Life History of Yatiswari Sivapriya Amba-4

யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வு

[பாகம் – 1: https://swamichidbhavananda.wordpress.com/2017/03/19/life-history-of-yatiswari-sivapriya-amba-1 ]

[பாகம் – 2: https://swamichidbhavananda.wordpress.com/2017/03/20/life-history-of-yatiswari-sivapriya-amba-2 ]

[பாகம் – 3: https://swamichidbhavananda.wordpress.com/2017/03/21/life-history-of-yatiswari-sivapriya-amba-3/ ]

பாகம் 4

புலனடக்கம் பழகிய விதம்:

புலனடக்கம் பழகுவதற்கும் கடும் முயற்சிகள் எடுத்துக் கொள்வார். உதாரணத்திற்கு ஒன்று: தாம் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பதார்த்தத்தில் ஆசையை நீக்க அதைத் தயாரித்து வைத்துவிட்டு உண்ணாது இருப்பார். பிறர்க்கு எடுத்துப் பரிமாறுவார். ஆனால் தான் சிறிது கூட எடுத்துக் கொள்ளமாட்டார். இத்தனை காலத்திற்கு அதைச் சாப்பிடுவதில்லை என்று வைத்துக்கொள்வார். அப்பதார்த்ததில் ஆசை போன பின் அளவுடன் அருந்தப் பழகிக் கொள்வார்.

பெரியசாமி சித்பவானந்தரின் அருளாற்றல்:

குருநாதர் சித்பவானந்த சுவாமிஜி ஆட்கொண்ட பிறகு ஒரு நாள் தாம் ஜபம் செய்து வந்த ருத்திராட்ச மாலையை எடுத்துக்கொண்டு குருநாதரை அணுகி பயபக்தியுடன் வணங்கி, “சுவாமி, இந்த மாலையில் ஜபம் செய்து தர வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்கள். சுவாமிஜியும் சம்மதித்து மாலையைப் பெற்றுக் கொண்டார்கள். மறுநாள் ஜபமாலையைத் திரும்பப் பெறுவதற்குச் சென்றபோது சுவாமிஜி அம்மா அவர்களிடம், “ஓங்காரம் சொல்லாமல் ஜபத்திருக்கிறீர்களே?” என்றார்கள். என்ன மந்திரம் எப்படி ஜபிக்கப்படுகிறது என்பதை அம்மா அவர்கள் கூறாதபோதே ஜபமாலையில் ஜபித்தவுடன் உண்மை நிலையை உணர்ந்துகொண்டது குருநாதரின் அருளாற்றல் என்றால், திட விசுவாசத்துடன் உரு ஏற்றியது சிஷ்யையின் சிறப்பு ஆகும். அதன்பின் குருநாதர் கூறியபடி முறையாக மந்திரத்தை ஜபித்து வந்தார்கள். ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கான முறை ஜபித்தார்கள். நாளடைவில் எண்ணிக்கையில் கருத்துச் செலுத்தாமல் உணர்ந்து ஓதுவதை முக்கியமாகக் கொண்டு செய்து வந்தார்கள். வாழ்நாளின் இறுதி மூச்சு அடங்கும் வரை ஜபம் செய்வதை நிறுத்தவில்லை.

ஆன்மீக அனுபவங்கள்:

அம்மா அவர்களின் ஆன்மீக அனுபவங்கள் காட்சிப்புலனுக்கு அதிக இடம் இருந்தது என்று சொல்லலாம். ஒருமுறை மீனாட்சி அம்மன் கோயிலில் தட்சிணாமூர்த்தி சன்னிதியில் அமர்ந்து தாய்மார்களுடன் அருட்பாடல்கள் பாடி விளக்கம் சொல்லிக்கொண்டிருந்த போது, அம்பிகையே பச்சைப் பட்டு உடுத்திய சிறுமியாய் வந்து படியில் அமர்ந்து சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு மறைந்தாள்.

1955

குருநாதர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் முதல் தரிசனம் கிடைத்த ஓராண்டிற்குப் பிறகே அடுத்த சந்திப்பு நிகழ்ந்தது. குடும்பச் சூழலில் குருவைச் சென்று தரிசிக்க வாய்ப்பு இல்லாததால் ஏங்கிக் கிடந்தது உள்ளம். ஒரு நாள் கனத்த இதயத்துடன் இல்லத்தைச் சுற்றியிருந்த தோட்டத்திற்கு வந்தார்கள். அங்கே நின்று கொண்டிருந்தது யார்? ஸத்குருநாதரல்லவா? விரைந்து சென்று வணங்கினார். “எனக்கு பூ வேண்டுமே” என்றார் புனிதர். அம்மா அருகில் இருந்த செடிகளிலிருந்து சில மலர்களைப் பறித்துப் பரவசத்துடன் சமர்ப்பித்தார்கள். புன்னகைத்து அருள் புரிந்த குருநாதர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் மறைந்துவிட்டார். இந்த அருட்காட்சிக்குப் பிறகுதான் ஸ்வாமியவர்கள் இலக்குமி இல்லத்திற்கு வர ஆரம்பித்தார்கள்.

