Life History of Yatiswari Sivapriya Amba-1

யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வு

பாகம் 1

Holy Mother Shrine Pose 1898

அன்னை சாரதா தேவியாருக்கு அர்ப்பணம்

பெரிய மூர்த்தி:

மதுரை அருள் துணை மாதர் சங்க தாய்மார்கள் இருவர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களை தரிசித்து உரையாடச் சென்றனர். அவர்களுள் ஒருவர், பெரிய சாமியிடம் கூறினார், “சுவாமிஜி, யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களிடம் இருபது வருடமாகப் பாடம் கேட்கிறோம். அவர்கள் போன்று விவேகம், வைராக்கியம், திருப்தி, அமைதி எனக்கு வரவில்லையே. நான் வளர்த்த சிறுமி இன்று இப்படி இருக்கிறார். அதைப் பார்த்தும், கேட்டும் நான் இப்படி இருக்கிறேனே?” என்று கூறி அழுதார்கள். இந்த கேள்வியைக் கேட்டவர் அம்பா அவர்களின் பூர்வாசிரம அத்தை பாக்கியம்மாள். சுவாமிஜி சிரித்துவிட்டு, “அது சிறுமி என்ற எண்ணத்தை முதலில் விட்டுவிடுங்கள். அது பெரிய மூர்த்தி” என்றார்கள்.

OLYMPUS DIGITAL CAMERA

 தென்னாட்டின் விவேகானந்தராய்த் திகழ்ந்த அருளாளர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களால் “பெரிய மூர்த்தி” என்று பாராட்டப் பெற்றதே யதீஸ்வரி சிவப்ரியா அம்பா அவர்களின் அருள் நிலைக்கு உயர்ந்ததோர் அத்தாட்சி. அத்தகைய மூர்த்தியின் மகிமையில் ஒரு சிறிதேனும் நாம் அறிந்துகொள்ளலாம். அம்பா அவர்கள் வாழ்ந்த அருள்வாழ்வின் மகிமையை பூரணமாக நம்மால் புரிந்துகொள்ள முடியாதுதான். ஆயினும் புரிந்துகொள்ளுமளவு அந்த அருள் நம்மை புனிதப்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Sivapriya Amba 2

குடும்பப் பின்னணி:

“எங்கள் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் அரை டஜன் எமர்சன்கள் இருப்பார்கள்” என்று சுவாமி விவேகானந்தர் பெருமையுடன் கூறியதற்குக் காரணம் இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள குக்கிராமங்களில் கூடப் பண்பாளர்கள் பலர் வாழ்ந்து வந்ததுதான். இத்தகைய பண்பட்டோர் குடும்பம் ஒன்று 19 நூற்றாண்டில் அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள பாலையம்பட்டி என்னும் குக்கிராமத்திலே வாழ்ந்து வந்தது. குடும்பத் தலைவர் அவ்வூர் முருகன் கோவிலிலே நடராஜர் சன்னிதி ஒன்றை எழுப்பி அதிலே ஆடலரசனின் சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார். நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்த ஓராண்டில் அவருக்கு ஆண்மகவு ஒன்று பிறந்தது. செல்வனுக்கு நடராஜன் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர் பெற்றோர். நடராஜனுக்கு பொன்னம்மாள், பாக்கியம்மாள் என்ற ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட சகோதரிகளும் மற்ற சகோதர சகோதரிகளும் இருந்தனர். குடும்பத்தில் தாய் தந்தையரும் அவர்களின் நன்மக்கட்பேறாகிய சகோதர சகோதரிகளும் பண்பாளர்களாக விளங்கினர். சிறுவன் நடராஜன் வளர்ந்து இளமைப்பருவம் அடைந்தபோது அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனம்மாள் என்ற மங்கை நல்லாளை அவருக்கு மணம் முடித்து வைத்தனர், பெரியோர்.

நாட்டுப்பற்று:

நடராஜன் தீவிர காந்தியவாதியாகத் திகழ்ந்தார். பாலையம்பட்டிலிருந்து தூத்துக்குடிக்கு வியாபாரம் நிமித்தமாக வந்தபோது இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து நாட்டுக்கு உழைத்தார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றி வந்தார். கட்சியில் வகித்த இந்தப் பொறுப்பின் காரணமாக மஹாத்மா காந்திஜியுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு திரு. நடராஜன் அவர்களுக்குக் கிட்டியது.

