Category Archives: All India Radio Speeches

V V S Iyer Remembrance – AIR speech

வ.வெ.சு. ஐயர் நினைவுகள்

(24-10-1980 அன்று திருச்சி அகில இந்திய வானொலியில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் ஆற்றிய உரை)

துறவு வாழ்வில் ஈடுபாடுடைய நான் 1923 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கல்கத்தாவிற்கு அருகில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து கொண்டேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏகாந்தத்தில் சில மாதங்கள் இருந்து கொண்டு தவத்தில் ஈடுபட வேண்டும் என்னும் எண்ணம் வந்தது. மடத்துத் தலைவரும் அதற்கு எனக்கு அனுமதி கொடுத்தார். திருநெல்வேலி ஜில்லாவ்லிருக்கும் குற்றாலத்தில் ஏதேனும் ஒரு வசதியான இடத்தில் தங்கியிருந்து தவம்புரியத் தீர்மானிக்கப்பட்டது.

1925 ஆம் வருஷம் மார்ச் மாதம் இறுதியில் சென்னை எழும்பூர் ஸ்டேஷனிலிருந்து தென்காசிக்குப் புறப்பட்டுச் சென்றேன். சேரன்மகாதேவியிலிருந்த பாரத்வாஜ ஆச்ரம் நிர்வாகத்தோடு சம்பந்தப்பட்டிருந்த திரு. மஹாதேவ ஐயர் அவர்கள் அதே வண்டியில் தம் ஆச்ரமத்துக்குப் போய்க் கொண்டிருந்தார். என்னோடு அறிமுகம் ஆன பிறகு வழியில் இருக்கும் அந்த ஆச்ரமத்தை நான் போய்ப் பார்க்க வேண்டுமென்று அவர் விரும்பினார். அரை மனதோடு நான் இசைவு கொடுத்தேன். சில மணி நேரம் அங்கு தங்கியிருந்து அதைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று நான் எண்ணினேன்.

அடுத்த நாள் முற்பகலில் பாரத்வாஜ ஆச்ரமத்துக்கு நான் போய்ச் சேர்ந்தேன். ஆங்கு ஆச்ரமக் குலபதியாயிருந்த திரு. வ.வே.சு. ஐயருக்கு நான் பேலூர் மடத்திலிருந்து வந்த ஒரு பிரம்மச்சாரி என அறிமுகப்படுத்தப்பட்டேன். குசலப் பிரச்னைகள் செய்து அவர் என்னை அன்போடு வரவேற்றார். அவரைப் பார்த்ததும் நான் சில மணி நேரத்தில் அந்த ஆச்ரமத்தை விட்டு வெளியேக வேண்டுமென்று கொண்டிருந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். தெய்வீகப் பொலிவு படைத்திருந்த அப்பெருமகனாரோடு நெருங்கிப் பழக வேண்டும் என்னும் அவா என் உள்ளத்தில் ஆர்வத்துடன் எழுந்தது.

VVS Iyer 6

தோற்றத்தில் திரு. வ.வெ.சு. ஐயர் பழங்காலத்து ரிஷிகளில் ஒருவர் போன்று தென்பட்டார். நன்கு வளர்ந்து பொருத்தமான வடிவுடன் அவர் விளங்கினார். உடல் திட்பம் வாய்க்கப் பெற்றவர் என்பது சொல்லாமலே விளங்கிற்று. கவர்ச்சிகரமான முகவிலாசத்தில் சாந்தமும் இனிமையும் திகழ்ந்து கொண்டிருந்தன. அவருடைய குரலோசைக் கம்பீரமும், உறுதியும் வாய்க்கப்பெற்றதாய் இருந்தது. சில நாள் இங்கு தங்கியிருந்து செல்லலாமே என்றார். மகிழ்வுடன் அதற்கு இசைவு கொடுத்தேன். மூன்று நாள் பாரத்வாஜ ஆச்ரமத்தில் திரு. வ.வெ.சு. ஐயரோடு வாழ்ந்திருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பைக் கிடைத்தற்கரிய பேறு என்றே இதுகாறும் கருதி வருகிறேன். முற்பகலில் ஒருதடவை பிற்பகலில் ஒரு தடவை ஆக இரண்டு தடவை நாங்கள் இருவரும் ஆச்ரமத் திண்ணையில் அமர்ந்துகொண்டு உரையாடினோம். ஆச்ரமவாசிகள் மற்றும் சிலர் அருகில் அமர்ந்துகொண்டு எங்கள் பேச்சுக்கு செவிசாய்த்துக் கொண்டிருந்தனர். அவ்வேளைகளில் அவருடைய செல்வி ஒருத்தி பெரிதும் அவர் தொடையின் மீது சாய்ந்து உட்கார்ந்திருப்பாள்.

