Swami Vivekananda Birthday article – 2017

நிறை மனிதன்

சுவாமி விவேகானந்தரின் அங்க லக்ஷண வர்ணனை

‘மனித வடிவத்தில் பிறப்பெடுத்திருந்தால் மட்டும் போதாது. மனிதனாகப் பிறந்திருக்கிறவனிடத்து மனுஷத் தன்மைகள் எல்லாம் பொருந்தியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவனை மனிதன் எனலாம். நரேந்திரனிடத்து மனுஷத்தன்மைகள் எல்லாம் பரிபூரணமாக அமைந்திருக்கின்றன’. இங்ஙனம் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பகர்ந்தருளியுள்ளார். அவர் நரேந்திரன் என்று குறிப்பிட்டது தமக்குப் பிரதம சிஷ்யராக வாய்த்த சுவாமி விவேகானந்தரைப் பற்றியேயாம். அவரிடத்திருந்த மனுஷத்தன்மைகளையெல்லாம் துருவியாராய்ந்து பார்க்குமளவு மனுஷத்தன்மையைப் பற்றிய நல்லறிவு நமக்கு வருகிறது. மனிதனாகப் பிறந்து மனித வடிவில் வாழ்ந்திருந்தால் மட்டும் போதாது. என்னென்ன விதங்களில் மனிதன் தன்னை மேலோனாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மக்கள் எல்லாரும் அறிந்திருத்தல் வேண்டும். எல்லா விதங்களிலும் மேன்மையுற்று மிளிரும் மனிதனையே நிறை மனிதன் என்கிறோம். சுவாமி விவேகானந்தரை ஒரு நிறை மனிதர் என்று நவிலுவது முற்றிலும் பொருந்தும். அவரிடத்திருந்த நிறைநிலைகளையெல்லாம் நாம் கற்று அறியுமளவு நாம் நிறைநிலை எய்துதற்கு அவ்வறிவு நன்கு உதவும்.

நிறைநிலை எய்துதல் அலாதியாக மனிதனுடைய செயல் என்று நாம் எண்ணலாகாது. ஒவ்வோர் உயிரும் அதனதன் நிலையில் உயர்வையும் நிறைவையும் எய்தி வருகிறது. எதனிடத்து நிறைவு காணப்படுகிறதோ அது தனது வாழ்க்கையை நன்கு பயன்படுத்துவது ஆகிறது. அதைப் பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கிறோம். நிறைநிலை எய்தியுள்ள காளை, சிவபெருமானுக்கு வாகமாகிறது. காளையை வடமொழியில் ரிஷபம் என்கிறோம். இறைவனார் ஊர்ந்து செல்லுதற்கு அது தகுதி வாய்ந்திருக்கிறது என்னுமிடத்துத் தெய்வப்பெற்றியும் அதனிடத்துப் பெரிதும் அமைந்திருக்கிறது என்பது சொல்லாமலேயே விளங்குகிறது. கட்டும், உறுதியும் வாய்க்கப்பெற்ற இளைஞன் ஒருவனைக் காளை என்கிறோம். சம்ஸ்கிருதத்தில் அவன் நர ரிஷபன் என்று அழைக்கப்படுகிறான். ஏறு என்னும் சொல்லும் திட்பம் வாய்க்கப்பெற்ற காளையையே குறிக்கிறது. சிவபெருமான் ‘அமரர் ஏறே’ என அழைக்கப்படுகிறார். தேவர்களுள் தலைசிறந்தவர் என்பது அதன் பொருள். ஆதலால் அவர் மகாதேவன் எனப்படுகிறார். மக்களுள் சிறந்தவன் காளை எனக் கூறப்படுவது போன்றே நரோத்தமன் எனவும் நவிலப்படுகிறான். விவேகானந்தருக்கு அமைந்திருந்த நரேந்திரன் என்னும் பிள்ளைத் திருநாமம் முற்றிலும் பொருத்தமானது. நரர்களுக்கு இந்திரன் அல்லது தலைவன் என்பது அதன் பொருள். தேவர்களுக்கு இந்திரனாக வாய்ப்பவன் தேவந்திரன். நரர்களுக்கு இந்திரனாக வாய்ப்பவன் நரேந்திரன். பெயருக்கேற்ற பண்பும் நரேந்திரநாதனிடம் பொலிவதாயிற்று. அவரிடம் மிளிர்ந்த மானுட மாண்புகளை ஆராயுமளவு அப்படி ஆராய்கிறவர்களுக்கும் நலன் மிக வாய்க்கும்.

கொஞ்சகாலத்துக்கு முன்பு அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் ‘மனிதன்’ என்னும் தலைப்புத் தாங்கிய புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அது இப்பொழுது அச்சில் இல்லை. அதில் அடங்கியிருந்த விஷயம் ஆராய்ச்சிக்குரியதாம். சிற்றுயிர் பேருயிராகப் பரிணமித்து வருகிறது என்ற கோட்பாட்டை விளக்குவதற்கென்று அந்நூல் அமைந்திருந்தது. புழு பூச்சி நிலையிலிருந்து உயிரானது படிப்படியாக மேல் நிலைக்குப் பரிணமித்து வந்துகொண்டிருக்கிறது என்ற இயற்கைத் தத்துவத்தை ஐயம் திரிபு அற அந்நூலில் அவர் நன்கு விளக்கியிருந்தார். உயிர் வகைகளின் உருவப்படங்கள், அவைகளின் எலும்புக் கூடுகளின் படங்கள் ஏராளமாக அப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன. இயற்கையின் இடையறாத நடைமுறையை அவர் தெளிவுற விளக்கி வந்ததால் அவர் நூலில் இழுக்கு இருக்கிறதென்று அதற்கு ஆட்சேபம் சொல்ல யாருக்குமே இயலவில்லை. பெருநிலைக்குப் பரிணமித்து வருகிற உயிர் மானுட வடிவத்தை எட்டுகிறது என்பது அந்நூலின் கோட்பாடு. மானுடனிடத்து இருக்கிற சிறப்புக்களையெல்லாம் அவர் எடுத்து விளக்கிக் காட்டியிருக்கிறார். எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான் யாதினும் அரிதிலும் அரிது என்னும் பழைய கோட்பாட்டைப் புதிய முறையில் அவர் பகர்ந்திருக்கிறார். நிறை மனிதன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய உடல் அமைப்பு, அளவு, எடை, உயரம் ஆகியவைகளைப் புள்ளி விவரங்களுடன் அவர் தெரிவித்திருக்கிறார். அடுத்தபடியாக மனிதனது மனபரிபாகம் எத்தகைய பெருநிலை எய்த வேண்டும் என்பதை அவர் நன்கு எடுத்துரைத்திருக்கிறார். பிறகு சீலத்திலே மனிதன் எத்தகைய மேன்மையுற்றிருக்க வேண்டும் என்பதையும் அவர் மொழிந்திருக்கிறார். இறுதியாக மனிதனிடத்து ஞானம் எவ்வளவு தூரம் மேலோங்க முடியும் என்பதையும் அந்த ஞானமே பரம்பொருளைப் பற்றிய பரஞானமாக வடிவெடுக்க வல்லது என்பதையும் அவர் விளக்கியுள்ளார். இத்தனைவித மானுட லட்சணங்களுக்கெல்லாம் உறைவிடமாக விளங்கியவர் விவேகானந்த சுவாமிகள் என்று இயம்பித் தமது நூலை அவர் முடிவுக்குக் கொண்டு வந்திருந்தார்.

