரூபத்தை அடைந்துவிடுகிறது. பண்பாட்டில் கீழான நிலையில் இருக்கும் ஜீவன் பல பிறவிகளுக்குப் பிறகு பரமனை அடைகிறது. விழிப்பு நிலையில் எண்ணிறந்த ஜீவர்கள் கடவுளை நோக்கிப் பயணம் போகின்றதைக் காண்கின்றோம்.

கனவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் நாம் மட்டும்தான் இருக்கின்றோம். நமக்கு அந்நியமாக எந்த ஜீவர்களையும் நாம் காண்பதில்லை. பரமாத்மனில் லயமடைந்தபொழுது பரமாத்மன் ஒரு பொருள்தான் இருக்கிறார். மனம் விகாரப்பட்ட நிலையில் பல ஜீவர்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். மனதற்ற பரிசுத்த நிலையில் பரமாத்மன் ஒருவரே இருக்கிறார். நதிகளைக் கடலிலிருந்து பிரித்துக் காண்கிறபொழுது அவைகளுக்குத் தனி வியக்திகள் இருப்பதைக் காண்கின்றோம். நதிகள் யாவும் கடலில் கலந்தான பிறகு நதிகளுக்குரிய தனி வியக்திகளை இழந்து கடல் மயமாகிவிடுகின்றன. அங்ஙனம் மனதைப் பெற்றிருக்கின்ற நிலையில் ஜீவர்கள் தனி வியக்திகளாக விளங்குகின்றன. மனோநாசம் நிகழ்ந்தான பிறகு ஜீவர்கள் அனைவரும் பரமாத்மாவில் லயமாகிவிடுகின்றன. பரமாத்மன் ஒருவரே அப்பொழுது இருக்கிறார். அத்வைதம் என்னும் முடிந்த நிலையில் பொருள் ஒன்றே. அதைத்தான் நாம் மூலபுருஷன் என்கின்றோம். த்வைத நிலையில் ஜீவாத்மாக்கள் பல உண்டு. ஜீவாத்மாக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி வியக்திகளோடு இயங்கி வருகின்றன. அத்வைத நிலையை அடையும் ஜீவர்கள் தனி வியக்திகளை இழந்து பரமாத்மனோடு லயமாகிவிடுகின்றனர். ஆகையால் மூலப்பொருள் ஒன்றுதான்; அது தன்னைப் பலவாகத் தோற்றுவித்துக் கொள்கின்றது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s