சொப்பனத்தில் ஐயம் தெளிவித்தல்:

மற்றொரு முறை சுவாமிஜியவர்களுடன் தொடர்பு ஏற்பட்ட புதிதில், “மஹாத்மா காந்திஜி பெரிய மகான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் அவதார புருஷர் அல்லர்” என்றார்கள். மஹாத்மாவின் மீது தேவதா விசுவாசம் வைத்திருந்த அம்மா அவர்களுடைய உள்ளத்தில் சுவாமிஜியவர்களின் வார்த்தைகள் பெரும் கலக்கத்தை உண்டு பண்ணின. மனம் அமைதியிழந்துவிட்டது. அன்றிரவு கனவிலே குருநாதர் தோன்றி உங்களுக்கு, “மஹாத்மாவின் வார்த்தைகள் மீது நம்பிக்கை உண்டல்லவா?” என்றார். “ஆம். ஐயனே”. “அவரே தாம் அவதார புருஷர் இல்லை என்று கூறியிருக்கிறாரே”. குருநாதர் இப்படிச் சொன்னவுடன் அம்மா அவர்களின் குழப்பம் நீங்கி மனம் அமைதி அடைந்தது. விழித்துப் பார்த்தபோது சொப்பனதீட்சை என்பது போல் சொப்பனத்தில் வந்து ஐயம் தெளிவித்துள்ளார் ஐயன் என்று அறிந்து கொண்டார்.

கடைபிடித்த நெறிகள்:

அம்மா அவர்கள் புரிந்த ஆத்ம சாதனத்தின் சிறப்பைச் சுருங்கச் சொல்வதென்றால் சுவாமி விவேகானந்தர் கூறிய நான்கு யோகங்களையும் முறையாகக் கடைபிடித்து அனைத்திற்கும் ஆதாரமாக குருவருளைத் துணையாகக் கொண்டு நெறியைச் சரியாகப் பிடித்தால் குறியைத் தவறாது அடையலாம் என்ற விசுவாசத்தோடு முயன்று வெற்றி கண்டவர் என்று சொல்லலாம். நான்கு யோகங்களுக்கும் சம அந்தஸ்து கொடுப்பது ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தின் கோட்பாடு. அவ்விதமே அம்மா அவர்களும் கருதினார்கள்; கடைப்பிடித்தார்கள்.

ஐயா திரு. நடராஜன் அவர்களின் மறைவு:

1967ஆம் ஆண்டு ஒரு நாள் தம் குருநாதரைத் தம் பிறந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு அழைத்துச் சென்றார்கள் ஐயா அவர்கள். ஆங்கு அவர்களுடைய தாயாரைக் காணச் சென்றபோது ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் தாயாரிடம், “அம்மா, உங்கள் மகனை எனக்குத் தந்துவிடுங்கள்” என்று கேட்டார்கள். பெரியவர் எதற்காக இப்படிக் கேட்கிறார் என்று புரியாவிட்டாலும் தாயார் “எடுத்துக்கொள்ளுங்கள் சுவாமி” என்று தயங்காது விடையளித்தார். உடனே சுவாமிஜியும், “சரி, இனி உங்கள் மகன் நம் பிள்ளை ஆகிவிட்டான்” என்று ஏற்றருளினார்கள். இந்தச் சிறிய உரையாடலின் உட்கருத்து யாருக்கும் விளங்கவில்லை. ஐயா அவர்கள் ‘சுவாமிஜி’ என்னைத் தன் அருட்செல்வனாக ஏற்றுக்கொண்டுவிட்டார்’ என்று எண்ணிப் பூரிப்பு அடைந்தார்.

இந்த நிகழ்ச்சி நடந்து சில நாட்களுக்குப் பின் கொல்லத்திற்கு திருமதி. ஞானசுந்தரி அம்மா அவர்களின் இல்லத்திற்குக் குடும்பக் காரியம் நிமித்தமாகச் சென்றிருந்தார். ஐயா அவர்கள் குளிக்கச் சென்றபோது திடீரென்று கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அந்தக் கணமே அங்கேயே உயிர் பிரிந்தது.