vivekananda-palm

விவேகானந்த சுவாமிகள் அமெரிக்காவில் இருந்தபொழுது அவருடைய உயரம், எடை, கால் அளவு, கை அளவு, நெஞ்சு அளவு, கழுத்து அளவு, நெற்றி அளவு ஆகிய புள்ளி விவரங்களையெல்லாம் மேல் நாட்டவர்கள் குறித்து வைத்திருந்தார்கள். அப்புள்ளி விவரங்கள் அனைத்தையும் அப்பேராசிரியர் நன்கு பயன்படுத்திக்கொண்டார். அம்முறையிலே மனிதன் ஒருவனுடைய அமைப்பையும் மாண்பையும் துருவி ஆராய்கின்ற மனப்பான்மையை இந்தியர்களாகிய நாம் இன்னும் பெற்றிருக்கிறோம் அல்லோம். திரண்டு உருவெடுத்துத் தெள்ளத் தெளிந்த பான்மையை இக்காலத்தில் அடையப் பெற்றுள்ள பெருமகன் விவேகானந்தர் என்பது அந்த நூலின் முடிவு. அவர் ஒரு நிறை மகன் என்பதுதான் அதன் கருத்து. விவேகானதர் எப்படியெல்லாம் நிறை மனிதனாக இலங்கினார் என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

மானுட அமைப்பில் மேனி, மனம் ஆகிய இரண்டும் முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன. நிறை மனிதன் ஒருவனிடத்துத் திட்பம் வாய்ந்த தேகமும் திண்ணிய மனதும் இயல்பாக அமைந்திருக்க வேண்டும். ஒருவேளை உடல் அமைப்பில் ஏதேனும் குறைபாடு நேர்ந்திருக்குமாகில் அதில் குற்றம் மிக இல்லை. ஆனால் மன அமைப்பிலோ எல்லாவிதமான மேன்மைகளும் பொருந்தியிருக்க வேண்டும். சுவாமி விவேகானந்தர் நரோத்தமன் என்று இயம்புதற்கு முற்றிலும் பொருத்தமானவர். உடல் உள்ளம் ஆகிய இரு கூறுகளிலும் அவர் நிறைவு மிக வாய்க்கப் பெற்றிருந்தார். அவருடைய மேனியமைப்பைச் சிறிது எடுத்து விளக்குவோம். பலவிதமான உடற்பயிற்சிகளைச் செய்து உறுதியும் வலிவும் வாய்க்கப்பெற்ற உடலை அவர் உடைத்திருந்தார். உயரத்தில் அவர் ஐந்தடி, எட்டரை அங்குலம் இருந்தார். அவருடைய தோள்கள் திட்பத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தன. அவருடைய நெஞ்சு அகன்று உறுதி வாய்ந்ததாய் இருந்தது. மேனி முழுதுமே வண்ணத்தில் சற்றுத் தடித்திருந்தது. கைகளில் நரம்புத் தசைகள் உறுதிக்கு உறைவிடமாக ஒளிர்வனவாயின. ஆண்மகன் ஒருவனிடத்து அமைந்திருக்க வேண்டிய விளையாட்டு வன்மைகளிலெல்லாம் விவேகானந்தர் மேன்மையுற்று விளங்கினார். குஸ்தி பிடிப்பது, சிலம்பம் விளையாடுவது ஆகிய இரண்டும் அவருடைய உடற்பயிற்சிகளில் தனிச் சிறப்பெய்தியிருந்தன. அவருடைய மேனி சற்றுப் பழுத்த மாநிறமாய் இருந்தது. அவர் முகவிலாசத்திலோ தனி மகிமை மிளிர்ந்து கொண்டிருந்தது. முகத்தை மட்டும் தனியாக எடுத்து மொழியுமிடத்து அதனிடத்து அலாதியாக நிறைவு பொலிந்திருந்தது எனலாம். அகன்ற நெற்றி அம்முகத்துக்கு அழகு கொடுத்தது. தாழ்வாய்க்கட்டை உறுதிக்கு உறைவிடமாய் இருந்தது.

San Francisco, at Bushnell Studio, in 1900.

