Audio Gallery

[ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களை நான் அறிந்துகொண்டவாறு, என் அறிவுக்கு எட்டியவாறு, அவரது குரலுக்குத் தொடக்க உரை ஒன்று எழுதியிருக்கிறேன். படித்துவிட்டுப் பிறகு ‘கர்ஜனை’யைக் கேளுங்கள்!

-Admin.]

சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நம சிவாய

என்று அந்தர்யோக நிகழ்ச்சியின் துவக்கத்தில் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் ஒருமுறை உரக்கச் சொல்லி முடிப்பார். அன்பர்களும், தாய்மார்களும் ஒரு முறை கேட்டுவிட்டு பின்தொடர்ந்து சொல்வார்கள். மூன்று முறை இதே நாமாவளியை சொல்ல வைப்பார். பிறகு எடுத்துக்கொண்ட தலைப்பைப் பற்றி சொற்பொழிவு நிகழ்த்த ஆரம்பிப்பார். அதற்குள், திருச்சிராப்பள்ளி கரூருக்கிடையேயான ரயில் பாதையில் செல்லும் ரயிலின் சப்தம் தபோவனத்தின் முற்றத்தை நிறைத்துவிடும். பிறகு அங்கு நிலவும் அமைதியான சூழ்நிலையில் அனைவரும் அவரது சொற்பொழிவைக் கேட்பர்.

எங்கு பேசினாலும், எதைப் பற்றிப் பேசினாலும் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் பேச்சில் தெளிவும், கம்பீரமும், தேவையான கருத்தும், சொல்லும் கருத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியும் இருக்கும். எடுத்துக்கொண்ட தலைப்பிலிருந்து சிறிதும் விலகமாட்டார். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் சொல்ல வந்த செய்தியை முழுமையாகச் சொல்லிவிடுவார்; மிச்சம் இருக்காது. அவ்வாறு மிச்சம் இருப்பதாகத் தோன்றினால் அது கேட்போரிடம் இருக்கும் ஆர்வத்தின் வெளிப்பாடாக இருக்கும். அமர்ந்திருக்கும்பட்சத்தில் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு பேசுவார். நின்றுகொண்டு பேசினாலும் முதுகுத்தண்டு வளையாது. பார்வையாளர்களைப் பார்த்த வண்ணமாகத்தான் இருப்பார். பேச்சில் தடுமாற்றம் இருக்காது. தேவையில்லாத வார்த்தைகள், வெறும் கேளிக்கைப் பேச்சுக்கள் போன்றவற்றை அறவே தவிர்த்துவிடுவார். ஒருவரைக் குறிப்பிட்டுத் தாக்கிப் பேசுவது அவரிடம் இல்லாத குணம் ஆகும். அதே நேரம், உண்மையை உரைப்பதற்காக தாக்கிப் பேசவும் தயங்கமாட்டார். தேவையெனும் பட்சத்தில், சிந்திக்க வைப்பதற்காக நகைச்சுவையும் கலந்து வரும்.

வர்ணித்துப் பேசுவதில் அவருக்கு நிகர் அவரே. உதாரணமாக அம்பிகையின் அழகை வர்ணித்தால் அதில் அலாதியான அழகு இருக்கும். அம்பிகையின் கோர ரூபத்தை வர்ணித்தால் அதில் பயம் சிறிதும் இல்லாத கம்பீரம் இருக்கும்.

சிங்கத்தின் கர்ஜனையைப் போன்ற அவரது குரலைக் கேட்போர் உள்ளத்தில் மறைந்து கிடந்த நுண்ணறிவானது வெளிப்படுவதை உணர்வார்கள். மனதில் நெடு நாட்களாக இருந்து வரும் சோம்பல் சட்டென விலகுவதையும் உணர்வார்கள். குரலில் இனிமை இருக்கும். உள்ளத்தின் தெளிவு வார்த்தைகளில் வெளிப்படும். சுதந்திர இந்தியாவுக்கு முற்பட்ட காலத்திய தமிழ் நடையில் அமைந்திருக்கும். தற்காலத்தில் பயன்படுத்தப்படாத தமிழ் வார்த்தைகள் பல கலந்திருக்கும். வடமொழி, தமிழுடன் கலந்து புதுவிதமான மணிப்பிரவாள நடையில் அவரது பேச்சுக்கள் இருக்கும்.

தனி நபருடன் பேசும்பொழுது, பேச்சு வழக்கில் “இருந்தாக” “வருவாக” என்று அவருக்கே உரித்தான பாணியில் பேசுவார். மரியாதை கலந்த பேச்சு மட்டுமே வெளிப்படும். யாரையும் அவமரியாதை செய்தது கிடையாது. பேச வேண்டியதை பேசியாகிவிட்டால் அந்த நபரை அங்கு காக்க வைப்பதில்லை. “ம்ம்ம்… போகலாம்” என்று உத்தரவு கொடுத்துவிடுவார்.

ஆக அவருடைய பேச்சாற்றல் பலருடைய ஆன்மிக வாழ்க்கைக்கு வித்திட்டு வருகிறது என்பது முடிவு.

இதுவரை சொன்ன தகவல்களை வைத்துக்கொண்டு பெரிய சுவாமிஜீயின் ஒரு சொற்பொழிவு எப்படி இருக்கும் என்பதை ஓரளவு யூகிக்கலாம். அவருடைய சொற்பொழிவை, அதாவது அவருக்கே உரித்தான கம்பீரக் குரலை, சிங்கத்தின் கர்ஜனையை கேட்காதவர்கள் இதையெல்லாம் யூகிப்பார்களா? என்று கேள்வி எழலாம்.

யூகிக்க முடியும்! எப்படியெனில் அவர் இயற்றிய நூல்களை வாசிப்பவர்களுக்கு அவருடைய கம்பீரக் குரல் விளங்கும். அவரது உரைநடைக்கும், உரையாடலுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. அவரது உரையாடலைக் கேட்டவர்கள் அல்லது கேட்காதவர்கள் இருவருமே அவரது நூலை வாசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாக விளங்கும். அது, நூலை வாசிக்கும்போது வார்த்தைகளை கவனித்தால் பெரிய சுவாமிஜீ பேசுவது போன்றே இருக்கும்.

எனவே அவர் இயற்றிய நூல்களையும், சொற்பொழிவுகளையும் அவர் விவரிக்கும் போக்கிலேயே பின்தொடர்ந்து போனால் சொல்லவருகின்ற கருத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ளலாம்; குருவின் மஹிமையையும் புரிந்துகொள்ளலாம்.

(சொற்பொழிவையும் கேட்டதில்லை; அவர் இயற்றிய நூலையும் வாசித்ததில்லை; அவர் குரலைக் கேட்டுப் பல வருடங்கள் கழிந்துவிட்டதால் அவருடைய கம்பீரக் குரல் மறந்துபோனது – இப்படி நினைப்பவர்கள் கீழே பாருங்கள்.)

Advertisements