Category Archives: ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி

Sri Paramahamsarin Apta Mozi – 126

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி -126

Apta mozi

[ முந்தைய பகுதி – மொழி 125: https://swamichidbhavananda.wordpress.com/2017/04/20/sri-paramahamsarin-apta-mozi-125/ ]

மஹா பிரளயம்

“ஒரு மஹா பிரளயம் நேரிடுங்கால் அண்டங்கள் அனைத்தும் அடிபட்டுப் போய்விடுகின்றன. அடுத்து வரும் சிருஷ்டிக்குத் தேவையாய் இருக்கும் விதைகளையெல்லாம் அம்பிகை இந்த நிலையில் தன்னகத்துச் சேர்த்து வைத்திருக்கின்றாள். வீட்டிலிருக்கும் பாட்டி ஒருத்தி விதவிதமான சாமான்களைப் போட்டு வைப்பதற்குப் பெட்டகம் ஒன்று வைத்திருக்கின்றாள். வீட்டுக்காரியங்களுக்கு உதவும் விதவிதமான சிறுசிறு வஸ்துக்களை அப்பெட்டகத்தில் நாம் காணலாம். அது போன்று பராசக்தி பிரபஞ்சமனைத்துக்கும் பீஜமாய் இருப்பதைத் தன் சொரூபத்தில் அடக்கி வைத்துக்கொள்கிறாள். வீட்டில் பாட்டி வைத்திருக்கும் பெட்டகத்தில் என்னென்ன பொருள்களை நாம் காணலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடல் நுரை, பேதி குளிகைகள், வெள்ளரி விதை முடிச்சு ஒன்று, புடலங்காய் விதை முடிச்சு ஒன்று, மருந்துக்குரிய வற்றல் வகை முடிச்சு ஒன்று இன்னும் என்னென்னவோ நாம் காணலாம். சமயம் வாய்க்கின்றபொழுது இத்தனை விதமான சரக்கு வகைகள் அப்பெட்டகத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும்.

இதேபாங்கில் பிரம்மமயி அன்னை பராசக்தி பிரளய காலத்தில் அடுத்த சிருஷ்டிக்குத் தேவையாய் இருக்கும் வித்துக்களையெல்லாம் சேகரித்து வைக்கிறாள். சிருஷ்டி உருவெடுத்தான் பிறகு ஆதி சக்தி இந்தப் பிரபஞ்ச சொரூபமாகவே இருக்கின்றாள். இப்பிரபஞ்சத்தைத் தோற்றத்துக்குக் கொண்டு வந்தான பிறகு அதனுள் வியாபித்தும் இருக்கின்றாள். சிலந்திப் பூச்சி தன்னிடத்திருந்தே நூலை உண்டுபண்ணுகிறது. அதை வலையாகப் பின்னுகிறது. பிறகு அதன்மீது அது வீற்றிருக்கின்றது. அதே செயலைத்தான் அன்னை பராசக்தி செய்கின்றாள். இப்பிரபஞ்சத்தை அவள் தன்னிடத்திருந்து உண்டுபண்ணுகின்றாள்; பிறகு அவள் அதில் ஊடுருவி நிறைந்திருக்கின்றாள். இங்ஙனம் சிருஷ்டியைப்பற்றி வேதங்கள் பகர்கின்றன. இப்பிரபஞ்சத்துக்கு ஆதாரமாய் இருப்பவர் பரம்பொருள்; பிரபஞ்சமாக அவரே வடிவெடுத்திருப்பதால் ஆதேயமாக இருப்பவரும் அவரே.

(தொடரும்…)

Advertisements

Sri Paramahamsarin Apta Mozi – 125

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 125

Apta mozi

[ முந்தைய பகுதி – மொழி 124: https://swamichidbhavananda.wordpress.com/2017/04/13/sri-paramahamsarin-apta-mozi-124/ ]

சக்தியின் சொரூபங்கள்

கேசவ சந்திரசேனருடைய நீராவிப் படகில் பிரம்ம சமாஜத்துத் திருக்கூட்டமும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் இன்னும் போய்க்கொண்டே இருந்தனர். சத் விஷயங்களைப் பற்றிய சம்பாஷணைகள் அவர்களுக்கிடையில் நிகழ்ந்து கொண்டிருந்தன. இப்பொழுது கேசவ சந்திரசேனர் புன்னகை பூத்தவராகப் பரமஹம்ஸரிடம் ஒன்றை வேண்டிக்கொண்டார்: “ஐயன்மீர், அன்னை காளிகாதேவி என்னென்ன பாங்குகளில் இந்தப் பிரபஞ்சத்தின் நடைமுறைகளில் தன்னுடைய திருவிளையாடல்களை நிறைவேற்றுகிறாள் என்பதைப்பற்றி எங்களுக்குச் சிறிது எடுத்து ஓதுங்கள்.”