மாட்சிமையும் வசீகரமும் நிறைந்தவைகளாக அவருடைய கண்கள் ஜொலித்துக்கொண்டிருந்தன. அவைகள் வண்ணத்தில் சற்றுப் பெரியவைகளே. கமலக்கண்ணன் என்று அவரைக் கூறுவது பொருந்தும். கண்மணிகளோ மை தீட்டியவகள் போன்று கன்னங்கரேலென்று இருந்தன. அலர்ந்த தாமரை போன்று சற்று முன்னுக்குப் பிதுங்கியவைகளாக அவைகள் இருந்தன. கண் இமைகளும் வண்ணத்தில் பெரியவைகளாய் இருந்தன. தாமரை இதழ்களோடுதான் அவ் இமைகளை ஒப்பிடலாம். அவருடைய கம்பீரமான கண்ணோட்டத்துக்கு இலக்காகாதது எதுவுமில்லை. அக்கண்கள் இரண்டுமே அலாதியான மகிமைகள் வாய்க்கப்பெற்றிருந்தன. யாரையும் அன்பு வலையில் கட்டியிழுக்கும் திறமை அக்கண்களுக்கு இருந்தது. உள்ளத்தினுள்ளே ததும்பிக்கொண்டிருந்த நுண்ணறிவை ஒளிரச் செய்ய வல்லவைகளாக அக்கண்கள் இருந்தன. விவேகானந்தர் சந்தித்த மக்களிடத்துத் தென்பட்ட சிறுமைகளைச் சொல்லாது விளக்கிக்காட்டுதற்கு அவருடைய கண்பார்வையே போதுமானது. என்றைக்கும் மாறாத அன்பிலே பிணைத்தெடுப்பதற்கும் அவருடைய கண் பார்வையே போதுமானது. ஆழ்ந்து பாரமார்த்திகத்தில் பரவசநிலை அடைந்திருப்பதையும் அவருடைய கண்களே நன்கு விளக்கிக் காட்டுவனவாயின. ருத்ராம்சமாக மாறி விவேகானந்தர் தமது சினத்தை வெளிக்காட்டுவதற்கு வேறொன்றும் தேவையில்லை. அவருடைய கண்பார்வையே உலகனைத்தையும் காய்ந்து விடுவதுபோன்று ஒளிரவல்லதாயிருந்தது. இதற்கெல்லாம் மேலாக மன்னனது மாட்சிமை சர்வகாலமும் அவரிடத்து மிளிர்ந்துகொண்டிருந்தது. அவர் ஒரு வேந்தனாக இவ்வையகத்தில் பிறந்து வந்தவர் என்று பகர்வது மிகையாகாது. இந்தியாவில் ஆனாலும் சரி, மேல் நாடுகளில் ஆனாலும் சரி விவேகானந்தரோடு பழகியவர் யாருக்குமே மாட்சிமை தங்கிய அவர் முன்னிலையில் தலை வணங்காதிருக்க முடியவில்லை.

உலகிலே யாராலும் அறிமுகப்படுத்தப்படாத வேற்றானாக விவேகானந்த சுவாமிகள் 1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிகாகோ நகரிலே சர்வமத மகாசபையில் பிரசன்னமானார். மேடையில் தோன்றி அவர் திருவாய் மலர்ந்தருளியது தான் பாக்கி. சூரியோதயத்தில் சந்திரனும் நட்சித்திரங்களும் தாமாகத் தமது சோபைகளை இழப்பது போன்று விவேகானந்தர் முன்னிலையில் மற்ற மதப் பிரசங்கிகளையெல்லாம் சபையோர் எப்படியோ மறந்துவிட்டனர் என்றுதான் மொழிய வேண்டும். உறுதிப்பாடும் அழகும் ஒன்றுகூடி அவர் சொரூபத்தில் மிளிர்வனவாயின.

அவர் எழுந்து நின்றதிலும் சில அடிகள் எடுத்து வைத்து முன்னுக்கு வந்து நின்றதிலும் காம்பீரியமும், மகிமையும் ஒன்று சேர்ந்து மிளிர்வனவாயின. அவருடைய கருவிழிகளிலே ஒளி வீசியது; அவருடைய பொலிவோ அவரைப் பார்த்தவர்கள் உள்ளத்தைக் கவர்ந்தது. அவர் வாய்திறந்து பேச ஆரம்பித்தவுடனே சபையோர் அனைவரும் அவர் குரலின் இனிமையில் வசப்படலாயினர். குரலோசை என்றால் அதுதான் குரலோசை. பண்பட்ட ஓசை கேட்பதற்கு எவ்வளவு வசீகரமானது! கருத்தை எடுத்து வழங்குதற்கு எத்தகைய அற்புதமான கருவி! உள்ளத்தைக் கொள்ளைகொண்டு போவதற்கு அவ்வோசையின்கண் அமைந்திருந்த தெய்வீகம்தான் என்னே! தெய்வ சாந்நித்தியமே அம்மேடையின் மீது பிரசன்னமாயிருந்தது போன்று அவர் காட்சி கொடுத்தார். கீழ்நாட்டினின்று வந்துள்ள கறுப்பு மனிதன் என்று முதலில் அலட்சிய புத்தி கொண்டிருந்தவர்கள் இப்பொழுது தங்களை அறியாது விவேகானந்தருக்கு அடிமைகளாய் மாறிப்போயினர். அருள் துறையிலே ஓர் ஒப்பற்ற அருட்பேராளராக விளங்கிய விவேகானந்தர் அமெரிக்க நாட்டவர்கள் உள்ளத்திலே ஆழ்ந்து இடம் பெறலாயினர். இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் அருள் வீரன் என்று இவரைப் பார்த்தவர்கள் வாய்பேசாது மௌனமாக ஒத்துக்கொண்டனர். ஆளவந்தான் என்று இந்த அண்ணலைத்தான் இயம்பலாம்.

Madras-1893

இப்படி அவர் அமெரிக்காவில் பிரசன்னமாவதற்கு முன்பு இமயமலையில் சிறிது காலம் சஞ்சரித்துக்கொண்டிருந்தார். அம்மலைப் பிரதேசத்திலே இவரைக் காணலுற்ற பக்தன் ஒருவன் ‘சிவ சிவ’ என்று சொல்லித் தலை வணங்கினான். இதுதான் விவேகானந்தரைப் பற்றிய உண்மை. அவர் முன்னிலையில் யார்தாம் தலை வணங்கமாட்டார்!