இப்படி நடக்கப்போவதை முன்னமே அறிந்துதான் தம் அன்புச் சீடரின் அன்னையுடைய வருத்தத்தைப் போக்கும் வகையிலும், அவருக்கு முக்தியை நல்குமாறும், “அவன் நம்ம பிள்ளை ஆகிவிட்டான்” என்றார்கள் போலும்!

ஐயா அவர்கள் காலமான செய்தி ஸ்ரீமத் சுவாமிஜி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, சுவாமிஜியவர்கள் தபோவனத்தின் மேலாளரான சுவாமி சாந்தானந்தர் அவர்களை அழைத்து, “அந்த அம்மாள் நம்மையே சார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தக் குறையும் வரக்கூடாது. நீங்கள் திருவேடகத்திலிருந்து தினமும் போய்ப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று அருளினார்கள்.

உள்ளத்தில் வந்த வைராக்கியம்:

தியானம் செய்யும்போது அருகில் ஒரு துணியை விரித்து நகைகளைக் கழற்றி அதன்மீது வைத்துவிட்டு, நகைகளின் மீது பற்றில்லாது இருக்க வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு தியானம் செய்வார்கள். துறவியாவதற்கு முன்னேயே ஒவ்வொன்றாகத் துறந்தார்கள். அணிகலனைத் துறந்ததோடு முடியையும் களைந்தார்கள். சொத்து விவகாரங்களைக் கூட ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் கட்டளைப்படி ஸ்ரீமத் சாந்தானந்தர் அவர்களே சிக்கலில்லாது முடித்து வைத்தார்.

சேலம் ஸ்ரீ சாரதா ஸமிதி:

OLYMPUS DIGITAL CAMERA

இதற்கிடையில் ஸ்ரீமதி சீதாலக்ஷ்மி ராமசுவாமி அம்மையார் சுவாமிகளை அணுகி சேலத்தில் பெண்களுக்கென ஒரு ஸ்தாபனம் துவக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதன்பேரில் 1956ல் ஸ்ரீ சாரதா வித்யாலயம் என்னும் கல்விச்சாலை முதலில் துவக்கப்பட்டது. அதில் சில தாய்மார்கள் தங்கி அன்னையாருக்குப் பூஜை செய்துகொண்டு பள்ளி நிர்வாகத்திலும் பங்கேற்று வந்தனர். இந்தப் பணியில் ஸ்ரீமதி ராஜம்மாள் என்ற பக்திமதியையும் சுவாமிஜி ஈடுபடுத்தியிருந்தார்கள். அன்னையாரின் அருட்காட்சி பெற்று அவருக்குத் தம் உடல் பொருள் ஆவியை உவந்தளித்தவர் ஸ்ரீமதி சீதாலக்ஷ்மி அம்மையார் அவர்கள்.

ஸ்ரீமதி ராஜம்மாள் அவர்கள் திண்டுக்கல்லில் பள்ளித் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரையும், மூன்றாவதாக அம்மா அவர்களையும் சேலத்தில் பணியாற்றி வந்த இன்னும் நான்கு பெண்மணிகளையும் வைத்து “ஸ்ரீ சாரதா ஸமிதி” 1967ல் உருவாக்கினார்கள் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர். சீதாலட்சுமி அம்மாளைத் தலைவராகவும், அம்மா அவர்களை உபதலைவராகவும், மற்ற ஐவரையும் உறுப்பினர்களாகவும் கொண்டு ஸமிதி துவக்கப்பட்டது. சீதாலட்சுமி அம்மாள் அவர்கள் நிர்வாகத் திறமை மிக்கவர்.

Salem Sarada College

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி

அவருடைய பேரார்வத்தினால் சுவாமிஜியவர்களின் தலைமையில் 1961ல் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி துவக்கப்பட்டது. இக்கல்வி நிலையங்களின் நிர்வாகத்திற்குப் பொது மேலாண்மையாகவும் ஆன்மீகப் பணியை இன்னும் விரிவுபட ஆற்றுவதாயும் பெண் துறவியர் ஸ்தாபனம் இருக்கவேண்டும் என்று கருதித்தான் சுவாமிஜியவர்கள் ஸ்ரீ சாரதா ஸமிதியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எழுவருக்கும் சந்நியாச தீட்சை செய்து வைக்கத் தீர்மானித்தார்கள்.

