Sri Paramahamsarin Apta Mozi – 113

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 113

Apta mozi

(முந்தைய பகுதி – மொழி 112: https://swamichidbhavananda.wordpress.com/2016/12/08/sri-paramahamsarin-apta-mozi-112/ )

கடவுளுக்கு உருவமும் அருவமும் உண்டு

தட்சிணேசுவர ஆலயத்தில் பரமஹம்ஸர் பக்தர் குழத்துடன் கூடியிருந்தார். அவர்களுக்கிடையில் கடவுளைப் பற்றிய பேச்சு எழுந்தது. பரமஹம்ஸர் இங்ஙனம் பகர்ந்தருளினார்:

“கடவுள் வடிவத்தோடு கூடியவராயிருக்கிறார் என்றும் அவர் அனந்த கல்யாண குணங்களை உடைத்திருக்கிறார் என்றும் கருதுகின்ற பக்தர்கள் இருக்கிறார்கள்.  அத்தகையவர்கள் இருக்கும்பொழுது நானும் அவர்களுடைய மனப்பான்மைக்கு ஒப்ப வடிவத்தோடு கூடிய கடவுளையே வழுத்துகிறேன். வேறு சிலவேளைகளில் நிர்க்குண, நிராகார வஸ்துவிடத்துத் தங்கள் மனதை நாட்டிய சாதகர்களைச் சந்தித்தேன். அவர்கள் பெரிதும் ஞானமார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடன் சேர்ந்திருக்கின்றபொழுது நானும் அவர்களுடைய மனதுக்கு ஒப்ப நிர்க்குண நிராகார வஸ்துவிட்த்தே மனதை நாட்டுகிறேன்.”

புன்னகை பூத்தவராக மஹேந்திரர் தம் மனதில் தோன்றிய கருத்து ஒன்றை வெளியிட முன்வந்தார். “பரம்பொருள் உருவத்திலும், அருவத்திலும் இருக்கிறார் என்று தாங்கள் பகர்ந்துள்ளீர்கள். அப்பரம்பொருளை அளக்க யாருக்குமே இயலாது என்ரும் இயம்பினீர்கள்.  அந்தப் பரம்பொருளுக்கு நீங்கள் ஒப்பாவீர்கள் என்று நான் நினைக்கிறேன். பரம்பொருளை முற்றிலும் ஆழம்பார்ப்பது எங்ஙனம் சாத்தியப்படாதோ அங்ஙனம் தங்களுடைய இயல்பையும் முற்றிலும் அறிந்துகொள்வது சாத்தியப்படாது. யார் அறிவார் தங்கள் பெருமை முழுதையும்!”

பரமஹம்ஸர், “ஆ! நீ அங்ஙனம் அறிந்துகொண்டாயா? ஒரு விஷயத்தைச் சொல்லுகிறேன், கவனித்துக் கேளுங்கள். சாதனங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு சாதகனும் பலதரப்பட்ட சாதனங்களில் பெரும்பகுதியை ஒன்றன்பின் ஒன்றாகக் கொஞ்ச காலத்துக்காவது அனுஷ்டித்துப் பார்க்க வேண்டும். விதவிதமான சாதனங்களை அனுஷ்டிக்கின்றவர்களுக்கே பரந்த மனப்பான்மை உண்டாகிறது. தாயம் விளையாடுவதை நீங்கள் பார்த்ததில்லையா? காய் ஒன்று பழம் ஆவதற்கு முன்பு எல்லாக் கட்டங்களையும் தாண்டி வந்தாக வேண்டும். அப்படி எல்லாக் கட்டங்களையும் தாண்டாவிட்டால் அது பழம் ஆக முடியாது. மனிதன் பரிபக்குவம் அடைவதும் அது போன்றது. விதவிதமான சாதனங்களைக் கொஞ்ச காலத்துக்காவது அனுஷ்டித்துப் பார்க்கின்றவர்களே பரந்த மனப்பான்மை உடையவர் ஆகின்றனர்”

“தாங்கள் மொழிவது முற்றிலும் மெய்” என்று மஹேந்திரர் பரமஹம்ஸ தேவருடைய கோட்பாட்டை முழுமனதோடு ஆமோதித்தார்.

இரண்டுவித சாதகர்கள் – பஹூதகர், குடீசகர்:

பரமஹம்ஸர் மேலும் பகர்வாராயினர்: “பஹூதகர் என்றும், குடீசகர் என்றும் சான்றோர்களுக்கிடையில் இரு தரத்தார் இருக்கின்றனர். பஹூதகர் என்பவர் வெவ்வேறு க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை போய்க்கொண்டே இருக்கின்றனர். ஆயினும் அவர்கல் மன அமைதியை முற்றிலும் அடையப் பெற்றவர் அல்லர். மன அமைதியை நாடியே அவர்கள் அங்ஙனம் அலைந்து திரிகின்றனர். ஆனால் குடீசகர்களுடைய இயல்போ அத்தகையதன்று. தங்களுக்கென்று இயல்பாக அமைந்த ஏதேனும் ஓர் இட்த்திலேயே அவர்கள் வசித்திருக்கின்றனர். வெவ்வேறு க்ஷேத்திரங்களுக்குப் போக வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு  உண்டானதில்லை. இருக்கும் இடத்திலேயே அவர்கள் பரமானந்தமுற்றிருக்கின்றனர். சாந்தியே வடிவெடுத்தவர்களாகவும் அவர்கள் இலங்குகின்றனர். சிற்சில வேளைகளில் அவர்களும் இடம்மாறிப் புதிய க்ஷேத்திரம் ஏதாவது ஒன்றுக்குப் போவதுண்டு. தாங்கள் ஏற்கனவே பெற்றிராத ஒன்றைப் புதியதாகப் பெறுவதற்கென்று அவர்கள் அப்படிப் போவதில்லை. அப்படிப் புதிய இடத்துக்குப் போவதால் அவர்கள் பெற்றுள்ள சாந்தம் பரமசாந்தமாகிறது.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s