Sri Paramahamsarin Apta Mozi – 118

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 118

Apta mozi

முந்தைய பகுதி – மொழி 117: https://swamichidbhavananda.wordpress.com/2017/02/16/sri-paramahamsarin-apta-mozi-117/

பெண்ணாசையின் பிணிப்பு

மஹேந்திரருடன் வந்திருந்த பலராம் என்பவர் பரமஹம்ஸருடைய அத்யந்த சிஷ்யர்களில் ஒருவர். அவர் ஒரு குடும்பஸ்தர். விஷ்ணுபக்தி நிறைந்த ஒரு கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பரமஹம்ஸரிடம் வந்து கொண்டிருந்தபொழுதும் அவருடைய தந்தையார் உயிரோடு இருந்தார். அவர் வைஷ்ணவ ஆசாரம் பிறழாதவர். தலையில் பெரிய சிகை; கழுத்தில் துளசிமாலை. ஜபம் செய்வதற்காக மற்றொரு மாலையை அவர் எப்பொழுதும் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார். ஒரிஸா மாகாணத்தில் அவருக்குப் பெரிய ஜமீன் ஒன்றிருந்தது. பிருந்தாவனத்திலும், கோத்தார் என்னும் இன்னொரு வைஷ்ணவ ஸ்தலத்திலும் அவர் ராதாகிருஷ்ணனுடைய ஆலயங்களைத் தமது பொருள் செலவைக் கொண்டு கட்டுவித்திருந்தார். அந்த ஆலயங்களையொட்டி அன்னசாலைகளும் அமைக்கப் பெற்றிருந்தன. யாத்திரீகர்களாக வந்தவர்களுக்கு அங்கு அன்னம் வழங்கப்பட்டது.

தமது சிஷ்யர்களில் ஒருவராகிய இந்தப் பலராமரைப் பார்த்துப் பரமஹம்ஸர் மேலும் பகர்வாராயினர்… “அன்றைக்கு இங்கு ஒரு மனிதன் வந்து சேர்ந்தான். தன் மனைவியின் ஆதிக்கத்தில் அவன் முற்றும் கட்டுப்பட்டிருக்கிறான் என்று நான் கேள்விப்பட்டேன். பெண்ணாசைக்கு அடிமைப்படுகின்றவர்களுக்கும் பாரமார்த்திக வாழ்க்கைக்கும் வெகுதூரம். விவேகமும், வைராக்கியமும் உடையவர்கள் இங்ஙனம் ஆசைக்கு அடிமைப்படலாகாது. அம்மனிதன் இன்னும் என்னென்னவோ பிதற்ற ஆரம்பித்தான். தங்கள் வீட்டுக்கு மஹாபுருஷர் ஒருவர் வந்திருந்தாராம். அந்த மஹாபுருஷருக்காக அவர்கள் வீட்டில் படைத்த உணவில் பொருந்தாத உணவு வகைகளும் இருந்தனவாம். படைத்தவர்களுடைய அன்பின் வசப்பட்டு அந்த மஹாபுருஷர் அந்த உணவு வகைகளையெல்லாம் அருந்தினாராம். இப்படியெல்லாம் அவன் பிதற்ற ஆரம்பித்துவிட்டான்.

சித்தன் போக்கு சிவன் போக்கு

“சில வேளைகளில் எனக்கு ஒரு நூதனமான மனநிலை வந்துவிடுகிறது. அதன் பாங்கு இன்னதென்று விளக்க உனக்கு முடியுமா? அன்றொருநாள் பரத்வானுக்குப் பக்கத்தின் நான் மாட்டு வண்டி ஒன்றில் போய்க்கொண்டிருந்தேன். அப்பொழுது புயல் காற்று ஒன்று அடித்தது. எங்கும் ஒரே தூசி பரவியிருந்தது. நான் சென்றுகொண்டிருந்த வண்டியைச் சுற்றிலும் மனிதர்கள் சிலர் வந்து சூழ்ந்தனர். அவர்கள் திருடர்கள் என்ற செய்தி எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் அமைதியாக வண்டிக்குள் உட்கார்ந்துகொண்டு கடவுளின் திருநாமங்களை ஓத ஆரம்பித்து விட்டேன். சில வேளைகளில் அம்பிகை காளியின் பெயர்களைப் பகர்ந்தேன்; சிவ நாமத்தை உச்சரித்தேன்; நாராயணா என்றும் நவிலலானேன்; ஹனுமானுடைய பெயரையும் பகர்ந்தேன். இதைப்பற்றி உனக்கு என்ன தோன்றுகிறது?”

இப்படி அவர் பகர்ந்து கொண்டிருந்தபொழுது மஹேந்திரர் தமக்குள்ளேயே எண்ணுவாராயினர். “கடவுள் ஒருவர்தான் இருக்கிறார். ஆயினும் அவருக்குச் சொரூபங்களும், பெயர்களும் பல இருக்கின்றன என்பதைப் பரமஹம்ஸர் குறிப்பிடுகின்றாரோ?”

மாயைக்கு விளக்கம்

பலராமரைப் பார்த்துப் பரமஹம்ஸர் மேலும் பகர்ந்தார்: “மாயை என்ன என்பது உனக்குத் தெரியுமா? பெண் ஆசையையும் பொன் ஆசையையும் மாயை என்று பகர வேண்டும். இந்த இரண்டு ஆசைகளின் ஆதிக்கத்தில் அகப்பட்டுக் கொள்கின்ற மனிதன் படிப்படியாகக் கீழ்நிலைக்குப் போய்விடுகிறான். தன்னுடைய வாழ்வெல்லாம் ஒழுங்காக இருக்கிறதென்று அவன் எண்ணிக்கொள்கிறான். ஆனால் அவன் அடைந்துள்ள கீழ்மை அவனுக்கே விளங்காது போய்விடுகிறது.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s