விவேகானந்த சுவாமிகள் நிறுவிய பேலூர் மடத்தின் பயிற்சித் திட்டத்தைப் பற்றி ஐயர் அவர்கள் என்னை விசாரித்தார். விரிவாக நானும் எங்களுடைய ஆன்மீக வாழ்க்கைத் திட்டத்தை எடுத்து விளக்கினேன். அதில் அவர் ஊக்கம் மிகச் செலுத்தினார். அது எனக்குப் பரம திருப்தியை அளித்தது. ஆதலால் சாதனத்தில் ஈடுபட்டிருக்கும் ஆத்மசாதகர் ஒருவரோடு கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் பாங்கில் பேலூர் மடத்துப் பயிற்சி முறைகளை நான் அவருக்கு எடுத்துரைத்தேன்.

சந்நியாசிகளும் பிரம்மச்சாரிகளும் அதிகாலையில் எழுந்திருந்து சரீர சுத்தி செய்துகொண்டு தியான மண்டபத்தில் கூடுவார்கள். உஷா பிரார்த்தனைக்குப் பிறகு சுமார் ஒரு மணி நேரம் அனைவரும் ஒன்றுகூடி நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு தியானமும், ஜபமும் செய்வார்கள். காலையில் ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரையில் அவரவர்க்கு ஏற்பட்டிருக்கும் காலைப் பணிவிடைகளைப் புரிவார்கள். எட்டு மணியிலிருந்து ஒன்பது மணி வரையில் மடத்துத் தலைவர் சுவாமிகளை அனைவரும் சென்று தரிசித்து அவரோடு சிறிது உரையாடிவிட்டு வருவார்கள். பத்து மணியிலிருந்து பதினொரு மணிவரையில் சாஸ்திர ஆராய்ச்சிகளும் அதைத் தொடர்ந்து நண்பகல் தியானமும், ஜபமும் நடைபெறும். பகல் பன்னிரண்டு மணிக்குத் துறவியர்களும் மடத்தைப் பார்க்கவரும் அன்பர்களும் ஒன்று சேர்ந்து நண்பகல் உணவு அமுது பண்ணுவார்கள். பிற்பகல் இரண்டு மணி வரை ஓய்வு. அதன்பிறகு தோட்டத்திலும், சமையல்கட்டிலும், காரியாலயத்திலும் பலப்பல பணிவிடைகள் நிகழும். மாலை தியானத்துக்குப் பிறகு அரை மணி நேரம் பஜனை நடைபெறும். இரவு போஜனத்துக்குப் பிறகு சிறு சிறு குழுக்களாக அமர்ந்துகொண்டு சத்விஷய ஆராய்ச்சியும், சம்பாஷணையும் நடைபெறும். சுமார் பத்து மணிக்கு உறங்கப்போவது வழக்கம்.

நாட்டு மக்களின் நலனுக்காக பேலூர் மடம் ஆற்றும் தொண்டு யாது என்று ஐயர் அவர்கள் கேட்டார். எதிர்பாராது அப்போதைக்கப்போது நிகழும் வெள்ள கஷ்ட நிவாரணம், புயற்காற்று நிவாரணம், தொற்றுநோய் நிவாரணம் முதலியவற்றை ராமகிருஷ்ண மடம் எவ்வாறு நிறைவேற்றி வருகிறது என்பது விவரிக்கப்பட்டது. கல்வித்துறையில் இந்த ஸ்தாபனம் புரியும் சேவையும் எடுத்துச் சொல்லப்பட்டது. தேசபக்தி, தியாகம், பரநல சேவை ஆகிய பண்புகளை மாணாக்கர்களுக்கிடையில் சந்நியாசிகள் முன்மாதிரியாக இருந்துகொண்டு புகட்டி வந்தார்கள். ஆத்மீகத் துறையில் மக்களுக்கிடையில் மேலாம் தத்துவங்கள் எப்படிப் பரப்பப்பட்டன என்னும் பேச்சும் நிகழ்ந்தது. ஆத்மசாதனம் என்னும் பெயரில் பலபேர் பலப்பல மூடநம்பிக்கைகளில் உழல்கின்றனர். அத்தகைய பொருளற்ற கொள்கைகளையும் பழக்க வழக்கங்களையும் திருத்தியமைப்பது துறவியர்களுடைய முக்கியமான செயல்களாம். ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாய ச – ‘தான் ஆத்ம விடுதலை அடைவதும் உலக நலனுக்காக உழைப்பதும்’ மடத்தின் குறிக்கோள் என்பதைக் கேட்டு ஐயர் அவர்கள் பெருமகிழ்வெய்தினார்.

