Life History of Yatiswari Sivapriya Amba-2

யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வு

[பாகம் – 1: https://swamichidbhavananda.wordpress.com/2017/03/19/life-history-of-yatiswari-sivapriya-amba-1 ]

பாகம் 2

ஆன்மீகத்தில் ஈடுபாடு:

விவாஹத்திற்குப் பிறகு கமலாம்பாள் மதுரைக்கு வந்தாலும், இடையிடையே அருப்புக்கோட்டைக்குச் சென்று தங்கியிருப்பார்கள். அங்கு ஆத்மசாதனத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு அம்மையாரிடம் மந்திர தீட்சை பெற்றார். அந்த அம்மாள் நம:சிவாய மந்திரத்தின் எழுத்துக்களை வெவ்வேறு விதமாக மாற்றிப் போட்டு உபதேசித்தார். தீட்சை செய்து வைத்தவுடன் அவர்கள் சொன்னபடி செய்ய அப்பொழுது தியானத்தில் அமர்ந்தார் கமலா. மனம் ஆழ்ந்து ஒருமுகப்பட்டது. அதைக் கண்ட அந்த அம்மாள் அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டுக் காட்டி, “எப்படி தியானம் பண்ணுகிறாள் பார். இதெல்லாம் பூர்வஜென்ம ஸம்ஸ்காரம்” என்றாராம். பிறர் சொல்லித்தான் இந்த நிகழ்ச்சி கமலாவுக்குத் தெரிய வந்தது. தீட்சை செய்து வைத்த் அம்மாள் ஆர்வமுள்ள பெண்களைக் கூட்டி வைத்து நல்ல நூல்களை வாசித்து விளக்கம் சொல்வது வழக்கம். கமலா வந்த பிறகு, “எனக்கு இனிமேல் வாசிக்க முடியாது. நீ வாசித்துச் சொல்” என்று அவரிடம் கொடுத்துவிடுவார்.

மதுரையில் ஸத்ஸங்கம்:

மதுரையில் கமலா இல்லத்தில் தெய்வத்திருவுருவங்கள் வைத்து வழிபட்டு வந்தார். தினமும் காலையில் தியானம் செய்வார். அண்டை வீடுகளில் வசித்து வந்த உறவுப் பெண்கள் சிலரை அழைத்து தினமும் வீட்டில் ஸத்சங்கம் நடத்துவார். பட்டனார் கீதை, திருவாசகம், தாயுமானவர் பாடல், திருவருட்பா, திருக்குறள் ஆகிய நூல்களை படித்து விளக்கம் சொல்லுவார். விளக்க வகுப்புகளைச் சுவையாகவும் மனதில் பதியும் வண்ணமும் நடத்துவார்.

யோக சக்தி வெளிப்பட்ட விதம்:

அனைவரும் அடிக்கடி மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்வார்கள். சன்னதியில் நின்று கற்பூர ஆரத்தி பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு திரும்பிவிடாமல் அதிக கூட்டம் இல்லாத தக்ஷிணாமூர்த்தி சந்நிதி மும் அமர்ந்து சிவநாமம் சொல்வார் கமலாம்பாள். அனைவரும் திருப்பிச் சொல்வார்கள். பின் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டுத் திரும்புவார்கள்.

ஒருமுறை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றபோது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் “அங்கு பாருங்கள் ‘சிவசிவ’ என்று ஒளிமயமாகத் தெரிகிறது” என்றார் கமலாம்பாள். உடன் வந்தவர்கள் பார்த்தபோது அவர்களுக்கும் அவ்வாறே தெரிந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த சில வாரங்களில் கமலாம்பாள் சுட்டிக் காட்டிய அதே இடத்தில் ‘சிவசிவ’ என்று நியான் விளக்கு ஒளியில் பளிச்சென்று தெரியும்படி எழுதி வைத்தது கோயில் நிர்வாகம். ஒருமுகப்பட்டு ஆழ்ந்து செல்லவல்ல ஆற்றல் கமலாம்பாளின் மனதிற்கு ஏற்கனவே இருந்தது. அது யோக சக்தியாக வடிவெடுத்துக் கொண்டிருந்தது என்பதையே இது போன்ற நிகழ்ச்சிகள் உணர்த்தின.