அம்பா அவர்களின் பிறப்பு:

பண்பிற் சிறந்த இத்தம்பதியருக்கு தலைப்பேறாக, நளவருஷம் பங்குனி மாதம் 28ஆம் நாள் கிருஷ்ணபட்ச திருதியைத் திதியில் விசாக நட்சத்திரத்தில் (10.4.1917) பெண் குழந்தையொன்று பிறந்தது. குழந்தைக்குக் கமலாம்பாள் என்று பெயர் சூட்டினர் பெற்றோர்.

மனப்பக்குவம்:

விளையும் பயிர் முளையிலே என்னும் முதுமொழியை மெய்ப்பிப்பது போல கமலா சின்னஞ்சிறு வயதிலேயே அதிசயிக்கத்தக்க மன ஆற்றல் கொண்டு விளங்கினாள். அவள் பத்துமாதக் குழந்தையாக இருந்தபொழுது ஒருமுறை உறவினர்கள் குழந்தைக்கு முன் சற்றுத் தொலைவில் துணி தைக்கும் சிறு ஊசி ஒன்றைப் போட்டு அதை எடுத்துவரச் சொன்னார்களாம். குழந்தை தவழ்ந்து சென்று ஊசியை எடுக்க முயன்றபோது எல்லோரும் கைதட்டி அவளைக் கூப்பிட்டனர். குழந்தையோ திரும்பிப் பாராது, ஊசியை எடுப்பதிலேயே கவனமாக இருந்து அதை எடுத்து வந்துவிட்டாளாம். கவனத்தைச் சிதறவிடாது நுண்ணிய பொருளின் மீதும் மனதைக் குவிக்கும் திறனை குழந்தைப் பருவத்திலேயே வெளிப்படுத்திய கமலாவுக்கு பின்னாளில் தியானத்தில் ஆழ்ந்து ஈடுபடுவது சிரமமாக இல்லாததில் வியப்பில்லை.

உடன் பிறந்தோர்:

ஆண்டுகள் சில கழிந்தன. தம்பதியருக்கு சிங்காரம், ஞானசுந்தரி என்ற இரு குழந்தைகள் பிறந்தன. சிங்காரம் ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துவிட்டாள். கமலாவும், ஞானசுந்தரியும் பரஸ்பரம் அன்பு பூண்டு, நெருங்கிய இணக்கம் கொண்டு, ஒத்த இயல்புடைய அன்புச் சகோதரிகளாக வளர்ந்து வந்தனர்.

கல்வி:

ஐந்து வயது ஆனபோது கல்வியின் பொருட்டு கமலா வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டாள். ஆனால் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் பெற்றோர் அவளைப் படிக்க வைக்கவில்லை. அதற்குமேல் படிப்பதற்குத் தொலைவிலிருந்த பள்ளி ஒன்றிற்கு அனுப்ப வேண்டியிருந்தது. கிராமத்திலிருந்த பெரியோர்கள் அதை விரும்பாததால் கமலாவின் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பள்ளிக்கல்வி அதிகம் பெறாததும் ஒருவிதத்தில் கமலாம்பாளுக்கு உதவியாக முடிந்தது என்றே சொல்ல வேண்டும்.

சந்தர்ப்பவசமாக அத்தகைய கல்வி கமலாவிற்குக் கிட்டாமல் போனது. அக்கால வழக்கப்படி தன் பெண் குழந்தையின் பள்ளிப் படிப்பை நிறுத்தினாலும் தந்தை நடராஜன் அவள் வாசிப்பதற்காக பண்பை வளர்க்கும் புராணக் கதைகள் அடங்கிய, “ஆரியமதோபாக்யானம்” என்ற பல பகுதிகள் கொண்ட தொகுப்பு நூலையும், அது போன்ற பிற நூல்களையும் நூலகத்திலிருந்து எடுத்து வந்து கொடுப்பார். இராமாயணம், மஹாபாரதம், பக்தவிஜயம் ஆகிய புத்தகங்கள் வீட்டிலேயே இருக்கும். ஆனால் அவற்றைத் தான் படித்து மகிழ்ந்ததோடு நின்றுவிடாமல் தன் வயதொத்த சிறுமிகளையும் அழைத்து அவர்களுக்குக் கதை சொல்வார். தனக்கு எது மகிழ்ச்சி அளித்ததோ அதை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள எப்போதும் ஆர்வமாய் இருந்தார் கமலா.