ஆத்மாவின் விடுதலைக்காகப் பாடுபடுகிற நீங்கள் நாட்டின் விடுதலைக்காக ஏதாவது முயற்சி எடுத்துக் கொள்ளுகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நான் கொடுத்த விடையாவது:

“அரசியல் துறையிலோ, சமுதாய சீர்திருத்தத்துறையிலோ, ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கம் ஈடுபடுவதில்லை. அப்படி ஈடுபடுவதால் கருத்து வேறுபாடுகளும், ஆற்றல் விரயமும், வீண் பொழுதுபோக்கும் பெருமிதமாக உண்டாகும். அதனால் விளையும் நஷ்டம் மிக அதிகமாகும். ஆதலால் அத்துறைகளை அறவே ஒதுக்கி வைத்துவிட்டு நிர்மாணத் திட்டத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆத்மீகத் துறையில் மறுமலர்ச்சி அமையுமிடத்து ஏனைய துறைகளிலுள்ள குறைநிலைகளெல்லாம் தாமாகவே நிறைநிலைகளாக மாறிவிடும் என்பது எங்கள் கருத்து. இதற்குச் செவிசாய்த்த திருவாளர் ஐயர் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியிருந்தார். மேலும் இக்கேள்வியில் அவர் பிரவேசிக்கவில்லை.

திருவாளர் ஐயர் அவர்கள் நடாத்தி வந்த குருகுலத்தை நான் மூன்று நாட்கள் கவனித்தேன். அது முற்றிலும் பண்டைக் காலத்து நடைமுறையில் இருந்ததாக எனக்குத் தென்பட்டது. அதிகாலையில் எழுந்திருந்தது முதற்கொண்டு இரவில் படுக்கப்போகும் வரையில் குருவும் சிஷ்யர்களும் ஒரு குடும்பம் போன்று சேர்ந்து இருந்தனர். பணிவிடை பண்ணுதல், பாடம் கற்பது ஆகியவைகள் ஒன்றோடொன்று இனிது பிணைந்திருந்தன. தந்தையோடு மைந்தர்கள் இணங்கியிருப்பது போன்று பிள்ளைகள் சுமார் பதினைந்து பேர் யாண்டும் ஐயர் அவர்களைச் சூழ்ந்துகொண்டே இருந்தனர். அவர் இடையிடையே சிஷ்யர்களுக்கு எடுத்து இயம்பியது வாழ்க்கைக்குப் பயன்படும் மேலாம் கருத்துக்களாக இருந்தன. புஸ்தகங்கள் மூலமாக அவர்கள் பெற்ற கல்வி மிகக் குறைவு. வாழ்க்கையின் வாயிலாகவே வேண்டியவற்றை அவர்கள் பெற்று வந்தனர்.

பேச்சுக்கிடையில் ஐயர் அவர்கள் குற்றாலத்தின் சூழ்நிலை தவத்துக்கு ஒத்துவராது என்று இயம்பி என்னை பாபநாசத்துக்குப் போகும்படி தெரிவித்தார். நானும் அதற்கு இசைந்துகொண்டேன். பாபநாசத்தின் உட்புறத்தில் அகஸ்தியர் கோயிலில் ஓர் அறையில் தங்கியிருந்து நான் தவம் புரிந்து வந்தேன். ஜூன் மாதம் துவக்கத்தில் திரு. ஐயர் அவர்கள் குருகுலவாசிகளுடன் உல்லாசப் பிரயாணமாக அங்கு வந்து சேர்ந்தார். தவ வாழ்க்கையைப் பற்றி நாங்கள் சிறிது உரையாடினோம். அப்பேச்சை மேலும் தொடர்ந்து வைத்துக்கொள்வோம் என்று சொல்லிவிட்டு ஸ்ரீ ஐயர் அவர்கள் தமது ஜபமாலை, ஆசனம் முதலியவைகளை என் பொறுப்பில் வைத்துவிட்டுச் சிஷ்யர்களுடன் அருகிலிருந்த கல்யாண தீர்த்தத்துக்குப் போனார். சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு திருவாளர் ஐயர் அவர்களின் பெண் குழந்தை கால் வழுக்கி ஓடும் நதிக்குள் விழ அக்குழந்தையைக் காப்பாற்றத் தந்தையும் நதிக்குள் குதித்து இருவரும் அருவியில் அகப்பட்டுக்கொண்டனர் என்னும் செய்தி வந்தது. இருவருடைய உடலங்களும் அடுத்த நாள்தான் தென்பட்டன. இது குருகுலத்திற்கு மட்டுமன்று; நாட்டுக்கே விளைந்த பெரிய நஷ்டமாகும். ஐயர் அவர்களின் உடலம் மறைந்தது எனினும் தேசிய பண்பாட்டைப் பற்றிய அவருடைய பேரியக்கம் படிப்படியாக வளர்ந்து கொண்டே வருகிறது.


இன்று வ.வெ.சு. ஐயர் அவர்களின் நினைவு தினம். அதனை முன்னிட்டு இந்த கட்டுரையை இங்கு பதிவேற்றி இருக்கிறோம். முந்தைய வருடங்களில் பதிவேற்றப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இங்கே:

https://swamichidbhavananda.wordpress.com/2016/06/03/v-v-s-iyer-remembrance-day-article-2014/

https://swamichidbhavananda.wordpress.com/2016/06/03/v-v-s-iyer-rememberance-day-article-2014part-2/

https://swamichidbhavananda.wordpress.com/2016/06/03/v-v-s-iyer-periya-swamiji-conversation/


Advertisements