இவ்விஷயத்தைப் பற்றிப்  பேச, பரமஹம்ஸருக்குப் பெருமகிழ்வு உண்டாயிற்று. புன்னகை பூத்தவரக அவரும் திருவாய் மலர்ந்து அருளலானார்: “ஆ! அன்னை விதவிதமான பாங்குகளிலே விளையாடுகின்றாள். பராசக்தியாகிய அவள் ஒருத்தியே மஹா காளி என்றும், நித்திய காளி என்றும், ஸ்மசான காளி என்றும், ரக்ஷா காளி என்றும், சியாமா காளி என்றும் கூறப்படுகின்றாள். மஹா காளியைப் பற்றியும், நித்திய காளியைப் பற்றியும் தந்திர சாஸ்திரங்கள் விசேஷமாக விரித்துரைக்கின்றன.

சிருஷ்டி தோற்றத்துக்கு வராத வேளை ஒன்று உண்டு. மஹா பிரளயம் என்று அது பகரப்படுகிறது. அந்நிலையில் பிரபஞ்சம் ஒன்றுமில்லை. சூரியனுடைய காட்சியைக் காண முடியாது. சந்திரனுக்கு ஆங்கு வேலையில்லை. நட்சத்திரங்கள் என்பவை உருவெடுக்கவில்லை. ஏனைய கோளங்கள் வடிவெடுக்கவில்லை. ஆதலால் நாம் வசித்துவரும் பூமியும் அந்நிலையில் இல்லை. காரிருளினுள்ளே காரிருள் செறிந்து கிடந்தது. அத்தகையப் பிரளய நிலையிலே வடிவங்களையெல்லாம் கடந்துள்ள மஹா காளி மட்டும் எஞ்சியிருக்கிறாள். அப்பொழுது அவளுடைய பேராற்றல் அனைத்தும் அவளிடத்தே அடங்கிக் கிடக்கின்றன. மஹா காலன் என்று இயம்பப்பெறும் சிவனும், சக்தியும் அந்நிலையில் ஒன்றுபட்டு இருக்கின்றனர்.”

சியாமா காளி

“சியாமா காளி என்பவள் ஒரு சிறிது இன்னியல்பு படைத்தவள். வீடுகளிலெல்லாம் அவள் வணங்கப்படுகின்றாள். வரத்தை எடுத்து வழங்குபவள் அவளே; அச்சத்தையெல்லாம் அகற்றுகின்றவளும் அவளே. ஆதலால் அவள் வரதாயினி என்றும் பயநாசினி என்றும் அழைக்கப்படுகின்றாள். அபய கரம், வர கரம் ஆகிய இரண்டுவித முத்திரைகள் தாங்கிய கரங்களை அவளிடத்துக் காணலாம்.”

ரக்ஷா காளி

“ரக்ஷா காளி என்பது பாதுகாக்கும் பாங்குடையவள் எனப் பொருள்படுகிறது. கொள்ளைநோய், பஞ்சம், பூகம்பம், மழை பெய்யாது பொய்த்தல், அது மிகைபடப் பெய்தல் இவைபோன்ற நெருக்கடியான நிகழ்ச்சிகள் நேருங்கால் ரக்ஷா காளி அர்ச்சிக்கப்படுகின்றாள்.”

ஸ்மசான காளி

kali

“ஸ்மசான காளி என்பவள் அனைத்தையும் துடைத்தெடுத்துவிடும் பாங்குடையவள் என்று பொருள்படுகிறது. அவளுக்கு வாசஸ்தானமாக இருப்பதே ஸ்மசானம் அல்லது சுடுகாடு. அழிவுக்கு அது நல்லதொரு எடுத்துக்காட்டு ஆகிறது. ஆங்கு பிணங்கள் சிதறடைந்து கிடக்கின்றன. நரிகள் இங்குமங்கும் அலைந்து திரிந்து அப்பிணங்களைப் பிய்த்துத் தின்கின்றன. ஸ்மசான காளியுடன் கூடி வாழும் பைரவிகள் ஆங்கு ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றார்கள். சிவபெருமானிடத்திருக்கும் பைரவர்கள் என்று சொல்லப்படும் ஆண்பால் பூதகணங்களுக்கு நிகராக அம்பிகையிடம் கூடியிருக்கும் பெண்பால் பூதகணங்களுக்குப் பைரவிகள் என்று பெயர். பயங்கர சொரூபிணியாகிய அவளுடைய வாயினின்று ரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவளுடைய கழுத்திலே முண்ட மாலை ஒன்றை அணிந்திருக்கின்றாள். மனிதர்களுடைய தலைகளை வெட்டி எடுத்து ஒன்றாகக் கோத்து அம்பிகை அணிந்துகொண்டிருக்கின்றாள். அதற்குத்தான் முண்டமாலை என்று பெயர். அத்தலைகள் சின்னஞ்சிறு வயதிலிருந்து வயோதிக நிலை பரியந்தம் வெவ்வேறு வயதை விளக்குகின்றன. மானுடர்களுடைய கைகளை ஒரு சரமாகக் கோத்து அம்பிகை தன் அரையில் அணிந்து கொண்டிருக்கின்றாள்.

(தொடரும்…)