Monthly Archives: April 2017

Question & Answer – 48

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 48: ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எண்ணுகிற எண்ணங்களுக்குக் கணக்கேயில்லை. ஆனால் மனிதன் உயிர் துறக்கும்போது எண்ணுகிற எண்ணம் எதுவோ அதுவாக அடுத்த பிறவி வந்து வாய்க்கிறதென்று கைவல்யத்தில் சொல்லியிருக்கிறது. பகவத்கீதையில் நீண்டநாள் சொர்க்கத்தில் தேவபோகங்களை அனுபவித்துவிட்டுப் புண்ணியம் தேய்ந்த பிறகு மறுபிறவி எடுக்கிறான் என்று சொல்லியிருக்கிறது. ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு பிறவி எடுத்தாக வேண்டுமா? கைவல்யம், பகவத் கீதை இவைகளில் சொல்லியிருக்கும் மறுபிறப்பைப் பற்றி விளக்க வேண்டுகிறேன்.

பதில்: மனிதனுக்கு வினை இருக்கும் பரியந்தம் பிறவி உண்டு. வினைக்கு மூலகாரணமாய் இருப்பது எண்ணம். ஓர் எண்ணத்தை எண்ணும்பொழுதே சூக்ஷ்ம நிலையில் அது ஒரு வினை ஆய்விடுகிறது. எண்ணத்துக்கு ஏற்றாற்போன்று வாழ்க்கை மாறி அமைந்து வருகிறது. ஸ்தூல சரீரம் ஒன்றில் இருக்கின்ற காலம் முழுதையும் தொகுத்து ஒரு பிறவி என்று சொல்லுவது உலக வழக்கு. ஆனால் தத்துவ பூர்வமாகப் பார்க்குமிடத்து ஓர் எண்ணத்தை எண்ணும்பொழுதே அந்த எண்ணமயமான புதிய பிறவி மனத்தகத்து அம்மனிதனுக்கு அமைந்துவிடுகிறது. எனவே ஒரு நாளில் ஒரு மனிதனுடைய மனதில் எத்தனைவித எண்ணங்கள் வந்தமைகின்றனவோ அத்தனைவிதமான பிறவிகளை அந்தச் சிறிது நேரத்துக்குள் மன அமைப்பில் அவன் எடுத்தவனாகிறான். இப்படி உண்டாகின்ற பிறவிகளைத்தான் கணக்கெடுக்க யாருக்கும் இயலாது.

இனி, ஓர் உடலை உகுக்கின்ற வேளையில் அந்த ஜீவன் அது பரியந்தம் ஆழ்ந்து எண்ணிய எண்ணங்கள் ஒன்றுகூடி மனதுக்கு ஒரு வடிவைத் தருகின்றன. மேற்போக்காக எண்ணிய எண்ணங்களுக்கு ஆங்கு இடமில்லை. கடலில் உண்டாகிய சிற்றலைகள் போன்று அவைகள் மறைந்து போய்விடுகின்றன. மனத்தகத்து உண்டாயிருக்கின்ற ஆழ்ந்த வடிவுக்கு ஒப்ப புதிய ஸ்தூல சரீரம் அமைகிறது. சாகின்றபொழுது தான் விரும்புகிற ஓர் எண்ணம் முன்னிலையில் வந்து நிற்காது. தான் நெடுங்காலம் எண்ணிய எண்ணங்களின் தொகையே முன்னணியில் வந்து நிற்கும். அதற்கேற்ற படி அடுத்த பிறவி அமைகிறது. ஆண்டு முழுதும் செய்த வியாபாரத்தின் தொகுப்பை ஆண்டு இறுதியில் கணக்குப் பார்த்து லாபநஷ்டத்தை முடிவு கட்டுவது போன்று வினையின் தொகையை முன்னிட்டே அடுத்த பிறவி அமைகிறது.

