Monthly Archives: January 2017

Question & Answer – 39

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 39: ஜீவன் தன் சொரூபத்தை மறந்த காரணத்தால் அக்ஞானமும், பந்தமும், துன்பமும் வந்ததென்றால் அதை நீக்கத் தன்னை விசாரித்து அறிவதுதானே வழியாகும். அப்படியிருக்க ஈசனை வழிபடுவதாலேதான் ஆன்மா பூரண நிலையை அடையும் என்று எதனால் சொல்லப்படுகிறது?

பதில்: ஒருவன் அக்ஞான நிலையில் இருக்கின்றபொழுது அவன் ஜீவன் என்று அழைக்கப்படுகிறான். அறியாமையினால் பிரபஞ்சத்தில் அவன் தன்னைப் பந்தப்படுத்திக் கொள்கின்றான். பிரபஞ்சத்தோடு பந்தம் வந்துவிடுகின்றபொழுது அதைத் தொடர்ந்து துக்கமும் வந்தே தீரும். ஜீவன் அதைவிட்டுத் தப்பிக்க முடியாது.  ஞானத்தைப் பெறுதல் ஒன்றே பந்தத்தை நீக்குதற்கும் துக்கத்தை அகற்றுதற்கும் உற்ற உபாயம். இந்த ஞானத்தை ஜீவன் இரண்டு விதங்களில் பெறலாம். தன்னுடைய உண்மைநிலை யாது என்று தன்னைப் பற்றிய நேரான விசாரம் ஒன்று. தன் தலைவன் ஆகிய ஈசனிடம் ஆழ்ந்து பற்றுதல் வைப்பது மற்றொன்று.

“பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு”

என்பது மறைமொழி. ஈசனிடத்துப் பெரும் பற்று வைக்கின்றவர்களுக்கு உலகப்பற்றுத் தானே போய்விடுகின்றது. பற்று அகலுங்கால் துக்கமும் அகன்றுவிடுகிறது. ஈசனுடைய மகிமையை அறிந்துகொள்ளுதல் வாயிலாக ஈசனுக்கும் தனக்குமுள்ள மாறாத தொடர்பையும் ஜீவன் அறிந்துகொள்கின்றான். இம்முறை பக்தியோகம் என்னும் பெயர் பெறுகிறது.

மனிதன் தன்னுடைய யதார்த்த நிலையை முறையாக ஆராய்கின்றபொழுது தான் உலகத்தில் எதனோடும் சம்பந்தப்பட்டவன் அல்லன் என்பதைத் தெரிந்துகொள்கின்றான். சாக்கடை நீர் எவ்வளவுதான் அசுசியாக இருந்தாலும் அந்த அசுதியெல்லாம் நீக்கியான பிறகு அது தூய நன்னீர் ஆகின்றது. அப்பொழுது தானும் வானத்தினின்று வருகின்ற நன்னீரும் ஒன்றே என்பதை அது விளக்கவல்லதாகிறது. அதே பாங்கில் ஜீவன் தன்னுடைய தூய நிலையை உணர்வானாகில் தானும் தனக்குத் தலைவனும் ஒன்றுபட்டவர்கள் என்பதை உணர்வான்.

தன்னை அறிந்தால் தலைவன்மேற் பற்றலது

பின்னையொரு பற்றும் உண்டோ பேசாய் பராபரமே.

என்பது ஆப்த வாக்கியம். தன்னை உள்ளபடி அறிகின்றவன் தலைவன் மயம் ஆய்விடுகின்றான். இது ஞான மார்க்கம். இரண்டு நெறிகளிலும் ஜீவன் ஜீவபோதத்தைக்  கடந்து பரபோதத்தைப் பெற்றுவிடுகின்றான். ஆக இரண்டும் சரியான மார்க்கங்களேயாம்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Sri Paramahamsarin Apta Mozi – 114

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 114

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 113: https://swamichidbhavananda.wordpress.com/2017/01/19/sri-paramahamsarin-apta-mozi-113/ )

பாதைகள் பல; பரம்பொருள் ஒன்று

ஹிந்து மதத்திலுள்ள வெவ்வேறு சாதனங்களை நான் அனுஷ்டித்துப் பார்த்திருக்கிறேன். சைவம், வைஷ்ணவம், சாக்தம், வேதாந்தம் ஆகிய மார்க்கங்கள் புகட்டுகின்ற சாதனங்களையெல்லாம் நான் கையாண்டிருக்கிறேன். ஹிந்து மதத்தோடு என்னுடைய சாதனம் நின்றுவிடவில்லை; இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம் ஆகியவைகளிடத்தும் நான் பழகியிருக்கிறேன். இவை யாவையும் அனுஷ்டித்துப் பார்த்த பிறகு ஓர் உண்மை எனக்கு வெளியாயிற்று. கடவுள் ஒருவர்தான் இருக்கிறார்; வெவ்வேறு மதங்கள் அவருக்கு வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றன. பெயரில் வேற்றுமை இருக்கிறது, பொருளில் வேற்றுமையில்லை. இப்பரம்பொருளை அடைதற்கு மார்க்கங்கள் பல இருக்கின்றன. சரியாக அனுஷ்டித்தால் அவை யாவும் கடவுளிடத்தே மனிதனைக் கொண்டு சேர்க்கின்றன.

சாந்திக்கு இருப்பிடம் – மூர்த்தி ஸ்தல தீர்த்தம்:

புண்ணிய க்ஷேத்திரங்களுக்குப் போவதாலேயே எல்லா நலன்களும் நமக்கு வந்து அமைந்துவிடும் என்று நாம் உறுதிகொள்ள முடியாது. சில வேளைகளில் யாத்திரையின் விளைவாக அப்புண்ணிய க்ஷேத்திரங்களிலேயே நமக்கு அசாந்தி ஏற்பட்டுவிடுவதும் உண்டு. நான் காசிக்கு மதுரநாத விஸ்வாசருடன் சென்றிருந்தேன். ஆங்கு ராஜபாபு மாளிகையில் நாங்கள் தங்கியிருந்தோம். அவர்களுக்கிடையில் நீண்ட பேச்சு ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. பணம் கொடுப்பது வாங்குவதைப் பற்றியும், பூஸ்திதிகளைப் பற்றியும் அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அதைக்கேட்டு சகிக்க என்னால் இயலவில்லை. அன்னை பராசக்தியிடம் நான் முறையிட்டேன். “தாயே, தட்சிணேசுவரத்தில் நான் அமைதியுற்றிருந்தேன். இத்தகைய பொருளற்ற பேச்சைக் கேட்க என்னை ஏன் இங்கு அழைத்து வந்தாய்?”

பின்பு பிரயாகைக்கு நான் சென்றிருந்தேன். ஆங்கு நான் கண்டது யாது? மற்ற இடங்களில் இருக்கின்ற மரம், செடி கொடிகள், புல் பூண்டுகள், குளங்கள், நீர்நிலைகள் மற்ற இடத்தில் இருக்கும் புளிப்பு நிறைந்த புளிய மரங்கள் அங்கும் இருந்தன. வெவ்வேறு இடங்களுக்கு ஓடுவதால் நமக்குப் புதிய நலன் ஏதேனும் வந்துவிடுமென்று நாம் பிரமை கொள்ளலாகாது.

(தொடரும்…)