Meenakshi Amman Temple

மீனாட்சி அம்மன் கோயில்

அருப்புக்கோட்டையிலிருந்தபொழுது பெற்ற சிவமந்திர தீட்சையும் உள்ளத்தில் நிலைத்த அமைதியையும் அளிக்கவில்லை. “சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகிலில்லை” என்ற கைவல்ய வரிகள் அவர் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தன. நூல்கள் வாயிலாகத் தானறிந்த மஹான்களைக் குருவாக ஏற்று சாதனங்கள் புரிந்தார். 1938ல் தாயுமான சுவாமிகளை மானஸ குருவாக ஏற்றுக்கொண்டு அவருடைய பாடல்களை உள்ளமுருகப் பாடி வந்தார்.

ஆன்மீக தாகம்:

1940ஆம் ஆண்டிலே கவியோகி சுத்தானந்த பாரதியின் புத்தங்கள் சிலவற்றைப் படிக்கும் வாய்ப்பு கமலாவுக்குக் கிடைத்தது. பாடல்கள் உள்ளத்தில் அருள் உணர்ச்சியை ஊட்டுவதாய் இருந்தன. தற்போதும் ஜீவித்திருக்கும் யோகி என்று நினைத்து சுத்தானந்த பாரதியை நேரில் சந்தித்து விண்ணப்பித்தால் அவர் தம்மை சிஷ்யையாக ஏற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று.

Suddhananda Bharathi

கவியோகி சுத்தானந்த பாரதி

கவிஞரின் பாடல் தொகுப்பு நூலில் ‘அன்பு நிலையம், திருச்சி’ என்ற முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு செல்வது என்று ஒரு நாள் இரவு நகைகளையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கிளம்பிவிட்டார். ஆனால் வீட்டின் வாயில் வரையில் வந்துவிட்ட கமலாம்பாள் வாயிற்கதவைத் திறந்தபோது சப்தம் கேட்டு விழித்துவிட்டனர் வீட்டார். நிலைமையை அறிந்த கணவர் கமலாவின் வெகுளித்தனத்தை எண்ணி மனமிளகி கடிந்துகொள்ள மனமில்லாதவராய் சமாதானமாகப் பேசி வீட்டிற்குள் அழைத்து வந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு வீட்டில் கெடுபிடிகள் அதிகரித்தன என்பது சொல்லத் தேவையில்லை. இப்படியே சில ஆண்டுகள் கடந்தன.

குருவை நாடி ஏக்கம்:

தன்னுடன் சாதனம் பயின்று வந்த சகோதரிகளிடம் கூறுவார், “நம் எல்லோருக்கும் நிச்சயம் குரு வாய்ப்பார். அவர் தாயுமான சுவாமிகளுக்கு வாய்த்த மௌன குரு போன்று சிவஞான போதம் வாய்ந்தவராக இருப்பார். அத்தகைய குருநாதர் விரைவில் வருவார். நாம் பகீரதன் போன்று விடாமுயற்சி செய்ய வேண்டும்”. ஆனால் என்ன முயற்சி என்பது தெரியாது!

சிலவேளைகளில், “நம்முடைய மனதுதான் நமக்கு குரு. உள்ளேயே இருந்துகொண்டு அவர் உபதேசிப்பார். ஒன்று மட்டும் நிச்சயம். நமக்கு இது கடைசி ஜென்மமாக இருந்தால் சுவாமி விவேகானந்தரைப் போன்ற குரு கிடைப்பார்” என்று கூறுவார். இப்படியெல்லாம் ஏதேதோ எண்ணியும் பேசியும் நம்பிக்கையுடன் நாட்களைக் கழித்து வந்தார்.