சுவாமி விவேகானந்தரின் மனப் பரிபாகம்-1

உடலமைப்பில் நிறைநிலை எய்தியிருப்பதற்கிடையில் மன அமைப்பில் மிகக் கீழோராயிருப்பவர்களை உலகில் வேண்டியவாறு காண்கிறோம். ஆனால் ஒருவனை நிறை மனிதன் என்று நவிலுதற்கு அவனுடைய உடலின் பொலிவை விட உள்ளத்தின் பக்குவம் மிக முக்கியமானது. சுவாமி விவேகானந்தரின் மனபரிபாகத்தை எவ்வளவுதான் விரித்தெடுத்து விளக்கிக்கொண்டு போனாலும் அதற்கு முடிவேயில்லை. ஈண்டு நாம் எடுத்துள்ள தலைப்பின்கீழ் அவருடைய மனபரிபாகத்தின் இரண்டு பகுதிகளை மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வோம். அவர் எத்தகைய மேன்மகன் என்பதற்கு இவ்விரண்டு பேரியல்புகளே போதுமானவைகளாம். சுவாமி விவேகானந்தர் ராம உபாசகர். சாதகன் ஒருவன் எந்தத் தெய்வத்தை உபாசிக்கிறானோ அந்தத் தெய்வத்தில் இயல்புகளெல்லாம் உபாசகனுக்கும் வந்தமைவது உபாசனையைப் பற்றிய உண்மையாம். ஒரு மனிதனுடைய வாழ்வில் உடைமையும் வறுமையும் மாறி மாறி வருவது இயல்பு. அத்தகைய மாறுதல் திடீரென்று ஸ்ரீ ராமனுக்கு வந்தது போன்று வேறு யாருக்கும் வந்ததில்லை எனலாம். தான் இளவரசு பட்டாபிஷேகம் செய்துகொண்டு இன்புற்று வாழ்ந்திருப்பதைப்பற்றிய எண்ணத்துடன் அவன் முந்திய இரவு அயோத்தியில் அரிய பட்டு மெத்தையில் சயனித்திருந்தான். பிந்திய இரவு தலைமைப் பட்டணத்தினின்று வெளியே அனுப்பப்பட்டவனாக வெட்டவெளியில் ஒரு மரத்தடியில் சருகுகளை விரித்து அதன்மீது அயர்ந்து படுத்து உறங்கினான். ஒரு மனிதனுடைய வாழ்விலே இவ்வளவு பெரிய மாறுதல் ஒரே நாளில் வாய்க்கக்கூடியதா? என்று லட்சுமணன் வியப்படைந்தான். அவ்வளவு பெரிய மாறுதல் மனதில் சிறிதேனும் வாங்கிக்கொள்ளாது அயர்ந்து நித்திரை போகும் பேரியல்பு படைத்தவனாக அண்ணன் இருக்கிறானே! என்று தம்பி மேலும் வியப்புற்றான். தனக்குத் திடீரென்று வந்து வாய்த்த வறுமை வாழ்வை ஸ்ரீ ராமன் வறுமையாக மனதில் வாங்கிக் கொள்ளவில்லை. உடைமையும் வறுமையும் சூழ்நிலையைப் பொறுத்தவைகளல்ல; அவ்வேறுபாடுகளெல்லாம் மனநிலையைப் பொறுத்தவைகள் என்பதற்கு ராமனுடைய வாழ்வு நல்லதொரு எடுத்துக்காட்டு. நிறை மனது படைத்திருந்த அப்பெருமகனுக்கு ராஜபோகமும் வனவாச துக்கமும் ஒரே பாங்குடையவைகளாகத் தென்பட்டன. ஸ்ரீ ராமனது நிறை மனதுக்கு இந்நிகழ்ச்சியானது சிறந்ததொரு எடுத்துக்காட்டு ஆகும்.

ராம உபாசனை செய்து வந்த விவேகானந்த சுவாமிகளுக்கும் இத்தகைய சோதனை ஒன்று நேர்வதாயிற்று. அது ஒருவிதத்தில் அவர் வழிபடு தெய்வமாகிய ராமனுக்கேற்பட்ட சோதனையை விட மிகக் கடினமானது. தமது சின்னஞ்சிறு வயதில் நரேந்திரநாதன் என்னும் பிள்ளைத் திருநாமம் படைத்து அவர் ராஜபோகத்தில் மூழ்கியிருந்தவர். ஒரு ராஜகுமாரனுக்கு ஒப்பாகவே அவர் வளர்க்கப்பட்டார். அதற்கு ஏற்ற வசதிகள் அனைத்தையும் அவருடைய தந்தையார் உடைத்திருந்தார். அப்படிச் சீரும் சிறப்பும் பெற்றுச் சிறுவனாய் அவர் வாழ்ந்திருந்தகாலை, தமது அன்னையாரால் தூண்டப்பெற்றுத் தமது பிதாவிடம் பிரச்சனை ஒன்றை அவர் கிளப்பினார்: ‘அப்பா, எனது எதிர்கால நன்மையின் பொருட்டு எனக்காகவென்று நீங்கள் தேடி வைத்துள்ள செல்வம் எது?’ என்பதே சிறுவன் கிளப்பி கேள்வியாகும். ‘பிள்ளாய், உன் பொருட்டு நான் தேடி வைத்திருப்பது நீயே. நீ எத்தகைய நிறைநிலை வாய்க்கப்பெற்றவன் என்பதை முகக்கண்ணாடி ஒன்றன் முன் போய்ப்பார்’ என விடைவிடுத்து அக்கேள்வியைப் பிதா அப்பொழுதே புறக்கணித்துவிட்டார். அவர் கொண்டிருந்த கொள்கையொன்றை அறிவுடையோர் எல்லாருமே ஏற்றுக்கொண்டாக வேண்டும். தகுதி வாய்ந்த நிறை மனிதன் ஒருவனை வெறும் ஆளாக எந்தச் சூழ்நிலையில் வைத்தாலும் அவன் ஆங்குப் பலப்பல பொலிவுகளுடன் முன்னேறித் திகழ்வது திண்ணம். ஆகவே ஆற்றலும் அறிவும் படைத்துள்ள ஆண்மகன் ஒருவனுக்கு அவனைத் தவிர வேறு செல்வம் எதையும் சேகரித்து வைக்க வேண்டிய அவசியமில்லை. அவனுடைய நிறை மனமே யாண்டும் குறையாத செல்வமாக அவனை சார்ந்திருக்கிறது. இக்கோட்பாட்டுக்கு ஒப்ப நரேந்திரனுக்குத் தந்தையார் செல்வம் எதையும் சேமித்து வைக்கவில்லை. தாம் ஏராளமாகச் சம்பாதித்த செல்வத்தை எல்லாம் அப்போதைக்கப்போது ராஜரீதியில் நல்வழியில் அவர் செலவழித்து வந்தார். தெய்வாதீனமாக அவர் ஒருநாள் திடீரென்று மாரடைப்பால் மாண்டு போனார். அத்துடன் குடும்ப வருவாய்க்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தன் தாயையும் தமக்கைமார் இருவரையும் தம்பிமார் இருவரையும் பராமரிக்கும் பொறுப்பு நரேந்திரனை வந்து சார்ந்தது. சட்ட கலாசாலையில் மாணாக்கனாயிருந்த பொழுதே இத்தகைய கொடிய சோதனைக்கு அவன் ஆளானான்.