வினைக்கு ஏற்பச் சூக்ஷ்ம சரீரத்தில் வேறு ஒரு நிலையில் ஜீவன் இருப்பதுண்டு. அந்த நிலை இன்பகரமானதாயிருந்தால் அதைச் சொர்க்க வாழ்வு என்கிறோம். துன்பகரமானதாயிருந்தால் நரகம் என்கிறோம். சொர்க்கமும், நரகமும் கனவு உலகங்களுக்கு ஒப்பானவை. ஸ்தூல சரீரத்தின் துணையின்றிக் கனவு நிலையில் இன்பத்தையோ துன்பத்தையோ ஜீவன் அனுபவிக்கின்றான். அந்தச் சரீரம் அனுபவிக்கின்ற இன்ப  துன்பமும் வினைப்பயனேயாம். கனவு முடிந்ததும் அவன் விழித்துக்கொள்வது போன்று சொர்க்க வாழ்வுக்கு ஏற்ற வினை முடிவுறுங்கால் அவ்வாழ்வை முடித்துவிட்டுத் திரும்பவும் மண்ணுலகில் ஒரு மனிதன் பிறக்கிறான். எனவே பல சாஸ்திரங்கள் சொல்லுகின்ற கோட்பாடுகளைத் தொகுத்து ஆராயுமிடத்துத் தனது எண்ணத்துக்கு ஏற்ப மனிதன் தனது வாழ்வை ஓயாது மாற்றி அமைத்துக் கொண்டு போகின்றான். மாறி அமைகின்ற நிலைக்கே மறுபிறப்பு என்று பெயர். எண்ணங்களற்ற பெருநிலையை ஆத்மா அடைந்துவிடுமிடத்து அது முக்தியாகிறது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Sri Paramahamsarin Apta Mozi – 126

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி -126

Apta mozi

[ முந்தைய பகுதி – மொழி 125: https://swamichidbhavananda.wordpress.com/2017/04/20/sri-paramahamsarin-apta-mozi-125/ ]

மஹா பிரளயம்

“ஒரு மஹா பிரளயம் நேரிடுங்கால் அண்டங்கள் அனைத்தும் அடிபட்டுப் போய்விடுகின்றன. அடுத்து வரும் சிருஷ்டிக்குத் தேவையாய் இருக்கும் விதைகளையெல்லாம் அம்பிகை இந்த நிலையில் தன்னகத்துச் சேர்த்து வைத்திருக்கின்றாள். வீட்டிலிருக்கும் பாட்டி ஒருத்தி விதவிதமான சாமான்களைப் போட்டு வைப்பதற்குப் பெட்டகம் ஒன்று வைத்திருக்கின்றாள். வீட்டுக்காரியங்களுக்கு உதவும் விதவிதமான சிறுசிறு வஸ்துக்களை அப்பெட்டகத்தில் நாம் காணலாம். அது போன்று பராசக்தி பிரபஞ்சமனைத்துக்கும் பீஜமாய் இருப்பதைத் தன் சொரூபத்தில் அடக்கி வைத்துக்கொள்கிறாள். வீட்டில் பாட்டி வைத்திருக்கும் பெட்டகத்தில் என்னென்ன பொருள்களை நாம் காணலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடல் நுரை, பேதி குளிகைகள், வெள்ளரி விதை முடிச்சு ஒன்று, புடலங்காய் விதை முடிச்சு ஒன்று, மருந்துக்குரிய வற்றல் வகை முடிச்சு ஒன்று இன்னும் என்னென்னவோ நாம் காணலாம். சமயம் வாய்க்கின்றபொழுது இத்தனை விதமான சரக்கு வகைகள் அப்பெட்டகத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும்.

இதேபாங்கில் பிரம்மமயி அன்னை பராசக்தி பிரளய காலத்தில் அடுத்த சிருஷ்டிக்குத் தேவையாய் இருக்கும் வித்துக்களையெல்லாம் சேகரித்து வைக்கிறாள். சிருஷ்டி உருவெடுத்தான் பிறகு ஆதி சக்தி இந்தப் பிரபஞ்ச சொரூபமாகவே இருக்கின்றாள். இப்பிரபஞ்சத்தைத் தோற்றத்துக்குக் கொண்டு வந்தான பிறகு அதனுள் வியாபித்தும் இருக்கின்றாள். சிலந்திப் பூச்சி தன்னிடத்திருந்தே நூலை உண்டுபண்ணுகிறது. அதை வலையாகப் பின்னுகிறது. பிறகு அதன்மீது அது வீற்றிருக்கின்றது. அதே செயலைத்தான் அன்னை பராசக்தி செய்கின்றாள். இப்பிரபஞ்சத்தை அவள் தன்னிடத்திருந்து உண்டுபண்ணுகின்றாள்; பிறகு அவள் அதில் ஊடுருவி நிறைந்திருக்கின்றாள். இங்ஙனம் சிருஷ்டியைப்பற்றி வேதங்கள் பகர்கின்றன. இப்பிரபஞ்சத்துக்கு ஆதாரமாய் இருப்பவர் பரம்பொருள்; பிரபஞ்சமாக அவரே வடிவெடுத்திருப்பதால் ஆதேயமாக இருப்பவரும் அவரே.

(தொடரும்…)