குருவின் முதல் தரிசனம்:

1946ஆம் ஆண்டில் ஒரு நாள் வீட்டு வராந்தாவில் ஒரு நோட்டீஸ் கிடந்தது. ஒரு அன்பர் வீட்டில் மாலை 7 மணிக்கு பஜனையும், சுவாமி சித்பவானந்தர் அவர்களின் பகவத்கீதா உபன்யாசமும் நடைபெறும் என்று அந்த நோட்டீஸ் அறிவித்தது. நோட்டிஸா அது? இறைவன் அருளால் குருநாதர் அனுப்பிய தூதாக, ஆஞ்சநேயர் போன்று வந்ததல்லவா அது! ஆனால் இது போன்ற நோட்டீஸ் எத்தனையோ பார்த்தாயிற்றே; நாம்தான் போக முடியாதே என்று உணர்ந்த போது கமலாம்பாளுக்கு நோட்டீஸைப் படித்தபோது தோன்றிய உற்சாகம் வடிந்து போனது. இதைப் பற்றி பேசி எப்படி அனுமதி பெறுவது? வீண் சச்சரவுதான் உண்டாகும். இப்படி எண்ணிக் குழம்பிய கமலாம்பாள் ஓர் குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார். வீட்டில் யாருக்கும் தெரியாமல் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்று அரைமணி நேரத்தில் திரும்பிவிடலாம் என்று முடிவு செய்தார். மாலை நேரத்தில் இடத்தை விசாரித்துக்கொண்டே விரைந்தார். அங்கே பஜனை நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து கீதை விரிவுரை ஆரம்பிக்கப்போகிறது என்று ஒருவர் அறிவித்தார். உடனே சுவாமிஜி எழுந்தார். அவருக்காக அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஆசனத்தை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு வேறொன்றில் அமர்ந்தார். “ஓம் பார்த்தாய ப்ரதிபோதிதாம்” என்று தொடங்கினார். அவ்வளவுதான் கமலாம்பாளின் செவியில் பட்டது! தொடர்ந்து பேசியதொன்றும் கேட்கவே இல்லை. குருமூர்த்தியின் தரிசனம் ஆனந்தம்! அந்தப் பரவச நிலை செவியையும் செயலிழக்கச் செய்தது. தொலைவில் இருந்தபடியே குருமூர்த்தியின் தாமரைத் திருவடிகளை மானசீகமாகப் பன்முறை வணங்கிவிட்டு எழுந்து விரைந்து நடக்கலானார்.

d

சுவாமி சித்பவானந்தர்  1955

ஒவ்வொரு மாதமும் கீதா உபன்யாசம் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டார் கமலாம்பாள். போக முடியுமா? போகிறேன் என்று கேட்கத்தான் முடியுமா? இந்த அச்சத்தினால் வேதனையுடன் தன்னை அடக்கிக்கொண்டு இருந்துவிட்டார்.

இரண்டாம் முறை தரிசனம்:

ஒரு நாள் இறையருளால் குருதரிசனம் முதன்முதல் கிடைத்த அதே இடத்தில் காலை 7 மணிக்கு ஸத்ஸம்பாஷணையை முதல் முறை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. “மாமிசம் உண்ணலாமா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு சுவாமி சித்பவானந்தரிடமிருந்து “உண்ணலாம்” என்ற உறுதியான பதில் வந்தது. “யாவரும் உண்ணலாமா?” என்று கேள்வி தொடர்ந்தது. “யானை மாமிசம் சாப்பிடாது. சிங்கம் உண்ணும்” என்று சுவாமிஜி விடையிறுத்தார். ரத்தினச் சுருக்கமான இந்த பதிலினால் சுவாமிஜியின் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சக்தி புரிந்தது. மாமிசம் உண்ணாதவருக்கும் வலிமை உண்டாகும். ஆனால் உண்பவர்க்கோ வலிமையோடு பரபரப்பும் ஆக்ரோஷமும் சேர்ந்து வளரும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். அடுத்த கேள்வி ‘கடவுள் உருவமா? அருவமா? என்பது. ‘உருவும் அருவும் இரண்டுமாக இருக்கிறார். பனிக்கட்டியும் நீரும் போல’. ஸத்ஸம்பாஷணையே இப்படி இருந்தால் உபன்யாசம் எப்படி இருக்கும்! அந்த கீதாமிருதத்தை நான் பருகவே முடியாதா? என்ற ஏக்கம் கமலாம்பாளின் உள்ளத்தைக் கலக்கியது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்ற கவலையில் மனம் உத்வேகமடைந்து வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நிகழலாயின. அவை உண்ணாவிரதம், அழுகை என்ற வடிவெடுத்தன.