காலஞ்சென்ற தந்தைக்கு மகன் ஆற்றுதற்கிருந்த உத்தரக்கிரியைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. பிதா மறைந்ததை முன்னிட்டுப் புதல்வன் சோகத்தில் மூழ்கிக் கிடந்தது இன்னும் சிறிதேனும் ஆறுதல் பெறவில்லை. அத்தகைய கொடூரமான நெருக்கடியில் குடும்ப சம்ரக்ஷணையின் பொருட்டு அவன் ஏதாவது உத்தியோகம் தேடுகிற நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டான். அவ்வளவு பெரிய சோதனைக்கிடையில் நரேந்திரன் தளரா நெஞ்சம் படைத்திருந்தது ஆண்மகன் ஒருவனுக்கு வாய்க்கின்ற வாய்ப்புக்களிலெல்லாம் மிக மேலானது எனலாம். பெற்றெடுத்த தாய்க்கு அவன் ஆறுதல் ஊட்டினான். தம்பிமார் கல்விக்கு இடைஞ்சல் ஒன்றும் வாராதபடி அவன் பார்த்துக்கொண்டான். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் அவன் முறையாகச் செய்து வைத்தான். வறுமையின் கொடுமை எத்தகையது என்பது இப்பொழுது அவன் சொந்த அனுபவமாயிற்று. தன்னை வந்து தாக்கிய வறுமையை அவன் அமைதியோடு ஏற்றுக்கொண்டதே வியப்புக்குரிய விஷயமாகும்.

முன்பு குதிரை வண்டியில் பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கொண்டிருந்த நரேந்திரன் இப்பொழுது கால் நடையாகக் கல்லூரிக்குப் போக வேண்டியதாயிற்று. நெடுந்தூரம் கால் நலிய நடப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அவன் அணிந்து கொண்டிருந்த உடை நாளடைவில் கந்தலாக மாறியது. காலில் பாதரட்சை போட்டுக்கொள்ளுதற்கு வகையில்லை. மழையிலும், வெயிலிலும் நடக்கும்பொழுது குடையொன்றுமில்லாமலேயே அவன் போக வேண்டியதாயிற்று. அவற்றையெல்லாம் அவன் சிறிதேனும் பொருள்படுத்தவில்லை. ஆனால் வீட்டில் இருந்தவர்களுக்கு உண்ணுதற்குப் போதிய அளவு உணவு கிடையாதிருந்ததுதான் அவனுக்குப் பெரு வருத்தத்தை உண்டு பண்ணியது. உடன் பிறந்தவர்கல் வயிறார உணவு உண்ணவேண்டும் என்னும் எண்ணங்கொண்ட நரேந்திரன் பல தடவைகளில் தன் நண்பர்களின் வீட்டில் உணவருந்தி வந்ததாகத் தாயிடம் நொண்டிச் சாக்குச் சொல்லி வீட்டிலுள்ள சாப்பாட்டைச் சகோதர்ர்களுக்காக மிச்சப்படுத்துவான். குடும்பத்தை எப்படித்தான் நிர்வகித்து வந்தார்களோ என்பது தாய்க்கும் மகனுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ‘வறியோர்க்கு அழகு வறுமையில் செம்மை’ என்பதற்கு அவர்களே எடுத்துக்காட்டு ஆயினர்.

சுவாமி விவேகானந்தர் பரிவ்ராஜக பரமஹம்சராக இந்தியா முழுதையும் சுற்றிப் பார்த்து வந்தபொழுது காசு பணம் எதையும் தொடுவதில்லை என்னும் விரதம் பூண்டிருந்தார். அடுத்த வேளைக்காகவென்று முற்கூட்டியே உணவைக் கையில் வாங்கி வைத்திருக்கும் வழக்கத்தையும் அவர் ஒதுக்கி வைத்திருந்தார். தெய்வாதீனமாக்க் கிடைத்த உணவை அருந்திப் பசியாறிவிட்டு அடுத்த வேளை உணவைப் பற்றிக் கவலையற்றிருந்ததே அவர் பூண்டிருந்த விரதமாகும். அவ்விரதத்தின் விளைவாகப் பல நாட்கள் அவர் பட்டினி கிடந்ததுண்டு. ஆனால் அதைக் குறித்து ஒரு நொடிப்பொழுதுக்கேனும் அவர் மனதில் அன்னவிசாரம் வந்தது கிடையாது. தெய்வத்திடத்து அதைப் பற்றிப் பிரார்த்தனை பண்ணியதும் கிடையாது. எத்தகைய தீவிர மனம் படைத்திருந்தால் இத்தகைய நெருக்கடிகளில் மனச்சோர்வு கொள்ளாது வாழ்ந்திருக்க ஒரு வீரனுக்கு இயலும் என்பதை எண்ணிப் பார்த்தால் ஒரு சிறிதளவு விளங்கும். அதை எண்ணிப் பார்க்கவே சிலர்க்கு இயலாது. ஆனால் தமது வாழ்க்கையில் பட்டினி கிடந்து நலிந்திருப்பது என்றால் என்ன என்பதை எத்தனையோ தடவைகளில் நேரே அனுபவித்த வீரர் என்று விவேகானந்தரைச் சொல்ல வேண்டும். இமயமலையில் உறைபனிப் படலத்தில் தம் உடலின் மீது போதிய அளவு உடையில்லாதிருந்தபொழுதும் தமது உடல் ஞாபகத்தை அறவே ஒதுக்கி வைத்துவிட்டுப் பாரமார்த்திகப் பெருநிலையில் மனதை நாட்டி வைத்திருந்த பரமயோகி ஆவார் அவர். சுருங்கச் சொல்லுமிடத்து வறுமை நோயில் உச்ச நிலையைக் கண்டவர் அவர். சுகஜீவனத்தின் உயர்நிலையையும் தமது வாழ்க்கையில் அனுபவித்துப் பார்த்தவர் அவர். ஆக, இப்பூவுலக வாழ்வில் உள்ள வசதிகளையும் கஷ்ட நஷ்டங்களையும் கொடுமைகளையும் அவர் முற்றிலும் சுவானுபவத்தில் அறிந்தவர் ஆவார். ஆக்கம் நிறைந்த உடைமையில் அவர் பந்தப்படாதிருந்தது போன்று துன்பம் நிறைந்த வறுமையிலும் அவர் சிறிதேனும் மனம் குழம்பியது கிடையாது. மனப்பரிபாகத்தில் எத்தகைய உச்சநிலைக்குப் போயிருந்தால் இவ்விருமைகளையும் பொருள்படுத்தாத பெருநிலை வந்தெய்தும் என்பதை ஆத்ம சாதகர்கள் ஆழ்ந்து எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்.

