Question & Answer – 41

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 41: கடவுள் அசைத்தால் சகலமும் அசைகிறது என்பது நியதி. இங்ஙனம் இருக்க நன்றுடையானைத் தீயதில்லானை என்று பெரியோர்கள் கடவுளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். மக்கள் மனதை கடவுள்தானே அசைக்கிறார். ஆகையால் மனிதனுடைய சஞ்சலங்களுக்கெல்லாம் கடவுளே காரணமாகிறார். கடவுள் விரும்பினால் மனம் அலைதல் எல்லாம் நின்று மக்கள் நன்மை அடைய முடியாதா? தீயதிலானை என்பதைவிட தீயதுளானை என்று சொல்லியிருந்தால் பொருத்தமாயிருந்து இருக்கும். அருளாளர் வாக்குக்கும் நடைமுறைக்கும் இடையில் முரண்பாடு உள்ளது.

பதில்: கடவுளுக்கு விளக்கங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு விளக்கமும் அவருடைய மகிமையின் ஒவ்வொரு பகுதியை விளக்குகிறது. அதற்கு சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். கடல் இருக்கிறது. அதற்குக் கணக்கற்ற விளக்கங்கள் தரலாம். பரந்த நீர்ப்பரப்பு என்பது ஒரு விளக்கம். கொந்தளிப்பும், கொடுமையும் வடிவெடுத்தது என்பது மற்றொரு விளக்கம். தன்னகத்து மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் பரந்த சமவெளிகளையும் அடக்கிய நீர்நிலை என்பது மற்றொரு விளக்கம். எண்ணிறந்த உயிர்வகைகளுக்கு இருப்பிடம் என்பதும் ஒரு விளக்கம். முரண்படுகிற விளக்கங்கள் கடலுக்கே வந்தமைகின்றன. பிறகு கடவுளுக்கு அது ஏன் வந்து அமையலாகாது? கப்பலைக் கடத்துதற்கு உற்ற இடம் அது. கப்பலை எடுத்து விழுங்கவல்லதும் அதுவே. இந்த முரண்பாடு கடலுக்கு உண்டு. இனிக் கடவுளையே இயற்கை என்றும் இயம்பிவிடலாம். இயற்கை வேறு, கடவுள் வேறு அல்ல. முரண்பாட்டுச் செயல்கள் இயற்கையில் உண்டு. பொறையே வடிவெடுத்தது பூமி. ஆனால் பூகம்பமோ பொறைக்கு நேர்மாறானது. இனிமையே வடிவெடுத்தது தென்றல். ஆனால் புயலோ பயங்கரமானது. இப்படி இயற்கையையே வேண்டியவாறு வருணிக்கலாம்.  கணக்கற்ற முரண்பாடுகளையும் இயற்கையில் காணலாம். ஆயினும் இத்தனைவிதமான செயல்களுக்கு அடிப்படையாக உயர்ந்த திட்டம் ஒன்று இயற்கையின்கண் உண்டு. உயிர்களைப் படிப்படியாகப் பண்படுத்துவது இயற்கையின் செயல். அதைக் கடவுளின் செயல் என்று சொல்லுதலும் முறையே. காற்று அடித்து மரத்தை அசைத்து அதன் வேர்களை உறுதியாக்குகிறது. அடிமரத்திற்குக் காற்று அடிப்பதால் வலிவு அதிகரிக்கிறது. அதன் கிளைகள் எல்லாம் திண்டாடுகின்றன. இலைகளையெல்லாம் காற்று பறித்துக்கொண்டு போய்விடுகிறது. கேடு அடைவது போன்று தென்படுகிற மரம் மற்றொரு பாங்கில் நலனை அடைந்து வருகிறது. மக்களுடைய வாழ்க்கைக்கும் இக்கோட்பாடு பொருந்துகிறது. துன்பங்கள் பல மக்களுக்கு வந்து அமைகின்றன. துன்பங்கள் இல்லாவிட்டால் மக்கள் பண்பாடு அடைய முடியாது. பரந்த திட்டத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பார்க்குமிடத்துத் துன்பமாகத் தென்படுபவைகள் எல்லாம் மறைமுகமாக மனிதனுக்கு நலம் புரிபவைகளாகவே அமைந்திருக்கின்றன. மனது சஞ்சலப்படாத நிலையை மனிதன் அடைந்துவிட்டால் அவன் யோகி ஆய்விடுகின்றான். ஆனால் சஞ்சலப்படுதல் என்கின்ற செயலின் வாயிலாகவே சஞ்சலப்படாத நிலைக்கு மனிதன் போகின்றான். இறைவனுடைய திட்டத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் அவன் நலமுடையான், கேடில்லான் என்கின்ற முடிவுக்குத்தான் நாம் வந்தாக வேண்டும். கேடுடையதாக அவர் காட்சி கொடுத்துக் கொண்டிருப்பது மறைமுகமாக நமக்கு நலத்தை உண்டு பண்ணுதல் பொருட்டேயாம். எனவே இது விஷயத்தில் கணக்கற்ற கேள்விகளைக் கிளப்பி மனக்குழப்பம் அடைந்துவிடலாகாது. “இறைவா, உன் செயல்கள் அனைத்தின் உட்கருத்தை நீயே அறிவாய். சிற்றறிவாளனாகிய நான் உனது பெருந்திட்டங்களை அறிந்துகொள்ள வல்லவன் அல்லேன். எச்செயலை நீ செய்தாலும் அதன் மூலம் என்னைப் பண்படுத்தி அருள்வாயாக” என்று இறைவனிடம் பிரார்த்தித்துக்கொண்டு அவனுடைய கிருத்தியங்களுக்கு நான் உட்பட்டவர்களாக நடந்துகொள்ளுதலே நாம் உய்வதற்கு உற்ற உபாயமாகும்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s