தாய் தந்தையரை விடவும் தன் மூத்த சகோதரியே தன்னை அதிகம் கவனித்துக்கொண்டார் என்று ஞானசுந்தரி நினைக்கும் அளவுக்கு அவள் மீது அன்பு பாராட்டினாள். தனக்குக் கிடைக்காத உயர்நிலைக்கல்வி ஞானசுந்தரிக்குக் கிடைத்தபோது பொறாமையோ ஏக்கமோ சிறிதும் கொள்ளாது அன்போடு தங்கையைப் படிப்பில் உற்சாகப்படுத்தினார்.

பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபோது தந்தை கொடுத்த கதைகளாகப் படித்துவந்த கமலாம்பாள், வயது வரவர புரிந்துகொள்ளச் சற்றுக் கடினமான நூல்களையும் படிக்க முயன்றாள். முதலில் விளையாட்டாக வீட்டில் இருந்த புத்தகங்களையெல்லாம் எடுத்துப் படிப்பாள்.

06 Periamma-02

ஞானசுந்தரி மற்றும் கமலாம்பாள்(யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா )

தன் அறிவுத் திறமைகளை வேறு எதிலும் வீணடித்துவிடாமல் உள்ளத்தைப் பண்படுத்துவதும், உண்மையைப் போதிப்பதுமான நன்னூல்களைப் படிப்பதிலேயே செலுத்தி வந்தாள். திருக்குறள், திருவாசகம், தாயுமானவர் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பட்டனார் கீதை, கைவல்ய நவநீதம் போன்ற நூல்களை இவ்விதம் இயன்ற அளவு வீட்டிலேயே கற்றாள். குறட்பாக்களையும் பக்திப்பாடல்களையும் விரைவில் மனப்பாடம் செய்துவிடுவார். மேலும், எழுதப் படிக்கத் தெரியாத பெரியவர்களுக்கு இவை போன்ற நூல்களை வாசித்துக் காட்டுவாள். பக்கத்துத் தெருவில் வசித்து வந்த ஒரு மூதாட்டி கமலாவின் வீட்டிற்கு வந்து கைவல்ய நவநீதப் பாடல்களையும் அவற்றிற்குரிய விளக்கங்களையும் கமலாவைப் படிக்கச் சொல்லிக் கேட்பது வழக்கம். ஒருமுறை வாசிக்கக் கேட்டவுடன் புரிந்துகொள்ளும் சக்தி அந்தப் பெண்மணிக்கு இல்லை. எனவே மீண்டும் மீண்டும் படிக்கச் சொல்லிக் கேட்பார்கள். இப்படிப் பலமுறை படிப்பதால் சகோதரிகள் இருவரும் அந்த மூதாட்டிக்கு முன்னரே நூலின் பல பகுதிகளை மனப்பாடம் செய்துவிடுவார்களாம்.

மகாத்மா காந்திஜியை சந்திக்கும் வாய்ப்பு:

தந்தை காந்தீயவாதியாக இருந்ததால் இன்னொரு கிடைத்தற்கரிய வாய்ப்பும் கமலா, ஞானசுந்தரி சகோதரிகளுக்குக் கிடைத்தது. மஹாத்மா காந்தியைச் சந்திக்கும் பேறுதான் அது. தந்தை அழைத்துச் செல்ல காந்திஜியின் தரிசனம் பன்முறை அவர்களுக்குக் கிடைத்தது. கமலாவிற்குப் பத்து அல்லது பன்னிரண்டு வயது இருக்கும்போது இருவரையும் அவர்களின் தோழி ஒருத்தியையும் காந்திஜியைப் பார்க்க அழைத்துச் சென்றார் தந்தை. காந்திஜி படுத்திருந்தார். சகோதரிகளும் உடன் வந்த பெண்ணும் காந்திஜி பாதத்தைத் தொட்டு நமஸ்காரம் செய்துவிட்டு தள்ளி நின்றனர். கஸ்தூரிபாய் அறையில் அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். தந்தை நெடுநேரம் காந்திஜியுடன் பேசிக் கொண்டிருந்தார். பேச்சு முடிந்தவுடன் தேசப்பிதா உடன் வந்த சிறுமியைச் சுட்டிக்காட்டி, “இவள் ஏன் இவ்வளவு நகை போட்டிருக்கிறாள்?” என்று கேட்டார். (இருந்த நகைகளையெல்லாம் மாட்டிவிட்டிருந்தாள் அவள் தாய்) உடனே நடராஜன், “இவள் பக்கத்து வீட்டுச் சிறுமி. இவர்கள் இருவர்தாம் என் புதல்விகள்” என்றால். சிறுவயதிலேயே ஆடம்பரமாக நகைகள் அணிவதில் விருப்பமில்லாது இருந்தனர் சகோதரிகள்.