சுவாமி விவேகானந்தரின் மனப் பரிபாகம் – 2

சிருஷ்டியின் நடைமுறையில் உயிர்கள் அனைத்துக்கும் பொதுவாயுள்ள நிலைமை ஒன்று உண்டு. ஒவ்வோர் உயிர்க்கும் ஏதேனும் ஒருவிதத்தில் பகைகள் பல அமைந்துள்ளன. அவைகலை அந்தந்த உயிர்க்குரிய ஜன்ம சத்துரு என்கின்றோம். சத்துருக்களால் கேடு ஒரு புறம் இருக்க நலனும் ஒரு பக்கம் அமைத்திருக்கிறது. சத்துருக்கள் இருப்பதால்தான் உயிர்கள் தங்களைப் பாதுகாப்பதிலும் முன்னேற்றம் அடைவதிலும் ஊக்கம் மிகக் கொள்கின்றன. பகையே இல்லாது போனால் உயிர்களிடத்துச் சோம்பலும் வீண் உறக்கமும் அதிகரிக்கும். பகைகளிடத்திலிருந்து தங்கலைப் பாதுகாத்துக்கொள்ளுதற்கு உயிர்கள் அல்லும் பகலும் எச்சரிக்கையாயிருப்பதே அவைகளின் முன்னேற்றத்துக்கு முகாமையாகிறது. மனிதனுக்கு எத்தனையோ உயிர்கள் பகைகள் ஆகின்றன. இனி மனிதனுக்கு மனிதன் பகை பூணுதலும் இயல்பு. பகைவனை எதிர்த்துச் சமாளிப்பது வாழ்க்கையில் ஒரு பகுதியாய் அமைந்திருக்கிறது.

சான்றோர்கள் யாருடனும் பகைப்பதில்லை. அவர்களை அஜாத சத்துருக்கள் எனலாம். ஆயினும் அன்னவர்கள் மீது பகைகொள்ளும் பாங்குடையவர்கள் இருக்கிறார்கள். அப்படிப் பகைப்பவர்களைச் சான்றோர்கள் கையாளும் முறையில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன. பிறரைப் பகைக்கும் இயல்பு ஸ்ரீராமனிடத்து இல்லை. ஆனால் அவனுக்குப் பெரும்பகையாக வாய்த்தவன் ராவணன். அந்த அரக்கனிடத்து ராமன் வைத்திருந்த மனப்பான்மை, அவன் செய்த அபராதத்துக்கு ராமன் எடுத்துக்கொண்ட நடவடிக்கை, தீவிரமான நடவடிக்கைக்கிடையில் ராவணனைத் திருத்தியமைக்க ராமன் முயன்றது, அவனை அழிக்கும் வரையில் ஒவ்வொரு படித்தரத்திலும் ராமன் அவன் மீது காட்டிய கருணை முதலியன பெருவாழ்வுக்குரிய பல கோட்பாடுகளை நமக்கு நன்கு புகட்டுகின்றன. சின்னஞ்சிறு வயதிலிருந்து ராம உபாசகராயிருந்த சுவாமி விவேகானந்தர் யாரையும் பகைக்கவில்லை. ஆயினும் அவரிடத்துப் பகைவர்களாகப் பலர் நடந்துகொண்டனர். அப்படி முறைதவறி நடந்துகொண்டவர்களிடத்தும் விவேகானந்தர் எத்தகைய மனப்பான்மை கொண்டிருந்தார் என்பதை நாம் ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். அப்படி அறிந்துகொள்ளுதலின் மூலம் பெருவாழ்க்கைத் தத்துவத்தை நாம் அறிபவர் ஆகின்றோம். அத்தத்துவத்தை நடைமுறையில் கொண்டுவருமளவு நிறை மனிதனுடைய நிலையை நோக்கி நாம் முன்னேறுபவர் ஆவோம்.

நரேந்திரரது தந்தையார் காலமானவுடனே வறுமை நோய் அவரை வந்து தாக்கியது ஒருபுறமிருக்க, தாயாதிகள் அவர் வசித்துவந்த வீட்டில் பெரும்பகுதி தங்களுக்குரியது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். நரேந்திரர் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் அவரது பரந்த மனப்பான்மை வெளியாயிற்று. அதை வழக்கறிஞர் அனைவரும் பாரட்டினர். பொதுவாக எதிரிகள் மீது எத்தனை எத்தனையோ விதங்களில் குறை கூறுவது உலகத்தவர் இயல்பு. எதிரிகளிடத்துள்ள ஊழல்களை நீதிமன்றத்தில் மிகைப்படுத்திப் பேசுவதும் உலக வழக்கு. ஆனால் நரேந்திரர் மட்டும் அப்புல்லிய போக்கில் போகவில்லை. தாங்கள் வசித்துவந்த வீடு தங்களுக்கே உரியது என்பதற்கேற்ற ஆதாரங்களையும் புள்ளி விவரங்களையும் தெளிவுற அவர் நீதிமன்றத்தில் எடுத்து விளக்கினார். தாயாதிகள் தொடுத்த வழக்கு அக்கிரமம் என்பதைப்பற்றிய பேச்சே அவர் வாயினின்று வரவில்லை. அப்பரந்த பான்மையை நியாயாதிபதியும் மிகப் பாராட்டினார். ஒரு நிறை மனிதனுடைய மேலாம் இயல்பு சின்னஞ்சிறு வயதிலேயே அவர் பால் மிளிர்வதாயிற்று.