எதிர்மறை முறையிலே போராடியது பலனளிக்கவில்லையாதலால் உடன்பாட்டு முறையைக் கையாண்டால் என்ன என்ற உத்தி தோன்றியது. நயந்து பயந்து பணிந்து கேட்டு ஓர் உபன்யாசத்திற்கு மட்டும், அதுவும் அரைமணி நேரத்திற்கு மட்டும், அனுமதி பெற்றார். இவ்வாறு முதலில் கேட்ட உபன்யாசத்தில் பகவத்கீதை 7ஆம் அத்தியாயத்திலிருந்து 2வது சுலோகத்தின் விளக்கத்தைக் கேட்டார்.

ज्ञानं तेऽहं सविज्ञानमिदं वक्ष्याम्यशोषत: ।

यज्ज्ञात्वा नेह भूयोऽन्यज्ज्ञातव्यमवशिष्यते ॥

ஞானம் தேऽஹேம் ஸவிக்ஞானமிதம் வக்ஷ்யாம்யசேஷத: |

யஜ்ஞாத்வா நேஹ பூயோऽந்யஜ்ஞாதவ்யமவசிஷ்யதே ||

“விக்ஞானத்தோடு கூடிய இந்த ஞானத்தை மிச்சமில்லாமல் நான் உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்த பின் மேலும் நீ அறிய வேண்டியது எதுவும் பாக்கியில்லை”.

ஆம். முதல் உபதேசத்திலேயே முற்ற முடிந்த உண்மையைச் சொல்கிறேன் என்று உத்தவாதம் அளித்தார் உத்தம குரு.

சமயோசித புத்தி:

சுவாமிஜி குற்றாலம், திருநெல்வேலி, தூத்துக்குடி முதலிய இடங்களில் நடத்திய அந்தர்யோகங்களைப் பற்றி அத்தை பொன்னம்மாள் மூலம் கேள்விப்பட்டார் கமலாம்பாள். உறவினர் இருவரை அந்தர்யோகங்களில் கலந்துகொள்ள அனுப்பி அவர்களைக் குறிப்பு எழுதிவருமாறு கேட்டுக்கொண்டார். அவர்கள் கொணர்ந்து கொடுத்த குறிப்புகளை வாசிப்பதும் அதைப் பற்றியே பேசுவதுமாக இருந்தார். விதியை நொந்துகொண்டிருக்காமல், அதைந்த சூழ்நிலையில் என்னென்ன வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் உருவாக்கிப் பயன்படுத்தி வந்தார்.

இதற்கிடையில் தெய்வாதீனமாக 1947ஆம் ஆண்டில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தருடைய வானொலி உரை ஒன்றை இருவரும் சேர்ந்து கேட்கும் வாய்ப்பு கிட்டியது. அதிலிருந்து அடக்குமுறை கொஞ்சம் தளர ஆரம்பித்தது. இப்போது முழுநேர உபன்யாசம் கேட்டு வர அனுமதி கிடைத்தது.

06 Periamma-08

கமலாம்பாள்(அம்பா) மற்றும் ஐயா திரு. நடராஜன் அவர்கள்

அம்பாளின் கட்டளை:

1948ல் மதுரையிலேயே இரண்டு நாள் அந்தர்யோகம் நடந்தது. கணவரிடமிருந்து போராட்டமில்லாது கிடைத்த இந்த அனுமதி மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்கியது. உபன்யாசத்திற்கு அவரும் வரவேண்டுமென்று கணவரை நச்சரிக்கலானார். இதற்கிடையில் ஒரு நாள்…

கல்யாண மண்டபத்தில் சுவாமிஜி வந்து கொண்டிருந்தார். “கணவரையும் அழைத்து வா” என்று அம்பிகை கமலாம்பாள் ஏவினாள். “கூப்பிட வெளியே போனால் என்னை மறுபடியும் உள்ளே வர அனுமதிக்க மாட்டார். ஆகையால் போக மாட்டேன்” என்று கூறி மறுத்துவிட்டார் கமலா. சினமுற்ற அம்பிகையின் ஏவுதலின்படி நந்தியம்பெருமான் கமலாவின் நெற்றியில் சூடு வைத்துவிட்டார். விழித்துப் பார்த்தால் கனவு! ஆனால் உண்மையாகவே நெற்றியில் சூடு போடப்பட்டிருந்தது! கணவரிடம் கனவைக் கூறி காயத்தைக் காட்டினார் கமலா. அதைக் கண்டும் கேட்டும் கூட அவரது மனம் உடனே மாறி அமையவில்லை.