ஆன்மீகத்தில் பயிற்சியளிக்க அம்மா அவர்களே பொருத்தமானவர் என்று சுவாமிஜி கருதினார்கள். அம்மா அவர்களிடம், “உலகப் பொருட்களையும் உறவினரையும் துச்சமென ஒதுக்கிவிட்டு நம்மோடு வந்து சேர்ந்துவிடுங்கள்” என்று அழைத்தார்கள். எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு 06.03.1973 அன்று திருவேடம் சென்று குருநாதரைப் பணிந்து நின்றார்கள் அம்மா.

சுவாமி சித்பவானந்தரின் நோக்கம்:

“உங்களுக்கு சந்நியாசம் கொடுத்தால் எனது சங்கல்பம் ஒன்று நிறைவேறுகிறது. நாம் ஸ்ரீ சாரதா ஸமிதியைத் துவக்கிப் பெண்களுக்கு சந்நியாசம் செய்து வைக்கும் இந்த சம்பவம் நூறு வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டின் சரித்திர மயமாகும். ஏனென்றால் உங்களுக்கு தீட்சை செய்து வைத்த பிறகு பிரம்மச்சாரிணிகள் வருவார்கள். அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக நீங்கள் இன்னும் கொஞ்ச நாள் சேவை செய்ய வேண்டியது” என்று அம்மாவிடம் சுவாமிஜி சொன்னார்கள்.

“நாம் அன்னை சாரதா தேவியாருடைய பிள்ளைகள் என்பதை தினமும் 10 முறை அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள். உணர்ந்து சாதனத்தில் ஈடுபடச் செய்யுங்கள். கீழோர் ஆயினும் தாழ உரை என்பதையும் தினமும் சொல்லுங்கள். அவர்கள் தம்மை அன்னையாரின் குழந்தைகள் என எண்ணினால் மாறியமைவார்கள். இதுதான் நீங்கள் அன்னையாருக்குச் செய்யும் திருத்தொண்டு. இவ்விதம் பலருடைய மனதை மாற்றியமைத்து சந்நியாசினிகளை உருவாக்குவதற்காகத்தான் உங்களுக்கு சந்நியாஸம் தரப்போகிறோம்” என்று சுவாமிஜி கூறினார்கள்.

சந்நியாசம் பெறுதல்:

முதல் நாள் விரதமிருந்து ஆத்மபிண்டம் போடுதல் போன்ற கிரியைகளை முடித்தபின் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களிடமிருந்து காவி வஸ்திரத்தைப் பெற்றிருந்தார்கள் சந்நியாசம் பெறப்போகும் எழுவரும். 17.04.1973 சித்திரா பௌர்ணமியன்று அதிகாலை ஸ்ரீ ராமகிருஷ்ண ஹோமமும் அதையடுத்து சந்நியாஸிகள் மட்டுமே செய்யும் விரஜா ஹோமமும் நிகழ்த்தப்பட்டன. ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் சொல்லச் சொல்ல சம்ஸ்க்ருத மந்திரங்களைப் புதிய சந்நியாசினிகள் எழுவரும் திருப்பிச் சொன்னார்கள். பழைய சம்ஸ்காரங்கள் ஒவ்வொன்றாக “ஓடிப்போ” என்று தம் ஞானசக்தியினால் குருநாதர் விரட்டியோட்ட, அம்மா அவர்களின் மனம் எங்கோ போனது. ஹோமத்தின் முடிவில் ஸ்ரீமத் சுவாமிஜி ஹோமப் பிரசாதமாக விபூதி அணிவித்து ஒவ்வொருவரையும் அவர்களுடைய புதிய சந்நியாச நாமத்தைச் சொல்லி அழைத்தார். அவரவர் புதுப் பெயர்களை 3 முறை சொல்லி அவர்களைத் திரும்பச் சொல்ல வைத்தார். பெற்றோருக்கு கமலாம்பாளாகவும், அனைவருக்கும் அம்மாவாகவும் இருந்த மூர்த்தியை குருநாதர் “யதீஸ்வரி சிவப்ரியா அம்பா” ஆக்கினார். நாமும் இனி அந்த அருட்தாயை அம்பா என்றே அழைப்போம்.

ஸ்ரீ சாரதா ஸமிதியின் முதல் சந்நியாசினிகள் எனும் பேறு பெற்ற பெரியவர்கள் எழுவரின் பெயர்களையும் தெரிந்துகொள்வது இங்கு பொருத்தமாய் இருக்கும்.