பரமஹம்சதேவர் தேகத்தை உகுத்தான பிறகு இளம் சிஷ்யர்கள் தத்தம் போக்கில் கல்லூரிகளில் மேற்படிப்பில் ஈடுபட முயன்றனர். ஆனால் அத்தகைய படிப்பு அவர்களுக்குத் தேவையில்லையென்று எடுத்துக்காட்டி அவர்களையெல்லாம் திரட்டிப் பாரமார்த்திக வாழ்வில் ஈடுபடச் செய்தவர் இளந்துறவி விவேகானந்தர். மற்ற இளைஞர்களுடைய பெற்றோர்கள் அவரவர் மக்கள் துறவியர்களாய்ப் போனதற்கு மூல காரணமாயிருந்தவன் நரேந்திரன் என்று குறைகூறி அவன் மீது பெரும்பழியைச் சுமத்தினர். அவனுடைய பகைவர்களாகவே அவர்கள் நடந்து கொண்டனர். ஆனால் அந்த இளம் துறவியோ சாந்த மூர்த்தியாயிருந்து அவர்களுக்குச் சமாதானம் கூறியதும் அவர்களிடத்து அனுதாபம் காட்டியதற்கிடையில் லட்சியத்தினின்று இம்மியளவும் பிசகாதிருந்ததும் அவருடைய நிறைநிலைக்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

சமுதாயத்தில் சீரிய அந்தஸ்தைப் பெற்றுச் சிறப்புடன் வாழ்தற்கிருந்த நரேந்திரன் துறவியாய்ப் போனது தௌர்ப்பாக்கியமென்று அவனுடைய நண்பர்களில் பலர் கருதினர். பிறகு சில ஆண்டுகளாக அவர் வாழ்ந்துவந்த சந்நியாச வாழ்க்கை உலக சம்பத்து எதிலும் சம்பந்தப்படாதது. உலக வாழ்க்கையில் வாய்த்துள்ள பெருமைகளை யெல்லாம் கருத்தில் வைத்துக்கொண்டு விவேகானந்தருடைய வாழ்க்கை விமர்சனம் செய்து பார்த்தால் அவர் செத்தாரைப் போன்று ஆய்விட்டார் என்றே சொல்லலாம். ஆனால் தெய்வாதீனமாக அமெரிக்காவில் அவருடைய வாழ்க்கையில் திடீரென்று மாறுதல் ஒன்று உண்டாயிற்று. சர்வமத மகாசபையில் அவர் இந்து மதத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்ததின் விளைவாக ஒரே நாளில் அவருக்கு உலகப் பிரசித்தி வந்து குவிந்தது. எண்ணிறந்த அறிக்னர்களும் செல்வந்தர்களும் அவரோடு இணக்கம் கொள்ள முன் வந்தனர். விவேகானந்தரோ அந்த வாய்ப்பையெல்லாம் ஓர் உயர்ந்த லட்சியத்துக்கே பயன்படுத்தி வந்தார். மக்களைப் பாரமார்த்திகப் பெருவாழ்வில் திருப்புவது அவருடைய பெருங்கடமையாய் இருந்தது. அவ் அருட்பணியை நன்கு நிறைவேற்றுவதற்கான பரமாச்சாரியராக அவர் திகழ்ந்தார். ஆனால் அதே வேளையில் அவர்க்குப் பகைவர்களும் பல தாமாகத் தோன்றுபவர் ஆயினர். அவருடைய கீர்த்தியைக் கண்டு சகிக்க ஒரு சிலர்க்கு இயலவில்லை. அவர் வழங்கி வந்த அறநெறி சில சமயவாதிகளுக்கு முட்டுக்கட்டையாய் முன்வந்து நின்றது. யாரெல்லாம் ஒன்றுகூடி அவர்க்குப் பகைவர்கள் ஆனார்கள் என்பதைப் புள்ளி விவரத்துடன் வெளிப்படுத்துவது பொருந்தும்.

பிரதாப் சந்திர முஜும்தார் என்னும் பேரறிஞர் ஒருவர் பிரம்ம சமாஜத்தின் பிரதிநிதியாக வங்காளத்திலிருந்து அமெரிக்காவில் சர்வமத மகாசபைக்குச் சென்றிருந்தார். அப்பெருமகனார் சின்னஞ்சிறு வயதிலிருந்து விவேகானந்தரிடத்து நட்பு பூண்டு ஒழுகியவர். இப்பொழுது விவேகான்ந்தரின் புகழ் உலகெங்கும் பரவியதைக் குறித்து பிரதாப் சந்திர முஜும்தார் பெருமை பாராட்டுதற்குப் பதிலாகப் பகைமை பூண ஆரம்பித்தார். ஒருவன் உடலில் தோன்றுகிற நோய் அவன் உயிர் வாழ்க்கைக்கே ஆபத்தாய் அமைவது போன்று விவேகானந்தரது சொந்த நாட்டில் தோன்றியிருந்த ஒருவர் புறநாட்டில் வந்து அவருக்குப் பெரும்பகைவனாய் மாறினார்.

pratap-chandra-mozoomdar

இந்தியாவுக்கு என்னென்னவோ நன்மைகளையெல்லாம் செய்துவந்ததாகத் தம்மைப் பற்றிப் பெருமை பாராட்டிக்கொண்டிருந்த Theosophical Society (பிரம்மஞான சபை) அங்கத்தினர்கள் விவேகானந்தருக்கு விரோதிகளாக வெளிக்கிளம்பினர். தங்கள் சபையின் தனிச்சிறப்புக்கு விவேகானந்தர் புகட்டிய வேதாந்தம் இடைஞ்சலாகத் தென்பட்டது. ஆதலால் அன்னவர்கள் அவரைப் பகைக்க ஆரம்பித்தனர்.