மூன்றாவது சந்திப்பு (முதல்முறை உரையாடியது):

1950ல் ஒரே ஒரு அந்தர்யோகத்திற்கு மட்டும் போக அனுமதி பெற்றுக்கொண்டு 27.11.1950 அன்று குற்றாலத்திற்குப் புறப்பட்டார். இதுதான் கமலாம்பாள் முழுமையாகக் கலந்துகொண்ட முதல் அந்தர்யோகம். இந்த அந்தர்யோகத்தின்போதுதான் 29.11.1950 அன்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களைச் சந்தித்து முதன்முதலாகத் திருவடித்தாமரைகளை வீழ்ந்து வணங்கும் பேறு பெற்றார் கமலாம்பாள். வணங்கி எழுந்த நின்ற கமலாம்பாளை உடன் வந்திருந்த பெரியவர் பி.ஆர்.பி. பெரியசாமி என்பவர் சுவாமிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ‘கீதாசாரப் பாடல்’ என்று கமலாம்பாள் எழுதி வைத்திருந்ததைத் திரு பி.ஆர்.பி. பெரியசாமி அவர்கள் சுவாமிஜிக்குக் காட்டினார். எட்டு அத்தியாயங்கள் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. அதை வாங்கிப் படித்துப் பார்த்தார் சுவாமிஜி. இந்த நூலைப் பற்றி என்ன சொல்லப்போகிறாரோ என்று ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த கமலாம்பாளை நோக்கி திருவாய் மலர்ந்தருளினார் சுவாமிஜி. குருநாதரிடம் கமலாம்பாள் முதன்முதல் கேட்ட வாக்கியம், “உள்ளத்தில் தெளிவு ஏற்பட வேண்டும். உள்ளம் தெளிவுபடத் தெளிவுபட இன்னும் மேலான கருத்துக்கள் தோன்றும். இங்கே (தன் மார்பில் கைவத்துக்காட்டி) தெளிவு ஏற்பட ஏற்பட அங்கே (பாடலைக் காட்டி) தானாகத் தெளிவு வந்துவிடும்” இதைக் கேட்டு உற்சாகமடைந்த கமலா, “குற்றமிருந்தால் திருத்த வேண்டும், சுவாமி” என்று பணிவோடு விண்ணப்பித்துக்கொண்டார். பாடலை மட்டுமல்லாது தன்னையும் திருத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இவ்விதம் கேட்டார். சுவாமிஜி “இப்போது இதில் திருத்துவதற்கு குற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் கீதையின் அடிப்படை முற்றிலும் இதில் அமைந்துவிடாது. இது நல்ல முயற்சி. நல்ல சாதனம். இதிலே போக்கும் நேரம் மிக நல்ல நேரம். இது நல்ல பயிற்சி. இப்படியே இனியும் தொடர்ந்து செய்து வர வேண்டியது. அவசியம் இப்படியே செய்து கொண்டு வாருங்கள்” என்று உற்சாகப்படுத்தும் உரைகளை மொழிந்தார். பின் கைக்கூப்பி வணங்கினார். விடைகொடுத்துவிட்டார் என்பது கமலாம்பாளுக்கு விளங்கிவிட்டது. மீண்டும் நமஸ்கரித்து எழுந்தார். ஆனால் செல்ல மனம் இல்லாமல் நின்று கொண்டே இருந்தார். கண்கள் கலங்க ஆரம்பித்தன. பேச விழைந்தார். ஆனால் நா எழவில்லை. கமலாம்பாள் போகாமல் கைகூப்பியபடி நின்றுகொண்டிருப்பதைக் கண்ட சுவாமிஜி ‘சரி’ என்று கடாக்ஷித்து தலையை ஆட்டி மீண்டும் விடை கொடுத்தார்.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s