யதீஸ்வரி சிவப்ரியா அம்பா அவர்கள் – உபதலைவர்

யதீஸ்வரி சாரதாப்ரியா அம்பா அவர்கள் – தலைவர்

யதீஸ்வரி அம்பிகாப்ரியா அம்பா அவர்கள்

யதீஸ்வரி விஷ்ணுப்ரியா அம்பா அவர்கள்

யதீஸ்வரி விநாயகப்ரியா அம்பா அவர்கள்

யதீஸ்வரி நாராயணப்ரியா அம்பா அவர்கள்

யதீஸ்வரி சங்கரப்ரியா அம்பா அவர்கள்.

With Numbers

நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள்(இடமிருந்து வலம்) – 1. யதீஸ்வரி சிவப்ரியா அம்பா அவர்கள், 2. யதீஸ்வரி சாரதாப்ரியா அம்பா அவர்கள்.

நிற்பவர்கள் – நடுவரிசை (இடமிருந்து வலம்) – 3. யதீஸ்வரி விஷ்ணுப்ரியா அம்பா அவர்கள், 4.யதீஸ்வரி அம்பிகாப்ரியா அம்பா அவர்கள், 5. யதீஸ்வரி விநாயகப்ரியா அம்பா அவர்கள், 6. யதீஸ்வரி சங்கரப்ரியா அம்பா அவர்கள், 7. யதீஸ்வரி நாராயணப்ரியா அம்பா அவர்கள்.

பயிற்சி அளித்தல்:
தபோவன பூஜா விதிப்படி அன்னை சாரதா தேவியாருக்குப் பூஜை செய்வதற்கும் பிரம்மச்சாரிணிகளைப் பழக்கினார், அம்பா அவர்கள். ஏகாதசி நாட்களில் விரதம் இருப்பதை உற்சாகப்படுத்தினார். உடல் நலத்தைப் பாதிக்குமளவு உண்ணா நோன்பு இருப்பதைக் கண்டிப்பார். புனித நாட்களை பக்தி சிரத்தையோடு அனுஷ்டிக்கப் பழக்கினார். அருட்திரு மூவரின் ஜெயந்தி விழாக்களை பக்தி சிரத்தையோடு கொண்டாடப் பயிற்சி கொடுத்தார். ஆசிரமத்தில் பலரோடு சேர்ந்து வாழும் கூட்டு வாழ்க்கை (Community life) எப்படி அமைய வேண்டும் என்பதையும் பிரம்மச்சாரிணிகளுக்குக் காட்டிக் கொடுத்தார்.

பிரம்மச்சாரிணிகள் ஏதாவது குற்றமிழைத்துவிட்டால் கடுஞ்சொல் கூறித் திட்டமாட்டார். மாறாக அன்பாகப் பேசி, தன் குற்றத்தை உணரவைத்து திருந்தியமைய உதவுவார். “உன் தவறை நீ உணர்ந்துவிட்டாயல்லவா? இனிமேல் திருந்திவிடுவாய். அதையே நினைக்காமல் வேறு காரியத்தைச் செய். மீண்டும் இந்த தவறு நேராமல் ஜாக்கிரதையாக இரு” என்று கூறி விஷயத்தை முடித்துவிடுவார்கள்.

எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்து வகுப்பு நடத்தியதைப் போல ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அவர்கள் எவ்வாறு சாதனம் புரிந்து வருகிறார்கள் என்பதைக் கேட்டறிந்து தேவைக்கு ஏற்றாற்போல் வழிகாட்டுவார்கள் அம்பா அவர்கள்.

குறைகளை நிறையாக்குதல்:

சாதன வாழ்க்கையில் இடையூறுகள் பல. அவை காம காஞ்சனமாகவும், சோம்பல், உறக்கத்திலும், பேருண்டியிலும் விருப்பம், பெரியோரை எதிர்த்துப் பேசுதல் போன்ற வடிவெடுத்து வரும். இவ்வாறு சிரமப்படும் சாதகர்களை பொறுமையுடனும் அன்புடனும் வழி நடத்துவார். வெவ்வேறு சூழ்நிலைகளில் பிறந்து வளர்ந்த ஜீவர்கள் ஒன்று கூடி இருக்கும் போது அடிக்கடி ஒற்றுமைக் குறைவும், பிணக்குகளும் பிறரைத் துன்புறுத்துதலும் ஏற்படும். இது போன்ற சமயங்களில் “சிறிய கஷ்டத்தைப் பெரிது பண்ணக் கூடாது” என்பார்கள்.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s