மூன்றாவதாக கிறிஸ்தவ மதப்பிரசாரகர்கள் விவேகானந்தருக்கு விரோதிகளாக வெளி வந்தனர். தங்கள் மதப்பிரசாரத்துக்கு விவேகானந்தர் பேரிடைஞ்சலாக வந்துள்ளார் என்று அக்கிறிஸ்தவப் பாதிரிமார்கள் கருதினார்கள். விவேகானந்தரை எதிர்த்தல் பொருட்டு இந்த மூன்று இயக்கத்தினர்களும் அமெரிக்காவில் ஒன்று கூடினர். இவ் அருளாளரை எதிர்ப்பதைத் தவிர வேறு எந்தவிதமான பொது லட்சியமும் அம்மூவர்க்கிடையில் இல்லை. இப்பரமாச்சாரியரை எப்படியாவது பள்ளத்தில் தள்ளி ஆழ்த்த வேண்டும் என்று அம்மூவரும் படாத பாடுபட்டு வந்தனர்.

விவேகனந்தரிடத்துக் கூடாத ஒழுக்கங்கள் ஏதேதோ இருந்த்தாக அவர்கள் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதலாயினர். இந்தியாவில் அவருக்கு அந்தஸ்து ஒன்றுமில்லை; இந்திய சமுதாயம் அவரை ஒரு சந்நியாசியாக அங்கீகரிக்கவில்லை; அவர் ஓர் ஆதரவற்ற நாடோடி – இப்படியெல்லாம் அவரைப்பற்றி எழுதவும் பேசவும் அம்மும்மூர்த்திகள் முன் வந்தனர். ஏதேனும் ஒரு வீட்டில் விருந்தினராக விவேகானந்தர் தங்கியிருந்தால் அந்த வீட்டில் ஒழுக்கம் தவறி நடந்ததை முன்னிட்டு அவர் வெளியே அனுப்பப்பட்டார் என்று பத்திரிக்கைகளில் பிரசுரித்தார்கள். வேறொரு வீட்டுக்கு அவர் விருந்தினராய் அழைக்கப்பட்டிருக்கிறார் என்று இப்பகைவர்கள் அறியவந்தால் அந்த வீட்டாரிடம் சென்று விவேகானந்தரைப் பற்றிப் பொருந்தாதவைகள் பலவற்றை சொல்லி அவர்களுடைய மனதைக் கலைத்து வந்தார்கள். அதன் விளைவாக விவேகானந்தர் அவ்வீட்டுக்கு விருந்தினராய்ப் போகும்பொழுது அவரை அவமானப்படுத்தி அவ்வீட்டார் விருந்துக்கு வந்தவரை வெளியே ஓட்டினார்கள். பிறகு உண்மையை அவ்வீட்டார் உள்ளபடி அறிந்துகொள்ள நேரிட்டால் விவேகானந்தரிடம் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டுத் திரும்பவும் அவரைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். விவேகானந்தர் ஒழுக்கம் கெட்டவர் என்று பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்துவிட்டு, அப்பத்திரிக்கைகளை அந்த எதிரிகள் இந்தியாவுக்குத் தங்கள் கூட்டத்தார்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அமெரிக்காவில் அவருக்குச் செல்வாக்கு ஒன்றுமில்லையென்று இந்தியாவில் சிலர் பேசியும் எழுதியும் வந்தனர்.

இத்தனைவிதமன அல்லல்களுக்கிடையில் தம்மை எதிர்த்தவர்களைக் குறித்து சுவாமி விவேகானந்தர் ஒரு கணப்பொழுதும் நொந்துகொண்டது கிடையாது. தாம் மனம் நொந்தால் அது பிறர்க்குத் தீங்காய் முடியும். பிறர் செய்த தீங்குக்குப் பிரதி தீங்கு செய்வது தமது தர்மம் அன்று என்று உணர்ந்து அவர் சாந்தமும் பொறுமையுமே வடிவெடுத்திருந்தார். சத்தியத்தையும் சீலத்தையும் யாருமே தாக்கிக் கெடுக்க முடியாதென்பது விவேகானந்தரது சித்தாந்தம். பொறுமையுடன் தமது அறப்பணியை அவர் புரிந்து வந்தார். சிலர் சுவாமி விவேகானந்தரிடத்து நண்பர்கள் போன்று நடந்து கொள்வார்கள். ஆனால் மறைமுகமாக அவரைத் தாக்குவது அவர்களுடைய செயலாய் இருந்து வந்தது. அத்தகைய துரோகிகளை மற்றவர்கள் சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் சுவாமிகளோ அந்த நயவஞ்சகர்களிடத்தும் பேரன்பு பூண்டவராகவே நடந்துகொண்டார். அவருக்கு வந்த எதிரிப்புக்களெல்லாம் தாமாக நாளடைவில் பின்வாங்குவனவாயின. நிறைநிலையில் உறுதியாக நிலைநின்ற விவேகானந்தர் அன்பின் மூலமாகவும் நேர்மையின் மூலமாகவும் உலகிலுள்ள கேடுகளைக் களைந்து வந்தார். நேர்மை பிறழாத நிறை மனிதன் ஒருவர் இக்காலத்தில் உலக நன்மைக்காகத் தோன்றிவந்தார் என்றால் அது விவேகானந்தரேயாம்.

(இன்று 12.01.2017, சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி தினம் ஆகும். 1963 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழாவின்போது ஆதி விவேகானந்தரைப் பற்றித் தென்னகத்து விவேகானந்தர் சுவாமி சித்பவானந்தர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு “விவேகானந்த விவரணம்” என்ற அருமையான நூலாகப் பின்னர் வெளியிடப்பட்டது. அந்த நூலில் இடம்பெற்ற “நிறை மனிதன்” என்ற கட்டுரை சுவாமி விவேகானந்தரின் 154வது ஜெயந்தியையொட்டி பதிவேற்றப்பட்டுள்ளது.)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s