gandhi

மகாத்மா காந்தி

இன்னொருமுறை காந்திஜியைப் பார்க்கச் சென்றிருந்தபோது சகோதரிகள் இருவரும் கதராடை அணிந்திருந்தனர். அதைக் கண்ட காந்திஜி “நீங்கள் வீட்டிலும் எப்போது கதராடைதான் அணிவீர்களா?” என்று கமலாவைக் கேட்டார். உடனே கமலா, “இல்லை. பட்டுப்பாவாடைகூட உடுத்துவோம்” என்று உள்ளதைச் சொல்லிவிட்டாள். கள்ளம் கபடமில்லாத இந்த பதிலைக் கேட்டு மகிழ்ந்து சிரித்தார் மகாத்மா. பொய் சொல்வது கமலா கடைசி வரையில் கற்றுக் கொள்ளாத ஒன்று.

சிரத்தைக்கு சில உதாரணங்கள்:

வைகறையில் துயிலெழுந்துவிடும் நல்ல பழக்கம் இளமையிலேயே கமலாம்பாளிடம் காணப்பட்டது. குறிப்பாக மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்துக் கோலமிடுவாள். சிறுமி கமலாவுக்குக் கலைகள் பல தாமாக வந்தன. முறைப்படி சங்கீதம் கற்பது மிக்க் குறுகிய காலத்திற்கே அவளுக்கு இயன்றது. வானொலியிலோ, கிராம்போன் மூலமாகவோ நல்ல பாடல்களைக் கேட்டுக் கற்றுக் கொள்வாள். ராக, தாள விவரங்களைக் கூடச் சரியாகத் தெரிந்து வைத்திருப்பாள். அழகாக கோலம் போடுவாள். படங்களும் நன்கு வரைவாள்.

திருமணம்:

ஒருமுறை கமலா தன் ஒன்றுவிட்ட சகோதரி மங்களம் என்பவருடன் ஏதோ வேலையாக வெளியில் சென்றாள். அப்போது தூத்துக்குடியில் இருந்த கன்னியாஸ்திரீ மடம் ஒன்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. மடத்தைப் பார்த்தவுடன் கமலா, “நாம் இங்கு போய்ச் சேர்ந்து கொள்வோமா?” என்று கேட்டாள். அதற்கு மங்களம், “வேண்டாம் வேண்டாம். அங்கு எல்லோரும் மீன்தான் சாப்பிடுவார்கள். அந்த இடத்தில் நாம் போய் எப்படி இருப்பது?” என்று சொல்லிக் கையை பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். இப்படி கமலாவிடம் இயல்பாக வைராக்யம் காணப்பட்டாலும் தந்தை திருமண ஏற்பாடுகளைச் செய்ய முற்பட்ட போது வேண்டாம் என்று கூறித் தடுக்கத் தெரியவில்லை. அக்காலத்தில் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விவாகம் செய்து கொண்டு இல்லறத்தில் இருப்பதுதான் பெரும்பாலான பெண்களுக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பாக இருந்தது. அவ்விதமே கமலாம்பாளின் 16 வயது நிரம்பியபோது 5.6.1933 அன்று அருப்புக்கோட்டை திரு. ச.சு. நடராஜன் அவர்களுக்கும் கமலாம்பாளுக்கும் விவாஹம் நடைபெற்றது.

06 Periamma-06

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s